Thursday, December 22, 2016

தனுசு: 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

தனுசு:

தனுசு ராசிக்கு 2017-ம் வருடம் மாற்றங்கள் உள்ள வருடமாக இருக்கும். அந்த மாற்றங்கள் உங்களின் எதிர்காலத்திற்கு நன்மைகளைச் செய்வதாக அமையும். குறிப்பாக இளைய பருவத்தினருக்கு ஏற்றங்களைத் தருவதற்கான வாய்ப்புகள் அமையும் வருடம் இது.

வருடத்தின் பிற்பகுதியில் ஆகஸ்ட் மாதம் 18 ம் தேதி நடக்க இருக்கும் ராகு-கேது பெயர்ச்சியில் ராகுபகவான் எட்டாமிடத்திற்கும் கேது இரண்டாமிடத்திற்கும் மாறுகிறார். இந்தப் பெயர்ச்சியினால் உங்களின் வேலை, தொழில், வீடு, அலுவலகம் போன்றவைகளில் உங்களுக்கு மாறுதல்கள் இருக்கும்.

நிழல் கிரகங்களான ராகு-கேதுக்களும், எட்டாமிடமும் ஜோதிடத்தில் மாறுதல்களைக் குறிப்பவை. அஷ்டமஸ்தானம் எனப்படும் எட்டில் வரும் சாயாக் கிரகங்களால் ஒருவருக்கு அனைத்து நிலைகளிலும் மாற்றங்கள் இருக்கும். இந்த அமைப்பால் உங்களில் சிலர் வேலை அல்லது தொழில் விஷயமாகவோ திருமண அமைப்பாலோ இருக்கும் இடத்தை விட்டு தூர இடங்களுக்குச் செல்வீர்கள்.

செப்டம்பர் மாதம் 12-ம் தேதியன்று நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சியின் மூலம் உங்கள் ராசிநாதன் குருபகவான் மிகவும் யோகம் தரும் பதினொன்றாம் வீட்டிற்கு மாறுவதால் பொருளாதார பிரச்சினைகளை வருடப் பிற்பகுதியில் சுலபமாக கையாள முடியும்.

இந்தப் பெயர்ச்சியின் மூலம் இதுவரையில் உங்கள் வேலை தொழில் வியாபாரம் போன்றவைகளில் இருந்து வந்த பின்னடைவுகள், வருமானக் குறைவு இனிமேல் இருக்காது. குருவின் மாறுதலால் அவரவரின் தகுதிநிலைக்கேற்பவும் இருக்கும் இடத்தைப் பொருத்தும் பணவரவு உண்டு.

எனவே வருடத்தின் பிற்பகுதியில் தாராள வருமானம் இருக்கும் என்பதால் புத்தாண்டின் ஆரம்பத்திலேயே இதுவரை உங்களை சங்கடத்திற்கு உள்ளாக்கி வரும் பிரச்சினைகள் படிப்படியாகவும் நல்லபடியாகவும் முடிவுக்கு வரும்.

முக்கியமான ஒரு கருத்தாக தனுசுக்கு தற்போது ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கிறது. சனிபகவான் இப்போது விரயச்சனியாக, பனிரெண்டாமிடத்தில், கேட்டை நட்சத்திரத்தில் சென்று கொண்டிருப்பதால் உங்களுக்கு முந்தைய ராசியான விருச்சிகத்தினர் சனியின் பாதிப்புகளை அதிகமாக அனுபவித்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இன்னும் ஏழரைச்சனியின் பாதிப்புகளை உணராமல் இருக்கிறீர்கள்.

அக்டோபர் 26-ந்தேதி நடக்க இருக்கும் பெயர்ச்சியின் மூலம் சனிபகவான் தனுசுவிற்கு ஜென்மச்சனியாக மாறுகிறார். அதுமுதல் உங்களுக்கு தொழில் குழப்பங்களையும், வேலைப் பிரச்சினைகளையும் தருவார் என்பதால் வேலை, தொழில் போன்ற அமைப்புகளில் இளைய பருவத்தினர் கவனமாக இருக்க வேண்டிய வருடம் இது. அதேநேரம் நடுத்தர வயதுக்காரர்களுக்கு பாதிப்புகள் இருக்காது.

சனியின் வேலையே ஆசை காட்டி மோசம் செய்வதுதான் என்பதால் யாராவது ஒருவரை அறிமுகப்படுத்தியோ அல்லது ஒரு தொழில் துவங்க ஆர்வம் கொடுத்தோ, அல்லது ஒரு லட்சம் போட்டால் பத்து லட்சம் எடுத்து விடலாம் என்று தவறான ஆலோசனை சொல்லியோ, உங்களை ஏதாவது தொழில் விஷயத்தில் இழுத்து விட்டு தலைவலிகளை ஏற்படுத்துவார்.

