Tuesday, 21 June 2016

ராகுவின் சூட்சுமங்கள் - C-049

என்னை ஜோதிடக் கருத்தரங்குகளிலும், மாநாடுகளிலும் முதல்முறையாக நேரில் சந்திக்கும் பலர் முதலில் சொல்லும் வார்த்தை “அய்யா உங்களுடைய சாயாக் கிரகங்களின் சூட்சுமநிலைகள் கட்டுரைகளைப் படித்துப் பிரமித்திருக்கிறேன். அவற்றைப் பத்திரமாகப் பைண்டு பண்ணி வைத்திருக்கிறேன்” என்பதாகத்தான் இருக்கும்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு ஜோதிட மாத இதழில் சாயாக்கிரகங்களான ராகு-கேதுகளைப் பற்றி நான் எழுதிய பதினொரு கட்டுரைகள் இணையத்தின் தயவால் உலகம் முழுவதும் உள்ள எனது மாணவர்களாலும் மற்றவர்களாலும் இன்றும் புகழப்படுகின்றன. என்னை நினைக்க வைக்கின்றன.

ராகுவைப் பற்றிய தற்போதைய மாலைமலர் கட்டுரைகள் அந்தக் கட்டுரைகளின் தொடர்ச்சியாக இருக்கும்.

என்னுடைய முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஜோதிட ஆய்வில் ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ராகுவைப் பற்றி மட்டும் ஆராய்வதில் நான் செலவிட்டிருக்கிறேன். அந்த அளவிற்கு சுவாரஸ்யமான கணிக்கச் சிக்கலான கிரகம் ராகுபகவான்.

நமது மூலநூல்களில் கூட ராகு-கேதுகளைப் பற்றி விரிவாகச் சொல்லப் படவில்லை. பின்னர் வந்த விளக்க நூல்களிலும் என்ன செய்யும் என்று கணிக்க அசாத்திய திறன் தேவைப்படும் இந்தக் கிரகங்களைப் பற்றி சுருக்கமாகவே சொல்லப்பட்டிருக்கிறது..

பெரும்பாலான ஜோதிடர்களுக்கும் ராகு-கேதுகளைப் பற்றிப் பலன் சொல்வதில் சிறு தயக்கம் இருக்கும். அதிலும் ராகு கேதுக்கள் சுய நட்சத்திரத்தில் இருந்தால் அவ்வளவுதான். தலை சுற்ற ஆரம்பித்து விடும். கணிப்பது கஷ்டம்தான்.

என்னைப் பொறுத்தவரையில் ஜோதிடத்தின் மிக உயர்நிலைப் புரிதலாக ராகு-கேதுக்களைச் சொல்லுவேன்.

சொந்தவீடு இல்லாமல் தான் இருக்கும் வீட்டினை ஆக்கிரமித்து அந்த வீட்டின் அதிபதியின் செயல்களைக் கவர்ந்து தானே அந்த கிரகமாக மாறிப் பலன் தரும் ராகுவைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளும் ஒரு ஜோதிடர் மட்டுமே ஒரு ஜாதகத்தில் ஓரளவிற்குத் தெளிவான துல்லியமான பலன்களைச் சொல்ல முடியும்.

குப்பையில் கிடந்த ஒருவரை கோபுரத்தின் உச்சிக்குச் செல்ல வைத்து பிரபலமாக்குபவர் ராகுபகவான்தான்.. வாழ்க்கையின் மிக உச்சத்திற்குச் சென்ற உலகின் ஏராளமான பிரபலங்கள் ராகுதசையில் வெளிச்சத்திற்கு வந்தவர்கள்தான்.

ராகு எனும் இந்த இருட்டுக் கிரகம்தான் அநேக வி ஐ பி க்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்திருக்கிறது.

