(சித்திரை 3, 4ம் பாதங்கள், சுவாதி, விசாகம், 1, 2,
3ம் பாதங்கள் மற்றும் ர,
ரா, ரி, ரு,
ரே, ரோ, த,
தா, தி, து,
ஆகிய எழுத்துக்களை
பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)
துலாம் ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கின்ற பிலவ தமிழ்ப் புத்தாண்டு நிதானமான பலன்களை கொடுக்கின்ற ஆண்டாக இருக்கும். இந்த புத்தாண்டில் கெடுபலன்கள் எதுவும் உங்களுக்கு நடக்கபோவது இல்லை. அதேநேரத்தில் ஆஹா, ஓஹா என்ற நல்ல பலன்களும் நடந்து விடப் போவது இல்லை. கடந்து போன தமிழ்ப் புத்தாண்டை விட மேம்பட்ட ஒரு வருடமாகத்தான் பிறக்க இருக்கும் பிலவ வருடம் இருக்கும்.
தற்போது துலாமுக்கு நடந்து வரும்
அர்த்தாஷ்டமச்சனி எனப்படும் நான்காமிடத்து சனியால் இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் பெரும்
சங்கடங்களை எதிர் கொண்டவர்கள், புது வருடத்தில் அவற்றிலிருந்து மீண்டு வந்து
நல்ல நிம்மதியான, நிரந்தர வருமானம் உள்ள ஒரு நிலைக்கு மாறப்
போகிறீர்கள்.
கடந்த சில மாதங்களாக பெரும்பாலான துலாத்தினர்
வேலை, தொழில் அமைப்புகளில் சிக்கல்களை சந்தித்து
வந்தீர்கள். சனி நான்கில் அமர்ந்து உங்கள் ராசியின் ஜீவனஸ்தானமான பத்தாமிடத்தையும், ராசியையும் தன்னுடைய கெடுபலன் தரும் பார்வையால் பார்த்ததால் பெரும்பாலான துலாமுக்கு
எல்லாவகையிலும் சங்கடங்கள் தரும் நிலைமைகள்தான் இருந்து வந்தன.
சனியின் பார்வையினால் ராசியும் பலவீனம்
அடைந்திருந்ததால், “ஒட்டக்கூத்தன் பாட்டிற்கு ரெட்டைத் தாழ்ப்பாள்”
என்ற கதையாக சென்ற வருடம் நன்மைகள் எதுவும் நடக்கவில்லை. பிறக்க இருக்கும் தமிழ்ப்
புத்தாண்டு உங்களுக்கு குறைகளை நீக்கி மனநிறைவையும், பொருளாதாரச் சிக்கல்களையும்
தீர்த்து வைக்கின்ற ஆண்டாக அமையும்.
இன்னும் சில வாரங்களில் நடக்க இருக்கும்
பெயர்ச்சியின் மூலம் குரு நான்கில் இருக்கும் சனியுடன் மீண்டும் இணைவார் என்பதால்
இனிமேல் சனியின் கெடுபலன்கள் மட்டுப்படும். குரு நான்காமிடத்திற்கு மாறுவது
மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் தரக்கூடிய ஒரு நிகழ்வு
என்பதால் இந்த வருட பிற்பகுதி துலாமுக்கு சந்தோஷங்களை தரக்கூடிய ஒன்றாக இருக்கும்.
சிலருக்கு பணி நிரந்தரமாகும். வியாபாரம்
செய்பவர்களுக்கு உதவிகளும், சொந்தத்தொழில் செய்பவர்களுக்கு
எதிர்பார்த்து கிடைக்காமல் இருந்த ஆர்டர்களும் இனிமேல் கிடைக்கும். இதுவரை
நடக்காமல் இருந்த தொழில் விரிவாக்கங்கள், கிளைகள் ஆரம்பித்தல் இனி நல்லபடியாக நடக்கும்.
