Tuesday, August 1, 2017

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 146 (1.8.2017)

ரா. ஜெயஶ்ரீ, அம்பத்தூர்.

கேள்வி :

மானசீக குருவிற்கு மாணவியின் பணிவான வணக்கங்கள். திருமண வாழ்வில் பல சங்கடங்களை சந்தித்த பின் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஆழமாக பதிவாகி விட்டது. தொழில் செய்ய ஆர்வமாக உள்ளேன். எனக்கு தொழில் அமையுமா? என்ன தொழில், எப்போது அமையும்? கணவர் . டி. துறையில் இருக்கிறார். அவருக்காவது சொந்த தொழில் அமையுமா? இரண்டாவதாக ஆண் குழந்தை பெறும் யோகம் உள்ளதா?

பதில் :

ஜோதிடத்தை இண்டர்நெட் மூலம் கற்றுக் கொண்டு இருக்கிறேன். உங்களின் பதிவுகள் ஆச்சர்யப் படுத்துகின்றன. இப்படி கணிக்கும் ஒருவரை நான் கண்டதே இல்லை என்று எழுதும் அளவிற்கு ஜோதிடத்தோடு தொடர்பு கொண்டுள்ள நீ அனுப்பிய ஜாதகங்களில் பிறந்த இடத்தை குறிப்பிட வேண்டும் என்று அறியாமல் போனது ஏன்?

உன்னுடைய ஜாதகம் தவறான வாக்கிய பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டிருக்கிறது. உன்னுடைய லக்னம் மாறுகிறது. பிறந்த இடத்தைக் குறிப்பிட்டிருந்தால் திருக்கணிதப்படி உன்னுடைய ஜாதகத்தை கணித்து என்னால் பதில் சொல்லி இருக்க முடியும். மீண்டும் இருவரின் பிறந்த இடத்தை குறிப்பிட்டு கேள்விகளை அனுப்பு. பதில் தருகிறேன்.

ஜி. பாஸ்கரன், சென்னை -93.

கேள்வி :

50 வயதில் ஒரு இருதய ஆப்ரேஷன் நடந்துள்ளது. மீண்டும் அதே கோளாறு வர வாய்ப்புள்ளதா? என் எதிர்காலம் எப்படி இருக்கும்? ஒரே மகனின் படிப்பு, தொழில், எதிர்காலம் பற்றி கூறவும். அவனுக்கு நல்ல வேலை கிடைத்து வயதான காலத்தில் எனக்கு உதவியாக இருப்பானா?



சனி 
கேது
ராசி

சந்,சுக் 
செவ்
சூரி

லக் 
குரு

புத, 
ராகு

பதில்:

(மகனுக்கு தனுசு லக்னம், கடக ராசி. 1-ல் குரு. 4-ல் சனி, கேது. 8-ல் சந், சுக், செவ். 9-ல் சூரி, 10-ல் புத, ராகு. 9-9-1996, பகல் 1.36, மதுரை.)

ஆறுக்குடையவன் தசையில் எட்டுக்குடையவன் புக்தி நடக்கும் போது ஆயுள் கண்டமோ அல்லது பெரிய ஆரோக்கிய குறைவோ ஏற்படும் என்பது ஜோதிட விதி. உங்களுக்கு ஆறுக்குடைய சுக்கிர தசையில், எட்டுக்குடைய சந்திர புக்தி நடந்த போது இருதய ஆப்ரேஷன் நடைபெற்றது.

லக்னாதிபதி லக்னத்தில் வலுவாக இருப்பதாலும், ஆயுள் ஸ்தானாதிபதி திக்பலமாக இருப்பதாலும் மறுபடியும் அதே பிரச்னை வராது. மகனுக்கும் தனுசு லக்னமாகி, லக்னத்தில் குரு அமர்ந்து ஒன்பது, பத்துக்குடையவர்கள் ஆட்சி உச்சம் பெற்ற தர்ம கர்மாதிபதி யோகம் உள்ள யோக ஜாதகம். தந்தையைக் குறிக்கும் ஒன்பதாமிடத்தை பங்கமற்ற குரு பார்ப்பதாலும், ஒன்பதுக்குடையவன் ஆட்சியாக இருப்பதாலும் கடைசி வரை உங்களுக்கு உதவியாக இருப்பார்.

