Saturday, August 18, 2018

குருஜியின் 2018 ஆவணி மாத பலன்கள் -GURUJIYIN AAVANI MADHA PALANGAL .


ஜோதிடக்கலைஅரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி எண் :8870998888 

மேஷம்:
மேஷநாதன் செவ்வாய் உச்சமாக இருக்கும் நிலையில், யோகாதிபதியான சூரியன் ஆட்சி பெறுவதும், ராசிக்கு குரு பார்வை இருப்பதும் நல்லவைகளை நடத்தித் தரும் ஒரு அமைப்பு என்பதால் ஆவணி மாதம் முழுவதும் உங்களுக்கு சந்தோஷத்தைத் தரும் நிகழ்வுகளே நடக்கும் என்பது உறுதி. ராசியின் எதிரிகள் புதனும் சுக்கிரனும் வலுவிழப்பதும் ஒரு சிறப்பான நிலை என்பதால் ஆவணி மாதம் உங்களுக்கு ஆனந்த மாதம்தான். சாதகமான நேரம் என்பதால் மேஷ ராசிக்காரர்கள் தொட்டது துலங்கும் மாதம் இது.

சூரியன் வலுப்பெறுவதால் இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். சூரிய வலுவால் எதையும் சமாளிப்பீர்கள். மனதில் தைரியம் வரும். அப்பா வழியில் நன்மைகளும், சில ஆதரவான விஷயங்களும் நடக்கும்.  இளையோர்களுக்கு சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். வியாபாரிகள், கமிஷன் ஏஜெண்டுகள், எழுத்துத் துறையினர், கணக்கர்கள், கல்வித்துறையினர் போன்றவர்களுக்கு நல்ல மாற்றங்கள் உண்டு.  பொருளாதார சிக்கல்கள் எதுவும் வரப்போவது இல்லை.

மாத பிற்பகுதியில் சுக்கிரன் குருவுடன் இணைவதால் சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். டூர், பார்ட்டி போன்ற உல்லாச கேளிக்கை அனுபவங்கள் இந்த மாதம் உண்டு. அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.  சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இளைய பருவத்தினருக்கு நல்ல  திருப்பு முனைகள் இருக்கும்

ரிஷபம்:
ஆவணி மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சுக்கிரன் நீசநிலையில் பலவீனமாக இருந்தாலும் நண்பரான புதனின் வலுவால் எதையும் நீங்கள் சமாளிக்கும் மாதம் இது. வரும் குருப்பெயர்ச்சி வரை ரிஷபத்திற்கு சுமாரான காலகட்டம்தான். பிறந்த ஜாதகப்படி நல்ல தசாபுக்தி அமைப்பைக் கொண்டவர்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது. மற்றவர்களுக்கு வாழ்க்கையின் மேடுபள்ளங்கள் இப்போது புரிய வைக்கப்படும். பிடிக்காத வேலையில் இஷ்டம் இல்லாமல் இருந்து வந்த இளைஞர்களுக்கு மாற்றங்கள் உண்டு.

மாத பிற்பகுதியில் ராசிநாதனே ஆறாம் அதிபதியாகி ஆறில் வலுப் பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் மற்றும் நண்பர்களாக இருப்பவர்கள் விரோதிகளாக மாறுவது போன்ற பலன்கள் நடக்கும். எதிரி என்றும் தெரிந்தும் ஒன்றும் செய்ய முடியாமல் அவருடனேயே இருக்க வேண்டிய சூழ்நிலை போன்றவை உருவாகும். முப்பது வயதுகளில் இருக்கும் இளைஞர்கள் பெரிய முதலீட்டில் தொழில் ஆரம்பிக்காமல் இருப்பது நல்லது. அகலக்கால் வைக்க வேண்டாம். பணம் போடமால் அறிவை மூலதனமாக கொண்ட தொழில்கள் செய்யலாம்.

உங்களில் சிலர் வெளிநாடு செல்வீர்கள். பிறந்த நாட்டை விட்டு வேறு நாட்டில் இருப்பவர்களுக்கு  நன்மைகள் நடைபெறும். அலுவலகத்திலோ அல்லது ஏதேனும் ஒரு அமைப்பிலோ தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு துறைரீதியான நெருக்கடிகள் இருக்கும். நீங்கள் செய்வது தவறாகவே இருந்தாலும் இப்போது அதை ஒத்துக்கொள்ள மாட்டீர்கள். உங்களின் பிடிவாத குணம் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் உங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பார்கள். என்னதான் பிரச்னைகள் என்றாலும்  வருமானம் குறையாது.

