Monday, July 16, 2018

2018 Aadi matha palankal-2018 ஆடி மாத பலன்கள்


2018 Aadi matha palankal - 2018  ஆடி மாத பலன்கள்


மேஷம் :

ராசிநாதன் செவ்வாய் வலுவுடன் இருப்பதால் ஆடிமாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் தரும் மாதமாகவே இருக்கும். பணவிஷயத்திலோ அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளிலோ கெடுதல்கள் எதுவும் நடைபெற வாய்ப்பில்லை. வழக்கு பிரச்சனைகள் உள்ளவருக்கு இனி சாதகமான தீர்வு கிடைக்கும். பெண்களுக்கு இது உற்சாகமான மாதம். குடும்பத்தில் நீங்கள் சொல்லும் யோசனைகள் ஏற்கப்படும். மாதமுடிவில் நல்ல வருமானங்கள் வரும். சிலருக்கு மறைமுகமான பணவரவுகளும்  உண்டு. 

ஆறுக்குடைய புதன் மாதம் முழுவதும் ராகுவுடன் இணைந்து வலுவிழப்பதால் எதிலும் தொல்லைகளும் எதிர்ப்புகளும் இல்லாத மாதம் இது. எதிலும் வெற்றி பெறுவீர்கள். மனதில் இதுவரை இருந்து வந்த சிறு தயக்கத்தைக் கூட தூக்கி எறிந்து விட்டு செயல்படுவீர்கள். மேஷத்தின் மிக நல்ல நேரம் இது. அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தை காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். அதேநேரத்தில் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டியதும் அவசியம்.

விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. தொழில், வியாபாரம் போன்றவைகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நல்ல விதமாக நடக்கும். சமீபகாலமாக வேலையில் பிரச்சனை ஏற்பட்டு, வேலைமாற்றம் ஏற்பட்டவருக்கு மனதிற்கு பிடித்த நல்லவேலை அமையும்.  மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். ராஜ கிரகங்கள் அனைத்தும் வலுவாக இருப்பதால் வீட்டில் சுபகாரியங்கள் உண்டு. திருமண ஏற்பாடுகள் தள்ளிப் போயிருந்தவர்களுக்கு  திருமணம் உறுதியாகும்.

ரிஷபம் :

ரிஷப ராசிக்காரர்களுக்கு ஆடிமாதம் முதல் பதினைந்து நாட்கள் மிகவும் நல்ல பலன்களைத் தரும் மாதமாகவும், பின்பாதி நாட்கள் ராசிநாதன் சுக்கிரன் நீசம் பெறுவதால் சுமாரான பலன்கள் தரும் மாதமாகவும் இருக்கும். பெண்கள் விஷயத்தில் சற்றுக் கவனமாக இருங்கள். அலுவலகத்தில் உங்களுக்கு மேலதிகாரியாக பெண்கள் இருந்தால் அவர்கள் பேச்சைக் கேட்பது நல்லது. இல்லையெனில் கருத்து வேற்றுமை வர வாய்ப்பு இருக்கிறது. சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை வரும். விட்டுக் கொடுத்து போகவும்.

குடும்பத்தில் பாகப்பிரிவினை அல்லது பூர்வீக சொத்து பிரச்சனை சம்பந்தமாக ஏதேனும் பேச்சுவார்த்தை இருந்தால் அதைக் கொஞ்சநாள் தள்ளி வையுங்கள். புத்திரஸ்தானாதிபதி புதன் ராகுவுடன் இணைவதால்  பிள்ளைகள் விஷயத்தில் ஏதேனும் மனக்குறை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பருவ வயது குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவர்களின் மேல் ஒரு கண் வையுங்கள். குடும்ப ஸ்தானம் வலுப்பெறுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். தேவையான பொருள் ஏதாவது வாங்குவீர்கள்.

கணவன், மனைவி உறவு சுமுகமாக இருக்கும். இளையபருவத்தினருக்கு புதிய நட்புகள் கிடைக்கும். ஒரு சிலர் எதிர்கால வாழ்க்கைத்துணைவரை இந்த மாதம் சந்திப்பீர்கள். எதிர்கால முன்னேற்றதிற்கான மாற்றங்கள் இந்தமாதம் நடைபெறும். ஒரு சிலருக்கு அடிப்படை அமைப்புகளில் மாற்றங்கள் இருக்கும். இன்னும் சிலருக்கு வீடுமாற்றம், தொழில் இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவைகள் நடக்கலாம். வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு சுபகாரியம் நடத்த முன்னேற்பாடுகள் இந்த மாதம் உண்டு.

