Tuesday, October 27, 2015

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 61 (27.10.2015)

பி. முருகேசன், சென்னை-22

கேள்வி :

சுக்
செவ்
ரா
சூ
ராசி
பு
கே
குரு
சனி
சந்


மூத்தமகனின் திருமணம் தடங்கலாகவே இருக்கிறது. ராஜ்பவனில் தற்காலிக ஊழியராக பணிபுரிகிறார். வேலை நிரந்தரமாகுமா? திருமணம் நடைபெறுமா? பரிகாரம் எதாவது செய்ய வேண்டுமா?

பதில்:

(கும்பலக்னம், கன்னிராசி, லக்னத்தில் சூரி. இரண்டில் சுக், செவ். ஐந்தில் ராகு. ஒன்பதில் சனி. பத்தில் குரு. பனிரெண்டில் புதன்.)

மகனுக்கு லக்னத்திற்கு இரண்டில் செவ்வாய். ராசிக்கு இரண்டில் சனி என்ற அமைப்பாகி தாரதோஷமும், ஐந்திற்குடைய புதன் பனிரெண்டில் மறைந்து ஐந்தில் ராகு அமர்ந்து புத்திரதோஷமும் இருப்பதால் தாமத திருமண அமைப்பு உள்ளது. செவ்வாயும், சுக்கிரனும் ஐந்துடிகிரிக்குள் இணைந்ததும் குற்றம். வரும் நவம்பர் 14-ந்தேதிக்கு மேல்தான் தாம்பத்ய சுகம் கிடைக்கும் அமைப்பு வருவதால் அடுத்த வருடம் ஏப்ரல், மேயில் திருமணம் நடக்கும். 2018-ல் வேலை நிரந்தரமாகும். 32 வயது ஆகிவிட்டதால் பரிகாரம் தேவையில்லை.

ஜெ. ஜெயகண்ணன், கோவை.

கேள்வி :

கடவுளுக்கு அடுத்து உங்களை நம்புகிறேன். என் வாழ்விற்கு வெளிச்சம் காட்டுங்கள். ஒன்பதாவதாகப் பிறந்து ஒன்பதாவது மட்டும் படித்து வெளியூர் வந்து பழைய இரும்புக்கடை வைத்து நடத்துகிறேன். இங்கே எம்.காம் படித்த பெண்ணை பத்துவருடமாக விரும்புகிறேன். இருவரும் ஒரே ஜாதி. இரண்டு பேரும் நடுத்தரக்குடும்பம். அவள் கன்னிராசி, அஸ்தநட்சத்திரம். அவள் வீட்டில் போய் பெண் கேட்டதற்கு படிக்காதவனுக்குத் தரமாட்டோம் என்று மறுத்து விட்டார்கள். நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நினைத்தால் ஓடிப்போய் கல்யாணம் செய்வோம். ஆனாலும் பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் நடக்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறோம். எங்கள் திருமணம் எப்போது நடக்கும். அல்லது நடக்காதா?

பதில்:

சரியான பிறந்தநேர விவரங்களைக் கொடுத்தால் ஒரு சம்பவம் எப்போது நடக்கும் என்று ஞானிகள் சொன்னபடி கணித்துச் சொல்லும் எளியஜோதிடன் நான். அருள் வாக்கு சொல்பவன் இல்லை. வீட்டில் பெரியவர்களிடம் கேட்டு உங்கள் இருவரின் பிறந்தநாள், நேரம், இடம் ஆகிய குறிப்புகளை அனுப்பினால் தெளிவாகப் பதில் சொல்லுகிறேன். அதேநேரத்தில் பெற்றவர்களின் சம்மதத்துடன்தான் திருமணம் நடக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் உங்களை வாழ்த்துகிறேன். நீங்கள் இருவரும் விரைவில் பெற்றோர் சம்மதத்துடன் வாழ்வில் இணைய வேண்டும் என்று பரம்பொருளைப் பிரார்த்திக்கிறேன்.

