Sunday, July 21, 2013

சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-8


சென்ற மாத கட்டுரையில் சனி, செவ்வாயின் திரிகோணாதிபத்தியம் பற்றிய சூட்சுமத்தை பின்னர் சொல்கிறேன் என்று எழுதியதற்கு இத்தனை கேள்விகள் உங்களிடமிருந்து வரும் என நான் உண்மையில் எதிர்பார்க்கவில்லை.

அதிலும் திருப்பூர் வாசகி ஒருவர் “சொல்லிக் கொடுக்க மறுக்கி றீர்கள் குருஜி” என்றதோடு மட்டு மல்லாமல்.. இதே போல மார்ச் 2012 இதழில் “சனி எப்படி ஆயுள்காரகன் ஆனார்..? ” என்பதை பின்னர் விளக்குகிறேன் என்று சொல்லி இதுவரை அதைப் பற்றியும் சொல்லவில்லை என்றும் சுட்டிக் காட்டினார்.

அந்தக் கட்டுரை  வெளிவந்த நேரத்தில் நான் ஜோதிட வாரப் பத்திரிகையான திரிசக்தி ஜோதிடத்தில் சனி, செவ்வாய் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்ததால் “சனி எப்படி ஆயுள் காரகன் ஆனார்” என்ற சூட்சுமத்தை அந்தத் தொடரில் எழுதினேன். அதனை உங்களுக்கு விளக்காதது எனது தவறுதான்.

என்னைப் பொறுத்தவரையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான எனது ஜோதிட அனுபவத்தில் பரம்பொருள் எனக்கு தெரிய அனுமதித்த எந்த ஒரு சூட்சுமத்தையும் நான் ஒளித்து வைத்ததே இல்லை. அனைத்தையும் பிறருக்கு விளக்கியிருக்கிறேன். இது என்னைத் தொடர்ந்து படிப்பவர்களுக்குத் தெரியும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஞானிகளைத் தவிர்த்து வேறு எவரும் அறியாத மூல விஷயமான பரம்பொருள் என்னைத் தெரிந்து கொள்ள அனுமதித்த “குருபகவான் ஏன் சுபரானார்? சனி எப்படி பாவரானார்?” மற்றும் “சுபக்கிரக வரிசையை ஞானிகள் எப்படி ஏற்படுத்தினார்கள்?” போன்ற சூட்சுமங்களை நான் விளக்கமாக எழுதியதும் இதில் சேர்ந்ததுதான்.

அதோடு, எந்த ஒரு விஷயத்தையும் சுற்றி வளைக்காமல் நேரடியாகச் சொல்வது என் வழக்கம். சாயா கிரகங்களைப் பற்றிய இந்த தொடரில் சனி செவ்வாயை இழுத்தால் அது மகாபாரத கிளைக்கதை போல மாறி மூல விஷயத்தை விட்டு விட்டு வேறு எங்கேயோ போய் விடும் அபாயம் இருக்கிறது.

இன்னும் ராகு கேதுக்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சூட்சுமங்கள் இருக்கின்றன. அவைகளை முழுவதுமாக இந்த தொடரில் சொல்வேன். அடுத்த தொடரில் மற்ற விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.....

மார்ச் 2012  இதழில் நான் எழுதிய சனி எப்படி ஆயுள்காரகன் ஆனார்? என்ற சூட்சுமத்தை இப்போது தெரிந்து கொள்ளுங்கள்...

சனி பகவான் எப்படி ஆயுளுக்கு காரகன் ஆனார்..?
                                                    
                                                   “ஜோதிடக்கலை அரசு” ஆதித்யகுருஜி

(திரிசக்தி ஜோதிடத்தில் (2011) வெளிவந்த பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான சசயோகம் பற்றிய ஆய்வுக்கட்டுரையின் ஒரு பகுதி)

சில ஜோதிட ஆய்வாளர்கள் சனி பகவான் உச்சம் பெறுவது மிகுந்த அதிர்ஷ்டம் எனவும், தற்போது இன்னும் மூன்று வருடங்கள் சனி உச்சத்தில் இருப்பதால் இந்த வருடங்களில் பிறக்கும் குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள் எனவும் எழுதுகிறார்கள். இது முற்றிலும் தவறு.

