(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களில்
பிறந்தவர்கள் மற்றும் தோ, நா,
நீ, நே, நோ,
ய ,யி, யு,
நு, ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)
புதிதாகப் பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டான பிலவ வருடத்தில் விருச்சிக ராசிக்கு சிறப்பான அம்சம் என்னவென்று பார்த்தோமேயானால் வருடத்தின் முக்கிய மாதங்களில் ராசிக்கு மூன்றாமிடத்தில் சனியும், குருவும் ஒன்று கூடி நிலை கொண்டிருப்பது அதிர்ஷ்டம் தரும் அமைப்பு. எனவே வரவிருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டை விருச்சிக ராசிக்காரர்கள் வரவேற்கவே செய்வீர்கள்.
பாபக் கிரகங்கள் மூன்று, ஆறு, பதினொன்றில் கோட்சாரரீதியில்
அமர்ந்திருப்பது நன்மைகளைத் தரும் என்று நமது மூலநூல்கள் குறிப்பிடுகின்றன. அதன்படி
புத்தாண்டின் ஆரம்பத்தில் ராசிக்கு மூன்றாமிடத்தில் சனி இருப்பதும் வருடம் முழுவதும் இருப்பதும் விருச்சிகத்திற்கு நல்ல பலன்களைத்
தரும்.
வரும் நவம்பர் மாதம் முதல் குருபகவானும் நிலையாக
நானகாமிடத்திற்கு மாறி ஜீவன ஸ்தானத்தைப் பார்க்க இருக்கிறார். இதனால் விருச்சிகத்தினருக்கு
வேலை,தொழில், வியாபார அமைப்புகளில் நல்ல மாற்றங்களும், அந்த மாறுதல்களை சரியான விதத்தில் பயன்படுத்திக் கொண்டு முன்னேறும்
அமைப்பும் இருக்கும்.
குருப்பெயர்ச்சிக்குப் பிறகு இதுவரை தடையாகி
வந்த பாக்கியங்கள் கிடைக்கும். முப்பது வயதுகளில் இருக்கும் இளையபருவத்தினருக்கு
அவர்களுக்கே தெரியாமல் அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் புத்திசாலித்தனமும் வேறுபட்ட
திறமைகளும் வெளிப்பட்டு சிலர் புகழடையும் வாய்ப்பும் இருக்கிறது.
முக்கிய பலனாக இதுவரை சொந்தவீடு
இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம்
வருகிறது. மேலும் ஏற்கனவே வசதிகுறைந்த வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் கூட இந்த
வருடம் வசதியான வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர் ஒத்திக்கு வீடு எடுப்பீர்கள்.
விருச்சிக ராசியைச் சேர்ந்த தொழில்
செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் இந்த வருடம் நடக்க
இருக்கிறது. தொழிலை விரிவுபடுத்தும் உங்களின் எண்ணங்கள் ஈடேறும். தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும். கூட்டுத்தொழில் ஆரம்பிக்க
நல்ல நேரம் இது.
அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர
வருமானங்கள்’ சிறப்பாக இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து
சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும்.
தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
குடும்பப் பிரச்சினைகள் தீரும். கணவன்
மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, அல்லது வேலை
விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே
இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.
நீண்டநாட்களாக திருமணமாகாமலோ அல்லது
திருமணத்தை எடுத்துச் செய்ய குடும்பத்தில் சரியான நபர்கள் இல்லாமல்
இருப்பவர்களுக்கும் குடும்பத்தில் மூத்தவர்களாக பிறந்தவர்களுக்கும் நவம்பர் மாதத்திற்குள்
நல்லசெய்திகள் இருக்கும்.
இளைய பருவத்தினருக்கு திருமண அமைப்புகள்
கூடிவந்து ஜாம்ஜாம் என்று திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருப்பவர்கள்
பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் நுழைவீர்கள். முதல் திருமண வாழ்க்கை
முறிந்து இரண்டாம் திருமணத்திலாவது நிம்மதி இருக்குமா என்று பயந்து
கொண்டிருப்பவர்களுக்கு இப்போது திருமண அமைப்பு உண்டாகும். இரண்டாவது வாழ்க்கை நன்றாகவும்
நிம்மதியாகவும் இருக்கும்.