எஸ். எஸ். வள்ளிநாயகம், தர்மபுரி.

கேள்வி :

பு
சூ
செவ்
சுக்
ரா
ராசி
கே
குரு
சனி
சந்


ஏழரைச்சனி முடிந்தும் துன்பம் நீங்கவில்லை. ஜனவரி முதல் மஞ்சள் காமாலை, காய்ச்சல், கால்வலி என்று மாற்றி மாற்றி தொந்தரவு வந்து கொண்டே இருக்கிறது. சித்தப்பா சித்தமருந்து கம்பெனி நடத்தலாம் என்கிறார். சரியாக இருக்குமா? பல அரசுத்தேர்வு எழுதியும் வெற்றி கிட்டவில்லை. அரசு வேலை அமையுமா? உடல்நலம் எப்போது சீராகும்? 33 வயதாகியும் திருமணம் இல்லை. எப்போது திருமணம்? கடைசிவரை துன்பம்தானா? ஆசான் அவர்கள்தான் நல்வழி காட்ட வேண்டும்.

பதில்:

(தனுசுலக்னம், கன்னிராசி. ஐந்தில் புதன். ஆறில் சூரி, செவ். ஏழில் சுக், ராகு. பதினொன்றில் சனி. பனிரெண்டில் குரு.)

லக்னாதிபதி குரு பனிரெண்டில் மறைந்து ஆறாம் வீட்டில் சூரியனும், செவ்வாயும் அமர்ந்த ஜாதகம். தற்போது ஆறாம் வீட்டைப் பார்க்கும் குருதசையில் ராசிக்கு ஆறுக்குடைய சனியின் புக்தி நடப்பதால் ஆரோக்கியக்குறைவு இருக்கிறது. லக்னாதிபதி குருவை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்யவும்.

லக்னத்திற்கும், ராசிக்கும் பத்தாம்வீட்டு அதிபதி புதனாகி, அவர் செவ்வாயின் வீட்டில் அமர்ந்து, செவ்வாய் ராசியில் சூரியனுடன் இணைந்து அம்சத்தில் ஆட்சி பெற்றதால் சித்த மருத்துவத்தொழில் கைகொடுக்கும். சுக்கிரன் ராகுவுடன் இணைந்து தாரதோஷம் உண்டானதாலும், புத்திரக்காரகன் குரு பனிரெண்டிலும், புத்திரஸ்தானாதிபதி செவ்வாய் ஆறிலும் மறைந்து புத்திரதோஷம் உண்டானதாலும் திருமணம் தாமதமாகிறது. ஶ்ரீகாளகஸ்திக்கு சென்று பரிகாரங்களைச் செய்யவும். அடுத்த வருடம் திருமணம் நடக்கும். திருமணத்திற்குப் பிறகு நிம்மதியும், குருதசை நடப்பதால் அப்பா ஆனபின் யோகமும் செயல்பட ஆரம்பிக்கும். கஷ்டங்கள் எதுவும் இனிமேல் இருக்காது. கவலை வேண்டாம். அரசு வேலைவாய்ப்பு இல்லை.

. பாலமுருகன், சத்துவாச்சாரி.

கேள்வி :

இளைமையிலிருந்து கஷ்டப்பட்டு இப்போதுதான் சற்று நிம்மதியாக இருக்கும் நிலையில் இரண்டாவது மகனுக்கு ஆட்டிசம் நோய் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எனது மூத்தமகனின் படிப்பு பாதிக்கப்படுகிறது. இளையவனின் நிலை ஜோதிடரீதியாக மாறக்கூடியதா? அவனால் பெரியவனின் வாழ்க்கை பாதிக்கப்படுமா? முதல் முடிகாணிக்கை குலதெய்வமான சிவனை விடுத்து திருப்பதி பெருமாளுக்கு கொடுத்தது தெய்வ குற்றமாகுமா? பரிகாரம் எதாவது உண்டா?