மிதுனம்:
ராசிநாதன் புதன் இந்தமாதம் பெரும்பாலான நாட்கள் ராகு மற்றும் சூரியனுடன் இருப்பதால் மிதுன ராசிக்காரர்களுக்கு இது சுமாரான மாதம்தான். மாதத்தின் பிற்பகுதியில் புதன் அதிநட்பு வலுப் பெறுவதால் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள். புதன் அதிநட்பு நிலையில் மூன்றாமிடத்தில் இருப்பதும், உச்சத்தை நோக்கி போய்க்கொண்டிருப்பதும் யோக அமைப்புகள் என்பதால் மிதுனத்திற்கு பெரிய கவலைகள் எதுவும் இல்லை. கலைத்துறையினருக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும். உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள்.

மாத பிற்பகுதியில் சுக்கிரன் வலுப் பெறுவதால் பெண்களுக்கு இது நல்ல மாதமாக அமையும். தொழில் விரிவாக்கம், புதிய கிளைகள் ஆரம்பித்தல், புதிய டீலர்ஷிப் எடுத்தல், பணம் முதலீடு செய்தல் போன்ற விஷயங்கள் இப்போது கை கொடுக்கும். விரும்பிய இடங்களுக்கு போய் வருவீர்கள். மாணவர்கள் நன்கு படிப்பீர்கள். அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவார்கள். ராசி வலுவடைவதால் சிலரின் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்து மகிழ்ச்சியும் சந்தோஷமும் இருக்கும். உங்களை எதிரியாக நினைத்தவர்கள் நண்பராக மாறுவர்கள்.

பணிபுரியும் இடங்களில் நல்ல சம்பவங்களும் பாராட்டுக்களும் சம்பளஉயர்வு போன்ற வருமானம் உள்ள நிகழ்ச்சிகளும் இருக்கும். பணவரவு நன்றாகவே இருக்கும். அலுவலகங்களில மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். சிலருக்கு நீண்ட பயணங்களோ அல்லது அதிகமான பயணங்களோ இருக்கும். பொருளாதாரம் நன்றாகவே இருக்கும். திடீர் பணவரவு உண்டு. சிலருக்கு வீடு வாங்குவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். பழைய வாகனத்தை மாற்றி நல்ல வாகனம் வாங்குவீர்கள். தடங்கலாகி வந்த விஷயங்கள் இப்போது நிறைவேறும்.

கடகம்:
ஆவணி முழுவதும் கடக ராசிக்கு சுப நிகழ்ச்சிகளும், தூரஇடங்களில் இருந்து நல்லசெய்திகள் வரும் மாதமாக இருக்கும். மறைமுகமான வழியில்  தனவரவுகளும் வருமானமும் இருக்கும். குறிப்பாக ரியல் எஸ்டேட், சிகப்புநிற பொருட்கள் சம்மந்தப்பட்டவர்கள் போன்றோருக்கு ஒரு நல்லதொகை கிடைக்கும். ஏதாவது ஒரு ரூபத்தில் பணவரவு இருக்கும் என்பதால் எதையும் சமாளிக்க உங்களால் முடியும். சகோதர சகோதரிகள் உதவுவார்கள். வீட்டில் சுபகாரியம் உண்டு. தாயார் வழியில் நன்மைகளும், வாகன மாற்றங்களும் உண்டு.

பிள்ளைகளால் பெருமைப்படத்தக்க சம்பவங்கள் உண்டு. அதே நேரம் அவர்களால் செலவுகளும் உண்டு. எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் இனிமேல் உங்களுக்கு சாதகமாக அமையும் என்பதோடு உங்களின் நல்ல உள்ளத்தை புரிந்து கொள்ளாதவர்கள் இனிமேல் புரிந்து கொள்வார்கள் என்பதால் கடக ராசிக்கு திருப்பு முனையான மாதமிது. அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும்.

