Thursday, 22 December 2016

மேஷம்: 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு பிறக்கப் போகும் புதுவருடமான 2017-ம் ஆண்டின் பிற்பகுதி நிம்மதியைத் தருகின்ற வகையில் இருக்கும்.

அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தினால் பெரும்பாலான மேஷத்தினர் தற்போது சாதகமற்ற பலன்களை அனுபவித்து வருகிறீர்கள். முப்பது வயதுகளில் இருக்கும் நடுத்தர வயதுக்காரர்களுக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் கடுமையான நெருக்கடிகளும், பணம் இல்லாத நிலைமையும் இருந்து வருகிறது.

எட்டில் இருக்கும் சனிபகவானால் பொருள் இழப்பு, நெருங்கியவர் மரணம், துயரம், கடுமையான மனஅழுத்தம், தூக்கமில்லாத நிலை, வாழ்க்கைச் சிக்கல்கள் போன்றவைகள் நடக்கும் என்பது ஜோதிடவிதி. பெரும்பாலான மேஷத்தினருக்கும் எதிர்மறையான பலன்களே இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

நடுத்தர வயதுக்காரர்களுக்கு குடும்பப் பிரச்னை, தாங்க முடியாத இழப்புக்கள், ஆரோக்கிய குறைவு போன்ற பலன்கள் நடந்து வருகின்றன. பிறந்த ஜாதகவலு உள்ள சிலர் மட்டும் இதற்கு விதிவிலக்கு. சிக்கல்களைச் சந்தித்துக் கொண்டிருப்பவர்களின் சங்கடங்கள் அனைத்தும் விலகும் வருடமாக புத்தாண்டு இருக்கும்.

மேஷத்தினர் வீட்டில் உடனிருப்பவர் யாராவது விருச்சிக ராசியாக இருந்தால் அஷ்டமச் சனியும், ஏழரைச்சனியும் சேர்ந்து மிகவும் கடுமையான பலன்கள் அந்தக் குடும்பத்திற்கு நடந்து வருகின்றன. இந்த ஆண்டு முதல் உங்களின் கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்பதால் மேஷத்திற்கு புத்துணர்வு தரும் வருடம் இது.

குறிப்பாக தற்போது ஐந்தாமிடத்தில் அமர்ந்து உங்களில் அதிர்ஷ்டங்களைத் தடுத்து கொண்டிருக்கும் ராகு ஆகஸ்ட் 18 தேதி மாற இருக்கிறார். அதுபோலவே ஆறாமிடத்தில் அமர்ந்து ஒரு விஷயத்தையும் நடக்கவிடாமல் செய்து கொண்டிருக்கும் குருபகவான் செப்டம்பர் 12-ந்தேதி பெயர்ச்சியாக இருப்பதும் மேஷத்திற்கு ஒரு ஆறுதலான அமைப்பு.

பொதுவாக ராஜகிரகங்கள் எனப்படும் வருட கிரகங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறுவதற்கு மூன்று மாதத்திற்கு முன்பாகவே அதன் பலன்களைத் தந்துவிடும் என்பதால் இந்த வருடத்தின் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இதுவரை உங்களுக்கு நடந்து கொண்டிருக்கும் சாதகமற்ற பலன்கள் மாறி நல்ல பலன்கள் நடக்கத் துவங்கும் என்பது உறுதி.

கோட்சார அமைப்பில் மிகவும் கடுமையான கெடுபலன்களை தரும் அஷ்டமச்சனி அமைப்பு இந்த வருட இறுதியில் அக்டோபர் 26-ந்தேதி உங்களுக்கு முடிய இருக்கிறது. ஒருவருக்கு அஷ்டமச்சனி முடிந்த பிறகு வாழ்க்கை நல்ல விதமாக செட்டில் ஆகும் என்பதும் ஜோதிடப்படி உறுதியான ஒன்று.

மேலும் வருடப் பிற்பகுதியில் உங்களின் பாக்யாதிபதியான குருபகவான் ஏழாமிடத்திற்கு மாறி ராசியை பார்க்கப் போவதால் குருப்பெயர்ச்சி முதல் உங்கள் வாழ்க்கையின் நல்ல பலன்கள் நடக்கத் துவங்கும்.

எனவே எந்த ஒரு கோணத்தில் இருந்து பார்த்தாலும் 2017-ம் ஆண்டின் துவக்கத்தில் சுணக்கமான பலன்கள் மேஷத்திற்கு இருந்தாலும், வருடத்தின் பிற்பகுதியில் இருந்து மிகவும் நல்ல பலன்கள் நடந்து, தற்போது உங்களுக்கு இருக்கும் சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து அதிர்ஷ்டசாலியாக வலம் வருவீர்கள் என்பது உறுதி.

இந்த வருடம் சிலருக்கு வெளிநாட்டுக் கம்பெனிகளில் தலைமைப் பொறுப்பு கிடைப்பதும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் அமைவதும், வெளிதேச நட்பு மூலம் தொழில் லாபங்கள் இருப்பதும் வடக்கு நோக்கிச் செல்வதும் நடக்கும். பணவரவில் தடைகளோ, பொருளாதார கஷ்டங்களோ இருக்காது. வருமானம் சீராக இருக்கும் என்பதால் எவ்வித கஷ்டங்களும் உங்களுக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை.

