Thursday, September 1, 2016

மீனம்: 2016 செப்டம்பர் மாத பலன்கள்

மீனம்:

ராசிநாதன் குருபகவான் ராசியைப் பார்த்து சுபப்படுத்துவதால் மீனராசியின் அனைத்துக் கஷ்டங்களும் நீங்கி விட்டன. உங்களுக்கு வசந்தகாலம் பிறந்து விட்டது. கடந்த காலங்களில் மீனராசிக்காரர்களுக்கு இருந்து வந்த பிரச்னைகள் இனி இருக்காது. வேலை வியாபாரம் தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வரும் தடைகள் தாமதங்கள் நீங்கி நல்லவிதமான செயல்கள் நடைபெறத் துவங்கும்.

குடும்பத்தில் கணவன் மனைவியரிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை இருக்கும். வேலை விஷயமாக பிரிந்து இருக்கும் தம்பதிகள் ஒன்று சேர முடியும். விவாகரத்து வழக்குகளுக்கு நல்லவித முடிவு இருக்கும். சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி சுமுக நிலைமை பிறக்கும். வியாபாரிகளுக்கு இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை மாறி தொழில் சூடு பிடிக்கும். கலைஞர்கள் வாய்ப்புக்கள் கிடைக்கப் பெறுவீர்கள். இது வரை வராமல் இருந்த சம்பளப்பாக்கி இப்போது வரும். தொழிலாளர்களுக்கு நிர்வாகத்துடன் இருந்து வந்த கசப்புகள் நீங்கி புது வழி பிறக்கும்.

இளைஞர்களின் மனம் சந்தோஷப்படும்படியான நிகழ்ச்சிகளும், பணவரவும், உங்களால் வீட்டிற்கு புதிதாக ஏதேனும் பொருள் சேர்க்கையும் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு கல்யாணம் உறுதியாகும். உங்கள் ராசிநாதன் குருபகவானே உங்களின் ஜீவனாதிபதியாகவும் இருந்து ராசியைப் பார்த்து வலுப்படுத்துவதால் இதுவரை நல்லவேலை கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு நல்ல இடத்தில் வேலை கிடைத்து செட்டில் ஆவீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த ஒரு பெரிய தொகை வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. சிரமங்கள் அனைத்தும் தீரும் மாதம் இது.

2,3,4,10,14,15,16,21,23,27 ஆகிய நாட்களில் பணம் வரும். 5-ந்தேதி காலை 6 மணி முதல் 7-ந்தேதி இரவு 7 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

No comments :

Post a Comment