Monday, 27 June 2016

மாலைமலர் வார ராசிபலன்கள் (27.6.2016 – 3.7.2016)

மேஷம் :

கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். யாரிடமும் வீண் வாக்குவாதமோ, சண்டையோ போட வேண்டாம். குரு வலு அடைந்துள்ளதால் தனலாபம், பண வரவு இருக்கும். ஆறுக்குடைய புதபகவான் சுபவலுப் பெறுவதால் வேலை செய்யும் இடங்களில் இருந்த தொந்தரவுகள் நீங்கும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு.

நாற்பது வயதை தாண்டியவர்கள் உடல்நலத்தில் கவனம் வையுங்கள். வியாபாரிகள், சுயதொழில் செய்பவர்கள் வேலைக்காரர்களை நம்ப வேண்டாம். அவர்களால் சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. வழக்கு சம்மந்தமாக போலீஸ், கோர்ட் என்று அலைந்தவர்கள் இனிமேல் சாதகமான திருப்பங்களை காண்பார்கள்.

அரசு, தனியார்துறை ஊழியருக்கு இது நல்ல வாரம்தான். கலைஞர்களுக்கு புகழும், வாய்ப்பும் வரும். பணவரவு சுமாராக இருக்கும். நண்பர்கள் உதவுவார்கள். கணவன் மனைவி உறவு கருத்து வேற்றுமைகள் இருந்தாலும் மனகசப்புகள் வராது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகம் இருக்கும். அலுவலகத்தில் வேலை முடிந்து எப்போதடா வெளியேறுவோம் என்று இருப்பீர்கள்.

ரிஷபம்

மனம் சந்தோஷப்படும்படியான நல்லநிகழ்ச்சிகள் இந்த வாரம் இருக்கும். அம்மாவின் வழியில் மனவருத்தங்களோ வீண்செலவுகளோ வர வாய்ப்பு இருக்கிறது. கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவிகரமாக இருப்பீர்கள். குறிப்பிட்ட சிலர் தங்களது தொழில் அமைப்பில் சாதனைகள் செய்து புகழ் அடைய வாய்ப்பு இருக்கிறது.

வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்ல விசா கிடைக்காதவருக்கு இந்த மாதம் விசா வரும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்கள் வளம் பெறுவார்கள். வயதான சிலருக்கு பேரன், பேத்திகளை பார்க்க வெளிநாடு செல்லும் யோகம் உண்டு.

உல்லாசப் பயணம் செல்வீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் உண்டு. இதுவரை தாமதமாகி வந்த அனைத்து விஷயங்களும் தடைகள் நீங்கி உங்களின் மனம் போல் நடக்கும். இளையபருவத்தினருக்கு திருமணம் நிச்சயம் ஆகும். தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் உண்டு. வயதானவர்கள் குடும்பத்தில் மதிக்கப்படுவார்கள். அவர்களின் ஆலோசனை ஏற்கப்படும்.

மிதுனம்

தொழில் சிறப்படையும். வியாபாரம் விருத்தியாகும். வேலை செய்யும் இடத்தில் புகழ் பெறுவீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. அரசு ஊழியருக்கு சம்பளம் தவிர்த்த இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும். வழக்குகள் வெற்றி பெறும். எதிர்ப்புகள் விலகும்.

இளையவருக்கு திருமணம் கை கூடி வரும். மனதிற்கு பிடித்த வேலை கிடைக்கும். ஒரு சிலர் தங்களுடைய வாழ்க்கைத் துணைவரை இப்போது அடையாளம் காண்பீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு கேளிக்கை, உல்லாச அனுபவங்கள் இருக்கும். செயல்திறனுடன் இருப்பீர்கள். நன்கு சிந்திப்பீர்கள். எதிர்காலத்திற்கு திட்டமிடுவீர்கள்.

நீண்ட நாட்களாக முடியாமல் இருக்கும் ஒரு விஷயத்தை முடித்துக் காட்டி, மற்றவரின் பாராட்டைப் பெறுவீர்கள். தாயார் வழியில் நல்ல விஷயங்களும், அவர் மூலம் ஆதாயங்களும் இருக்கும். சொந்த வீடு இல்லாதவருக்கு வீடோ, மனையோ அமைவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். ஒரு சிலர் வாகன யோகம் பெறுவீர்கள்.

கடகம்

இந்த வாரம் மாற்றங்கள், பயணங்கள், வீண் விரயங்கள் உள்ள வாரமாக இருக்கும். வெளிநாட்டு விஷயங்கள் கை கொடுக்கும். உங்களின் அந்தஸ்து, கௌரவம் மேம்படும். அதிர்ஷ்டம் கைகொடுக்கும். தெய்வ ஆசிர்வாதம் உண்டு. குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும்.

உங்களின் திடமான மன ஆற்றலும்; தைரியமும் வெளிப்படும் வாரம் இது. வார ஆரம்பத்தில் சந்திரன் வலுப்பெற்றதால் மிகுந்த உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். காரிய வெற்றி நிச்சயம் உண்டு. எதிர்பாராத பணவரவும் இந்த வாரம் இருக்கும். இதுவரை இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்கள் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான செலவுகள் இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் வரும். அரசு, தனியார்துறை ஊழியருக்கும், கலைஞர்களுக்கும் சிக்கல்கள் எதுவும் இருக்காது. வியாபாரிகளுக்கும் சுயதொழில் செய்பவர்களுக்கும் இது மிகவும் நல்ல வாரம்.

