Friday, May 25, 2018

கும்பம்: 2018 ஜூன் மாத பலன்கள்

கும்பம் :

உழைப்பிற்கு அதிபதியான சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீங்கள். உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது. நீங்களாகவே வலியப் போய் ஏமாந்தால்தான் உண்டு. கிரக நிலைகள் கும்ப ராசிக்கு சாதகமாக இருப்பதால் இந்த மாதம் உங்களின் மதிப்பு, மரியாதை, கௌரவம், அந்தஸ்து நன்றாக இருக்கும். வெளியிடங்களில் கௌரவத்துடன் நடத்தப்படுவீர்கள். இளைய பருவத்தினருக்கு படித்த படிப்புக்கும், மனதிற்கும் ஏற்றபடியான இடத்தில் வேலை கிடைக்கும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள், வியாபாரிகள், வட்டித் தொழில் செய்வோர், நீதித்துறையினர், வங்கிகளில் வேலை செய்வோர் போன்ற எல்லாத் துறையினருக்கும் நல்ல பலன்கள் நடைபெறும் மாதம் இது.

ஒரு முக்கிய பலனாக சிலருக்கு அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் மற்றும் செலவுகள் இருக்கும். வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தந்தை வழியில் உங்களுக்கு எல்லா வகையான ஆதரவுகளும் கிடைக்கும். ஆன்ம பலம் கூடும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள். எல்லாவற்றிற்கும் அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்த நிலைமை மாறி நீங்கள் மற்றவர்களுக்கு உதவுவீர்கள்.

குடும்பத்தில் சுமுகமும் அமைதியும் இருக்கும். உங்களின் மனவலிமை நன்றாக இருக்கும். எதையும் சமாளிக்கலாம் என்ற தைரியம் பிறக்கும். சமாளிக்கவும் செய்வீர்கள். புதன் வலுப்பெற்று இருப்பதால் குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் இருக்கும். எதிர்பார்க்காத பணவரவும் இந்த மாதம் உண்டு. வியாபாரிகளுக்கு எதிர்பார்த்ததை விட லாபங்கள் இருக்கும். கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். 

வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இந்த மாதம் மிகவும் நல்ல மாதமே. மொத்த வியாபாரிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. சிலருக்கு ஆன்மீகச் சுற்றுலா உண்டு. எந்த ஒரு விஷயத்திற்கும் அடுத்தவர்களை நம்பாமல் கூடுமானவரை அனைத்தையும் உங்களின் மேற்பார்வையில் நேரிடையாகச் செய்வது நல்லது.

1,2,4,5,8,9,10,17,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 20 ம் தேதி காலை 7.35 முதல் 22-ம் தேதி மதியம் 1.43 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் புதிய ஆரம்பங்கள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment