2018 ஜூலை மாத
நட்சத்திரப் பலன்கள்
அஸ்வினிக்கு மிக நல்ல
மாதம் இது. வருடம் முழுவதுமே கிரகங்கள் நன்மை தரும் நிலையில் அமைந்திருக்கின்றன.
நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் எந்த ஒரு செயலுமே இப்போது நல்லவிதமாக முடியும்.
மதிப்பு,
மரியாதை, கௌரவம் நன்றாக இருக்கும்.
அந்தஸ்துடன் நடத்தப்படுவீர்கள். குறிப்பிட்ட ஒருபலனாக எதிர்காலத்திற்கான சேமிப்பு
இப்போது இருக்கும். எப்படி வருமானம் வந்தது என்று வெளிப்படையாக சொல்ல முடியாத சில
வகைகளில் வருமானங்கள் வரும். வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான ஆரம்பங்கள்
இருக்கும்.
பரணி
பரணி தரணி ஆளும்
என்பதை நீங்கள் நிரூபிக்கும் மாதம் இது. எல்லாவிதமான நன்மைகளும் இப்போது உண்டு.
அதிர்ஷ்டம் கை கொடுக்கும். உங்களின் உழைப்பும், முயற்சியும் முழுமையான
வெற்றியை இப்போது தரும். சாப்ட்வேர் போன்ற அறிவுசார்ந்த துறை ஊழியர்கள் அதிகாரிகளிடம்
நல்ல பெயர் எடுப்பீர்கள் உங்களில் ரிஷபராசியினர் அதிகமான பயணங்களால்
சோர்வடைவீர்கள். அலைச்சல்கள் இருக்கும். சிலர் வேலையில் இருக்கும் பிரச்னைகளை
வீட்டில் காட்டுவீர்கள். அதனால் வீட்டில் கருத்து வேறுபாடு உண்டு.
கிருத்திகை
மாதத்தின்
முற்பகுதியில் நல்ல விஷயங்களும், பிற்பகுதியில் தேவையற்ற விரயங்களும்
இருக்கக் கூடிய மாதம் இது. கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு இந்த மாதம்
செலவுகளும் அதற்கேற்ற வருமானமும் இருக்கும். உங்களில் ரிஷப ராசியினருக்கு
சிலருக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும். டென்ஷனாக இருப்பீர்கள். வீட்டிலும்
அலுவலகத்திலும் உங்களைப் புரிந்து கொள்ளாதவர்களே
இருப்பார்கள். வியாபாரிகளுக்கும், சுயதொழில்
செய்பவர்களுக்கும் வருமானம் உண்டு. இளைஞர்களுக்கு சலிப்பு வரும் விஷயங்கள்
நடக்கும்.
ரோஹிணி
ரோகிணி
நட்சத்திரக்காரர்களுக்கு சோதனைகள் எதுவும் இந்த மாதம் சொல்வதற்கு இல்லை. அதே
நேரத்தில் ராசிநாதன் சுக்கிரன் பகை வீட்டில் இருப்பதால் அனைத்து விஷயங்களும்
இழுத்துக் கொண்டு போவது போல ஒரு நிலையை உணர்வீர்கள். எடுத்துக் கொண்ட காரியத்தை
முடிப்பதற்கு சிரமப்படுவீர்கள். எதுவும் சீக்கிரம் முடியாது. அதே நேரத்தில் பெரிய
பிரச்னைகள் எதுவும் வராது. எதிர்பார்த்தது மட்டும் நடக்காமல் போகும் வாய்ப்பு
இருக்கிறது. சிலருக்கு தூரப் பிரயாணங்கள் இருக்கும். அதனால் நன்மைகள் உண்டாகும்.
மிருகசீரிடம்
உங்களில் அதிகார
அமைப்புகளில் இருப்பவர்களுக்கு மாற்றங்கள் இருக்கும். சிலர் ஆன்மிக விஷயங்களில்
அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு
கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கும், காவல் துறையினருக்கும் ஏற்றம்
தரும் மாதம் இது. மாத முற்பகுதியில் நல்ல விஷயங்களும், பிற்பகுதியில்
தடைகளும் தாமதங்களும் இருக்கும். சிலருக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை
என்பது போன்ற நிலைமைகள் உண்டு. ஆயினும்
பரம்பொருளின் அருளினால் எதையும்
சமாளிப்பீர்கள்.
