Saturday, 25 March 2017

கும்பம்: 2017- ஹே விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

கும்பம்:

புதிய தமிழ்ப் புத்தாண்டு கும்பத்தினருக்கு நல்லவைகளையும், பொருளாதார வளர்ச்சியினையும் தருகின்ற வருடமாக இருக்கும்.

கடந்த இரண்டு வருடங்களாக எவ்வித நன்மைகளும் நடைபெறாத கும்ப ராசிக்காரர்களுக்கு ஆறுதல் தரும் விதத்தில் புத்தாண்டின் ஆரம்பத்திலேயே நடைபெற இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியும், அதன்பிறகு செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியும் அமைகின்றன.

இந்த இரண்டையும் விட மேலாக அக்டோபர் மாதம் நடக்கும் சனிப்பெயர்ச்சி அமோகமான நற்பலன்களை ஏறத்தாழ மூன்று வருடங்களுக்கு உங்களுக்குத் தர இருப்பதால் பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டில் நன்மை அடைய இருக்கும் முதன்மையான ராசியாக கும்பம் அமைந்திருக்கிறது.

இதுவரை ராசியிலும், ஏழாமிடத்திலும் இருந்து வந்த ராகு-கேதுக்களால் மணவாழ்வில் சிக்கலுக்குள்ளானவர்கள், மண வாழ்க்கை அமையாதவர்கள் மற்றும் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள், சொத்துப்பிரச்சினை, பங்காளி தகராறு, வழக்கு, கோர்ட்டு பிரச்சினை போன்றவைகள் இருந்தவர்களுக்கு இனிமேல் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

புத்தாண்டில் நடக்க இருக்கும் ராகு-கேது மாற்றத்தால் கும்பத்தினருக்கு வேற்று மன, இன, மொழிக்காரர்களுடன் நெருக்கம் உண்டாகும். அவர்கள் மூலமாக நன்மைகள் இருக்கும். இஸ்லாமிய, கிறிஸ்தவ நண்பர்கள் உதவுவார்கள். சிலருக்கு அன்னிய மத, வேறு மாநில வாழ்க்கைத்துணை அமையும்.

செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலம் இதுவரை சாதகமற்ற அமைப்பில் நற்பலன்களை தரமுடியாத நிலையில் இருந்த குருபகவான் மிகவும் நல்ல பலன்களை கொடுக்க கூடிய ஒன்பதாமிடத்திற்கு மாறி உங்களுடைய ராசியைப் பார்க்க இருக்கிறார்.

இந்தப் பெயர்ச்சியின் மூலம் கும்ப ராசிக்காரர்கள் அனைவருக்கும் இதுவரை இருந்து வந்த பொருளாதார சிக்கல்கள் நீங்கி தனலாபம், நிரந்தரமான வருமானம், நீடித்த பணவரவு ஆகிய பலன்கள் நடந்து இதுவரை இருந்த கஷ்டங்கள் அனைத்தும் சீராகப் போகிறது.

வர இருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலம் உங்கள் உடல், மனம், பொருளாதார நிலைமைகள் அனைத்தும் சிறப்பாக இருக்கும் என்றால் அது மிகையாகாது. எனவே வருடத்தின் நடுப்பகுதியில் இருந்து கெடுபலன்கள் அனைத்தையும் மாறி நல்ல நிலைமைக்கு செல்வீர்கள்.

அக்டோபர் மாதம் 26-ந்தேதி நடக்க இருக்கும் சனிப்பெயர்ச்சியினால் உங்கள் ராசிநாதனான சனிபகவான் லாபஸ்தானம் எனப்படும் 11-ம் இடத்திற்கு மாற இருக்கிறார். 11-ல் இருக்கும் சனிபகவான் தனலாபங்களையும், தொட்டது துலங்கும் மேன்மைகளையும் தருவார் என்பது ஜோதிட விதி.

லாபஸ்தானத்தில் சனி வருவது என்பது 30 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நிகழ்கின்ற ஒரு நல்ல அமைப்பாகும். எப்படிப்பட்ட கஷ்ட நிலைமையில் ஒருவர் இருந்தாலும் 11-ல் சனி வரும் போது நிலைமை மாறி சொந்தவாழ்க்கை, தொழில் துறை போன்றவற்றில் முன்னேற்றம் பெறுவார்.

சனிப்பெயர்ச்சியின் மூலம் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த போட்டிகள், எதிர்ப்புகள், கண் திருஷ்டி, தடைகள், தாமதங்கள் அனைத்தும் விலகும்.