பதில்:

‘’அரியும், சிவனும் ஒண்ணு அறியாதவர் வாயில் மண்ணு’’ என்று பெரியவர்கள் ஒரு பழமொழி சொல்வார்கள். சைவமும், வைணவமும் பரம்பொருளை வெவ்வேறு வழிகளில் அடையும் பாதைகள்தான். சிவனை விடுத்து பெருமாளுக்கு முடி காணிக்கை கொடுத்தது தெய்வகுற்றம் அல்ல. எந்தத் தெய்வமும் இதை குற்றமாகவும் எண்ணாது.

உங்கள் மகன் சுதர்சனபிரணவிற்கு கடக லக்னம், மேஷ ராசியாகி. லக்னத்தில் நீச செவ்வாய் உள்ளதும் குருபகவான் பத்தில் அமர்ந்து தனது ஆறாம் வீட்டை பார்த்து வலிமைப்படுத்துவதும் மேஷராசிக்கு தற்போது அஷ்டமச்சனி நடப்பதும் நோய்க்கான காரணங்கள். உங்களின் தனுசுராசிக்கும் தற்போது ஏழரைச்சனி நடப்பதால் உங்களுக்கும் கவலைப்பட காரணங்கள் வேண்டும் என்பதால் சிறுவனின் நோய் உங்களின் ஏழரைச்சனி காலமான ஏழு வருடங்களும் நீடிக்கும். எங்கே அடித்தால் வலிக்கும் என்பது சனிபகவானுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே மகன்களின் மேல் உயிரையே வைத்துள்ள ஒரு தந்தையை அழ வைப்பதற்கு பிள்ளைகளைத்தான் சனி பயன்படுத்துவார்.

லக்னத்தில் நீசசெவ்வாய் இருந்தாலும் லக்னாதிபதி பரிவர்த்தனை பெற்று நவாம்சத்தில் அனைத்துக் கிரகங்களும் சுபவலுவுடன் இருப்பதால் பத்து வயதிற்கு மேல் உங்கள் மகன் மற்றவர்களை போல சாதாரணமாகவே இருப்பான். இவனால் மூத்தவனின் வாழ்க்கை பாதிக்கப்படாது. சில வாரங்களுக்கு முன் இதே பகுதியில் சந்திரனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை விரிவாக எழுதி இருந்தேன். அதைச் செய்து கொள்ளவும்.

எஸ். சுவாமிநாதன், ஊமச்சிகுளம்.

கேள்வி :

சனி
கே
ராசி
குரு
ரா
செவ்
சுக்
சந்
பு
சூ


ஜோதிடச்சக்ரவர்த்தியின் தீவிர மாலைமலர் வாசகன் நான். சில வாரங்களுக்கு முன் அப்பாக்கள் அனைவரும் அயோக்கியர்கள் என்ற தலைப்பில் தாங்கள் அளித்த பதிலைப் படித்து மெய்சிலிர்த்தேன். ஏழு வருடங்களுக்கு முன் என் அக்கா வீட்டுக்காரர் இறந்துவிட்டார். அக்காவின் மூத்தமகன் சென்ற வருடம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன் மதுரை பாலிடெக்னிக்கில் சேர்த்து ஆறுமாதத்தில் நின்றுவிட்டான். தற்போது நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுகிறான். தவறான நண்பர்களின் சகவாசத்தினால் கஞ்சாவிற்கு அடிமையாகிவிட்டான். வீட்டில் யார் பேச்சையும் கேட்பதில்லை. அம்மாவைத் திட்டுகிறான் அடிக்கப் போகிறான். மேலும் கெட்டு தீயசெயல்களில் போய்விடுவானோ என்று பயமாக இருக்கிறது. உள்ளூர் ஜோதிடர் சொன்னதின் பேரில் ராமேஸ்வரம் சென்று பரிகாரம் செய்தோம். ஆனால் தற்போது இன்னும் அதிகமாக போதைக்கு அடிமையாகி சைக்கோ ஆகிவிட்டான். தாங்கள் அவன் நல்வழியில் வருவதற்குரிய தெய்வீகபரிகாரம் என்னவென்பதை அருள்கூர்ந்து தெரியப்படுத்த வேண்டுகிறேன்.