செவ்வாயும், சந்திரனும் இணைந்து எட்டாமிடத்தில் சுபத்துவமாகி, சனி பத்தாம் இடத்தைப் பார்ப்பதால் மகன் தற்போது என்ஜினீயரிங் படித்துக் கொண்டிருப்பார். ஜாதகம் யோகமாக இருப்பதாலும் எட்டு, பனிரெண்டுக்குடையவர்கள் ஒன்றிணைந்து எட்டாமிடமான கடகத்தில் இருப்பதாலும் படித்து முடித்த பிறகு வெளிநாட்டில் வேலை செய்வார். பத்தாமிடத்தில் இருக்கும் ராகுவும், படித்து முடித்தவுடன் நடக்க இருக்கும் தசாநாதன் சுக்கிரன் எட்டில் இருப்பதும் இதை உறுதி செய்கிறது. ஜாதகம் வலுவாக இருப்பதால் எதிர்காலத்தில் குறையின்றி சிறப்பாக இருப்பார்.

எம். மேகநாதன், மதுரை.

கேள்வி :

நான்கு வருடங்களாகச் செய்து வரும் பால் வியாபாரத்தில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டு குடும்பம் நிலைகுலைந்து விட்டது. நடுத்தெருவுக்கு வந்து விட்டேன். மாமனார் வகையில் நெருங்கியவர்களிடம் கடன் வாங்கி திருப்பிக் கொடுக்க முடியாததால் அந்தப் பக்கம் ஒரே பிரச்னையும் அசிங்கமும் ஆகி மனைவியும் கோபித்துக் கொண்டு போய் விட்டாள். வீட்டை விற்றால் கடனைத் தீர்க்க முடியும் என்றாலும் வீடு அம்மாவின் பெயரில் இருப்பதால் அம்மா ஒத்துக் கொள்ளாததால் விற்க முடியவில்லை. எங்காவது கண்காணாது போய் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து விட்டேன். என் ஐந்து வயது பிள்ளையின் முகம் மட்டும் என்னைத் தடுத்துக் கொண்டிருக்கிறது. என் வாரிசு தகப்பன் இல்லாதவனாக ஆகி விடுவானா? தந்தைக்கும் மேலான என் குருநாதரே... இந்த ஏமாளி மகனுக்கு நல்ல வார்த்தை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்.

பதில் :

விருச்சிக ராசிக்கு ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கும்போது தெரியாத ஒரு தொழிலை நீங்கள் செய்தது தவறு, அதிலும் பாலுக்குரிய சந்திரன் நீசமாகி செவ்வாய், சனியின் தொடர்பை அடைந்திருக்கும் போது வெள்ளை நிறம் மற்றும் திரவப் பொருட்கள் சம்பந்தப்பட்டதில் நஷ்டம்தான் வரும். ஒருவனுக்கு ஏழரைச் சனி நடக்கும்போது பணம் மற்றும் உறவுகளைப் பற்றிய அனுபவங்களை சனி உணர்த்துவார் என்பதற்கு நீங்களும் விதி விலக்கு அல்ல. கஷ்டங்கள் எல்லாம் வரும் அக்டோபர் மாதத்தில் முடியப் போகிறது. இப்போது போய் தற்கொலை முடிவெடுத்து என்ன பிரயோஜனம்?

தீபாவளிக்குப் பிறகு வீட்டை விற்க அம்மா ஒத்துக் கொள்வார். அதுவரை பொறுமையாக இருங்கள். நீச சந்திர தசையில் தாயார் பெயரில் இருக்கும் வீடு விரயமாகித்தான் தீரும். அது நல்லது. இல்லையெனில் தாயாருக்கு சிக்கல் வரும். ஒரு ஜடக் காரகத்துவம் விரயமானால் உயிர்க் காரகத்துவம் நிலைக்கும். எல்லாப் பிரச்னையும் தீரப் போகிறது பொறுமையாக இருங்கள். நல்லது நடக்கும்.

ரா. காளிமுத்துப் பிள்ளை, பாளையங்கோட்டை.

கேள்வி :

பேரனுக்கு எப்போது திருமணம்? எனக்கு மிகவும் பிடித்த இவன் திருமணத்தைப் பார்க்கும் வரை இருப்பேனா?

பதில் :

நான் பதில் தரும் இந்த நேரம் உங்கள் பேரனுக்கு திருமணம் முடிவாகி இருக்கும். வரும் கார்த்திகை முதல் அடுத்த சித்திரைக்குள் பேரனுக்கு தாம்பத்திய சுகம் கிடைக்கும் நேரம். பேரன் திருமணத்திற்குப் பிறகும் இன்னும் கொஞ்ச காலம் இருப்பீர்கள்.

