Tuesday, November 1, 2016

2016 - நவம்பர் மாத நட்சத்திர பலன்கள்

அஸ்வினி:

அஸ்வினி நட்சத்திரக்காரர்களின் பிரச்னைகள் அனைத்தும் இன்னும் சில வாரங்களில் நல்லவிதமாகத் தீரப்போகிறது. அதற்கான அறிகுறிகள் இந்த மாதமே தெரியத்துவங்கும். இனிமேல் உங்களுக்கு ஒரு குறையும் இல்லை. நட்சத்திரநாதன் பலம் பெற்றதால் எதையும் சமாளிப்பீர்கள். பணவரவிற்கு இந்த மாதம் பஞ்சம் இல்லை. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். சிலருக்கு அம்மாவின் வழியில் மனவருத்தங்கள் இருக்கும். கலைஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் இந்த மாதம் நல்ல சந்தர்ப்பங்களை அடைவீர்கள். இதுவரை எந்த விஷயத்திலும் தடைகளைச் சந்தித்து, முட்டுச்சந்தில் போய் முட்டி நிற்பதைப் போல் உணர்ந்தவர்கள் அது விலகுவதை உணருவீர்கள்.

பரணி:

நவம்பர் மாதம் முழுவதும் உங்களுக்கு செலவுகள் உள்ள மாதமாக இருக்கும். உறவினர் வருகையால் விரையங்கள் இருக்கும் என்பதால் சமாளிக்க முடியாமல் திணருவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு பங்குச்சந்தையில் லாபம் வருவது போல் முதலில் காட்டி பிறகு அதிக நஷ்டம் ஏற்படலாம் என்பதால் யூக வணிகத்தில் இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும். இளைய பருவத்தினருக்கு நினைப்பது நடக்கும் மாதமாக இருக்கும். உங்களின் வயதிற்கே உரிய உல்லாச அனுபவங்களை இப்போது பெறுவீர்கள். ஒரு சிலருக்கு தோழிகளால் இனிமையான அனுபவங்கள் இருக்கும். நவம்பரில் நல்லவைகளே அதிகம்.

கிருத்திகை:

மாதம் முழுவதும் பரபரப்பும் டென்ஷனுமாக இருக்கும். உங்களை அறியாமலேயே நெருக்கமான சிலர் மீது கோபப்படுவீர்கள். மலையும் மலைசார்ந்த இடங்களுக்கு பயணம் செல்லுவீர்கள். சிலருக்கு மலை மேல் இருக்கும் கோவில்களுக்கு புனிதப்பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். திருமணமாகாத இளம் பருவத்தினருக்கு இந்த மாதம் திருமண உறுதித் தகவல்கள் உண்டு. சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கு இது ஒரு திருப்புமுனையான மாதம். கால்நடை மருத்துவர்கள் வளர்ப்புப் பிராணிகள் விற்பவர்கள் போன்றவர்களுக்கு மேன்மைகளை இந்த மாதம் தரும்.

ரோகிணி:

இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் சிந்தனைகள் திசைமாறும் மாதம் இது. எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும் காலகட்டம் நடைபெறுகிறது. காதல் விவகாரங்களில் சிக்குவீர்கள். உங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இப்போது சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது. அறிவால் எதையும் சாதிக்க முடியும். மற்றவர்கள் பொறாமையாக பார்க்கும் அளவிற்கு ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது.

மிருகசீரிஷம்:

கூட்டுத்தொழிலில் பங்குதாரர் உங்களுடன் இணக்கமாக இருப்பார். நண்பர்களால் லாபம் உண்டு. பணவரவிற்கு தடை எதுவும் இருக்காது. கையைக் கடிக்கும் விஷயங்களும் இந்த மாதம் இருக்காது. அதேநேரம் இந்த மாதம் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அனைத்து விஷயங்களையும் மனைவியின் பொறுப்பில் விட்டுவிடுவதன் மூலம் சிக்கல்கள் எதுவும் வராமல் தப்பிக்கலாம். யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து போவதன் மூலம் குடும்பத்தில் மிகப் பெரிய கஷ்டங்களோ, பிரிவினைகளோ வரப்போவது இல்லை. அலுவலகங்களில் இணக்கமான நல்ல சூழல் இருக்கும்.

