Friday, August 17, 2018

நீச பங்கம்- சில விளக்கங்கள்..D-020 Neesa Pangam Sila Vilakkangal..!


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 9768 99 8888

ஜாதகத்தில் எத்தனை யோகங்கள் இருந்தாலும், லக்னமும் லக்னாதிபதியும் வலுவாக இருந்தால்தான், ஜாதகர் இலக்கை அடைய முடியும். 
மேம்போக்காக பார்க்கும் நிலையில் ஒருவர் எதிர்காலத்தில் பணக்காரனாகவோ, அரசியல்வாதியாகவோ, மருத்துவராகவோ அல்லது வேறு ஏதேனும் ஒன்றில் சிறப்பு வாய்ந்த நபராகவோ வருவதாகத் தெரிந்தாலும், லக்னாதிபதி வலுவாக இல்லாத நிலையில் ஒருவர் நிச்சயமாக அந்த நிலையை அடைய முடியாது. 

ஒரு ஜாதகத்தில் எல்லா நிலையிலும் முதலில் பார்க்க வேண்டியது லக்ன அதிபதியின் வலு மட்டும்தான். மற்றவை எல்லாம் இரண்டாம், மூன்றாம் பட்சம்தான். லக்ன ராஜனுக்கு வலுவில்லை என்றால் அது உச்சத்தை எட்ட முடியாத ஜாதகம். 

ஜோதிடம் என்பது பலவிதமான சமன்பாடுகளைக் கொண்ட ஒரு மகா சமுத்திரம். இதில் எல்லோராலும் மூழ்கி முத்தெடுக்க முடியாது. ஒரு விதிக்கு ஏராளமான விதிவிலக்குகள் இந்த மாபெரும் கலையில் உண்டு. எனவே  மேலோட்டமாக லக்னாதிபதி வலுவின்றி தெரிந்தாலும், அவர் வலுவாக இருக்கிறாரா இல்லையா என்பதை மிக நுண்ணிய வழிகளில் மட்டுமே கணிக்க முடியும்.

காட்டப்பட்டுள்ள மருத்துவ உதாரண ஜாதகத்தில் லக்னாதிபதி புதன் நீச்சமாகி வலுவின்றி இருப்பதாகத் தெரிந்தாலும், சந்திர கேந்திரத்தில் புதன் இருப்பதாலும், வீடு கொடுத்த குருவோடு பரிவர்த்தனையாக இருப்பதோடு, குருவின் பார்வையிலும் இருப்பதாலும், எல்லாவற்றையும் விட மேலாக உச்ச சுக்கிரனின் இணைவோடு உள்ளதாலும் இங்கே புதன் நீச்சபங்க ராஜயோக நிலையில் இருக்கிறார். 

நீச்சபங்கம் என்பது வேறு, நீச்சபங்க ராஜயோகம் என்பது வேறு என்பதை ஏற்கனவே சில கட்டுரைகளில் எழுதி இருக்கிறேன். இந்த இரண்டு வேறு நிலைகளையும் ஒரு மெல்லிய கோடு மட்டுமே பிரிக்கிறது. பாரம்பரிய ஜோதிடத்தின் மிக முக்கிய நுணுக்கங்களில் இதுவும் ஒன்று. 

முக்கியமான ஒன்றை கவனித்தோமேயானால் மூல நூல்கள் நீச்சபங்க யோகம் என்று வெறுமனே இதனைக் குறிப்பிடவில்லை. நீச்சபங்க ராஜயோகம் என்றே தனிப்பட்டுச் சொல்கின்றன. மனிதர்களை வித்தியாசப்படுத்திக் காட்ட நூற்றுக்கணக்கான யோகங்களைக் குறிப்பிடும் பாரம்பரிய ஜோதிடம், மிகவும் அரிதான சில நிலைகளை மட்டுமே ராஜயோகம் என்று தனிப்பட்டு சொல்கிறது. இதைப்பற்றி “நீச்சபங்க ராஜயோகம் – சில உண்மைகள்” என்ற தலைப்பில் தனியாகவே ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதியிருக்கிறேன். 