சாதாரண மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை மகாத்மா காந்தியாக மாற்றியதும், ஆட்சிக்கு ஆசைப்படாமல் நடித்துக் கொண்டிருந்த ஒருவரை மக்கள் தலைவராக்கி, பத்துவருடங்கள் நீடித்த மன்னனாக்கி இன்றும் இறவாதவராக இருக்கும் வகையில் அழியாப் புகழைக் கொடுத்தவரும் இந்த ராகுதான்.

என்னுடைய அனுபவத்தில் ஒருவருடைய ஜாதகத்தில் மற்ற கிரகங்கள் பலவீனம் அடைந்திருந்தாலும் ராகுபகவான் மட்டும் நல்ல இடத்தில் அமர்ந்து அந்த ஜாதகருக்கு நன்மை தரும் அமைப்பில் இருந்து அவருடைய தசை நடக்குமாயின் அந்த நபர் வாழ்க்கையின் உச்சநிலைக்குச் செல்வதைக் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

நமது வேதஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக சூரியன் குறிப்பிடப்பட்டாலும் கிரகங்களின் பலம் என்று வரும்போது சூரியனையும் தாண்டி ராகு-கேதுகளுக்கு நமது ஞானிகள் முதலிடம் கொடுத்திருப்பதில் இருந்தே ராகுவின் முக்கியத்துவத்தை நாம் உணரமுடியும்.

இந்திய ஜோதிடத்தின் மேன்மை மிகு முக்கிய அமைப்பும் இந்த ராகுவிற்குள்தான் அடங்கி இருக்கிறது. 

பல்வேறுபட்ட உலக ஜோதிடமுறைகளில் இந்திய வேதஜோதிடத்தில் மட்டுமே ராகு-கேதுக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. உலகின் மற்ற முறைகளில் ராகுகேதுக்களுக்கு இத்தனை முக்கியத்துவம் இல்லை.

பராசர மகரிஷி ராகுவின் துணுக்கங்களை தெளிவாக கண்டறிந்து அதற்கு கிரக அந்தஸ்தையும் கொடுத்து தசாவருடங்கள் பதினெட்டினையும் ஒதுக்கி ராகுவை ஜோதிடத்தினுள் நுழைத்ததில் இருந்தே நமது இந்திய ஞானிகளின் வானியல் நுண்ணறிவு தெளிவாக விளங்கும்.

நவக்கிரகங்களின் தன்மைகளை வைத்து அவற்றை மூன்று வகையாக நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் பிரித்தார்கள். ஒன்பது கிரகங்களும் ஒளிக்கிரகங்கள், குஜாதி ஐவர் எனும் பஞ்சபூதக்கிரகங்கள், சாயாக்கிரகங்கள் எனப்படும் நிழல்கிரகங்கள் என மூன்று வகைப்படும்.

மூலக்கிரகங்களான சூரியனும், சந்திரனும் பூமிக்கு அதிக ஒளியை பகலிலும், இரவிலும் நேரிடையாக வழங்கி பூமியின் மேல் தாக்கத்தினை ஏற்படுத்துவதால் ஒளிக்கிரகங்கள் என வகுக்கப்பட்டன.

குஜாதி ஐவர்கள் எனப்பட்டு சூரியனின் ஒளியை பிரதிபலிக்கும் குரு, சுக்கிரன், புதன், சனி, செவ்வாய் ஆகிய ஐவரில் சுக்கிரன், புதன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்களும் கல் மண் பாறைகள் போன்ற திடப்பொருட்களால் ஆனவை. மீதமுள்ள குருவும், சனியும் திடப்பொருட்கள் இல்லாமல் வாயுக்களால் ஆனவை.

இவர்கள் ஐவரையும் இரவு வானில் நாம் நேரில் பார்க்க முடியும். ஆனால் சாயாக்கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு-கேதுக்கள் கல், மண் போன்ற திடப்பொருட்களாலோ வாயு அல்லது திரவரூபமாகவோ ஆன கிரகங்கள் அல்ல. பூமியின் நிழலும், சந்திரனின் நிழலுமே ராகு-கேதுக்கள் என்று அழைக்கப்படுகின்றன.