திருவாதிரை
திருவாதிரை நட்சத்திர
இளைஞர்களுக்கு திருப்புமுனை மாதம் இது. எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக இந்த
மாதம் அமையும். திருமணம் தாமதமான பெண் குழந்தைகளுக்கு இப்போது திருமணம்
உறுதியாகும். இதுவரை முடிக்க முடியாமல் இருந்த பிரச்னைகளை வெற்றி கொள்வீர்கள், கடன்
விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். உங்களில் சிலருக்கு ஊர்மாறுதல், வெளிமாநிலம், வெளிநாடு போன்றவைகளில் வேலை கிடைத்தல்,
வீடு மாறுதல் போன்ற பலன்கள் நடக்கும். அனைத்து தரப்பினருக்கும் இந்த
மாதம் நன்மைகள் உண்டு.
புனர்பூசம்
புனர்பூசத்தின் வேலை, தொழில்,
வியாபார அமைப்புக்கள் சிறப்பாக நடைபெறும் மாதம் இது. வீட்டில்
பிரச்னைகள் இருந்தாலும் தொழில் செய்யும் இடங்களில் நினைத்தது நடக்கும். குறிப்பாக கலைத்துறையிலும், பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம், சொகுசுவாகனம், அலங்காரம்
போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. உங்களில் மிதுன
ராசியினருக்கு பங்குச்சந்தை போன்ற யூக வணிகங்கள் இந்த மாதம் கை கொடுக்காது. நஷ்டம்
வரும் என்பதால் ஷேர் மார்க்கட்டில் கவனம் தேவை.
பூசம்
பூசத்தினர் இந்த மாதம்
கொடுக்கல் வாங்கல்களில் கவனமாக நடந்து கொள்வது நல்லது. தொழில் துறையில் சாதிக்க
நினைப்பவர்கள் புதிய கிளைகள் தொடங்கவோ, தொழிலை விரிவாக்கம் செய்யவோ
இது நல்லநேரம். சிலர் கிழக்கு நாடுகளுக்கு வேலை விஷயமாகச் செல்வீர்கள். வருமானம்
சிறப்பாக இருக்கும். எதிர்கால நல்வாழ்விற்கு
சேமிப்பது நல்லது. வீண் செலவுகளைக் குறைத்துக் கொண்டால் இந்த மாதம் நல்ல
மாதம்தான். வாகன விஷயங்களில் யோகம் கிடைக்கும். தாயார் வழி நன்மைகள் உண்டு.
ஆயில்யம்
ஆயில்யத்தினருக்கு
வேற்றுமத நண்பர்களால் நன்மைகள் இந்த மாதம் இருக்கும். உங்களில் சிலர் செய்யும் ஒரு
செயலால் நற்பெயர் அடைவீர்கள். இளைய பருவத்தினர் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை
இப்போது சந்திப்பீர்கள். சிலருக்கு வேலை விஷயமாக அலைச்சல்கள் அதிகமாக இருக்கும்.
கைக்கெட்டும் தூரத்தில் உணவு இருந்தாலும் சாப்பிடுவதற்கு நேரம் இருக்காது.
குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வரும்.. ஏற்றுமதி, இறக்குமதி
சம்பந்தப்பட்ட தொழில் வகைகளில் இருப்பவர்களுக்கு இந்தமாதம் நல்ல வருமானம்
இருக்கும்.
மகம்
மகத்திற்கு இந்தமாதம்
யோக மாதம்தான். வேறு இன,
மொழி, மதக்காரர்கள் நேசமாக இருப்பார்கள். வெளி
மாநிலத்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் இருக்கும்.
தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். சிலருக்கு
வெளிமாநில, வெளிதேச மாற்றங்கள் இருக்கும். மூன்றாம் மனிதரின்
தலையீட்டினால் குடும்பத்தில் சில கருத்து வேற்றுமைகளும் வீண் பிரச்னைகளும் வரும்.
பொறுமையையும் நிதானத்தையும் கையாண்டு அது பெரிதாகாமல் பார்த்துக் கொள்வீர்கள்.
பூரம்
பூரத்திற்கு இந்த
மாதம் பணவரவு நன்றாகவே இருக்கும். பொதுவில் இது சிறப்பான மாதம்தான்.