18 வருடங்களுக்கு ஒருமுறை கோட்சார நிலைமையில் அமையும் ஆறாமிட ராகு எனும் யோக அமைப்பும், முப்பது வருடங்களுக்கு ஒருமுறை வரும் 11 மிட சனியும் ஒருசேர இந்த வருடம் கும்பராசிக்கு அமைவதால் புதுவருடம் உங்களுக்கு புத்துணர்ச்சியைத் தரும் வருடம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.

பிறந்த ஜாதகப்படி கூடுதலான நல்ல அமைப்புகளையும் கொண்டிருந்தீர்களேயானால் மிகப்பெரிய முன்னேற்றம் இப்போது உங்களுக்கு இருக்கும். இந்த புத்தாண்டில் இருந்து உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் நல்லபடியாக முடிவுக்கு வந்து அதிர்ஷ்டம் தேடிவந்து உங்களிடம் ஒட்டிக் கொள்ளப் போகிறது.

இதுவரை இருந்து வந்த தேவையற்ற பயஉணர்வுகளும், கலக்கமான மனநிலையும் விலகி மனதில் ஒரு புத்துணர்ச்சி பிறந்து புதுமனிதராக மாறப் போகிறீர்கள். இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். பண வரவுகள் சரளமாகி குடும்பத்தில் பணப் பிரச்னைகள் எதுவும் இல்லாமல் நிம்மதி இருக்கும்.

எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மனக்கவலைகள் குழப்பங்கள், உடல்நலக் குறைவு, கடன்தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள் தொழில்தேக்கம் அதிர்ஷ்டக்குறைவு தடைகள் தாமதங்கள் போன்ற அனைத்தும் இனித் தீர்ந்து கும்பராசிக்கு மிகவும் மேன்மையான காலம் ஆரம்பிக்கிறது.

உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்கு உடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும். உங்களுடைய பேச்சை அனைவரும் கேட்பார்கள். எதிரிகள் உங்களைக் கண்டாலே ஒளியும்படி இருக்கும். மறைமுக எதிரிகளைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

சென்ற காலங்களில் வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இனிமேல் இருக்காது. பதவிஉயர்வு உடனே கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித் தொகையும் உடனே பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு.

அந்தஸ்து, மதிப்பு உயரும் நேரம் இது. அடுத்தவர்களால் கௌரமாக நடத்தப்படுவீர்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும்.

பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், இயக்கும் வேலையில் உள்ளவர்கள் போன்ற துறையினர் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்வதற்கோ புதிய கிளைகள் ஆரம்பிப்பதற்கோ இது மிகவும் நல்ல நேரம். கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும்.

நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். ஏற்கனவே தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடம் முதல் தொழில் நல்ல முன்னேற்றமாக நடக்கும். கூட்டுத்தொழில் செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவர்கள் தங்கள் தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு நல்ல நேரம் இது. அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும்.

சில தொழில் முனைவோர்கள் நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப் பெற்று பணக்காரர்கள் ஆவதற்கு தற்போது வாய்ப்பு இருக்கிறது. விடாமுயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம்.

அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

வீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும் காலம் இது. இதுவரை திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக்கவலை இப்போது நீங்கும்.

காதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் நினைத்தவரை மணமுடிப்பீர்கள். முதல் வாழ்க்கை கோணலாகிப் போய் போலிஸ் கோர்ட் என்று திரிந்தவர்களுக்கு அனைத்துப் பிரச்னைகளும் நல்லபடியாக முடிந்து இரண்டாவது வாழ்க்கை அமைப்பு நல்லபடியாக உருவாகும்.

வெளிநாட்டில் படிக்கவோ வேலை செய்யவோ முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். இந்த புத்தாண்டில் இடமாற்றங்கள் ஊர்மாற்றங்கள் வீடுமாற்றம் தொழில்மாற்றம் போன்றவைகள் நடக்கும். அந்த மாற்றங்கள் உங்கள் எதிர்காலத்திற்கு நல்லவைகளாகத்தான் இருக்கும் என்பதால் தயங்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்.

பெண்களுக்கு இது மிகச் சிறப்பான நன்மைகளைத் தரும் புத்தாண்டாகும். உங்களின் மதிப்பு உயரும். நான்கு பேர் கூடும் இடத்தில் தனித்துவமாக தெரிவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டில் அடுத்தடுத்து நடக்க இருக்கின்ற மூன்று பெயர்ச்சிகளும் கும்பராசிக்கு முன்னேற்றங்களைத் தரும் அமைப்பில் வருவதால் இந்த தமிழ்ப் புத்தாண்டு கும்பத்திற்கு திருப்புமுனையைத் தந்து முன்னேற்ற பாதையில் செல்ல வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

No comments :

Post a Comment