ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
வீ. நடராஜன், கருங்கல்பட்டி.
கேள்வி.
மகனின் ஜாதகத்தை அனுப்பி இருக்கிறேன். கேது மற்றும் சுக்ர புக்திகள் முடிந்த பிறகுதான் அவனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று இங்குள்ள ஜோதிடர்கள் சொல்கிறார்கள். எப்போது அவனுக்கு திருமணம் நடத்தலாம்?
பதில்.
ஜோதிடப்படி ஒருவருக்கு சுக்கிரனே தாம்பத்திய சுகத்தை கொடுப்பவர். சுக்கிரனின் வீடுகளில் அமர்ந்த கிரகங்கள் அல்லது சுக்கிரனின் நட்சத்திரத்தில் அமர்ந்த கிரகங்கள், அல்லது சுக்கிரனோடு தொடர்புகொண்ட கிரகங்களே ஒருவருக்கு திருமணத்தை தரும். மகனின் ஜாதகப்படி வரும் சுக்கிர புக்தியில் அவருக்கு திருமணம் நடக்கும்.
ஆர். ரேணுகா, சென்னை.
கேள்வி.
எனக்கு இரைப்பையில் கேன்சர் உள்ளது என்கின்றனர். எனது ஆயுள் பலம் எப்படி உள்ளது? நான் தீவிர பெருமாள் பக்தை. அளவுக்கு மீறி சாமி கும்பிடுவதால் எனக்கு இந்த சோதனையா? குழந்தைகள் இல்லாத என் எதிர்காலம் எப்படி இருக்கும்?
பதில்.
(மேஷ லக்னம், மீன ராசி. 1ல் புத, சனி, 2ல் சூரி, 3ல் சுக், செவ், 5ல் கேது, 7ல் குரு, 11ல் ராகு, 12ல் சந், 31-5- 1970 அதிகாலை 4-30 நெல்லை)
நோயைத் தரும் ஆறாம் அதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திரனின் தசை தற்போது நடப்பதால், கடந்த 2012 முதல் உங்களுக்கு சோதனைகள் அதிகம் இருக்கும். ஆறாம் அதிபதி நீச சனியுடன் இணைந்து பாபத்துவமாக இருக்கும் நிலையில் அவரது நட்சத்திரத்தில் அமர்ந்த சந்திர தசை சோதனைகளை மட்டுமே கொடுக்கும்.
சந்திர தசை அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் முடிவதால் தற்போது உங்களது நோய் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டு குணப்படுத்தப்படும். லக்ன, அஷ்டமாதிபதியான செவ்வாய், சுக்கிரனுடன் இணைந்து குருவின் பார்வையில் இருப்பதாலும், லக்னத்தையும், லக்னத்தில் இருக்கும் ஆயுள்காரகன் சனியையும் குரு பார்ப்பதாலும் உங்களுக்கு அற்பாயுள் அமைப்பு இல்லை. அடுத்து வரும் செவ்வாய் தசையும் இதை நிரூபிக்கிறது. அதிகமாக சாமி கும்பிடும் எவரும் சோதனைகளால் துவண்டு போவதில்லை. நீங்களும் அதுபோலத்தான். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கும் செவ்வாய் தசை முதல் எதிர்காலம் பயப்படும் அளவிற்கு இருக்காது.
சுசிலா, திருச்சி.
கேள்வி.
மாலைமலர் ஜோதிட பக்கத்தின் நிரந்தர வாசகர்களில் நானும் ஒருவர். என் பேத்தியின் எதிர்காலம் குறித்து தங்களிடம் கேட்க விரும்புகிறேன். பேத்தி நன்றாக படிப்பாளா? அவளால் எந்தத் துறையில் வெற்றி காண முடியும்? மருத்துவத்திற்கு படிக்கும் வாய்ப்பு உள்ளதா? இவளுக்கு சகோதரன் பிறப்பானா?
பதில்.
(விருச்சிக லக்னம், தனுசு ராசி, 2ல் சந், சனி, 3ல் செவ், கேது, 9ல் சூரி, புத, ராகு, 10ல் சுக், 12ல் குரு. 25-7-2018 மதியம் 2 மணி, திருச்சி)
ஒருவர் மருத்துவம் படிக்க வேண்டும் எனில் ஜாதகத்தில் செவ்வாய் சுபத்துவமோ சூட்சுமவலுவோ பெற்று ராசி, லக்னம் போன்றவற்றிற்கு பத்தாமிடத்தோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும். பேத்தியின் ஜாதகப்படி செவ்வாய் உச்சமாக இருந்தாலும் ராகு கேதுவுடன் இணைந்து பலவீனமாகி சூரியனின் பார்வையோடு பாபத்துவமாக இருப்பதால் இவள் மருத்துவம் படிக்க வாய்ப்பில்லை.