குழந்தை பிறக்காமல் தாமதமாகி வரும்
தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு
வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்தபடியே நடக்கும்.
உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.
பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும்
சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை
வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு
பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் யோகமான
நிகழ்ச்சிகளை சந்திப்பீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் இது.
எதிர்காலத்தில் நீங்கள் எந்தத் துறையில்
இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வருடம் நிர்ணயிக்கும் என்பதால் மிகவும் பயனுள்ள
வருடம் இது.
கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த
கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில்
நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.
தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி
சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில்
ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.
புனித யாத்திரைகள் செல்ல முடியும்.
வயதானவர்கள் காசி கயா போன்ற புனிதப் பயணம் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித
ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
ஞானிகளின் ஜீவசமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.
வெளிநாட்டு விஷயங்கள் நல்லபலன் அளிக்கும்
என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ
செல்ல முடியும். அதனால் நன்மைகளும் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு இப்போது
இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள்.
பங்குச்சந்தை யூகவணிகம் போட்டி பந்தயங்களில் லாபம் கிடைக்கும்.
இழுபறியில் இருந்து வந்த பேச்சு
வார்த்தைகள், நடவடிக்கைகள் சாதகமாக முடிவுக்கு வரும்.
இனிமேல் வராது என்று கை விடப்பட்ட பணம் கிடைக்கும். வயதான பெற்றோரைக் கொண்டவர்கள்
அவர்களுடைய உடல் நலத்தில் சிறு பிரச்னை இருந்தாலும் உடனடியாக மருத்துவ
சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது நல்லது. பெற்றோரால் விரயங்கள் இருக்கக் கூடும்.
குலதெய்வத்தின் அருள் பூரணமாக கிடைக்கும்.
நவகிரக சுற்றுலா போவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் நேர்த்திக்
கடன்களை செலுத்துவீர்கள். குடும்பத்தில் உற்சாகமும், செல்வச் செழிப்பும்
இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் வாங்குவீர்கள். வீட்டை
அழகு படுத்துவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.
வருட பிற்பகுதியில் சுபக்கிரகமான குருபகவான்
நான்காமிடத்திற்கு மாறப் போவதால் சில தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு
உங்களுடைய பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது
மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. அதனால் சிக்கல்கள் வரலாம்.
பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால்
கவனமாக இருங்கள்.
அரசு,
தனியார்துறைகளின்
ஊழியர்கள், கலைஞர்கள், உழைப்பாளிகள், வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள், பொதுவாழ்வில் இருப்போர் உள்ளிட்ட எல்லாத்தரப்பு விருச்சிக ராசிக்காரர்களுக்கும்
அதிர்ஷ்டத்தை தரப்போகும் வருடம் இது.
கலைத்துறையினர், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் நல்ல சந்தர்ப்பங்களை
அடைவீர்கள். வரும் தேர்தலில் வெற்றி உண்டு. அதிர்ஷ்டம் இந்த வருடம் நன்றாக கை
கொடுக்கும். இதுவரை எந்த விஷயத்திலும் தடைகளைச் சந்தித்து, முட்டுச்சந்தில் போய் முட்டி நிற்பதைப்
போல் உணர்ந்தவர்கள் நிலைமை மாறி அனைத்தும் சாதகமாக நடப்பதை உணருவீர்கள்.
உடல்நலமில்லாமல் இருந்தவர்கள் முன்னேற்றம்
பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். மகன், மகள்களின் திருமணத்தை மிகவும் விமரிசையாக நடத்தலாம். பேரன், பேத்திகளைப் பற்றிய நல்ல செய்திகளும் கிடைக்கும். மூத்த சகோதர சகோதரிகள்
உதவுவார்கள். எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள்
மற்றவர்களுக்கு உதவுவீர்கள்.
கடந்த சில வருடங்களாக நல்லவைகள் எதுவும் நடக்காத
உங்களுக்கு மிகுந்த மாற்றம் தரும் வருடம் இது. இனிமேல் நன்றாக இருப்பீர்கள்.
No comments :
Post a Comment