ஒரு கிரகம் நீச்சபங்கம் அடைவதற்கு பலவிதமான நிலைகள் இருக்கன்றன. நீச்சத்தில் இருக்கும் கிரகம் ஒருவிதமான ஒளி இழந்த நிலையை அடைகிறது. இழந்த ஒளியை அது வேறுவிதமான அமைப்பில் திரும்பப் பெறும்போது  மீண்டும் தன் சுய வலுவை அடைகிறது என்பதே நீச்சபங்கத் தத்துவம். 

இதில் இழந்த ஒளியை விட அதிகமான சுப ஒளி அமைப்பை அந்தக் கிரகம் பெறும்போது, அது ராஜயோகத்தை தரக் கூடிய அளவிற்கு அதி உச்ச நிலையை அடைகிறது என்பதே நீச்சபங்க ராஜயோகத் தத்துவம். 

ஒரு கிரகம் நீச்ச பங்கத்தை அடைவதற்கு பத்துக்கும் மேற்பட்ட விதிகள் இருக்கின்றன. ஆனால் நீச்சபங்க ராஜயோகம் எனும் மிக உயரிய நிலையை அடைய வேண்டுமெனில், அக்கிரகம் உச்சனின் இணைவையோ, வலுப்பெற்ற சுபர்களின் பார்வை அல்லது தொடர்புகளையோ, பவுர்ணமிக்கு அருகில் இருக்கும் ஒளி மிகுந்த சந்திரனின் 6,7,8மிடத் தொடர்புகளையோ கொண்டிருக்க வேண்டும். 

குறிப்பாக பவுர்ணமி நிலைக்கு வெகு அருகேயுள்ள சந்திரனுக்கு எதிரே இருக்கும் ஒரு நீச்ச கிரகத்தை நாம் நீச்சன் என கணிக்கவே கூடாது. அது சந்திரனின் ஒளியைப் பெற்று நீச்ச நிலையில் இருந்து மாறி உச்ச நிலையில் இருக்கும். 

பலன்களை மாற்றும் அமைப்புகள் இதுபோன்ற நுண்ணிய நிலைகளில்தான் ஒளிந்து கிடக்கின்றன. ஒரு கிரகத்தின் சுபத்துவ, சூட்சும நிலைகளைப் புரிந்து கொள்வதே ஜோதிடத்தின் மிக உயர்நிலைப் புரிதலாக இருக்கும். இதைத் தெரிந்து கொள்ளாமல் ஒரு மனிதனின் எதிர்காலத்தை உணரவே முடியாது.  

நீச்சபங்கம் என்பது சாதாரண ஒரு நிலை, நீச்சபங்க ராஜயோகம் என்பது உச்சத்தை விட மேலான ஒரு அமைப்பு என்பதன்படி, உதாரண அண்ணனின் ஜாதகத்தில் லக்னாதிபதி புதன் உச்சமாக அல்லது உச்சத்தை விட மேலான ஒரு நிலையில் இருக்கிறார் என்பதே உண்மை.

சகல விதிகளும் பொருந்தி வரும் நிலையில் பிறக்கும் ஒருவர் நிச்சயமாக ஜோதிடம் சொல்லும் தொழில் அமைப்பினை அடைந்தே தீருவார் என்பதற்கு இந்த ஜாதகத்தையும் ஒரு உதாரணமாக சொல்ல முடியும். 

இனி தங்கை ஜாதகத்தின் மருத்துவ அமைப்புகளைப் பார்க்கலாம்.

இவரின் ஜாதகத்தில் முதன்மை மருத்துவக் கிரகமான செவ்வாய், அவருக்கு மிகவும் பிடித்த அதிநட்பு வீடான சிம்மத்தில் அமர்ந்து, லக்னத்திற்கு பத்தாம் வீட்டை தனது ஏழாம் பார்வையாலும், ராசிக்கு பத்தாம் வீட்டை தனது நான்காம் பார்வையாலும் தொடர்பு கொள்கிறார்.