சாயா எனும் சம்ஸ்கிருத வார்த்தைக்கு நிழல் என்று அர்த்தம். எனவே பூமி மற்றும் சந்திரனின் நிழல்களான இவை சாயாக்கிரகங்கள் என்று அழைக்கப்பட்டன. மற்ற கிரகங்களை போல இவற்றை நம்மால் வானில் பார்க்க முடியாது. இவைகளின் இருப்பை கிரகணங்களின் போது மட்டுமே நம்மால் உணர முடியும்.

சூரிய சந்திரர்களை மறைக்கும் கிரகணத்தின் போது ராகு-கேதுக்களை நமது ஞானிகள் உணர்ந்து அவற்றை ஆராய ஆரம்பித்து அவை மூலஒளியினை மறைப்பதால் பூமிக்கும், பூமியில் வாழும் உயிரினமான மனிதனுக்கும் ஏற்படும் பாதிப்புக்களை உணர்ந்து ராகு-கேதுக்களின் முழுப் பரிமாணத்தையும் நமக்கு அறிந்து சொன்னார்கள்.

ராகு-கேதுக்களையும் அவைகளின் துல்லியமான சுற்றுப்பாதையையும் கண்டுணர்ந்து கிரகண நேரங்களை முன்கூட்டியே கணித்ததில் இந்திய வேத ஜோதிடத்தின் மேதமை உலகிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தெளிவாக்கப் பட்டிருக்கிறது.

பூமியின் நிழலும், சந்திரனின் நிழலும், பூமி சூரியனைச் சுற்றி வரும் சுற்றுப்பாதையும் சந்திரன் பூமியைச் சுற்றிவரும் விரிவுபடுத்தப்பட்ட சந்திரப்பாதையும் வெட்டிக்கொள்ளும் புள்ளிகளே ராகு-கேதுக்கள் எனப்படுகின்றன.

ராகுகேதுக்களின் வீர்யம் குருவுக்கும் சனிக்கும் நடுவில் என உணரப்பட்டு பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வரும் குருவிற்கும் முப்பது வருடங்களுக்கு ஒருமுறை நிலையாக சூரியனை சுற்றிவரும் சனிக்கும் நடுவில் ஏறத்தாழ பதினெட்டு வருடங்களுக்கு ஒருமுறை ராகுவின் சுற்று அமைவதாக நமக்குச் சொல்லப்பட்டது.

ஜோதிடத்தில் ராகு-கேதுக்கள் இரண்டு கிரகமாக குறிப்பிடப்பட்டாலும் இவை இரண்டிற்குமிடையே கண்ணுக்கு தெரியாத ஒரு இணைப்பு இருப்பதால்தான் இவைகள் ஒரு பாம்பினைப் போல நீளமான ஒரு கோடாக உருவகப்படுத்தப்பட்டு ராகு பாம்பின் தலையாகவும் கேது பாம்பின் வாலாகவும் நமக்கு உணர்த்தப்பட்டது.

பூமி சூரியனைச் சுற்றும் நேரான சுற்றுப்பாதையின் குறுக்காக சற்றுச் சாய்வாக சந்திரனின் பாதை அமைகிறது. இதில் மேலே அமைந்த நிழல் ராகுவாகவும் கீழே உள்ளது கேதுவாகவும் அமைந்தது.

இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ள நீங்கள் நேராக வரையப்பட்ட ஒரு படுக்கைக் கோட்டினையும் அதனை மேலும் கீழுமாக வெட்டிச் செல்லும் ஒரு சாய்வுக்கோட்டினையும் கற்பனை செய்து பார்த்தால் சாய்வுக் கோட்டின் மேல்பகுதி ராகு எனவும் கீழ்பகுதி கேது எனவும் புரிந்து கொள்ள முடியும். 

