கும்பம் :
கோட்சாரக் கிரக நிலைகள் சாதகமாக இருந்தாலும் பிறந்த ஜாதக அமைப்பின்படி யோக தசா
புக்திகள் நடக்காத பெரும்பாலான கும்ப ராசிக்காரர்கள் நல்லவைகளை அனுபவிக்க
முடியாமல் சிக்கல்களில் இருக்கிறீர்கள். அவர்களுக்குக் கூட ஓரளவாவது
நன்மைகளைத் தரும் மாதமாக ஜூலை இருக்கும். இதுவரை நல்லவை எதுவும் நடக்காமல்
கிணற்றில் போட்ட கல்லாக வாழ்க்கை இருப்பவர்களுக்கு ஆகஸ்டுக்கு மாதத்திற்கு
மேல் மேன்மைகள் உண்டு. குல தெய்வத்திற்கான நேர்த்திக் கடன்களை செலுத்தாமல்
இருப்பவர்கள் உடனடியாக நிறைவேற்றுங்கள்.
குருபகவான் வலுவாக இருப்பதால் பண வரவிற்கு குறை இருக்காது. எதையும் நீங்கள்
சமாளித்து விடுவீர்கள். எதிர்பாராத தனலாபங்கள் இந்த மாதம் இருக்கும்.
நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விஷயங்கள் ‘சட்’ என்று முடிவுக்கு வந்து
ஒரு நல்லதொகை கைக்கு கிடைக்கும். வீடு வாங்குவதற்கு இருந்து வந்த தடைகள்
நீங்குகிறது. இருக்கும் வாகனத்தை மாற்றிவிட்டு அதைவிட நல்ல வாகனம் வாங்க
முடியும். வாகனம் இல்லாதவர்களுக்கு தற்போது வாகனம் வாங்குவதற்கான யோகம்
இருக்கிறது. ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில்கள் தொடர்புடையவர்கள்
வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே
தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் யோகத்தை தரும்.
இதுவரை நடந்து வந்த எதிர்மறை பலன்கள் இனிமேல் இருக்காது. கணவன், மனைவி உறவு
நன்றாக இருக்கும். எந்த விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது.
ரியல் எஸ்டேட்காரர்கள், பில்டர்ஸ் போன்ற துறையினருக்கு இதுவரை இருந்து வந்த
தடைகள் நீங்கி, தொழில் முன்னேற்ற பாதையில் செல்லும். குடும்பத்தில் இருந்து
வந்த பிரச்சினைகள் தீரும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை
விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். கணவன் ஓரிடம், மனைவி
வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில்
பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.
1,3,7,8,9,14,15,17,29,31 ஆகிய நாட்களில் பணம் வரும். 17-ம்தேதி மதியம் 3.07
முதல் 19-ம்தேதி மதியம் 7.56 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர
பிரயாணங்களோ யாரையும் நம்பி முடிவெடுப்பதோ இந்த நாட்களில் கூடாது. கூடுமானவரை
எதையும் இந்த நாட்களில் ஒத்தி வைப்பது நல்லது.
No comments :
Post a Comment