பதில்:

(மிதுன லக்னம், விருச்சிக ராசி. மூன்றில் ராகு. ஐந்தில் சூரி. ஆறில் புதன். ஏழில் சுக், செவ். எட்டில் குரு. பத்தில் சனி.)

படைப்பின் விசித்திரத்தை என்னவென்று சொல்லுவேன்? நீங்கள் குறிப்பிடும் அந்த பதிலுக்குச் சொந்தமான பெண் பிறந்த அதேநாளில் மதுரையில் அவளுக்கு ஆறு நிமிடங்களுக்கு முன் பிறந்து அதே போன்ற ஜாதகஅமைப்பைக் கொண்டவன் இந்தப்பையன். இவன் ஆண் என்பதால் அதற்கேற்ற பலன்கள் நடக்கின்றன.

உலகின் அனைத்து விருச்சிக ராசிக்காரர்களுக்கும் அவர்களது வயது பிறந்த ஜாதகவலுவைப் பொறுத்து சிரமமான பலன்களே நடந்து வருகின்றன மனதிற்கு காரணமான சந்திரன் கெட்டு ஏழாமிட சுக்கிரதசையும் நடப்பதால் உங்கள் மருமகனின் மனம் அவனது கட்டுப்பாட்டில் இல்லை. அடுத்த வருடம் வேறுவிதமான பிரச்னைகள் வரும். ஜாதகம் பலவீனமாகி ஏழரைச்சனி நடக்கும் நேரங்களில் சனியைத் தவிர்த்து வேறு எந்த பரிகாரங்களும் பலன்தராது. சில கர்மவினைகளை நாம் அனுபவித்தே தீர வேண்டும்.

உங்கள் அக்காவின் ராசி என்னவென்று சொல்லவில்லை. அவரது குடும்பத்தில் வேறு யாருக்காவது சனி நடந்தால் கடுமையான பலன்தான். அக்காவை காலபைரவருக்கு சனிக்கிழமைதோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி மகனுக்கு நல்வழி காட்டும்படி மனமுருக வேண்டி வரச் சொல்லுங்கள். ஜென்மச்சனி முடிந்ததும் மறுபடியும் கேளுங்கள். முறையான பரிகாரங்களைச் சொல்லுகிறேன்.

இந்தப் பிறவியோடு மோட்சம் அடைவேனா?

ஒரு வாசகர், ராசிபுரம்.

கேள்வி :

செவ்
சுக்
சூ,சந்
கே,பு
குரு
ராசி
சனி
ரா


முதல் திருமணம் 2009- ம் ஆண்டு நடந்தது. அமைந்த மனைவியோ ஒரு ராட்சசி. ஒழுக்கம் இல்லாத பெண். உறவினர்கள் சதி செய்து ஏற்கனவே விவாகரத்து ஆனவள் என்பதை மறைத்து திருமணம் முடித்து விட்டார்கள். ஆறுமாதத்தில் விவாகரத்து செய்து விட்டோம். இரண்டாவது திருமணத்தில் நாட்டம் இல்லாத நான் அம்மா, அப்பாவிற்காக மீண்டும் திருமணம் செய்து நான்கு வயதில் பெண்குழந்தை உள்ளது. இரண்டாவது வந்தவளும் முதல் மனைவி போல்தான் இருக்கிறாள். என்னிடம் எந்த கெட்டபழக்கமும் இல்லை. உறவுகள் மேல் பற்றுதல் குறைந்து விட்டது. மனம் ஒரு பக்குவ நிலையை அடைந்து கொண்டிருக்கிறது. பூசாரியாக இருக்கிறேன். உயிருள்ளவரை பரம்பொருளுக்கு செய்யும் சேவை தொடர வேண்டும் என ஆசைப்படுகிறேன். குடும்பம், தொழில் சரியாக இல்லாததால் ஆசிரமம், மடம் போன்றவற்றில் சேர்ந்து இறை சேவை செய்ய முடியுமா? குரு, சனி தசையில் இது நடக்குமா? இந்தப் பிறவியோடு மோட்சம் அடைவேனா?மிகப் பெரிய ஜோதிடர் ஒருவர் எனக்கு சொன்னது எதுவுமே சரியில்லை. நீங்களாவது சரியாக சொல்லுங்கள்...