திருவாதிரை:

இந்த மாதம் முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய நல்லமாற்றங்கள், பதவிஉயர்வு, சம்பள உயர்வு போன்றவைகள் இருக்கும். பெண்களால் லாபம் கிடைக்கும் மாதம் இது. அதேநேரம் அவர்களால் செலவும் நிச்சயமாக இருக்கும். ஒரு சிலருக்கு நீண்ட தூர பிரயாணங்கள் உண்டாகும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். காவல்துறை, ராணுவம் போன்றவைகளில் பணிபுரிபவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். சிலருக்கு இதுவரை தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் நல்லபடியாக கிடைக்கும். ஒரு சிலருக்கு அரசு வேலை பற்றிய தகவல்கள் வந்து சேரும்.

புனர்பூசம்:

மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ், அன்றாடம் அழியும் பொருட்கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் மிகப்பெரிய லாபம் அடைவீர்கள். பெண்கள் தொடர்பான துறைகளிலும், அழகு, ஆடம்பரம், கலைகள் போன்ற துறைகளிலும் இருப்பவர்களுக்கும் விசேஷமான நல்ல பலன்கள் நடக்கும். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு காரியம் உங்கள் எண்ணம் போல் இந்த மாதம் நிறைவேறும். குலதெய்வத்தின் அருள் உங்கள் குடும்பத்திற்கு பூரணமாக கிடைக்கும் மாதம் இது. நவகிரக சுற்றுலா போவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் நேர்த்திக் கடன்களை செலுத்தலாம்.

பூசம்:

எல்லாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் நல்ல மாதம் இது. மனதிற்கு இனிய நிகழ்ச்சிகள், குடும்ப சந்தோஷங்களை அனுபவிப்பீர்கள். இதுவரை கோர்ட்கேஸ், நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்களில் சிக்கியவர்களுக்கு இனிமேல் வழக்குகள் உங்களுக்கு சாதகமாகத் திரும்பும். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும். மகன், மகள் விஷயங்களில் நல்ல அனுபவங்கள் இருக்கும். குடும்பத்தில் உற்சாகமும், செழிப்பும் இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் வாங்கலாம். நகைகள் சேரும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். எந்தவித தொல்லைகளோ கஷ்டங்களோ இனிமேல் இருக்காது.

ஆயில்யம்:

ஆயில்யம் நட்சத்திரக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களையும், பண வரவையும், பொருளாதார மேம்பாடுகளையும் தரக்கூடிய அமைப்புகள் உருவாகி உள்ளது என்பதால் இனிமேல் உங்களுக்கு எவ்வித தொல்லைகளும் இல்லை. அதேநேரம் நடுத்தர வயதுக்காரர்கள் எதிலும் அகலக்கால் வைக்காமல் நிதானமாக இருப்பது நல்லது. நீண்டநாள் எதிர்பார்த்த தொகை ஒன்று சிரமம் இல்லாமல் கிடைக்கும். தந்தை வழியில் நன்மைகளும், பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகளும் கிடைக்கும். வெளிநாடு யோகம் உண்டு. இளைய பருவத்தினருக்கு இந்த மாதம் முக்கியமான திருப்புமுனைகள் இருக்கும்.

மகம்:

நவம்பர் மாதம் முழுவதும் மகம் நட்சத்திரக்காரர்களின் பொருளாதார நிலைமை நல்லபடியாகவே இருக்கும். செலவுகள் இந்த மாதம் அதிகமாகவே இருக்கும் என்றாலும் பணவரவிற்குப் பஞ்சம் இருக்காது. குறிப்பிட்ட சிலருக்கு இந்த மாதம் எதிர்ப்புகளையும் எதிரிகளையும் ஜெயிக்கும் நிகழ்ச்சிகள் நடக்கும். உங்களுடைய மனதைப் புரிந்து கொள்ள முடியாமல் எந்தநேரத்தில் என்ன முடிவு எடுப்பீர்கள் என்று நண்பர்களும் குடும்பத்தினரும் குழம்பிப் போவார்கள். வேலை தொழில் ஜீவன அமைப்புகளில் இடையூறுகள் எதுவும் இல்லாமல் சகஜமாகவே செல்லும். நவம்பர் மாதம் உங்களுக்கு நல்ல மாதம்தான்.

பூரம்:

அனைத்திலும், தடைகளும், தாமதங்களும் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் கடும் முயற்சிக்கு பின்பே நீங்கள் வெற்றிகரமாக முடிக்க முடியும். கணவன்மனைவி உறவு சுமாராக இருக்கும். நண்பர்கள், பங்குதாரர்களுக்குள் பிரச்னை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பிள்ளைகளிடமிருந்து நல்ல செய்திகள் இருக்கும். கடன் தொல்லை எல்லை மீறாது. சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கும். ஆன்மீக எண்ணங்கள் தூக்கலாக இருக்கும். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை தள்ளிப் போடுவது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே செலவு செய்யுங்கள்.

