Thursday, September 1, 2016

துலாம்: 2016 செப்டம்பர் மாத பலன்கள்

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் இந்தமாத பிற்பகுதியில் ராசியிலேயே ஆட்சி பெறுவது உங்களுக்கு “பருத்தி புடைவையாய்க் காய்த்தது” என்ற பழமொழிக்கேற்ப அனைத்து விஷயங்களும் அதிக முயற்சி இன்றி நடக்ககூடிய ஒரு மாதமாக இந்த மாதத்தை அமைத்து தரும். முற்பாதியில் அவர் நீசம் பெற்றாலும் நீசபங்க அமைப்பில் இருப்பதால் மாதம் முழுவதும் உங்களுக்கு நல்லபலன்கள்தான்.

முப்பது வயதுகளில் இருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு தற்போது வேலை, குடும்பம், தொழில் போன்ற அனைத்திலும் செட்டில் ஆக வேண்டிய காலகட்டம் என்பதால் சோம்பலை விட்டொழித்து சுறுசுறுப்பாக இருந்தால் தெய்வ அருள் எப்போதுமே உண்டு. வாக்கு ஸ்தானாதிபதி சனியுடன் இணைந்து வலுவின்றி அமைவதாலும் இரண்டில் சனி இருப்பதாலும் சொன்ன சொல்லை காப்பாற்றுவது கடினமாக இருக்கும். அவசரப்பட்டு யாருக்கும் உதவி செய்வதாகவோ பணம் தருவதாகவோ வாக்கு கொடுக்க வேண்டாம். நிறைவேற்றுவது கடினம். 

சொல்லிக்கொடுக்கும் தொழில்புரிவோர், மார்க்கெட்டிங் போன்று பேச்சுத் திறமையால் வேலைசெய்பவர்கள், வக்கீல்கள், ஆசிரியர்கள் போன்றவருக்கு பணியிடங்களில் நெருக்கடி வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் அனுசரித்து போவது நல்லது. இளையவர்களுக்கு அதிர்ஷ்டம் செய்யும் மாதம் இது. சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல எதிர்காலத்திற்கு அஸ்திவாரம் இடும் வேலை தொழில் அமைப்புகளும் இப்போது அமையும். ஏழரைச்சனி நடந்து வருவதால் அருகில் இருக்கும் பழமையான சிவன் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சனிக்கிழமை தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது சிரமங்களை குறைக்கும்.

1,2,3,4,12,13,14,16,18,19 ஆகிய நாட்களில் பணம் வரும். 21-ந்தேதி அதிகாலை 2 மணி முதல் 23-ந்தேதி அதிகாலை 4 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்றாலும் சந்திரன் குருவின் பார்வையில் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் உங்களுக்கு நடக்காது. அதே நேரத்தில் புதிய முயற்சிகள் ஆரம்பங்கள் எதுவும் இந்த நாட்களில் வேண்டாம்.

No comments :

Post a Comment