உச்சம் பெறும் அனைத்துக் கிரகங்களும் நன்மை செய்யும் என்றால் நமது ஞானிகள் சுபக் கிரகங்கள் பாவக் கிரகங்கள் என்று கிரகங்களை இரண்டு பிரிவாக பிரித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை.

கிரகங்களின் காரகத்துவங்களை சுபம், அசுபம் எனவும் நமக்கு வகைப்படுத்திக் காட்டியிருக்க வேண்டியதும் இல்லை. கிரகங்கள் வலிமை பெற்றால் நல்லது செய்யும் என்று பொதுவாக சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்.

நமது கிரந்தங்களில் ஞானிகள், வலுப்பெற்ற கிரகங்கள் மனிதனுக்கு நன்மையைக் செய்யும் என்று எந்த இடத்திலும் சொல்லவே இல்லை.

வலிமை பெற்ற ஒரு கிரகம் தனது காரகத்துவங்களை ஜாதகருக்கு வலுவுடன் தரும் என்றே சொல்லியிருக்கிறார்கள்.

அப்படியானால் ஆயுளைத் தவிர்த்து மனிதனுக்கு கெடுதல் செய்பவைகளான வறுமை, தரித்திரம், நோய், கடன் தொல்லை, அடிமைவேலை, உடல் உழைப்பை மட்டுமே நம்பி பிழைத்தல், உடல் ஊனம், அழுக்கு இடங்களில் இருக்கும் நிலை போன்றவற்றைத் தரும் சனிபகவான் உச்ச வலிமை பெற்றால் உங்களுக்கு என்ன பலன் களைத் தருவார்?

மற்ற சுபக் கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைச் சந்திரன் போன்ற கிரகங்களைப் போல தனித்து அதிர்ஷ்டம் தரும் அமைப்பு சனி, செவ்வாய் உள்ளிட்ட பாவக் கிரகங்களுக்கு கிடையாது.

தனித்து எவ்வித சுபத்தன்மையும் பெறாமல் வலிமை பெறும் நிலையில் சனி பகவான் தன் தசையில் தாங்க முடியாத கொடிய பலன்களைச் செய்வார்.

சனி நல்லது செய்ய வேண்டும் என்றால் அவர் குருவின் பார்வையையோ தொடர்பையோ அல்லது மற்ற சுபக்கிரகங்கள் அல்லது லக்ன சுபர்களின் சம்பந்தத்தையோ பெற்றிருக்க வேண்டும்.

உச்சத்தில் வக்ரம் போன்ற உச்சபங்கம் பெற்று முற்றிலும் நீச நிலையாக வலிமை இழந்து சுபர் பார்வை பெற்ற சனி மிகப் பெரிய சொகுசு வாழ்க்கையைத் தருவார்.

இத்தனை கொடுமையான பலன்களை காரகத்துவங்களாகப் பெற்ற சனி பகவானிடம் ஆயுள் எனும் விஷயம் எப்படி வந்தது என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.

அந்த சூட்சுமத்தையும் இப்போது விளக்குகிறேன்......

பொதுவாக நமது புனித நூல்கள் அனைத்துமே இனிமேல் பிறவாமை வேண்டும். பரம்பொருளின் காலடியில் முற்றிலுமாக சரணடைந்து அதனுடன் இணைய வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றன.

சித்தர்களும் ஞானிகளும் தங்களுக்கு எப்போது ‘முக்தி’ கிடைக்கும் என்றே ஏங்குகிறார்கள். (அதாவது தாங்கள் விரைவில் இந்த பூமியிலிருந்து விடுபட வேண்டும் என்பதே முற்றும் துறந்தவர்களின் நோக்கம்.)

உண்மையான புரிதல் என்னவெனில் இந்த மனித வாழ்வே ஒரு சுமை என்பதுதான். மனிதனின் இறப்பிற்குப் பிறகு “ஏதோ ஒரு நல்லது” இருக்கிறது என்பதையே நமது ரிஷிகளும், சித்தர்களும் உணர்ந்து நமக்கும் சொல்லியிருக்கிறார்கள்.

விளங்கிக் கொள்ள முடியாத ஏதோ ஒரு விஷயத்திற்காகவே நாம் எங்கிருந்தோ இந்தப் பூமியின் பக்கம் தற்போது வந்திருக்கிறோம். இங்கே செய்யும் தவறுகளால் இங்கிருந்து விடுபட முடியாமல் மீண்டும் மீண்டும் இங்கேயே பிறக்கிறோம். இது ஒரு வழிப்போக்குப் பயணம் அவ்வளவே.