உத்திரம்:

இந்த மாதம் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்கள் வீண் அரட்டைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. சிறியதாக ஆரம்பிக்கும் பிரச்னை பெரியதாக மாறி நண்பர்களை விரோதியாக்கும். பேசுவதிலோ திட்டுவதிலோ கவனமாக இருங்கள். வாயைக் கட்டுப்படுத்துங்கள். இதுவரை மந்தமாக இருந்துவந்த தொழில், வியாபாரம் போன்றவைகள் இனிமேல் விறுவிறுப்புடன் நடக்க ஆரம்பிக்கும். கடன் தொல்லைகளால் அவதிப் பட்டவர்களுக்கு கடன் பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். தாயார்வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நண்பர்கள் உதவுவார்கள்.

அஸ்தம்:

இந்த மாதம் அஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு நன்மைகள் நடப்பதற்கு தடைகள் எதுவும் இல்லாத மாதமாக இருக்கும். சிலர் நீண்டதூரப் பயணம் செய்வீர்கள். பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் மேல் ஒரு கண் இருக்கட்டும். அவர்கள் யாருடன் பழகுகிறார்கள் என்பதை கண்காணியுங்கள். எதிலும் நேர்மையை கடைப்பிடிப்பது நல்லது. தேவையற்ற வீண்பழி, கைப்பொருள் திருட்டுப் போகுதல், நம்மைப் பிடிக்காதவரின் கை ஓங்குதல் போன்ற பலன்கள் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டியது அவசியம். கோபத்தை தவிருங்கள். சிலருக்கு இந்த மாதம் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும்.

சித்திரை:

இந்த நட்சத்திரத்தினுள் அடங்கி இருக்கும் கன்னி, துலாம் ஆகிய இரண்டு ராசிக்காரர்களுக்குமே தொல்லைகள் இல்லாத மாதமாகவே இது இருக்கும். நட்சத்திரநாதன் உச்சநிலையில் இருப்பதால் மாதம் முழுவதும் நண்பர்களால் உதவிகள் இருக்கும். உங்களாலும் பிறருக்கு உதவ முடியும்.. உதவும் அளவிற்கு கையிலும் பணம் இருக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பேசித் தீர்ப்பீர்கள். பிள்ளைகளால் நன்மை உண்டு. வெகுதூரத்தில் இருக்கும் குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குறிப்பிட்ட சிலருக்கு இந்த மாதம் புதிய வீடு அல்லது புதிய வாகனம் அமையும்.

சுவாதி:

நவம்பர் மாதத்தின் முற்பகுதியை விட 15-ந்தேதிக்கு பிறகு வரும் பிற்பகுதி உங்களுக்கு சிறப்பானதாக அமையும். மாத ஆரம்பத்தில் உங்களை குழப்புவதற்கென்றே சிலர் அருகில் இருப்பார்கள். யாருடைய பேச்சையும் கேட்டு செயல்படாமல் என்றுமே நீங்கள் தனித்தன்மையுடையவர்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் சுயமாகவே ஒரு முக்கிய முடிவு எடுப்பீர்கள். சிலருக்கு தந்தையின் மருத்துவச்செலவுகள் இருக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் இந்த மாதம் முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். தாய் வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குறிப்பாக சித்தியால் நன்மை அடைவீர்கள்.

விசாகம்:

இதுவரை தொழில் விஷயங்களில் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது மளமளவென தொழில் முன்னேற்றம் பெறுவதை கண்ணெதிரே காண்பீர்கள். அலுவலகங்களில் இதுவரை எதிர்ப்புகளையும், பின்னடைவுகளையும் சந்தித்தவர்கள் இனிமேல் அவை அனைத்தும் மாறி உங்களுக்கு சாதகமான சூழல் அமைவதையும் பார்க்க முடியும். வீட்டிற்கான ஆடம்பர பொருள்கள் வாங்குவீர்கள்.. உங்களில் விருச்சிக ராசியை சேர்ந்தவர்களுக்கு இப்போது திருமணம் தொடர்பான நல்ல விஷயங்கள் உண்டு. கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் சாதிப்பீர்கள்.