குறிப்பாகச் சொல்லப்போனால், அவரைக் குளிரச் செய்யும் சந்திரனின் நேர் பார்வையில் இருக்கிறார். சந்திரன் இங்கே தேய்பிறை நிலையில் இருந்தாலும் சூரிய கேந்திரத்தில் இருப்பதால், அவருக்கு ஒளி நிலை இருக்கிறது. 

ஒரு யோக ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும் தங்களுக்குள் கேந்திர நிலையிலும், லக்னத்திற்கு கேந்திர அமைப்பிலும் இருப்பார்கள் என்பதை அடிக்கடி எழுதுகிறேன். அந்த அமைப்பின்படி உதாரண ஜாதகங்களான அண்ணன், தங்கை இருவரின் ஜாதகங்களிலும் சூரிய, சந்திரர்கள், தங்களுக்குள் கேந்திரங்களிலும், லக்ன கேந்திரங்களிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது;

கேந்திரங்கள் என்பவை ஒளிப் பிரதிபலிப்பு மையங்கள் ஆகும். ஒரு சதுர வடிவத்தின் நான்கு முனைகளிலும்  கண்ணாடிகளைப் பொருத்தி, ஒளியைப் பிரதிபலித்தால் மூலஒளி சிந்தாமல், சிதறாமல் அந்த வடிவத்திற்குள்ளேயே பிரதிபலித்துச் சென்று கொண்டே இருக்கும். இந்த நிலையை கற்பனை செய்து பார்த்தீர்களேயானால் கேந்திரங்களின் தத்துவத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியும். கேந்திரங்களான ஒரு ஜாதகத்தின் 1,4,7,10ம் வீடுகளும், அவற்றில் உள்ள  கிரகங்களும் இந்த முறையில் தங்களுக்குள் ஒளிக்கலப்பைப் பெறுகின்றன. 

தங்கையின் ஜாதகத்தில் ராசிக்கு பத்தாம் வீட்டில் குரு இருக்கிறார். குரு இருக்கும் வீடு நண்பரான செவ்வாயின் வீடு. இங்கே குருவிற்கு நட்பு நிலை உண்டாகிறது. மேலும் ராசிக்கு பத்தாம் வீட்டை சூரியன் பார்க்கிறார். ஆக ராசி, லக்னத்திற்கு பத்தாம் வீடுகளை செவ்வாய், குரு, சூரியன் மூவரும் தொடர்பு கொள்கிறார்கள்.  எனவே இது சந்தேகத்திற்கிடமின்றி ஒரு மருத்துவரின் ஜாதகம். 

சூரியன் இங்கே பகைவீட்டில்தானே இருக்கிறார் எப்படி வலுவாவார் என்ற கேள்வி எழுமானால், அந்தக் குறையை சூரியனைப் பார்க்கும் குரு நிவர்த்தி செய்கிறார். குரு வக்ரமாகி இருக்கிறாரே என்ற சந்தேகத்தையும் எழுப்புவீர்களேயானால், சூரியனுக்கு நேர் எதிரில் அதிவக்ர நிலையில் இருக்கும் குரு, சூரிய ஒளியால் வலுவை அடைவார் என்பதுதான் பதில். இதற்கு குரு எந்த வீட்டில் இருக்கிறார் என்பது முக்கியம். உச்சத்தில் இருக்கிறாரா வேறு நிலையா என்பதும் முக்கியம்.

வக்ர நிலையைப் பற்றி ஏற்கனவே நான் எழுதியிருந்தாலும் அடிக்கடி இதைப் பற்றிய சந்தேகங்களையும் பலர் கேட்கிறீர்கள். அதையும் இன்னும் சில நிலைகளையும் அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்.

சூரி,புத
சுக்

 


கேது


செவ்


சனி



 
அண்ணன்
13-4-1993 மாலை 5.30 நெல்லை

 

 

 


சந்


ராகு

 


குரு

 

 

சுக்,
கேது

ல,சூரி, புத

 

சந்,
சனி

  
தங்கை
22-5-1995
காலை 5.40
நெல்லை

 

 


செவ்


(17.08.2018 மாலை மலரில் வெளிவந்தது.)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் - செல்:8681998888, 8870998888, 8428998888, 7092778888, 8754008888, 044-24358888, 044-48678888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


No comments :

Post a Comment