பௌர்ணமிக்கு அருகில் இருக்கும் சந்திரனோடு இணைந்த சனி, சுபத்துவ அமைப்பில் இரண்டாம் வீட்டில் இருப்பதாலும், பத்தில் சுக்கிரன் உள்ளதாலும், நிதானமாக செய்யும் வேலைகளில் படிப்பு, வேலை அமையும். பேஷன் டிசைனிங், வரைதல், ஆர்கிடெக்ட் போன்ற கல்வி படித்து, அது சம்பந்தப்பட்ட வேலைக்குச் செல்வார். இருபத்தி ஒரு வயதிற்கு பிறகு அடுத்தடுத்து யோகதசைகள் வருவதால் பேத்தியின் எதிர்காலம் நன்றாகவே இருக்கும். வாழ்த்துக்கள்.
டி. குமார். சேலம்-16
கேள்வி.
மகன் தற்போது பிளஸ் 2 படித்து வருகிறார். அவருக்கும், எங்களுக்கும் அவர் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஜாதகத்தில் அந்த அம்சம் உள்ளதா? மருத்துவம் கிடைக்க ஈசன் கருணை உள்ளதா என்பதை விளக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். மருத்துவம் சாத்தியமில்லை என்றால் பிஎல் படிக்க வைக்கலாமா என்பதைக் கருணை கூர்ந்து சொல்லுங்கள்.
பதில்.
(மிதுன லக்னம், தனுசு ராசி, 1ல் சுக், செவ், குரு 5ல் சந், 6ல் கேது, 12ல் சூரி, புத, சனி, ராகு, 24-5- 2002 காலை 9-17 சேலம்)
மகனின் ஜாதகப்படி மருத்துவக் கிரகமான செவ்வாய், லக்னத்திற்கு 10-க்குடைய குருவுடனும், சுக்கிரனுடனும் இணைந்து மிகுந்த சுபத்துவமாகி, லக்னாதிபதி புதனும் பரிவர்த்தனை பெற்றுள்ளதால் மகன் மருத்துவத் துறையில் படிப்பார். சட்டம் படிப்பதற்கு காரணமான சனி, சூரியன் ராகுவுடன் இணைந்து பாபத்துவமாக இருப்பதால் சட்டத்துறைக்கு வழியில்லை. வாழ்த்துக்கள்.
சந்திரா, கோவை.
கேள்வி.
இந்த ஜாதகருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை. இனிமேலும் கல்யாண யோகம் உள்ளதா? இங்குள்ள ஜோதிடர்கள் இவனுக்கு பல தோஷங்கள் உள்ளது, இது சன்னியாசி யோக ஜாதகம் என்கின்றனர். அதனால் திருமண பிராப்தம் இல்லை என்றும் சொல்லுகின்றனர். தயவு செய்து இவருக்கு திருமணம் உண்டா இல்லையா என்பதைச் சொல்லும்படி கேட்டுக் கொள்கிறேன். திருமணம் இருந்தால் எப்படிப்பட்ட பெண் அமையும்? வேறு இனம், வயது மூத்தவர், விதவை போன்ற பெண் அமையுமா? எப்போது திருமணமாகும்? என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும்?
பதில்.
(மிதுன லக்னம், ரிஷப ராசி, 1ல் செவ், 2ல் சனி, 4ல் சுக், 5ல் புத, ராகு, 6ல் சூரி, 10ல் குரு, 11ல் கேது, 12ல் சந் 20-11-1975 இரவு 8-6 திண்டுக்கல்)
லக்னாதிபதி முற்றிலும் வலுவிழந்து, மறைமுகமாக வலுப்பெறும் ஒருவருக்கு அவரது ஆயுளில் பாதிநாள் வரை நல்லவைகள் நடக்காமல், அதாவது வாழ்க்கையின் முற்பகுதி வரை அவருக்குத் தேவையான முக்கியமானவைகள் கிடைக்காமல், பிற்பகுதியில் யோகமான பலன்கள் நடைபெறும்.
இந்த ஜாதகருக்கு லக்னாதிபதி புதன் ராகுவுடன் 2 டிகிரிக்குள் இணைந்து கிரகணமாகி, லக்னத்திற்கோ, லக்னாதிபதிக்கோ சுபர் பார்வை இல்லாதது மிகவும் தாமதமாக அனைத்தும் கிடைக்ககூடிய அமைப்பு. லக்னாதிபதி புதன் கிரகணமாகி இருந்தாலும் பரிவர்த்தனையாகி மறைமுகமாக உச்சம் பெற்றிருக்கிறார். இந்த அமைப்பு இல்லையெனில் இவருக்கு திருமணமே ஆகாது.