பணவரவிற்குத் தடையேதும் இல்லை. தொழில் செய்பவர்கள், வியாபாரிகளுக்கு வருமானம் இருக்கும். முதல்வாழ்க்கை கோணலாகி கஷ்டத்திற்கு ஆளானவர்கள் இப்பொழுது நல்ல இரண்டாவது வாழ்க்கையை அடைவார்கள். பெண்களால் செலவுகள் இருக்கும். குறிப்பாக மகள், சகோதரி போன்றவர்களின் சுப காரியங்களுக்கு செலவுகள் செய்ய வேண்டி இருக்கலாம். ராசிநாதன் வலுவாக இருப்பதால் கேட்கும் இடங்களில் உதவிகள் கிடைக்கும். எந்த ஒரு சிக்கலையும் தைரியமாக சமாளிப்பீர்கள்.  அனைத்திலும் வெற்றி கிடைக்கும் மாதம் இது.

சிம்மம்:
கடந்த ஒருமாதமாக ராசிநாதன் சூரியன் ராகுவுடன் இருந்த நிலை விலகுகிறது. அதோடு மாதம் முழுவதும் ராசிநாதன் சூரியன் ராசியிலேயே ஆட்சி பெறுகிறார். அவருடன் புதனும் பெரும்பாலான நாட்கள் இருப்பது நல்ல அமைப்பு. சிம்ம ராசிக்கு ஆவணி மாதம் சிறப்பான மாதமே. ஆரம்பத்தில் சற்றுச் சறுக்கி நம்பிக்கை இழப்பது போல தெரிந்தாலும் உடனடியாக சுதாரித்து கொண்டு அந்த விஷயத்தை ஜெயித்து காட்டுவீர்கள். உங்களுடைய மனோதைரியம் கூடுதலாகும். எத்தகைய பிரச்னைகளையும் சுலபமாக சமாளிப்பீர்கள்.

சிலருக்கு நீண்டதூரப் பயணங்கள் அமையும். பயணங்களால்  நன்மைகள் உண்டு. சொந்தவீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்குவது அல்லது கட்டுவதற்கான ஆரம்ப நிகழ்ச்சிகள் உண்டு. தாயார் வழியில் நல்லநிகழ்ச்சிகளும் அம்மாவின் அன்பும், அவரிடம் கேட்பது கிடைப்பதும் நடக்கும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலம் சம்மந்தப்பட்ட விஷயங்கள் யோகம் தரும்.  திருமணம் தடங்கலாகி வந்த சகோதர, சகோதரிகளின் திருமணம் கூடி வரும். வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. 
 
குறிப்பிட்ட ஒருபலனாக பணம் வருவதற்கு நீங்கள் பொய் சொல்ல வேண்டி இருக்கும். வக்கீல், மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு பணவரவு இருக்கும். வாழ்க்கைத் துணை விஷயத்தில் சில நெருடல்கள் இருக்கலாம். குடும்பத்தில் பிரச்னை வரும் பொழுது இருவரில் ஒருவர் பொறுத்து போவதன் மூலம் பெரிய அளவில் சண்டை வராமல் தடுக்கலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்கள் எதிலும் ரகசியம் காப்பது நல்லது.

கன்னி:
மாத ஆரம்பத்தில் ராசிநாதன் புதன் பனிரெண்டாமிடத்தில் இருந்தாலும் அவருடைய நண்பரான ஆட்சிபெற்ற சூரியனின் வீட்டில் இருப்பது உங்களுக்கு நன்மை தரும் அமைப்பு என்பதால் ஆவணி மாதம் நல்ல மாதமே. யோகக் கிரகங்கள் நல்லநிலையில் உள்ளதால் இந்த மாதம் உங்களுக்கு யோகபலன்கள் நடக்கும். வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. நீண்டநாட்களாக திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு திருமணம் உறுதியாகும்.

பனிரெண்டுக்கதிபதி சூரியன் வலுவாகி பாக்யாதிபதி சுக்கிரன் ராசியில் பலமிழப்பதால் இது செலவுகளும், பயணங்களும் உள்ள மாதமாக இருக்கும். செலவு செய்ய வேண்டும் என்றால் பணம் வேண்டுமே வருமானமும் தாராளமாகவே இருக்கும். பெண்கள் விஷயத்தில் கருத்து வேறுபாடுகளும், சச்சரவுகளும் வீண் விரயங்களும் வரும். அவரவரின் ஜாதகப்படி மனைவி, தாய், சகோதரி, மகள், காதலி, தோழி  போன்ற பெண் உறவுகளில் சில மனக்கஷ்டங்கள் இந்த மாதம் இருக்கும்.