இந்த வருடம் செய்யப்போகும் ஒரு காரியத்தால் தனுசு ராசியினர் புலிவாலை பிடித்த நிலைமை உண்டாகி, அதை நடத்தவும் முடியாமல், விடவும் முடியாமல் சிக்கலுக்கு உள்ளாவீர்கள் என்பதால் எந்த ஒரு விஷயத்தை செயல்படுத்தும் முன்பும், தொழில் தொடங்கும் முன்பும், வேலை மாறும் முன்பும், ஒன்றுக்கு நூறுமுறை நீங்கள் யோசிக்க வேண்டிய வருடம் இது.

அதேநேரத்தில் இந்தக் காலகட்டத்தில் எதிலும் சற்றுக் கவனமாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். முதலீடு செய்து தொழில் செய்ய வேண்டாம். தொழில் விரிவாக்கங்களும் கூடாது. அடுத்தவர்களையோ, வேலைக்காரர்களையோ, பங்குதாரர்களையோ முழுக்க நம்ப வேண்டாம். அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.

எல்லா விஷயங்களிலும் மிகுந்த எச்சரிக்கை உணர்வும் நிதானமும் அடக்கமும் கொண்டு செயலாற்றினால் நிச்சயம் சனியின் தாக்கத்திலிருந்து விடுபடலாம். குறிப்பாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் சிறிது காலம் அதைக் கை விடலாம். இயலாவிடில் அந்த நேரத்தில் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.

யாரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும். பொருட்கள் திருட்டு போவதற்கோ நீங்கள் கை மறதியாக எங்காவது வைத்த பிறகு தொலைந்து போவதற்கோ வாய்ப்பிருக்கிறது. கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ மிகவும் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

வேலையில் இருப்பவர்கள் தங்களின் மேலதிகாரிகளிடம் அனுசரித்துப் போவது நல்லது. வேலையில் மாற்றம் ஏற்படும் காலம்தான் இது என்றாலும் தேவையில்லாமல் வேலையை விட வேண்டாம். பிறகு அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

அலுவலகத்திலோ, தொழில் இடங்களிலோ உங்கள் கூடவே இருக்கும் நெருங்கிய ஒருவர் உங்களை சரியாக புரிந்து கொள்ளாமலோ அல்லது அவரசப்பட்டு நீங்கள் செய்யும் ஒரு தவறாலோ இந்த வருடம் உங்களுக்கு எதிராக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அவரை எதிரியாக தள்ளி வைக்க முடியாமலும் நண்பராக சேர்த்து கொள்ள முடியாமலும் திணறுவீர்கள் என்பதால் மறைமுக எதிர்ப்புகளில் கவனமாக இருங்கள்.

தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருந்தாலும் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். எதிலும் அகலக்கால் வைத்து விட வேண்டாம். வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்தவருடம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

சுயதொழில் வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆயினும் வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாகவோ அல்லது முன்னேற்றத்திற்கானதாகவோ, வருமானம் வரும் வகையிலோதான் செலவாகும்.

அரசுவகை உதவிகள் எதிர்பார்ப்போருக்கு அனைத்திலும் சுணக்கம் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டு. அரசுப் பணியாளர்களுக்கு உங்களைப் புரிந்து கொள்ளாதவர் மேலதிகாரியாக வந்து மனச்சங்கடங்கள் தருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கும் இந்த வருடம் சம்பள உயர்வு இதர படிகள் போன்றவை எதிர்பார்த்தபடி ஓரளவு கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.

உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். இதுவரை இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. குடும்பத்தில் மங்களகாரியங்கள் நடக்கும் என்பதால் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப சுபச்செலவுகளும் இருக்கும். சொத்து வாங்குவீர்கள். மனைவிக்கு நகை, பெண்குழந்தைகளின் திருமணத்திற்கென்று நகைசேமிப்பு போன்றவைகளை செய்ய முடியும்.

பெண்களுக்கு இந்த வருடம் நன்மைகள் இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். நீங்கள் சொல்வதையும் கேட்கலாமே என்று கணவர் நினைப்பார். மாமியாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்கள் அந்தஸ்து கௌரவம் உயரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்.

காதலித்துக் கொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் கை கூடி வரும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களது வாழ்க்கைத் துணையை அடையாளம் காண்பார்கள். தாமதமாகிக் கொண்டே வந்த மகன், மகள் திருமணத்தை இப்போது நல்லபடியாக நடத்துவதற்கு பரம்பொருள் அருள் புரிவார். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும்.

நீண்ட தூர புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாட்டினை உடனடியாக நேர்த்திக்கடன்களுடன் நிறைவேற்ற முடியும். குலதெய்வ அருளினால் எதையும் சமாளிப்பீர்கள். பொதுவாக தனுசு ராசிக்கு நிறைகளைத் தரும் வருடம் இது.

No comments :

Post a Comment