கிரகங்களிலேயே ராகு ஒரு பச்சோந்திக் கிரகம் ஆவார். தான் இருக்கும் வீட்டினை ஒட்டி தனது குணத்தையும் இயல்பையும் அப்படியே மாற்றிக் கொள்வார். மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரம் ஆகிய ஐந்து ராசிகளைத் தவிர்த்து மற்ற ராசிகளில் ராகு இருக்கும் நிலையில் நீங்கள் ராகு இருக்கும் ராசியதிபதியின் செயல்கள் ராகுதசையில் நடப்பதை உணர முடியும்.

வரும் வாரங்களில் ராகுவைத் தொடர்வோம்.

ராகுவிற்கு மட்டும் முக்கியத்துவம் ஏன்?

ராகுவைப் பற்றிய இந்த தொடர்கட்டுரைகளில் நீண்ட நாட்களாக எனது மாணவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கும் காலசர்ப்ப தோஷம் எனப்படும் ராகு கேதுக்களுக்குள் அனைத்துக் கிரகங்களும் அடங்கும் நிலையினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் ராகு கேதுக்களின் ஆன்மீக நிலைகள் ஆகியவற்றை விளக்க இருக்கிறேன்.

குறிப்பாக கோவில்களில் ஆழ்வார்கள் நாயன்மார்கள் வரிசையில் அவர்களுக்குக் கீழே எழுதப்பட்டிருக்கும் அவர்களது பிறந்தமாதம் மற்றும் நட்சத்திரக் குறிப்புகளைப் பார்த்தீர்களேயானால் அவைகள் பெரும்பாலும் அஸ்வினி மகம் மூலம் சதயம் சுவாதி என ராகுகேதுக்களின் நட்சத்திரமாகவே குறிப்பிடப்பட்டிருக்கும்.

அதைவிட மேலாக நமது உன்னத மதத்தின் தலைவனும் நாயகனும் நம் எல்லோருக்கும் அம்மையப்பனாக விளங்கும் சர்வேஸ்வரன் அவதரித்ததே ராகுவின் திருவாதிரை நட்சத்திரத்தில்தான் என்பது ஒன்றே போதும் ராகுவின் மகத்துவத்தை விளக்குவதற்கு.

இன்னுமொரு சிறப்பாக பனிரெண்டு வீடுகளுக்குள் அடங்கும் இருபத்தியேழு நட்சத்திரங்களில் சில கிரகங்களின் நட்சத்திரங்கள் உடைபட்டு இரண்டு ராசிகளில் விரவிக் கிடக்கும் நிலையில் ராகுகேதுக்களின் ஆறு நட்சத்திரங்களும் துண்டாகாமல் ஒரு ராசிக்குள் முழுமையாக அமைவதும் இந்த சாயாக்கிரகங்களின் சிறப்புத்தான்.

வாருங்கள்... ராகுவின் புதிர்களை அவிழ்க்கலாம்.

( ஜன 28 - 2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

4 comments :

  1. வணக்கம். ராகுவிற்கு நம் முன்னோர்கள் உரைத்த முறையான பரிகாரங்கள் சொல்லுங்கள் குருஜி. அவரின் இம்சை தாங்க முடியவில்லை. ராகு தசை ராகு புக்தி அடி அடி என்று அடிக்கிறது.

    ReplyDelete
  2. ராகு கேதுக்களுக்கு சில ராசிகளில் விதி வலக்கு உன்டு என்று படித்துள்ளான் உதாரனத்திற்கு கேது கன்னிக்கும் ராகு மீனத்துக்கும் கெடுதல்கல் செய்யமாட்டார்கள் என்று படித்துள்ளேன் விளக்கவும்

    ReplyDelete
  3. திருக்காளத்தி ராகு கேது பாிகார கோவில் எங்கு உள்ளது.please inform si,

    ReplyDelete