ஜோதிடர் ஆவேனா? சொல்லும் பலன் பலிக்குமா?

ஆர் . வெங்கடேசன் , சேலம் -8.

கேள்வி :

வளரும் ஜோதிட மாணவனான நான் தங்களின் பொற்பாதங்களை வணங்குகிறேன். மாலைமலரில் நீங்கள் எழுதிய ஜோதிடம் எனும் தேவ ரகசியம், கேள்வி - பதில்களை வைத்து உடன் படிக்கும் மாணவர்களுடன் ஆராய்ச்சி செய்வதன் பலனாக ஜோதிடத்தில் தேர்ச்சி பெற்று விடலாம் என்ற நம்பிக்கை வந்து விட்டது.

சிறு வயதில் இருந்தே எந்த ஒரு நல்லதும் நடந்ததே இல்லை. தந்தைக்கும் எனக்கும் ஆகவே ஆகாது. தந்தையுடன் ஏற்பட்ட சண்டையால் திருமணம் ஆகாமலேயே வீட்டை விட்டு வெளியேறி தனித்து வாழ்கிறேன். லக்னாதிபதி வலுவிழந்து ஆறுக்குடையவன் வலுப் பெறக் கூடாது என்று நீங்கள் எழுதுவதன்படி கடனும், நோயும் அவ்வப்போது தலை தூக்குகிறது. தசாநாதன் ராகுவுடன் ஒன்பதுக்குடைய குரு நெருங்கி இருப்பதால் தங்களது பாபக் கிரக சூட்சும வலு தியரிப்படி நன்மைகள் நடக்குமா? உடன் சனி சேர்க்கை கெடுதல் செய்யுமா? லக்னாதிபதி நீசமானதால் ராகு தசை யோகம் செய்யாதா? குரு - ராகுவுடன் எட்டு டிகிரிக்குள் இருப்பதால் பார்வை பலன் குறைவா? ஜோதிடர் ஆகி நன்றாக பலன் சொல்வேனா? தற்போது பவுர்ணமி தோறும் கஞ்சமலை சித்தர் கோவிலில் கிரிவலம் சென்று வருகிறேன். இது கஷ்டத்தை தீர்க்குமா?

லக்
கேது
ராசி
செவ்

குரு, 
சனி
சந்

சூரி,புத 
சுக்

பதில் :

(மேஷ லக்னம், தனுசு ராசி. 4-ல் செவ். 5-ல் குரு, சனி, ராகு. 6-ல் சூரி, புத, சுக். 9-ல் சந். 11-ல் கேது. 29-9-1979, இரவு 7.55, சேலம்)

ஜோதிடம் என்பது ஒரு மனிதனை தன்னம்பிக்கை ஊட்டி நல்வழிப்படுத்தும் ஒரு அபாரமான “பாசிடிவ் அப்ரோச்” கலை. இந்தக் கலையைக் கற்கும் ஜோதிடனுக்கு முதலில் தன்னைப் பற்றிய நம்பிக்கை இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் நம்பி வரும் வாடிக்கையாளனுக்கு நம்பிக்கை ஊட்ட முடியும். ஜோதிடனே எதிர்மறை எண்ணங்கள் உள்ளவனாக இருந்தால் அங்கே ஜோதிடம் பலிக்காது.

சிறுவயதில் இருந்தே வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்காதவர்கள் அல்லது வாழ்க்கையில் தோற்றுப் போனவர்கள் ஜோதிடராகும் போது இது போன்று ஜோதிடத்தை எதிர்மறையாக புரிந்து கொள்கிறீர்கள். புரிந்து கொண்டதையே அடுத்தவர்களுக்கு நெகட்டிவ் பலனாக சொல்கிறீர்கள்.
ஒரு ஜோதிடன் எப்படிப்பட்ட வறுமையிலும் செம்மையான மனதைக் கொண்டவனாக இருக்க வேண்டும். ஜாதகத்தில் உள்ள நல்ல விஷயங்களைத்தான் ஜோதிடன் தேடிக் கண்டு பிடிக்க வேண்டுமே தவிர கெட்ட விஷயங்கள் எங்கே இருக்கின்றன என்று பூதக் கண்ணாடி அணிந்து அலசி ஆராயக் கூடாது.