தவிர ராசிக்கு இரண்டில் செவ்வாய், லக்னத்திற்கு இரண்டில் சனி என்ற அமைப்பும் கடுமையான ஒன்று. அதே நேரத்தில் குடும்பாதிபதி சந்திரன் உச்சமானதும், இரண்டாமிடத்தையும் அதில் இருக்கும் சனியையும் வலிமை பெற்ற குரு பார்த்ததும், சுக்கிரன் நீச்சம் ஆனாலும் பரிவர்த்தனை அடைந்ததும், இவருக்கு தாமதமாக திருமணம் அமையும் ஜோதிட அமைப்புகள். ஏழாம் அதிபதி வலுத்து, இரண்டாம் வீட்டை குரு பார்ப்பதாலும், 6-12ல் பௌர்ணமி யோகம் இருப்பதாலும் இது சந்நியாசி யோக ஜாதகம் இல்லை.
லக்னாதிபதியை முழுக்க கிரகணப் படுத்திய ராகுவிற்கான பரிகாரங்கள் மற்றும் புதனை வலுப்படுத்தும் பரிகாரங்கள் செய்யப்பட வேண்டும். ஜென்ம நட்சத்திரத்திற்கு முதல் நாள் மாலையே ஸ்ரீகாளஹஸ்தியில் தங்கி அதிகாலை ருத்ராபிஷேகம் செய்து வரச் செய்யுங்கள். திருமணம் கூடிவரும். லக்னாதிபதி புதனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை மாலைமலரில் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்.
நடக்கும் சனி தசையில் வரும் அக்டோபர் மாதம் ஆரம்பிக்கும் புதன் புக்தி முதல் இவருக்கு திருமண காலம் ஆரம்பிக்கிறது. அடுத்த வருடம் செப்டம்பர் மாதத்திற்குள் இவருக்கு திருமணம் நடக்கும். மனைவி ஒரு சிறு குறை உள்ளவராகவோ அல்லது ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி ரத்து செய்யப்பட்டவராகவோ, விவாகரத்தானவராகவோ இருப்பார். வாழ்த்துக்கள்.
என். ஜெயநாதன், நாமக்கல்.
கேள்வி.
இவர்கள் இருவருக்கும் அனைத்துப் பொருத்தங்களும் நன்றாக இருந்தும், நான்கு ஜோதிடர்களிடம் நல்லவிதமாக பொருத்தம் பார்த்து அனைவரும் நன்றாக இருக்கிறது, தாராளமாக திருமணம் செய்யலாம் என்று சொல்லியும், திருமணம் நடந்த மூன்றே நாட்களில் இருவரும் பிரிந்து விட்டார்கள். தற்போது விவாகரத்து வழக்கு நடக்கிறது. கூடிய சீக்கிரம் இருவருக்கும் விவாகரத்து கிடைக்கப் போகிறது. ஜோதிடமே பொய் என்று நான் சொல்கிறேன். அதற்கு இவர்களது திருமண வாழ்க்கையும் ஒரு சான்று. இதற்கு உங்கள் பதில் என்ன?
பதில்
பத்துப் பொருத்தம் என்பதை மட்டுமே பார்த்து திருமணம் செய்யாதீர்கள் என்றுதானே மாலைமலரில் அடிக்கடி எழுதி வருகிறேன். பத்துப் பொருத்தம் என்பது இடையில் வந்த ஒன்று. ஜோதிடர்களே தங்களுடைய வசதிக்காக தாங்களே உருவாக்கிக் கொண்ட ஒரு சுலபமான வழிமுறை. இரண்டு ஜாதகங்கள் பொருந்தி வருமாயின் ரஜ்ஜுப் பொருத்தம் இல்லையென்றால் கூட திருமணம் செய்யலாம்.
நீங்கள் குறிப்பிட்ட இந்த இரண்டு ஜாதகங்களிலும் ஆறாம் அதிபதி தசை நடந்து கொண்டிருக்கும் போது இவர்கள் இருவரையும் இணைத்தது தவறு. ஜோதிடம் என்றைக்குமே பொய்க்காது. ஜோதிடர்கள்தான் தங்களது குறைவான அனுபவத்தின் மூலம் சரியாக கணிக்க தெரியாமல் தவறுவார்கள். பொருத்தம் மட்டுமே பார்க்கத் தெரிந்த ஜோதிடரிடம் போய் நீங்கள் இவர்கள் இருவரையும் இணைக்கலாமா என்று கேட்டது தவறு. அனுபவமுள்ள ஒரு ஜோதிடரிடம் சென்று இவர்களுக்கு திருமணம் செய்யலாமா என்று கேட்டிருந்தால், இருவருக்கும் வழக்கைக் குறிக்கும் தசா புக்தி அமைப்புகள் இருப்பதால் திருமணம் செய்ய வேண்டாம் என்று சொல்லி இருப்பார்.
(02.04.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
ஐயா, தயவு செய்து எல்லா கேள்விகளிலும் பிறந்த நேரம் ஆகிய விவரங்கள் அல்லது ஜாதக கட்டம் இணைக்கவும். இது தங்கள் பதிலை நன்றாக படித்து பொருத்தி பார்க்க உதவும் , Please.
ReplyDeleteவிஜியா ஸ்ரீதர் கருத்தை நானும் ஏற்கிறேன்.
ReplyDelete