பதில்:

(ரிஷபலக்னம், மேஷராசி. லக்னத்தில் குரு, மூன்றில் சனி, பதினொன்றில் செவ், சுக். பனிரெண்டில் சூரி, கேது, புதன்.)

தமிழ்நாட்டின் மிகச் சிறந்த மூத்த ஜோதிடரை தவறாகப் பலன் சொல்லிவிட்டார் என்று குறை சொல்லுகிறீர்கள். முதலில் உங்கள் லக்னத்தை மிதுனத்திற்குப் பதில் ரிஷபம் என்று திருத்திக் கொள்ளுங்கள். தவறாகக் கணிக்கப்பட்ட ஜாதகத்தைக் கொடுத்தால் எந்த ஜோதிடரும் மாறான பலன்தான் சொல்லுவார்.

லக்னத்தில் குரு அமர்ந்து, கேதுவோடு இணைந்த சந்திரனை சனி பார்த்து மனம் முழுக்க ஆன்மிக எண்ணங்கள் மட்டுமே இருக்கும் ஜாதகம். இதுபோன்ற ஜாதகர் குடும்ப வாழ்க்கைக்கு வந்திருக்கக் கூடாது. கோவலனை மறுத்து விட்டு கண்ணகி உங்களைக் கல்யாணம் செய்திருந்தால் கூட அவள் கற்பிலும் சந்தேகப்படுவீர்கள்.

லக்னாதிபதியும் தாம்பத்திய சுகத்தை தருபவருமான சுக்கிரன் உச்சம் பெற்றாலும் வக்ரம் அடைந்து நீசநிலை பெற்றதால் இல்லறசுகத்தை விட ஆன்மிகத்தில்தான் உங்களுக்கு அதிக நாட்டம் இருக்கும். இது போன்றவர்கள் தாய், தகப்பன் விரும்புகிறார்கள் என்று வேண்டாவெறுப்பாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து ஏன் அவள் வாழ்க்கையைக் கெடுக்கிறீர்கள்? சுக்கிரன் வக்ரம் பெற்றாலே ஒரு பெண்ணைப் புரிந்துகொண்டு அவள் விருப்பப்படி நடக்க முடியாது. எல்லாம் ஏடாகூடமாகத்தான் இருக்கும்.

உங்களுக்கு தற்போது ராகுதசையில் சுக்கிரபுக்தி 2016 இறுதிவரை நடப்பதால் மனைவி, குடும்பவிஷயத்தில் மனச்சஞ்சலங்கள் இருக்கும். குருபகவான் லக்னத்தோடு சம்பந்தப்பட்டு சனிபகவான் ராசியோடு சம்பந்தப்படுவதால் குரு தசையிலும் அதனையடுத்த சனிதசையிலும் நீங்களே தனியாக ஆசிரமமோ, மடமோ துவங்கி உண்மையான, தூய்மையான இறைசேவை செய்வீர்கள். பனிரெண்டில் கேது இருப்பதால் இதுவே உங்களின் கடைசிப்பிறவி. இந்தப் பிறவியோடு மோட்சம் அடைவீர்கள்.
.

No comments :

Post a Comment