மிதுனம் :

மிதுனத்தின் ராசிநாதன் புதன் ராகுவுடன் இணைந்து வலுவிழந்திருப்பதால் இந்த மாதம் நினைக்கும் காரியம் நடக்காமல் எரிச்சல் படுத்தும். அனைத்து விஷயங்களிலும் ஒன்றுக்கு இரண்டு முறை நீங்கள் யோசித்து செயல்பட வேண்டிய மாதம் இது. என்ன பிரச்னை என்றாலும் மாத இறுதியில் எல்லாம் சரியாகும். சில மாதங்களாக தொழில் நிலைமை சரி இல்லாமல் இருப்பவருக்கும், வேலையில் பிரச்னை உள்ளவருக்கும் இனிமேல் தொழில் அமைப்புகள் நல்லபடியாக நடைபெறும். எதிலும் நிதானமாக இருக்க வேண்டிய மாதம் இது.

சிலருக்கு கடன்கள் ஏற்பட வாய்ப்பு  இருக்கிறது. வழக்குகளில் தீர்ப்புகள் எதிர்பார்த்தபடி இருக்காது என்பதால் பொறுமை தேவை. ராசிநாதன் வலுவிழந்து ஆறுக்குடைய செவ்வாய் உச்ச வலு பெறுவதால் நடுத்தர வயதுடையவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தந்தை வழி உறவினருடன் சற்று உரசல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகள் விஷயத்தில் பிரச்னைகள் இருக்காது.

குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அனைத்து விஷயங்களையும் மனைவியின் பொறுப்பில் விட்டுவிடுவதன் மூலம் சிக்கல்கள் எதுவும் வராமல் தப்பிக்கலாம். இளைஞர்களுக்கு அலைச்சல்கள்தான் இருக்கும். நீண்டநாள் நினைத்திருந்த ஒரு காரியம் உங்களுக்கு சாதகமாக நடைபெறும். கலைஞர்கள், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், விவசாயிகள், தனியார் துறையினர், தொழில் அதிபர்கள்  போன்ற  அனைவருக்கும் இந்த மாதம் சுமாரான மாதமாக அமையும்.

கடகம் :

கடகத்தின் யோகக் கிரகங்கள் ஆடிமாதம் முழுவதும் நல்ல இடங்களில் இருப்பதால் இது உங்களுக்கு நல்லபலன்கள் நடைபெறும் மாதம்தான். விரயாதிபதி புதன் ராசியில் ராகுவுடன் இருப்பதால் தேவையற்ற செலவுகளும், விரயங்களும் இருக்கும். சிக்கனமாக இருங்கள். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழல்கள் உருவாகலாம். சிலருக்கு வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும். கணிதம், அக்கௌன்ட், மென்பொருள் துறையினர்கள் மேன்மை அடைவார்கள்.

கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. விளையாட்டுத் துறையினர், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற துறையினருக்கு ஆடிமாதம் திருப்புமுனையாக அமையும். சிலர் ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் திறமையை காட்ட முடியும். நண்பர்களால் மதிக்கப் படுவீர்கள். அந்தஸ்து, கௌரவம் நன்றாக  இருக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.

அரசு, தனியார்துறை ஊழியருக்கு இது நல்ல மாதம். காவல்துறையினர் வளம் பெறுவார்கள். இளைஞர்களுக்கு எதிர்மறையான பலன்கள் நீங்கி, நல்ல பலன்கள் நடக்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இளைய பருவத்தினர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த மாதம் சந்திப்பீர்கள். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது.

சிம்மம் :

சிம்ம ராசியினர் எப்போதும், எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள் என்பதால் இந்த மாதம் முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் இருக்கும். சீருடை அணியும் துறைகளான ராணுவம், காவல்துறை, பாதுகாப்பு போன்ற பணிகளில் இருப்பவர்களுக்கு பொருளாதார மேன்மைகளைத் தரும் மாதம் இது. இளைஞர்கள், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். ராசியில் சுக்கிரன் இருப்பதால் பெண்கள் விஷயத்தில் உங்கள் கவனம் சிதறும்.

சிம்ம ராசி இளைய பருவத்தினரை அவர்களது பெற்றோர்கள் அக்கறை எடுத்து கண்காணிக்க வேண்டியது அவசியம். ஐந்தில் சனி வலுவாக இருப்பதால் அவர்கள் ஏதாவது வீண் வம்பை இழுத்து கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு தேவையற்ற விஷயத்திற்கு கடன் வாங்கக் கூடிய சூழல்கள் உருவாகும். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உடல்நலத்தில் கவனம் வைக்க வேண்டும். 