அனுஷம்:
கடந்த சில மாதங்களாக இருந்து வந்த பொருளாதாரப் பிரச்னைகள் இந்த மாதம் முதல் ஒரு முடிவுக்கு வரத் துவங்கும். இதுவரை அலுவலகங்களில் உடன் வேலை செய்பவரின் பொறாமையால் பாதிக்கப்பட்டவர்கள் திரும்பப் பதிலடி கொடுக்கத் தொடங்குவீர்கள். பணவரவுக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும். இந்த மாதம் உண்டாகும் அடிப்படை அம்சங்கள் சிலவற்றால் அடுத்த வருடம் முதல் நிலையான ஒரு வருமானம் வரத்துவங்கும். இதுவரை உங்களைப் பிடிவாதக்காரர் என்று தவறாகப் புரிந்து கொண்டவர்கள் உங்கள் நல்ல மனதைத் தெரிந்து கொண்டு அருகில் வருவார்கள். அனைத்தும் நன்மையாகும் மாதம் இது.

கேட்டை:
நட்சத்திரநாதன் புதன் மாதம் முழுவதும் பலவீனமாக இருப்பதால் சற்றுக் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் தெளிவான முடிவு எடுப்பதற்கு தயங்குவீர்கள். சிலருக்கு இனம் புரியாத தயக்கங்கள், மனக்கலக்கங்கள் இருக்கும். மாத இறுதியில் கிரகநிலைகள் மாறுவதால் அனைத்துப் பிரச்னைகளும் சூரியனை கண்ட பனிபோல கடைசிவாரத்தில் இருக்காது என்பது உறுதி. பெண்களால் செலவுகள் இருக்கும். சகோதரிகளுக்கு உதவீர்கள். ஒரு சிலர் வெளிமாநிலம், வெளிநாடு போக நேரிடும். பிறந்த இடத்தை விட்டு தூரஇடங்களில் இருப்பவர்களுக்கு இந்தமாதம் சிக்கல்கள் எதுவும் இருக்காது.

மூலம்:

ராகுதசை நடப்பவர்களுக்கு அதிக நன்மைகள் நவம்பர் மாதத்தில் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு எப்படி வருமானம் வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மறைமுகமான வழிகளில் தனலாபம் இருக்கும். லயசனிங் எனப்படும் பணத்திற்காக வேலை முடித்துக் கொடுப்பவர்களுக்கு இந்த மாதம் அனைத்து காரியங்களும் சுலபமாக முடியும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். ஒரு சிலருக்கு அதிகாரப்பணியும் வி.ஐ.பி.க்கள் அறிமுகமும் இந்த மாதம் உண்டு. குடும்பத்தில் அனைவரிடமும் மகிழ்ச்சி இருக்கும். மூத்தவர்களிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். ஒரு சிலருக்கு தூரப் பயணங்கள் உண்டு.

பூராடம்:

பூராடம் நட்சத்திரக்காரர்கள் எப்போதும், எதிலும் யோசித்து செயல்படுவீர்கள் என்பதால் உங்களின் நீண்டகால பிரச்னைகளை தற்போது வெற்றி கொள்வீர்கள். குடும்பத்தில் உங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். நீண்ட நாட்கள் உடல் நலம் இல்லாமல் இருந்தவர்கள் இப்பொழுது குணம் அடைவார்கள். தந்தைவழி தொழில் செய்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டு. கிரகநிலைகள் சாதகமாக இருப்பதால் இந்த மாதம் ஆன்மிக விஷயங்களில் அதிகமாக ஈடுபாடு கொள்வீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

உத்திராடம்:
இளையபருவத்தினர் சிலருக்கு இந்த மாதம் காதல் அனுபவங்கள் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷமான நிகழ்ச்சிகளும் ஒரு சிலருக்கு பொருள் சேர்க்கையும் இருக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பீர்கள். வாழ்க்கைத்துணையால் லாபம் உண்டு. சிலருக்கு மட்டும் கடன் பிரச்னைகள் கலக்கத்தை கொடுக்கும். கடன் தொல்லைகளைத் தவிர்க்க கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது. நடுத்தர வயதை கடந்தவர்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். யாரிடமும் சண்டை போடாதீர்கள். வாக்குவாதமும் செய்யாதீர்கள்.

திருவோணம்:

வயதான தாயாரைக் கொண்டவர்கள் அவரின் உடல்நல விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. குறிப்பிட்ட சிலருக்கு வீடு விஷயமான கடன்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சிலருக்கு எதிர்கால வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமையக்கூடிய நிகழ்ச்சிகள் இந்தமாதம் இருக்கும். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களின் ஆலோசனையும், அறிவுரையும் ஏற்கப்படும். மற்றவர்களால் மதிக்கப் படுவீர்கள். மேலதிகாரியின் தொந்தரவு இருக்காது. நீண்ட நாட்களாக கேட்டு வந்த சம்பள உயர்வுக்கு முதலாளி இப்போது சம்மதிப்பார். வாழ்க்கைத்துணை விஷயத்தில் இந்த மாதம் சில உல்லாச அனுபவங்கள் இருக்கும்.