சஸ்பெண்டு ஆனவர்கள் மறுபடியும் வேலையில் சேருவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பாக்கெட்டில் பணம் வைக்க முடியும். அது காலியாகாமல் பாக்கெட்டிலேயே இருக்கும். பொருளாதாரம் மேன்மை பெறும். வெளிநாட்டு விசா கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும். ஏற்றுமதி, இறக்குமதி செய்வோர் நன்மை பெறுவார்கள். குடும்பத்தில் வாழ்க்கைத் துணையிடம் சச்சரவுகள் இருந்தவருக்கு நல்ல வழி பிறக்கும்.

துலாம்:
பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் சுக்கிரன் பலமிழந்த நிலையில்   இருப்பதால் இந்தமாதம் துலாம் ராசிக்கு அலைச்சல்களும், ஏமாற்றங்களும் இருக்கும். அதேநேரத்தில் புதன் நன்றாக இருப்பதால் தொழில்ரீதியான  நன்மைகளும், பணவரவும் கிடைக்கும். துலாம் ராசியினருக்கு சிறுசிறு பிரச்னைகள் வந்தாலும் அனைத்துக் கஷ்டங்களும் சூரியனைக் கண்டதும் பனிபோல விலகி ஓடி விடும் என்பது உறுதி. ஸ்டேஷனரி, புக் ஸ்டால், ஹோட்டல், லாட்ஜ் போன்ற தொழில் செய்பவர்களுக்கு இது முன்னேற்றமான மாதமாக இருக்கும்.

ஆவணி மாதக் கிரகநிலைகளால் அக்கௌன்ட், ஆடிட்டர், சாப்ட்வேர் போன்ற துறையினர் எதையும் சமாளிக்க முடியும். கௌரவக் குறைச்சல் ஒரு போதும் ஏற்படாது. தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். நீண்டநாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் உங்கள் மனம் போல் நடக்கும். கோர்ட்கேஸ், போலிஸ் என்று அலைந்தவர்களுக்கு வழக்கு சாதகமாக முடிவுக்கு வரும். அல்லது இனிமேல் போலிஸ், கோர்ட் என்று போகாமல் சமரசம் ஆவீர்கள்.

வியாபாரிகளுக்கு இது அருமையான மாதம். ஆன்மிகத் துறையில் இருப்பவர்கள், கோவிலுக்கு அருகில் வசிப்பவர்கள், புனிதத் தலங்களில் இருப்பவர்கள் உள்ளிட்ட சிலர் லாபங்களை அடைவீர்கள். பிரச்னைகள் எது வந்தாலும் அதை நீங்கள் சுலபமாக எதிர்கொள்ளும் மாதம் இது. குறிப்பாக வேலை, தொழில் போன்றவற்றில் பணப்பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் இளையபருவத்தினர் இந்தமாதம் அவை நீங்கப் பெற்று நிம்மதி அடைவீர்கள்.

விருச்சிகம்:
"எடுத்த காரியம் யாவிலும் வெற்றிஎன்ற மகாகவியின் சத்தியவார்த்தைகள் இப்பொழுது விருச்சிக ராசிக்குப் பொருந்தும் என்பதால் அனைத்திலும் தயக்கத்தையும் சோம்பலையும் ஒதுக்கி வைத்து விட்டு முன்னேற்ற முயற்சிகளை செய்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். ஆவணிமாதம் உங்களுக்கு ஆனந்த மாதமே. சுக்கிரன் நீச வீட்டில்இருப்பதால் சிலருக்கு மட்டும் பெண்களால் வீண் விரையங்கள் இந்த மாதம் உண்டு. மற்றவர்களுக்கு வாழ்க்கைத்துணை மற்றும் பங்குதாரர்கள் நண்பர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும்.

விட்டுப் போயிருந்த சுறுசுறுப்பும், புத்துணர்ச்சியும், தைரியமும் தேடிவந்து ஒட்டிக்கொள்ளும் நேரமிது. அதிக முயற்சி இல்லாமலே அதிர்ஷ்டத்தால் இனி எல்லா வேலைகளையும் சுலபமாக முடிப்பீர்கள். குறிப்பிட்ட சிலர் விடாமுயற்சியுடன் எதையும் சாதிப்பீர்கள். எதிலும் லாபம் வரும். அனைத்திலும் வெற்றி கிடைக்கும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும்.