நவம்பர் மாதம் நடக்க இருக்கும்
குருப்பெயர்ச்சியினால் குருபகவான் இப்போது இருக்கும் சாதகமற்ற இடமான நான்கில்
இருந்து மாறி, நல்ல இடமான ஐந்தில் நிலை பெறுகிறார். இதுவும் துலாமுக்கு சாதகமான
அமைப்பு. இந்தப்பெயர்ச்சியின் மூலம் புது வருடத்தின் பிற்பகுதியில் மாற்றங்கள்
உருவாகும். சிலருக்கு வீடு மாற்றம், தொழில் மாற்றம், வேலை, மாற்றம் போன்றவைகள் நடக்கும்.
ஒரு சிறப்புப் பலனாக நவம்பர்
மாதத்திற்குப் பிறகு நான்காம் இடத்தில் சனி சுபத்துவமின்றி இருப்பார் என்பதால்
எந்தக் காரணம் கொண்டும், எவ்வளவு நெருக்கடியிலும் வீட்டுப்
பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவது மற்றும் தொழில் செய்வது வேண்டாம். அது
சரியாக வராது. இருக்கும் வீட்டை விற்று புது வீடு வாங்குவது போன்றவைகளும் இப்போது
வேண்டாம். சொந்த வீட்டை விற்று அந்தப் பணம் வேறுவகையில் செலவாகி வாடகை வீட்டில்
இருக்கச் செய்யும் கிரகநிலை இது.
பழைய வாகனங்களை வைத்திருந்து ரிப்பேர்
செலவு பார்ப்பதை விட அதை மாற்றி வேறு வாகனம் வாங்குவது நல்லது. தாயாரின் உடல்நிலை
கவனிக்கப்பட வேண்டும். தாயாரால் சங்கடங்கள் கஷ்டங்கள் வருவதற்கு வாய்ப்பு
இருக்கிறது.
இளைஞர்கள், மாணவர்களுக்கு
மேற்படிப்பு படிக்கவோ, கல்லூரி படிப்பிற்காகவோ வெளிமாநிலம்
செல்லும் பலன்கள் உண்டு. ஏற்றுமதி, இறக்குமதி போன்ற தொழில் செய்பவர்கள், வேலைவிஷயமாக தூரஇடங்களுக்கு பயணம் செல்பவர்கள், வாரம் அல்லது மாதம் ஒரு முறை வீட்டிற்கு வந்து செல்லும் அமைப்புகளில் வேலை
செய்பவர்களுக்கு இந்த வருடம் நல்ல பலன்களை தரும்.
வேலை,
தொழில்
அமைப்புகளில் அனைத்து விஷயங்களையும் நிதானமாகவும் திட்டமிட்டும் சரியாகச் செய்ய
வேண்டி இருக்கும். இளைய பருவத்தினர் உங்களுக்கு பொருத்தமான வேலை தேடி அலைவீர்கள்.
சின்ன வேலை கிடைத்தாலும் அதை பிடித்துக் கொண்டு அதிலேயே முன்னேறி மேலே போவது
புத்திசாலித்தனம். கிடைக்கும் எந்த வேலையையும் அலட்சியப்படுத்த வேண்டாம்.
சொந்தத் தொழில் செய்பவர்கள் பணம் கொடுக்கல்
வாங்கல் விஷயத்தில் கவனமுடன் இருங்கள். வியாபாரிகள் தங்களிடம் வேலை செய்பவர்களின்
மேல் ஒரு கண் வைத்திருங்கள். கொள்முதல் மற்றும் கடன் கொடுத்து வாங்குதல் போன்ற
அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடன் கொடுத்தால் திரும்பி
வராது. அதே நேரத்தில் நீங்கள் கடன் வாங்கிய இடத்தில் இருந்து உங்களுக்கு நெருக்கடி
இருக்கும்.
இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் சிந்தனைகள் திசைமாறும் வருடம் இது. எதிர்பாலினர் மீது
ஈர்ப்பு ஏற்படும் காலகட்டம் நடைபெறுகிறது. காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள்.
