Saturday, July 28, 2018

சிம்மம்:2018 ஆகஸ்டு மாத ராசி பலன்கள்,


ஜோதிடக்கலைஅரசு  ஆதித்யாகுருஜி


கைபேசி எண் :8870998888


சிம்மநாதன் சூரியன் ஆகஸ்டு மாத முற்பகுதியில் பனிரெண்டில் மறைந்திருந்தாலும் பிற்பகுதியில் அவர் ராசியில் ஆட்சி பெறுவது யோக அமைப்பு என்பதால் ஆகஸ்டு மாதம் கெடுதல்கள் இல்லாத நல்ல மாதமாகவே இருக்கும். உங்களை எதிர்த்து வந்தவர்களும் மனம் மாறி உங்களையும், உங்கள் கருத்துகளையும் ஆதரிக்கும் மாதம் இது. குருபகவான் மூன்றாமிடத்தில் அமர்ந்து ஒன்பதைப் பார்ப்பதால் பாக்கியஸ்தானம் வலுப்பெற்று இதுவரை தடையாகி வந்த சகல பாக்கியங்களும் இப்போது கிடைக்கும். ஊக்கத்துடன் செயல்பட்டால் அனைத்தும் இப்போது வெற்றியாகும். சிம்மத்தினர் அனைவருமே புத்துணர்ச்சி பெறும் மாதம் இது.


உங்களில் தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு. சுயதொழில் செய்வோருக்கு தொழில் முன்னேற்றத்திற்கான அடிப்படை ஆரம்பங்கள் இப்போது நடக்கும். வியாபாரிகளுக்கு வருமானக் குறைவு இருக்காது. செவ்வாய்  வலுப்பெற்று இருப்பதால் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் இருக்கும். நீண்ட நாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும்.  சிலருக்கு வேலைமாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம் போன்றவைகள் நடக்கும்.

இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். சிலருக்கு அந்நிய இன மத மொழிக்காரர்கள் உதவுவார்கள். சொந்தக்காரர்களால் பிரச்னைகள் உண்டு. நெருங்கிய சொந்தத்தால் வம்புச் சண்டைகள் உண்டு. குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்ச்சிகளும் சிலருக்கு பொருள்  சேர்க்கையும் இருக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பீர்கள். வாழ்க்கைத்துணையால்  லாபம் உண்டு. இளையபருவத்தினர் சிலருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். தாராளமான பணவரவு இருக்கும். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு பெரிய தொகை வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. சிரமங்கள் அனைத்தும்  தீரும் மாதம் இது.

1,2,4,5,6,11,12,13,25,26 ஆகிய நாட்களில் பணம் வரும். மாத ஆரம்பத்தில் 1-ம் தேதி அதிகாலை  4.54 மணி முதல் 3-ம் தேதி மதியம் 2.25 மணி வரையும், மாத இறுதியில் 28ம் தேதி காலை 10.39மணி முதல் 30ம் தேதி இரவு 8.01 மணி வரையும் சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய முயற்சிகள் முதலீடுகளை இந்த நாட்களில் ஒத்தி வைப்பது நல்லது.

No comments :

Post a Comment