எனக்கு நூறு ரூபாய் மட்டும் தட்சணை கொடுக்கும் உன்னை “நீ கோடீஸ்வரனாவாய்” என்று நான் பலன் சொல்ல வேண்டுமா என்ற எண்ணம் ஒரு ஜோதிடனுக்கு வரவே கூடாது. அப்படி வந்துவிட்டால் அவன் சொல்லும் வாக்கு பலிக்காது. ஜென்ம விரோதியாக இருந்தாலும் பலன் என்று கேட்க வந்து விட்டால் அகமும், முகமும் மலர்ந்து ஆழ்மனதில் இருந்து வார்த்தைகளை வெளிக் கொணர்ந்து நீ நன்றாக இருப்பாய் என்று சந்தோஷமாக வாக்கு சொல்ல வேண்டும். அது நிச்சயமாக பலிக்கும்.

சரி.. வருபவரின் ஜாதகத்தில் கெடுபலன் நடக்கும் என்று இருந்தால் என்ன செய்வது? எல்லோருக்கும் நல்லவை மட்டுமே நடப்பது இல்லையே?

ஒரு ஜோதிடனால் கெட்டதைக் கூட நல்ல வார்த்தைகளில் சொல்ல முடியும். மோசமானவை நடக்கும் என்பதை சாதகமற்றவை நடக்கும் என்று சொல்லலாம். தோல்வி அடைந்தார் என்று சொல்வதும் வெற்றி வாய்ப்பை இழந்தார் என்று சொல்வதும் ஒன்றுதான். ஆனால் இந்த இரண்டு வார்த்தைகள் மனதில் ஏற்படுத்தும் ஒலி அதிர்வுகள் வெவ்வேறாக இருக்கும். இரண்டுமே ஒரே பொருளைத் தந்தாலும் இரண்டிலும் உள்ள பாசிட்டிவ்-நெகட்டிவ் வேறுவேறு என்பதைப் புரிந்து கொண்டவனே நல்வழி காட்டும் ஜோதிடனாக முடியும்.

உங்கள் ஜாதகப்படி சந்திர கேந்திரத்தில் புதன் உச்ச வலுவுடன் இருப்பதால் ஜோதிடன் ஆக முடியும். லக்னாதிபதி நீசமாக இருந்தால் ராசிப்படியே பலன்கள் நடக்கும் என்ற விதிப்படி உங்களுடைய தொழில் அமைப்புகள் புதனைச் சார்ந்ததாகவே இருக்கும். எனவே ஜோதிடம் உங்களுக்கு சோறு போடும்.

ராகுதசையில் சுயபுக்தி நடப்பதால் குரு புக்திக்குப் பிறகு ஜோதிடத்தை தொழிலாக கொள்ளலாம். ராகுவைக் குரு பார்த்தாலே நன்மைகள் நடக்கும் என்ற விதிப்படியும், லக்னாதிபதி நீசபங்கமானால் பின் வாழ்க்கை யோகமாக இருக்கும் என்பதன்படியும் குருபுக்தி முதல் வாழ்க்கையில் ஒரு நல்ல திருப்பத்தைக் காண்பீர்கள். ராகுவுடன் எட்டு டிகிரிக்குள் குரு இணைந்திருப்பதால் பார்வை பலம் கொஞ்சம் குறைவுதான். ஆயினும் போதுமான நற்பலன் உண்டு.

ராசிக்கு இரண்டை நீச செவ்வாய் பார்த்து லக்னத்திற்கு இரண்டை சனி பார்ப்பதால் ஜாதகத்தைப் பார்த்ததும் நீ எங்கே உருப்படப் போகிறாய் என்று கெடுபலன் சொல்லவே மனதும், நாக்கும் துடிக்கும். கெட்டதுதான் முதலில் கண்ணுக்குத் தெரியும். ஆனால் மனம் அடக்கி பலன் சொல்வதுதான் ஜோதிடத்தின் மாண்பு. இதை முறையாகச் செய்வதற்குத்தான் கஞ்சமலை சித்தரிடம் இப்போது சரணடையச் சொல்லி பரம்பொருள் அனுக்கிரகம் செய்திருக்கிறது.

லக்னத்தின் தர்ம கர்மாதிபதிகளுடன் இணைந்த ராகுவின் தசையும், அடுத்தடுத்து குரு, சனி தசைகளும் நடக்க உள்ளதால் நாற்பது வயதிற்குப் பிறகு வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தும் கிடைத்து நன்றாக இருப்பீர்கள்.

No comments :

Post a Comment