வெளிமாநில, வெளிதேச பிரயாணங்கள் இருக்கும். அதனால் நன்மைகள் உண்டாகும். திரவப்பொருட்கள், வெள்ளைநிறம் சம்பந்தப்பட்ட தொழில், ஆற்றுமணல், கட்டுமானப்பொருள் தொழில் செய்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. சுயதொழில், வியாபாரம் போன்றவைகளில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை விலகி அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக நடக்கும். விவசாயிகளுக்கு இந்தமாதம் மிகுந்த நன்மையை அளிக்கும். குறிப்பாக பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு மேன்மை உண்டு.

தனுசு:
ஆவணி மாதம் உங்களுக்கு விரயங்கள் இருக்கும் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்குமுன் யோசித்து செலவு செய்யுங்கள். கோர்ட்,கேஸ், நிலம் சம்பந்தமான வழக்குகள். கிரிமினல் வழக்குகள் உள்ளவர்கள் வழக்கை முடிப்பதற்கு அவசரப்பட வேண்டாம். மாத பிற்பகுதியில் சுக்கிரனும், குருவும் இணைவது உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடிய ஒன்று என்பதால் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. இளைய பருவத்தினர் பணம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ளக்கூடிய நிகழ்வுகள் நடக்கும். யாரிடமும் ஏமாற வேண்டாம்.

திருமணமாகாதவருக்கு திருமண வாய்ப்புகள் உருவாகும். இளைஞர்களுக்கு  வேலைமாற்றங்கள், மாணவர்களுக்கு படிப்பில் கவனக்குறைவு, மனத்தடுமாற்றம், எதிலும் விட்டேத்தியான மனப்பான்மை போன்றவைகள் இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் வரும் என்பதால் அவர்களை கண்காணிப்பது அவசியம். கைப்பொருள் திருட்டுப் போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல் போன்ற பலன்கள் நடக்கலாம். குறுக்குவழி சிந்தனைகள்  வேண்டாம். எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது.

அதேநேரத்தில் எட்டாமிடம் புதையல் லாட்டரி போன்ற திடீர் பணலாபத்தைக் குறிக்கும் இடம் என்பதால் எட்டில் இருக்கும் ராகுவால் பணவரவு ஒன்று இந்த மாதம் உண்டு.  கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் தீரும். கணவன் ஓரிடம் மனைவி வேறிடம் என்று பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். பூர்வீகச் சொத்துகளையோ வீடு நிலம் போன்றவைகளையோ விற்பதற்கான தேவை உள்ளவர்கள் விற்பனையை தள்ளி வைப்பது நல்லது.

மகரம்:
சுக்கிரன் வலுவிழப்பது மகர ராசிக்கு சங்கடங்கள் தரும் ஒரு அமைப்பாகும். ஒரு குறிப்பிட்ட பலனாக மாத பிற்பகுதியில் சுக்கிர, குரு இணைவால் மனதிற்குப் பிடிக்காத ஒரு செயலை நீங்கள் செய்ய வேண்டியிருக்கும். உங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காத, ஆகவே ஆகாத ஒருவருடன் வேலை செய்யவோ பயணம் செய்யவோ, கூடவே இருந்தே தீர வேண்டிய நிலையோ இப்போது இருக்கும். எதிர்பாராமல் நடக்கும் சில விஷயங்களால் எரிச்சல் அடைவீர்கள். வீண் அலைச்சல்களும், பயணங்களும் இருக்கும்.

ஆறுக்குடையவன் எட்டில் வலுப் பெறுவதால் செய்யும் முயற்சிகள் மாத ஆரம்பத்தில் ஏமாற்றத்தைத் தந்தாலும் மாத பிற்பகுதியில் வெற்றி பெறும். எட்டாமிடத்தில் இணையும் கிரகங்களால்  மனைவி, நண்பர்கள், பங்குதாரர்கள் போன்றவர்களிடம் கருத்து வேறுபாடுகளும் வீண் மனஸ்தாபமும் இருக்கும். நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். நண்பர்களிடம் விலகியே இருங்கள்.

வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளின் அதிபதியான சுக்கிரன் மாத பிற்பகுதியில் வலுப்பெறுவதால் தொழில் இடங்களில் நிம்மதி இருக்கும். குறிப்பாக வியாபாரிகளுக்கு இந்தமாதம் மேன்மைகளை தரும். அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம். அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும் பெண்களின் ஒத்துழைப்பு  கிடைக்கும். ஆசிரியர்கள், வழக்குரைஞர்கள், பேச்சை நம்பி தொழில் செய்பவர்கள், மார்க்கெட்டிங் துறையினர் போன்றவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு.

கும்பம்:
ராசிநாதன் சனி வலுவாக இருப்பதால் குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்கும். வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப சுபச் செலவுகளும் இருக்கும். சொத்து வாங்குவீர்கள். மனைவிக்கு நகை, பெண் குழந்தைகளின் திருமணத்திற்கென்று நகைசேமிப்பு போன்றவைகளை செய்ய முடியும். பெண்களுக்கு நன்மைகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். கும்ப ராசிப் பெண்கள் கணவர் மூலமாக நன்மையை பெறுவீர்கள். 

குடும்பப் பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேருவீர்கள். உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். இதுவரை இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. எனவே ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும்.

அந்தஸ்து கௌரவம் உயரும். மகன் மகள் விஷயத்தில் இருந்து வந்த மனக்கவலைகள் தீரும். வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்த இளைய வயதினருக்கு நல்ல வேலை கிடைக்கும். தாமதமாகிக் கொண்டே வந்த மகன், மகள் திருமணத்தை  நல்லபடியாக நடத்த முடியும். கடந்த சில வருடங்களாக சிக்கலில் இருந்து வந்த கும்பத்தினருக்கு நல்ல பாதையைக் காட்டும் ஆரம்ப மாதமாக ஆவணி மாதம் இருக்கும். கும்பத்திற்கு இனிமேல் குறைகள் எதுவும் இல்லை. படிப்படியான முன்னேற்றம் உண்டு.

மீனம்:
யோகாதிபதி செவ்வாய் உச்சம் பெற்று, சூரியன் ஆறாமிடத்தில் ஆட்சி பெற்றுள்ளதால் மீனத்தினருக்கு எதையும் சமாளிக்கும் தைரியம் இப்போது வரும். தெய்வத்தின் ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் உண்டு. மீனத்தின் குறைகள், வேதனைகள் அனைத்தும் விலக போகிறது. இளையபருவத்தினர் தங்களது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டிய மாதம் இது. இன்னும் சில வாரங்களில் குருப்பெயர்ச்சி நடக்கப் போவதால்  இனி குறை ஒன்றும் இல்லை. 

ராசிநாதன் எட்டில் இருந்ததால் கடந்த ஒரு வருடமாக எந்த விஷயங்களில் தாங்க முடியாத அவஸ்தைகளும், சிக்கல்களும் இருந்து வந்ததோ அவைகள் இனிமேல் தீரத் தொடங்கி நல்ல படியாக மீண்டு வருவீர்கள். கடன் தொல்லைகள் இருந்தவருக்கு கடனை அடைக்க வழி பிறக்கும். ஆரோக்கியக் குறைவு இருந்தவர்கள் நல்லபடியாக குணம் அடைவீர்கள். உடல் நலம் சீராகும். திறமை இருந்தும் வாய்ப்புக்கள் கிடைக்காமல் அல்லாடியவர்கள் தகுதிக்கேற்ற வாய்ப்பும் வெற்றியும் இனிமேல் கிடைக்கப் பெறுவீர்கள்.

வேலை செய்யும் இடத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் நல்ல விதமாக தீரத் துவங்கும். சமாளிக்க முடியாமல் இருந்தவைகளை இனிமேல் உங்களால் சுலபமாக சமாளிக்க முடியும். வீண் விரையங்கள் இனிமேல் இருக்காது என்பதால் பாக்கெட்டில் பணம் தங்கும். ஜீவனஸ்தானம் வலுப்பெறுவதால் இதுவரை வேலை கிடைக்காமல் இருந்தவர்களுக்கு பொருத்தமான வேலை அமையும். எதிர்பாராத வகையில் வருமானங்கள் இந்த மாதம் இருக்கும். சிலருக்கு வீடு மாறுதல் போன்ற பலன்கள் நடக்கும்.
(17.08.2018 மாலை மலரில் வெளிவந்தது.)



3 comments :

  1. ஐயா உங்களுனடய
    Touch இல்னல

    ReplyDelete
  2. நன்றி மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. நன்றி மகிழ்ச்சி.

    ReplyDelete