மீடியாத்துறையில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்களில் சீருடைப் பணியாளருக்கு பிரச்னைகள் விலகும். வீடு, வாகன,
தாயார் விஷயத்தில் செலவுகள் இருக்கும். தாயாரின் நன்மைகளுக்காக
செலவுகள் செய்வீர்கள். தாயாருக்காக ஏதேனும் வாங்கிக் கொடுப்பீர்கள். கணவன் மனைவி
கருத்து வேறுபாடுகள் விலகும். பணியிடங்களில் வாக்குவாதத்தை இந்த மாதம் தவிருங்கள்.
உத்திரம்
உத்திரத்திற்கு
பணவரவிற்கு தடை எதுவும் இல்லை. கையைக் கடிக்கும் விஷயங்களும் இருக்காது. ஆன்மிகம், மருத்துவம்,
மெடிக்கல்ஷாப், எலக்ட்ரிக்கல் மற்றும்
எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்கள்,
பங்குதாரர்கள் மற்றும் வெளிநாட்டு விஷயங்கள் நன்மை தரும். உங்களின்
புத்திசாலித்தனத்திற்கும், யூகத் திறமைக்கும் ஏற்ற மாதம்
இது. மனதிற்குள் போட்டு வைத்திருக்கும் திட்டங்களை செயல்படுத்தி சோதனை
செய்வீர்கள். இடமாற்றமும், வேலைமாற்றமும் உண்டு.
அஸ்தம்
ஜூலை மாதம்
அஸ்தத்துக்கு நல்ல மாதம்தான். உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். லட்சியங்களை இப்போது நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
உங்களில் சிலருக்கு ஞானிகள் தரிசனம் கிடைக்கும். பணப்பிரச்னைகள் தீரும். கடன்
வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. சிலர் வெளிநாட்டில் வேலை செய்யப் போக
வேண்டியிருக்கும். எதிர்கால முன்னேற்றத்திற்கான திருப்புமுனை நிலைகள் இருக்கும்.
வேலை, தொழில் அமையாதவர்களுக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய சூழல் வரும். வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுத்து
போங்கள்.
சித்திரை
சித்திரைக்கு இந்த
மாதம் சிறப்பு பலனாக நண்பர்களிடம் கருத்து வேறுபாடு உண்டு. குடும்பத்திலும்
சிறுசிறு சலசலப்புகள் இருக்கும்.. ஈகோவை தவிர்ப்பதால் பிரச்னைகள் எதுவும் வராமல்
தடுக்கலாம். எதிலும் அவசரம் வேண்டாம். அரசு, தனியார் துறை ஊழியர்கள்
நன்மைகளை பெறுவார்கள். சிலருக்கு பூமி லாபம் கிடைக்கும். வெளிநாட்டுப் பயணம்
அமையும். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கு நல்ல பலன்கள் உண்டு.
என்றைக்கோ ஒருநாள் பிரதிபலன் பாராமல் செய்த உதவியால் அதன் மூலமாக இப்போது
நல்லபலன்கள் இருக்கும்.
சுவாதி
சுவாதிக்கு ஒரு
சிறப்பு பலனாக சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு அமையக்கூடிய ஆரம்ப நிகழ்ச்சிகள்
ஜூலை மாதம் உண்டு. சிலருக்கு புதிய வாகனம் அமையும். அம்மாவின் வழியில் ஆதரவும்
அனுகூலமும் உண்டு. என்ன செலவு வந்தாலும் வருமானம் கண்டிப்பாக குறையாது. பதவிஉயர்வு, சம்பள
உயர்வு விஷயத்தில் நல்லசெய்தி உண்டு. சாப்ட்வேர் துறையைச் சேர்ந்த சிலருக்கு வேலை
மாற்றங்களும், பன்னாட்டு கம்பெனியில் பணிபுரியும் வாய்ப்பும்
கிடைக்கும். அலுவலகங்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.
விசாக
விசாக நட்சத்திரப்
பெண்களுக்கு இது நல்ல மாதமாக இருக்கும். இளைஞர்களுக்கு பிடித்தமான வேலை
கிடைக்கும். கலைஞர்களுக்கு சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் இல்லை. கடன்
தொல்லைகளால் அவதிப் பட்டவர்களுக்கு பிரச்னைகள் குறைய ஆரம்பிக்கும். உங்களின்
திறமைகளை மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்ளும் நேரம் இது. காற்றுள்ள போதே தூற்றிக்
கொள் எனும் பழமொழி இப்போது உங்களுக்குப் பொருந்தும். தோல்விகள் அனைத்தும்
வெற்றியின் படிக்கட்டுகளாக மாறும் என்பதால் உற்சாகத்துடன் செயலாற்றுவீர்கள்.
