Friday, July 1, 2016

சிம்மம்: 2016 ஜூலை மாத பலன்கள்

சிம்மம்:

ராசிநாதன் சூரியன் வலுவான அமைப்பில் மாதம் முழுவதும் நட்பு வீடுகளில் இருப்பதாலும் அடுத்த மாதம் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி மூலம் தொழில் ஸ்தானத்திற்கு குருபார்வை கிடைப்பதாலும் சிம்மராசிக்கு கடந்த காலங்களில் இருந்து வரும் நிச்சயமற்ற வேலை அமைப்புகளும், லாபங்களைத் தராத தொழில் அமைப்புகளும் மாறி நல்லவிதமான பணவரவும் லாபங்களும் இந்த மாதம் முதல் கிடைக்கத் துவங்கும் என்பது உறுதி.

பாக்கியஸ்தானம் வலுப்பெற்று இருப்பதால் இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டம் கை கொடுக்கும். தேவையற்ற விவகாரங்களில் மூக்கை நுழைத்து கையில் இருக்கும் காசை விரயம் செய்வீர்கள் என்று கிரக நிலைமைகள் காட்டுவதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கும்முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசியுங்கள். கடைசிநேரம் வரை வரவேண்டிய பணம் கிடைக்குமா? கிடைக்காதா? என்று டென்ஷன் இருக்கும். இறுதியில் பணம் கிடைக்கும் என்பது நிச்சயம். ஆனாலும், அப்போதைய தேவைக்குத்தான் பணம் வருமே தவிர மிச்சம் பிடித்து சேமிக்கும் அளவிற்கு இருக்காது.

ஏழாமிடத்தில் பாபகிரகம் இருப்பதால் கணவன், மனைவி உறவுகள் பெரிதாக சொல்வதற்கில்லை. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துப் போவதால் பிரச்னைகள் பெரிதாகாமல் தடுக்கலாம். பங்குதாரர்களை எதற்கெடுத்தாலும் நம்ப வேண்டாம். எவரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடுவதோ, அடுத்தவர் விஷயத்திற்காக போய் முன்னே நிற்பதோ கூடவே கூடாது. சிம்மராசிக்காரர்கள் ஒருமுறை ராகுபகவான் பரிகார ஸ்தலங்களான ஸ்ரீகாளகஸ்தி, திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், கொடுமுடி போன்ற புனிதத்தலங்களுக்கு சென்று ராகு பகவானுக்குரிய பரிகாரங்களை செய்வது நல்லது.

1,2,7,8,9,15,16,17,22,23 ஆகிய நாட்களில் பணம் வரும். 24-ம்தேதி காலை 9 மணி முதல் 26-ம்தேதி மதியம் 12 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் வீண் வாக்குவாதங்களோ தேவையற்ற பேச்சுக்களோ பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளும் வேண்டாம்.

No comments :

Post a Comment