உங்களில் சிலர் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். பெண்களுக்கு அலுவலகங்களில் இருக்கும் தொந்தரவுகள் குறைய ஆரம்பிக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கும் காவல் துறையினருக்கும் நன்மைகள் உண்டு. சிலருக்கு அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. பொதுவில் நன்மைகள் அதிகம் உள்ள மாதம் இது.

கன்னி :

மாதம் முழுவதும் ராசிநாதன் புதன் ராகுவுடன் இணைத்து வலுவிழப்பதால் முயற்சிகளுக்குப் பிறகுதான் இந்த மாதம் நல்லவைகள் நடக்கும். ஆனாலும்   கெடுதல்கள் எதுவும் வரப் போவது இல்லை. வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டு இருக்கும் சிலருக்கு நிலையான உத்தியோகம் அமையும். பெண்களுக்கு சிறப்புகள் தேடி வரும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கும். லாபஸ்தானத்தில் ராகு இருப்பதால் அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.

உங்களில் சிலர் தேவையற்ற விவகாரங்களில் மூக்கை நுழைத்து கையில் இருக்கும் காசை விரயம் செய்வீர்கள். பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள். மாத இறுதியில் ராசியில் சுக்கிரன் நீசமாவதால் வாழ்க்கைத்துணை விஷயங்களில் விட்டுக் கொடுத்து போங்கள். கணவன் மனைவி இருவருமே ஈகோவை தவிர்ப்பதால் பிரச்னைகள் எதுவும் வராமல் தடுக்கலாம்.  அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள்.

மென்பொருள், கணினி துறையினருக்கு பதவிஉயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் நிற்கும் பாக்கித் தொகை கைக்கு கிடைத்தல் போன்றவைகள் நடக்கும். வீட்டில் சுபகாரியங்களுக்கான முன்னோட்டம் இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். சிறு சிறு உடல்நலப் பிரச்னைகள் வரலாம். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். மாத முற்பகுதி சுமாராகவும் பிற்பகுதி நன்றாகவும் இருக்கும் மாதம் இது.

துலாம் :

துலாம் ராசியினர் ஆடிமாதம் முழுவதும் மனமகிழ்ச்சியோடும் புத்துணர்வோடும் இருப்பீர்கள். உங்கள் திறமைகள் வெளிவரும் மாதம் இது. திடீர் அதிர்ஷ்டம் இப்போது கை கொடுக்கும். முக்கியமான பிரச்னைகள் இந்தமாதம் நீங்கி நிம்மதியாக உணர்வீர்கள். என்னதான் ஒருவரை இறைவன் கடுமையாக சோதித்தாலும் கடைசி நேரத்தில் அவரைக் கைவிட மாட்டார் என்பது இப்போது உங்கள் விஷயத்தில் நடக்கும். சிலருக்கு பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் இருக்கும். கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளை கண்காணிப்பது நல்லது.

வெளிநாட்டுப் பயணத்திற்கு இருந்த தடைகள் நீங்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வரும். வழக்குகள் வெற்றி பெறும். தந்தையின் ஆதரவு பூரணமாய்க் கிடைக்கும். தந்தைவழி உறவினர்களால் நன்மை கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம்.

இதர வருமானங்கள் எனப்படும் வெளியில் சொல்லமுடியாத வகையில் உள்ள மறைமுக வருமானங்கள் சிலருக்கு உண்டு. துலாம் ராசிக்காரர்களில் வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு போன்ற வகைகளில் தொழில் அமைப்புகளில் இருப்பவர்கள் லாபம் பெறுவீர்கள். வலுப்பெற்ற ராகுவால் வேற்றுமத, மொழி, இனக்காரர்கள் தொடர்புகள் கிடைக்கும். முகம் தெரியாதவர்கள் உதவுவார்கள்.  சுய தொழிலர்களுக்கு உற்பத்தி ஆர்டர்கள் சீராகக் கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். சிறப்பான மாதம் இது.

விருச்சிகம் :

விருச்சிக ராசிக்கு கெடுபலன்கள் குறைந்து நல்ல பலன்கள் நடைபெறும் காலம் வந்து விட்டது. ஆடி மாதம் எதையும் சமாளிப்பீர்கள். நம்பிக்கையை தளர விடாதீர்கள். மாத முற்பகுதியில் எதிர்மறைபலன்கள் நடந்தாலும் பிற்பகுதியில் அனைத்தும் சூரியனை கண்ட பனி போல மறையும். கெடுதல்கள் எவையும் உங்களை அணுகாது. முக்கிய பலனாக நீண்ட காலமாக முடியாமல் இழுத்துக் கொண்டு இருந்த விஷயங்கள் சாதகமான முடிவுக்கு இப்போது வரும். விருச்சிகத்திற்கு விடியும் மாதம் இது.

வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும். சிக்கனத்தை கடைபிடியுங்கள். தேவையற்ற பொருட்கள் வாங்குவதால் விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஈகோ பிரச்னையால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமைகள் வரலாம் என்பதால் எதிலும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தலைவியின் கட்டுக்குள் இருக்கும் குடும்பத்தில் குறைகள் எதுவும் இருக்காது என்பதால் மனைவியின் பேச்சை கேட்டால் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.

விருச்சிகத்தினருக்கு எதிர்காலத்திற்கான நல்ல மாற்றங்கள் இப்போது நடைபெறும். இன்னும் சில வாரங்களில் உங்களுக்கு சாதகமான பெயர்ச்சிகள் நடப்பதால் முப்பது வயதுகளில் இருப்பவர்கள் வேலை, தொழில் விஷயங்களில் சில முக்கியமான நல்ல மாற்றங்களை  சந்திப்பீர்கள். சிலருக்கு இது நினைத்தது நிறைவேறும் மாதமாக இருக்கும். அனுஷம், கேட்டை நட்சத்தினருக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். விருச்சிகத்தின் முகத்தில் சந்தோசம் தெரியும் மாதம் இது.

னுசு :

தனுசு ராசி இளைய பருவத்தினருக்கு குழப்ப மாதம் இது. பணம் வரும் நேரங்களில் சிலருக்கு கடைசி நேரம் வரை பணம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று டென்ஷன் இருக்கும். இறுதியில் பணம் கிடைக்கும் என்றாலும் தேவைக்குத்தான் வருமே தவிர சேமிக்கும் அளவிற்கு இருக்காது. புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. ஜென்மராசியில் இருக்கும் சனியால் மனம் சற்று அலைபாய்ந்து, முடிவெடுக்கும் திறன் குறைவாக இருக்கும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுங்கள்.



பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல்படுவது நல்லது. ஏழாமிடம் வலு குறைவதால் வாழ்க்கைத் துணை விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் வரும். மாத இறுதியில் சுக்கிரன் நீசம் பெறுவதால் அலுவலகத்தில் பெண்களின் கீழ் வேலை பார்ப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். காதல் கத்திரிக்காய்கள் வேண்டவே வேண்டாம். கடுமையான மன அழுத்தம் வரும். கவனம்.

ஐம்பது வயது தாண்டியவர்களுக்கு எவ்வித குறையும் இருக்காது. அவர்களுக்கு எதிர்மறை பலன்கள் எதுவும் நடக்காது. இளைய பருவத்தினர் அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். வியாபாரிகளுக்கு சுமாரான நன்மைகள் உண்டு. கலைஞர்களுக்கு முயற்சிகளுக்கு பின்புதான் நல்லவை நடக்கும்.

மகரம் :

மகர ராசிக்கு செலவுகள் அதிகமாக இருக்கும் என்று கிரக நிலைகள் காட்டுகின்றன. பணவரவு நிறைவாகவே இருக்கும். இளைய பருவத்தினர்  வேலையில் சேருவீர்கள். சுயதொழில் செய்பவருக்கு  முன்னேற்றம் உண்டு. சிலருக்கு எதிர்கால நல்வாழ்விற்கான நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல விஷயங்கள் உண்டு. பிள்ளைகளுக்கு சுபகாரிய அமைப்புகள் உண்டாகும். திருமணம் தாமதமான குழந்தைகளுக்கு திருமணம் உறுதியாகும். அரசு, ஊழியர்களுக்கு அலுவலகங்களில் நெருக்கடிகள் இருக்கும்.

இளைய பருவத்தினர் எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது நல்லது. நடுத்தர வயதுடைய மகர  ராசிக்காரர்கள் உடல்நல விஷயத்தில் கவனமாக இருக்கவும். சிறு ஆரோக்கியக் குறைவு என்றாலும் கூட மருத்துவரை அணுகுவது நல்லது. ராசியில்  இருக்கும் செவ்வாய், கேதுவின் மூலம் உங்களின் செயல்திறனும், மன உறுதியும் அதிகரிக்கும் என்பதால் ஆடி மாதம் நீங்கள் நினைப்பதை சாதிக்க முடியும்.