உங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த வருடம் சந்திக்கும் வாய்ப்பு
இருக்கிறது. இந்த வருடம் அறிமுகமாகும் நபர் ஒருவர் உங்கள் வாழ்நாள் முழுவதும்
உங்களுக்கு தொடரும் உறவாக மாறுவார்.
குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.
மகன், மகள்களின் திருமணத்தை விமரிசையாக
நடத்தலாம். பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகளும்
கிடைக்கும். நவகிரக சுற்றுலா போவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும்
நேர்த்திக் கடன்களை செலுத்தலாம். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும்.
குடும்பத்தில் உற்சாகமும், செல்வச் செழிப்பும் இருக்கும்.
பெண்களுக்கு இந்த வருடம் நல்ல வருடமாக
இருக்கும். பிறந்த வீட்டிலும் புகுந்த
வீட்டிலும் உங்கள் பெயர் சிறக்கும். மாமியார் மெச்சிய மருமகளாய் இருப்பீர்கள். உங்கள் மருமகளையும் நீங்கள்
நன்றாக கவனித்துக் கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள்.
பணத்தை சேமித்து எதிலாவது முதலீடு செய்வீர்கள்.
ஏற்கனவே திருமணமாகி முதல்வாழ்க்கை கோணலாகி
வாழ்க்கையை இழந்தவர்களுக்கு இரண்டாவது திருமணம் தற்போது நல்லபடியாக நடந்து அந்த
வாழ்க்கை குறையின்றி நீடித்தும் இருக்கும். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி
உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம
காரியங்கள் செய்ய முடியும்.
சில நிலைகளில் பணத்திற்காக பொய்பேச
நேரலாம். அதனால் பணம் கிடைக்கும். யாரிடமும் சண்டை போடாதீர்கள். வாக்குவாதமும்
செய்யாதீர்கள். சிறியதாக ஆரம்பிக்கும் பிரச்னை பெரியதாக மாறி நண்பர்களை
விரோதியாக்கும். பேசுவதிலோ திட்டுவதிலோ கவனமாக இருங்கள். வாயைக்
கட்டுப்படுத்துங்கள்.
சரக்கு வாகனங்கள், பெட்ரோல்பங்க், மதுபானம் சம்பந்தப்பட்டோர், விவசாயிகள், நிலத் தரகர்கள், மருத்துவமனையினர், கடைநிலை ஊழியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சித்
தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் வளம்
பெறுவார்கள். வருமானமும் சிறப்பாக இருக்கும்.
மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட்கள் போன்ற
துறைகளில் இருப்பவர்கள் லாபம் அடைவீர்கள். பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம், கலைகள் போன்ற
துறைகளிலும் இருப்பவர்களுக்கும் விசேஷமான பலன்கள் நடக்கும். விவசாயிகளுக்கு இது
நல்ல வருடம். விளைந்த பயிருக்கு நியாயமான விலை கிடைக்கும். பணப்பயிர் மற்றும்
எண்ணை வித்துகள் போன்றவை பயிரிட்டவர்களுக்கு லாபம் வரும்.
ஆன்மீக உணர்வுகள் சிலருக்கு அதிகமாகும்.
ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் சிலரைத் தேடிவரும். ஆலயத்தில் பணி செய்ய
சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும். இதுவரை தரிசிக்க வேண்டும் என்று ஏங்கியிருந்த
புனிதத்தலங்களுக்கு செல்வீர்கள்.
வருடக் கிரகங்களில் சனி தரும் பலன்களே முதன்மையாக
இருக்கும் என்பதால் நாணகாமிடத்து சனி சில நிலைகளில் உங்களின் ஜீவன அமைப்புகளில் தடைகளை
ஏற்படுத்தவே செய்வார். ஆயினும் அவற்றை அடுத்து நடக்க இருக்கும் குருப்பெயற்சியின் மூலம்
நீங்கள் சமாளித்து விடுவீர்கள்.
No comments :
Post a Comment