வாக்குஸ்தானம் வலுப்பெறுவதால் ஒருவருக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியும். குடும்பத்தில் சந்தோஷம், மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் வாங்க முடியும். வருடத்தின் பிற்பகுதியில் சிலருக்கு குடும்பம் அமைந்து குடும்பஸ்தன் ஆவீர்கள்.

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும், பேச்சினால் தொழில் செய்ய கூடிய ஆசிரியர்கள் வக்கீல்கள் போன்றவர்களுக்கும் வீடுமாற்றம், அலுவலக இட மாற்றம், ஊர்மாற்றம் போன்றவைகள் நடக்கக் கூடிய கால கட்டம் இது.

அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் தற்போது கிடைக்கும்.

அரசு ஊழியர்களுக்கு இந்த வருடம் நன்மைகள் உண்டு. அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித்துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் மிகவும் நல்ல பலன்கள் நடக்கும்.

குறிப்பாக பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும் காலகட்டமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப்பதவிகள் தேடி வரும். பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்வீர்கள்.

தனியார் துறையினர் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். திடீரென நிர்வாகம் கண்காணிப்பு வேலைகளில் ஈடுபடவோ, அது சம்பந்தப்பட்ட கருவிகளைப் பொருத்தவோ, ஆட்களை நியமிக்கவோ வாய்ப்பு உள்ளது.

சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம்தான். சுயதொழிலர்களுக்கு உற்பத்தி ஆர்டர்கள் சீராகக் கிடைக்கும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். பணவரவு தடைப்படாது.

வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக நடக்கும். போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகளுக்கு இம்முறை இயற்கை ஒத்துழைக்கும். தேவையான நேரத்தில் மழை பெய்யும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு பெரிய நன்மைகள் உண்டு.

தொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், காவல் துறையினர், நீதித்துறையினர், வாகனங்களை இயக்குபவர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், தொழில் அதிபர்கள், வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக்கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த வருடம் நல்ல பலன்களைத் தரும்.

பெண்களுக்கு இந்த ஆண்டு நல்ல ஆண்டுதான். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வேலை செய்யும் இடங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. வீட்டிலும் உங்கள் பேச்சை கணவரும் பிள்ளைகளும் கேட்பார்கள். குடும்பத்தில் சுபகாரியங்களை மிகச் சிறப்பாக நடத்துவீர்கள். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பணியிடங்களில் மகிழ்ச்சியும் மரியாதையும் நிச்சயம் உண்டு.

குடும்பத்தில் யாராவது ஒருவர் கோபத்தில் பேசினாலும் மற்றவர் அடங்கிப் போவதால் எல்லாவித பிரச்னைகளையும் சமாளிக்க முடியும். மேலும் அறிவுப் பூர்வமாக சிந்திக்கக் கூடிய பெண் ஒருவர் இருக்கும் குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் பெரிதாக வராது.

புனிதயாத்திரை செல்வீர்கள். ஞானிகள் மகான்களின் திருப்பாதம் பதிந்த இடங்களுக்கு சென்று தரிசித்து உங்களை புனிதப்படுத்திக் கொள்வீர்கள். குறுப்பிட்ட சிலருக்கு காசி கயா ரிஷிகேஷ் போன்ற வடமாநில தீர்த்த யாத்திரைகளும் ஆன்மிக சுற்றுலாக்களும் உண்டாகும். தெய்வ தரிசனங்களும் கிடைக்கும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு அதிகமாகும். மகான்களின் கருணைப் பார்வை உங்கள் மீது விழும்.

நீண்ட நாட்களாக குலதெய்வ வழிபாடு நடத்தாதவர்கள் உடனடியாக அந்தக் குறையைத் தீர்க்கும் வண்ணம் குலதெய்வத்தை தரிசனம் செய்யுங்கள். எத்தனை இஷ்ட தெய்வத்தை வழிபட்டாலும் குலதெய்வத்திற்கு மிஞ்சிய சக்தி இல்லை என்பது சித்தர்களின் வாக்கு.

மகன் மகள்களால் இதுவரை இருந்து வந்த மனச்சங்கடங்கள் விலகி அவர்களால் இனிமேல் சந்தோஷம் இருக்கும். அவர்களுக்குத் தேவையான விஷயங்களை தாமதம் இன்றி இனிமேல் செய்து கொடுக்க முடியும்.

என்ன இருந்தாலும் அஷ்டமச் சனி வருட இறுதியில்தான் விலகுவதால் எந்த ஒரு விஷயமும் நீண்ட முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும் என்பதால் கடினஉழைப்பும் விடாமுயற்சியும் கண்டிப்பாகத் தேவைப்படும். சில நேரங்களில் தோல்வி மனப்பான்மையும் விரக்தியும் ஏற்படலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து செயல்படுவது நல்லது.

மொத்தத்தில் இந்த ஆண்டு மேஷத்திற்கு எதிர்கால நன்மைகளைத் தரும் என்பதால் துளியும் கவலைகளுக்கு இடமில்லை.

No comments :

Post a Comment