சுக்கிரன் வலுவிழப்பதால் பெண்களால் வீண்பழி வந்து சேரும். பெண்களிடம் சற்றுத் தள்ளியே இருங்கள். பெண்களால் செலவுகளும், மனவேதனைகளும் இருக்கும். சிலருக்கு பிள்ளைகளுடன் விரோதமும், அவர்கள் கூட்டுக் குடும்பத்தில் இருந்து பிரிந்து தனிக்குடித்தனம் போவதும் உண்டு சிலர் எந்த நேரமும் படபடப்பாக இருப்பீர்கள். டென்ஷன் அதிகமாக இருக்கும். எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய வேண்டி இருக்குமாதலால் குழப்பமான சூழ்நிலையில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

கும்பம் :

கும்ப ராசியினருக்கு ஆடி மாதம் முழுவதும் செய்யும் தொழில், வியாபாரம் போன்ற அமைப்புகள் லாபமாகவும், சிறப்பாகவும் நடைபெறும். வேலை செய்யும் இடங்களில் சந்தோஷமான நிகழ்ச்சிகள் உண்டு. நிலுவையில் இருந்த பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். சுக்கிரன் வலுவிழப்பதால் எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். பணவிஷயத்தில் கவனம் தேவை.

விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு மாத முற்பகுதியில் நல்ல பலன்களும் பிற்பகுதியில் சுமாரான பலன்களும் நடக்கும். சிலருக்கு தூர பிரயாணங்கள் உண்டாகும். சூரிய ராகு சேர்க்கையால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சிலருக்கு  சண்டை சச்சரவு என்ற நிலைக்கு போனாலும் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து போவதன் மூலம் குடும்பத்தில் மிகப் பெரிய கஷ்டங்களோ, பிரிவினைகளோ வரப்போவது இல்லை.

வீடு வாங்குவது, தொழிலை விரிவுபடுத்துவது போன்றவைகளில் யோசித்து செயல்படுங்கள். தற்போது வீடு கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு இடையில் தடைப்பட்டு வீட்டை முடிக்கும் அமைப்பு இருப்பதால் நல்ல காண்ட்ராக்டரிடம் பொறுப்பை ஒப்படையுங்கள். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். இதுவரை நல்ல பெயர் எடுத்த இடங்களில் சற்று மதிப்பு குறையலாம். யோகர்களான புதனும், சுக்கிரனும் பலவீனமான அமைப்பில் இருப்பதால் எல்லா நிலைகளிலும் விழிப்புடன் இருப்பது நல்லது.

மீனம் :

யோகாதிபதி செவ்வாய் உச்ச வலுவுடன் இருக்கும் நிலையில் உங்களுடைய அந்தஸ்து, கௌரவம், சிந்தனை, செயல்திறன் அனைத்தும் இப்போது நல்ல நிலையில் இருக்கும். மாத இறுதிவரை யோகக் கிரகங்கள் நல்லநிலையில்  இருப்பதால் கெடுதல்கள் எவையும் உங்களை அணுகாது என்பது உறுதி. தொழில், வேலை, வியாபாரம் போன்ற அனைத்து விஷயங்களும் நன்றாக நடைபெறும். பங்குதாரர்களிடம் சுமுகமான உறவு இருக்கும். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு உடல்நல பிரச்னைகள் இருக்கும்.

அடுத்து நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலம் அனைத்து விஷயங்களிலும் இருந்து வந்த தடைகள் நீங்கப் போவதால் இதுவரை நடக்காத அனைத்தும் நடந்து, கிடைக்காத அனைத்தும் கிடைத்து, தெய்வ அருள் உங்களை நல்லபடியாக வாழ வைக்கப் போகிறது. இளைய பருவத்தினருக்கு இந்த மாதம் முக்கிய திருப்பு முனைகள் இருக்கும். ஏழுக்குடையவன் ராகுவுடன் கிரகணமாவதால் வாழ்க்கைத்துணை விஷயத்தில் கசப்புகள் இருக்கும். பொறுத்துப் போவது நல்லது.

செலவுகளும் அதற்கேற்ற வருமானமும் உண்டு. பெண்களுக்கு வழக்கம் போல பணிச்சுமை இருக்கத்தான் செய்யும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருங்கள். செய்யாத தவறுக்கு தண்டனை கிடைக்கலாம். வீண்பழி வரலாம். அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு இருக்கும் நிலையான வேலையை விட்டு விட்டு வேறொரு கம்பெனிக்கு மாறுவது இப்போது வேண்டாம். அது அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதையாகி விடும். சிலருக்கு தூரப்பயணங்கள் இருக்கும்.














No comments :

Post a Comment