Friday, May 25, 2018

மீனம்: 2018 ஜூன் மாத பலன்கள்

மீனம் :

மீன ராசிக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும் மாதம் இது. உங்களின் ராஜயோகாதிபதி செவ்வாய் மாதம் முழுவதும் உச்சமாக இருக்கிறார். உங்களின் உழைப்பும் முயற்சியும் இப்போது வெற்றியைத் தரும் என்பதால் உண்மையாக உழைத்தால் கண்டிப்பாக வெற்றிதான். நீங்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால் உங்களால் எதுவும் செய்ய முடியும். ஐந்தில் சுக்கிரன் ராகுவுடன் இணைவதால் முதுகுக்குப் பின்னால் செயல்படும் எதிரிகளிடம் உஷாராக இருங்கள். வேலை, தொழில் செய்யும் இடங்களில் அக்கம்பக்கம் பார்த்துப் பேசுங்கள். மனதில் இருப்பதை வெளிப்படையாக யாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.


இளைஞர்களுக்கு கையில் காசு நடமாட்டம் அதிகம் இருக்கப் போவதால் தேவையில்லாத சில பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. சொந்தத் தொழில் நல்லபடியாக நடக்கும். வியாபாரிகள் ஏற்றம் பெறுவார்கள். பண வரவு நன்றாக இருக்கும். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும். அரசுவகை உதவிகள் எதிர்பார்ப்போருக்கு சுணக்கம் இருக்கும். அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டு. கூட்டுத்தொழிலில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி பங்குதாரர்களிடையே இணக்கமான சூழல்கள் இருக்கும்.

ஐந்தில் ராகு இருப்பதால் பிள்ளைகளுக்கும், பெற்றவர்களுக்கும் தொடர்பு இடைவெளி எனப்படும் தலைமுறை இடைவெளி இப்போது வரும். நீங்கள் உங்கள் தகப்பனாரிடம் வாழ்ந்த காலம் வேறு. தற்போதைய இளைஞர்களின் காலம் வேறு என்பதை உணர்ந்து கொண்டால் இந்த ஐந்தாமிட ராகுவை சுலபமாக சமாளித்து விடுவீர்கள். பெண்களுக்கு சிறப்புக்கள் வீடு தேடி வரும். வேலை செய்யுமிடத்திலும் நல்ல பெயர் வாங்குவீர்கள். 

வாகன விஷயங்களில் யோகம் கிடைக்கும். புதிய வாகனம் அமையும்.சுயதொழில் வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு தொழில் வளர்ச்சிக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாகவோ அல்லது முன்னேற்றத்திற்கானதாகவோ, வருமானம் வரும் வகையிலோதான் செலவாகும்.

2,5,7,8,9,10,16,17,18,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 22-ம் தேதி மதியம் 1.43 முதல் 24-ம்தேதி இரவு 10.33 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் தூரப்பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம்.

No comments :

Post a Comment