Thursday, September 1, 2016

கடகம்: 2016 செப்டம்பர் மாத பலன்கள்

கடகம்:

மாத ஆரம்பத்தில் கடகநாதன் சந்திரன் சூரியனுடன் இணைந்து அமாவாசை யோகத்துடன் இருக்கிறார். ராஜயோகாதிபதி செவ்வாய் இந்தமாதம் சனியின் இணைவிலிருந்து விலகுவது கடகராசிக்கு நன்மை தரும் ஒரு அமைப்பு என்பதால் செப்டெம்பர் மாதம் உங்களுக்கு யோகம் தரும் மாதம்தான். ஒன்பதுக்குடைய குருபகவான் மூன்றாம் வீட்டில் அமர்ந்து, தன் ஒன்பதாம் வீட்டைப் பார்த்து வலுப்படுத்துவதால் எவ்வித சிக்கல்களும் உங்களுக்கு வரப் போவது இல்லை.

கடகராசிகாரர்கள் இப்போது கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை வந்தால் தேவைக்கு மட்டும் வாங்குவது நல்லது. ஆடம்பர விஷயங்களுக்கு தேவையில்லாமல் கடனை வாங்கி விட்டு பின்னர் அதிக வட்டி கட்டும் சூழலில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் படவேண்டி இருக்கும் என்பதால் சிக்கனமாக இருக்க வேண்டியது அவசியம். நாலுக்குடைய சுக்கிரன் மாத ஆரம்பத்தில் மூன்றாம் இடத்தில் வலுவிழப்பதால் இந்த மாதம் வீடு, வாகனம், தாயார், கல்வி போன்ற விஷயங்களில் செலவுகளும், விரயங்களும் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

தனாதிபதி சூரியன் மிகவும் வலுவாக அவருடைய நண்பரான புதனுடன் தன வீட்டில் இருப்பதால் எதிர்பாராத பண வரவு இந்த மாதம் முழுவதும் இருக்கும். யார் வீட்டுப் பணமானாலும் உங்கள் பாக்கெட்டில் புரண்டு கொண்டே இருக்கும். பணத்தட்டுப்பாடு இருக்காது. இதுவரை வேலை தொழில் விஷயங்களில் இருந்து வந்த கலக்கமான, பதட்டமான சூழ்நிலைகள் இனிமேல் இருக்காது. அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள், தந்தைவழி தொழில் செய்பவர்கள் போன்றவருக்கு இந்த மாதம் மிகுந்த நன்மைகள் தரும் மாதமாக இருக்கும்.

1,2,3,5,7,12,13,19,20,24 ஆகிய நாட்களில் பணம் வரும். 14-ந்தேதி இரவு 10 மணி முதல் 17-ந்தேதி அதிகாலை 12.30 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் கவனமும் எச்சரிக்கையுமாக இருப்பது நல்லது. ராசிநாதன் சுபர்பார்வையின்றி வலிமை இழப்பதால் இந்த நாட்களில் புதிய முயற்சிகள் எதையும் செய்ய வேண்டாம்.

No comments :

Post a Comment