அனுஷம்
அனுஷத்திற்கு அளப்பரிய
நன்மைகள் கிடைக்க இருக்கும் ஆரம்ப மாதம் இது. ஏழரைச் சனியில் கிடைத்த அடியினால்
உண்டான தயக்கத்தை உதறித் தள்ளி, சிறிதளவு முயற்சி செய்தாலே மிகப்பெரிய
நன்மைகளைத் தருவதற்கு இறைசக்தி காத்துக் கொண்டிருக்கிறது என்பதால் இனிமேல் எந்த
விஷயத்திலும் தயக்கத்தை விட்டொழிக்கவும். இது தொல்லைகள் இல்லாத மாதம். சிலருக்கு
மட்டும் கடைநிலையில் அமர்ந்து இன்னும் தீராத பிரச்னைகள் கலக்கத்தை கொடுக்கும்.
அவர்களுக்கும் பிரச்னைகள் நல்லபடியாக தீரப் போகிறது. வாழ்த்துக்கள்.
கேட்டை
கேட்டைக்கு ஒரு
சிறப்பு பலனாக இந்த மாதம் நண்பர்கள் உதவுவார்கள். நடுத்தர வயதை கடந்தவர்கள் உடல்
நலனில் அக்கறை காட்டுங்கள். அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் வீண் அரட்டைகளில்
ஈடுபடாமல் இருப்பது நல்லது. வீட்டு பட்ஜெட்டில் இந்த மாதம் பற்றாக்குறை வராது.
கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன்
இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு சுபச் செலவுகளும், விரயங்களும் இருக்கும். இனிமேல் எல்லாம் நல்லபடியாக நடக்கப் போவதால்
அனைத்தையும் நிதானமாகவும் திட்டமிட்டும் சரியாகச் செய்வீர்கள்.
மூலம்
உங்களது இப்போதைய
பிரச்னைகள் தற்காலிகமாக தீரும் மாதம் இது. சனி இப்போது உங்கள் நட்சத்திரத்தில்
சென்று கொண்டிருப்பதால் சிலர் குழப்பமான சூழ்நிலையில் தவறான முடிவுகள்
எடுப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும்
ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம்
வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் செய்வது நன்மையைத் தரும். கடந்த சில மாதமாக
இளைய பருவத்தினர் பட்டுக் கொண்டிருக்கும் அவஸ்தைகளுக்கு நல்ல முடிவு வரப்போவதால்
இளைஞர்கள் வரவேற்கும் மாதம் இது.
பூராடம்
பூராடம்
நட்சத்திரக்காரர்களுக்கு குழப்பங்கள் இருக்கும் மாதம் இது. இளைஞர்களின் உழைப்பும்
முயற்சியும் மட்டுமே இப்போது வெற்றியைத் தரும். கடுமையாக உழைப்பவர்களுக்கு மட்டுமே
வெற்றி கிடைக்கும். நீங்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால் உங்களால் எதுவும்
செய்ய முடியும். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் நிறைவேற்றுவது
கடினமாக இருக்கும். நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருக்கும். இளைஞர்களுக்கு
ஏழரைச் சனி நடப்பதால் எதற்கும் விரக்தி அடைய வேண்டாம்.
உத்திராடம்
உத்திராட நட்சத்திர
இளைஞர்களுக்கு ஏழரைச்சனி நடப்பதால்
உங்களுக்கு நீங்களே எதிரியாக இருப்பீர்கள். நல்ல வாய்ப்புகளை வீணடித்துக்
கொள்வீர்கள். நம்பி மோசம் போவீர்கள். சரியான நேரத்தில் நல்லமுடிவு எடுக்க
முடியாதபடி கோட்டை விடுவீர்கள் என்பதால் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க
வேண்டும். இதை எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள். புதிய முயற்சிகள்
எதுவும் இப்போது வேண்டாம். தனியாக தொழில் தொடங்க வேண்டாம். நடுத்தர
வயதுக்காரர்களுக்கு கெடுதல்கள் இருக்காது.
திருவோணம்
திருவோணம்
நட்சத்திரக்காரர்கள் ஜீவன அமைப்புகளில் கண்ணும் கருத்துமாக விழிப்புடன் இருக்க
வேண்டியது அவசியம். யாரையும் நம்பக்கூடாது. எதிலும் அலட்சியமாக இருப்பது நல்லதல்ல.