அவிட்டம்:
நண்பனைப் போல உங்களுடன் சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். கும்பராசியினருக்கு வம்பு வழக்கு ஏதேனும் வரலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் யோசித்து செயல்படுவது நல்லது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இது போன்ற கிரகநிலை இருக்கும் நேரங்களில்தான் சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படும். அதேநேரம் உங்களுடைய மனோதைரியம் கூடுதலாகும். எத்தகைய பிரச்னைகளையும் சுலபமாக சமாளிப்பீர்கள். சிலருக்கு நீண்டதூரப் பயணங்கள் அமையும். பயணங்களால் நன்மைகள் உண்டு.
சதயம்:

மனம் உற்சாகமாக இருக்கும். வீட்டில் சுப காரியங்களுக்கான முன்னோட்டம் இருக்கும். வீட்டுத் தேவைக்கான பொருள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும், நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும். இதுவரை நடைபெறாமல் வெறும் முயற்சி அளவிலேயே இருந்து வந்த காரியங்கள் அனைத்தும் உங்கள் மனம் போல நிறைவேறும். உங்களில் குறிப்பிட்ட சிலர் ஏதேனும் ஒரு சாதனைச்செயல் புரிந்து புகழடைவதற்கான வாய்ப்புகள் இந்தமாதம் உள்ளது. அரசு, தனியார்துறை பணியாளர்கள், இரும்பு சம்பந்தப்பட்ட துறையினர், உழைப்பாளிகள் போன்றவர்களுக்கு இந்தமாதம் மிகவும் நல்லபலன்கள் நடக்கும்.

பூரட்டாதி:

உங்களில் கும்பராசியைச் சேர்ந்த சிலருக்கு எதிர்மறை அனுபவங்கள் இருக்கும். அலுவலகங்களில் யாரையும் நம்ப வேண்டாம். மனதில் உள்ளதை எவ்வளவு தெரிந்தவராக இருந்தாலும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் வார்த்தைகளில் கவனமாக இருங்கள். குறிப்பிட்ட சிலருக்கு அலுவலகத்தில் டிரான்ஸ்பர், பதவிஉயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவைகள் இருக்கலாம். வேறு சிலருக்கு கம்பெனி சார்பில் வெளிநாடு பயணங்கள் இருக்கும். அதனால் நன்மைகளும் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.

உத்ரட்டாதி:

இந்த மாதம் உங்களுக்கு மனம் சந்தோஷப்படும்படியான நிகழ்ச்சிகளும், பணவரவும், வீட்டிற்கு புதிதாக ஏதேனும் பொருள் சேர்க்கையும் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் உறுதியாகும் நிகழ்ச்சிகள் நடக்கும். இளையவர்களுக்கு அதிர்ஷ்டம் செய்யும் மாதம் இது. இதுவரை மனதில் இருந்து வந்த எதிர்மறை எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மைகள் இனிமேல் இருக்காது. எதை நினைத்து கலங்குகிறோம் என்று தெரியாமல் இதுவரை இனம் புரியாத கலக்கத்தில் இருந்து வந்தவர்கள் இனிமேல் புது உற்சாகம் அடைவீர்கள். உடல் நலமில்லாமல் இருந்தவர்கள் படிப்படியாக குணம் அடைவீர்கள்.

ரேவதி:

யோகாதிபதி செவ்வாய் ராகுவைப் பார்ப்பதால் சிலருக்கு அந்நிய இன மத மொழிக்காரர்கள் உதவுவார்கள். குறுக்குவழி சிந்தனைகள் இந்த மாதம் வேண்டாம். வேலை செய்யும் இடங்களில் புகழப்படுவீர்கள். மனம் உற்சாகமாக இருக்கும். எதிர்காலம் பற்றிய நம்பிக்கை பிறக்கும். குடும்பத்தில் மனமகிழ்ச்சியான சம்பவங்களும், வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்களில் முன்னேற்றமான போக்கும் இருக்கும். யோகர்கள் வலுப்பெற்று இருப்பதால் மனதிற்கு சந்தோஷமான விஷயங்கள் நடக்கும். சிலருக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் உண்டு.

No comments :

Post a Comment