நாம் கிளம்பிய நல்ல இடத்திற்கு திரும்பிச் செல்லத் தடையாக, நம்மை இங்கேயே இருக்க வைக்கும் நமது ‘ஆயுள்’ என்பது, பலரும் நினைப்பதைப் போல ஒரு சுபகாரகத்துவம் கொண்ட நல்லநிலை அல்ல என்பதே உண்மை.

அதனால்தான் அதுவும் மனிதனுக்கு வேண்டாத காரகத்துவங்களைக் கொண்ட சனியிடம் சேர்ந்தது.

சனி தரும் இன்னொரு கொடிய பலனான ஆயுள்... நம்மை பரம்பொருளிடம் சேரும் ஒரு நல்ல நிலையை, இனிமையான அனுபவத்தை இன்னும் சற்றுத் தள்ளி வைக்கும் ஒரு கெட்ட நிலைதான்.

ஜோதிடத்தில் எதுவுமே வெளிப்படையாக புரியும்படி ஞானிகளால் சொல்லப் படுவதில்லை. சொல்லப்படவும் மாட்டாது. அப்படிச் சொன்னாலும் அநேகருக்கு அது புரியாது.

ஆகவே புரியும் தகுதி நிலையை...

அதாவது பள்ளிகளில் முதலில் எல். கே. ஜி அடுத்து ஒன்று முதல் பனிரெண்டு வகுப்புக்கள் பிறகு கல்லூரி, எம். ஏ. போன்ற முதுநிலைப் படிப்புக்கள் போன்ற நிலையை படிப்படியாக நீங்கள் எட்டும் வரை சில நுணுக்கமான விஷயங்கள் உங்களுக்குப் புரியவே புரியாது.

அதுவே இந்த மகா கலையின் மகத்துவம்.

[நவம்பர் 2012 இதழில் வெளிவந்தது]





8 comments :

  1. மிக அருமையான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. Very nice explanation with regard to Sarturn. You are true. Practically I am seeing old people
    as per your opinion. They all have saturn in exaulted position, but some enjoy and some people
    suffer a lot .

    ReplyDelete
  3. சுபரின் பார்வை இல்லாத சனிபகவான் பாதிப்பை தருவார் என்பதை மிக ரத்தின சுருக்கமாக சொல்லி இருக்கிறீர்கள் குருஜீ ..
    நன்கு ஜோதிடம் பயின்ற யாரும். மறைப்பதில்லை என்பதை உங்களை கேள்வி கேட்ட அம்மையார் ஒரு நாள் உணர்வார்கள் ..
    தங்கள் ஜோதிடப்பயணம் தொடரட்டும் ..நன்றி நல்ல கட்டுரையை கொடுத்தற்க்கு

    ReplyDelete
  4. Very clear explanation sir. Even a basic man like me can understand it.

    ReplyDelete
  5. எளிய தமிழில் அறிய கருத்துக்களை விளக்குகிறீர்கள். நன்றி! - இராய செல்லப்பா ( from San Diego)

    ReplyDelete
  6. வணக்கம் அய்யா,

    "கற்றார்முன் கற்ற கல்வியை உரைத்தல் இனிது"எனும் இனியை நாற்பது பாடலின்படி
    ஜோதிட சூட்சுமங்களை ஒளிவுமறைவின்றி விளக்குகிறீர்கள்.பயன்பட்டவன் என்ற முறையில் தங்களுக்கு நன்றி

    ReplyDelete
  7. வணக்கம் அய்யா,

    "கற்றார்முன் கற்ற கல்வியை உரைத்தல் இனிது"எனும் இனியை நாற்பது பாடலின்படி
    ஜோதிட சூட்சுமங்களை ஒளிவுமறைவின்றி விளக்குகிறீர்கள்.பயன்பட்டவன் என்ற முறையில் தங்களுக்கு நன்றி

    ReplyDelete
  8. SIR, Thanks for revealing the secret of long life inthis world. Without the knowledge of true meaning of life, we celebrate posh birthdays. Long Life is the punishment rewarded for all sins in the previous births. We are really grateful to you sir for giving the astrology a new dimension. Pray GOD to give you all you wish to serve the humanity. THANKS! THANKS! THANKS!

    ReplyDelete