வருடக்கடைசி முதல் இளையவர்களுக்கு ஏழரைச் சனியால் தொழில் பாதிப்புகள் இருக்கும்
என்பதால் இப்போதிலிருந்தே ஜீவன அமைப்புகளில் கவனமாக இருக்க வேண்டும்.
எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடக்கும் என்பதால் எதிலும் நிதானத்தை கடைப்பிடியுங்கள்.
யாரிடமும் கோபப்பட வேண்டாம். அலுவலகத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிருங்கள்.
அவிட்டம்
அவிட்டத்தின் யோக
மாதம் இது. பிரச்னைகளைச் சமாளிக்கும் தைரியம் உண்டாகும். அறிவால் எதையும் சாதிக்க
முடியும். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.
தந்தை வழியில் நன்மைகளும்,
பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு
யோகம் உண்டு. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். இளைய பருவத்தினருக்கு
முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும். சாதிக்கும் நேரம் வந்து விட்டதால் இனி கவலை
ஒன்றும் இல்லை.
சதயம்
சதயத்தினரின்
சங்கடங்கள் தீரும் மாதம் இது. அம்மாவின் மூலம் ஆதாயங்களும், இளைய
சகோதரத்தால் செலவுகளும் உண்டு. சிலருக்கு ஆன்மிக அனுபவங்களும் பயணங்களும் இருக்கும்.
எதிர்பார்த்த பணவரவு உண்டு. சிலருக்கு மனம் சந்தோஷப்படும்படியான நிகழ்ச்சிகளும்,
வீட்டிற்கு புதிதாக ஏதேனும் பொருள் சேர்க்கையும் இருக்கும்.
திருமணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் உறுதியாகும். இளையவர்களுக்கு அதிர்ஷ்டம்
செய்யும் மாதம் இது. எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் இடும் வேலை தொழில் அமைப்புகளும்
அமையும்.
பூரட்டாதி
உங்களில் மீன
ராசியினருக்கு இந்த மாதம் எதிர்பார்த்த தொகை ஒன்று சிரமம் அதிகம் இல்லாமல்
கிடைக்கும். திருமணம் தொடர்பான நல்ல விஷயங்கள் இப்போது உண்டு. சிலருக்கு திருமணம்
உறுதியாகும். கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். விட்டுக் கொடுத்துப் போவதன்
மூலம் சாதிப்பீர்கள். முயற்சி அளவிலேயே இருந்து வந்த காரியங்கள் மனம்போல
நிறைவேறும். உங்களில் சிலர் ஏதேனும் ஒரு சாதனைச்செயல் புரிந்து புகழடைவதற்கான
வாய்ப்புகள் உள்ளது. வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள்.
உத்திராட்டாதி
உத்திராட்டாதியின்
மனோதைரியம் கூடுதலாகும் மாதம் இது. எத்தகைய பிரச்னைகளையும் சுலபமாக
சமாளிப்பீர்கள். சிலருக்கு இந்த மாதம் நீண்டதூரப் பயணங்கள் அமையும். சிலருக்கு
அத்தியாவசிய விஷயங்களுக்கு செலவு செய்தே ஆக வேண்டும் என்பதால் வருமானம் நன்றாக
இருக்கும். கடன் வாங்காமலேயே செலவு செய்வீர்கள். கணவன் மனைவி ஒருவருக்கொருவர்
உதவிகரமாக இருப்பீர்கள். இளையபருவத்தினர் சிலருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும்.
மனம் உற்சாகமாக இருக்கும். சிரமங்கள் அனைத்தும்
தீரும் மாதம் இது.
ரேவதி
உங்கள் நட்சத்திர
நாதன் புதன் மாதம் முழுவதும் ராகுவுடன் இணைந்து பலவீனமாக இருப்பதால் மனம் தெளிவில்லாமல் இருக்கும். முக்கிய
முடிவுகள் எடுப்பதற்குத் தயங்குவீர்கள். எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது.
நிதானமாக இருங்கள். கோபத்தை தவிருங்கள். சிலருக்கு மறைமுக எதிர்ப்புகள் இருக்கும்.
நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். அனைத்து
விஷயங்களிலும் யோசித்து செயல்படுவது நல்லது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள்
மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
No comments :
Post a Comment