சிம்மம்

விரயாதிபதி வலுப்பெறுவதால் செலவு செய்து ஏதேனும் ஒரு அத்தியாவசிய பொருள் குடும்பத்திற்கு இந்த வாரம் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல விஷயங்கள் உண்டு. மைத்துனர்கள் உதவுவார்கள். கூட்டுத் தொழில் சிறப்படையும். வாகன மாற்றம் உண்டு.

தந்தைவழி உறவினர்கள், பங்காளிகள் போன்றோர்களால் செலவுகள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் எதிலும் யோசித்து தலையிடவும். புதிய நபர்களிடம் இந்த வாரம் கொடுக்கல், வாங்கல் செய்ய வேண்டாம். ஒரு சில இளைய பருவத்தினருக்கு அவர்கள் வயதிற்கே உரிய உல்லாச அனுபவங்கள் ஏற்படும்.

விவசாயிகள், வியாபாரிகள், அரசு, தனியார்துறை, ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள் போன்ற சகல தரப்பினருக்கும் இந்த வாரம் மாற்றங்களை தரும் வாரமாக இருக்கும். இளைய பருவத்தினருக்கு தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கான அடிப்படை நிகழ்வுகள் இந்த வாரத்திலிருந்து நடக்க ஆரம்பிக்கும்.

கன்னி

குடும்பத்தில் நடக்க இருக்கும் சுபகாரியங்களுக்கு அல்லது வீடு வாங்க வேண்டி வீட்டுக்கடனுக்கு வங்கியில் விண்ணப்பிப்பது போன்றவைகள் இந்த வாரம் இருக்கும். ஆறாமிடத்தில் சுபவலுவுடன் இருக்கும் கேது பகவான் உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி தேடித்தந்து உங்களை புகழ் அடைய வைப்பார்.

இந்த வாரம் நல்ல பணவரவு இருக்கும் என்பதால் வேலை செய்யும் இடங்களில் உங்கள் திறமையைக் காட்ட முடியும். தேவைப்படும் பணம் எப்படியும் கடைசி நேரத்திலாவது கிடைத்து விடும். கணவன்-மனைவி உறவு நன்றாக இருக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவைகள் இப்போது கிடைக்கும்.

குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். சுற்றுலா சென்று வருவீர்கள். கிரகங்கள் வாரம் முழுவதும் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கின்றன. வியாபாரிகளுக்கு கொடுத்த கடன் வசூலாகும். கொள்முதல் நன்றாக இருக்கும். சுக்கிர பலம் நன்றாக இருப்பதால் கலைஞர்களுக்கு பிரமாதமான வாரம் இது. அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் வளம் பெறுவார்கள்.

துலாம்

இந்த வாரம் குறுகிய தூரப்பயணங்கள் மற்றும் விருப்பமில்லாத மாற்றங்கள் இருக்கக் கூடிய வாரமாக இருக்கும். அம்மா வழி உறவினர்களால் லாபம் உண்டு. பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக சொந்த வீடு இல்லையே என்று ஏங்குவோரின் கனவு நனவாகும்.

இது வரை இருந்து வந்த கஷ்டங்கள் இனிமேல் படிப்படியாக விலகத் தொடங்கும். இது வரை நல்ல வேலை கிடைக்காமல் இருந்தவருக்கு உடனடியாக வேலை கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு செல்வீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த மனக்கசப்புகள் விலகி, தீர்வுகள் தெரிய ஆரம்பிக்கும்.

அரசு, தனியார்துறை ஊழியருக்கு இந்த வாரம் நல்ல வாரமே. கலைஞர்கள் வளம் பெறுவார்கள். அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தை காட்டக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். விவசாயிகள், வியாபாரிகள் போன்றோருக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. பொன், பொருள் சேர்க்கை ஏதேனும் உண்டு.

விருச்சிகம்

இதுவரை தாழ்வு மனப்பான்மையில் இருந்தவர்கள் அது விலகப் பெறுவீர்கள். சுயதொழில் செய்வோர் தொழில் முன்னேற்றத்திற்கான அடிப்படை நிகழ்வுகள் இப்போது நடக்கும். வியாபாரிகளுக்கு வருமானக் குறைவு இருக்காது. இளைஞர்களுக்கு இனிமேல் கெடுதல்கள் நடக்காது.

வேலையில் பிரச்னை ஏற்பட்டு, வேலைமாற்றம் ஏற்பட்டவருக்கு இந்த வாரம் மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். மனைவி, குழந்தைகள் மூலம் நல்ல நிகழ்ச்சிகள் இருக்கும். மாமியார் வீட்டில் மதிக்கப் படுவீர்கள். குலதெய்வ தரிசனம் கிடைக்கும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு குலதெய்வம் துணையிருக்கும் வாரம் இது. கவலைகள் வேண்டாம்.

வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு சுபகாரியம் நடத்த முன்னேற்பாடுகள் இந்த வாரம் உண்டு. பூர்வீக சொத்து சம்மந்தமான பிரச்சனைகள் தீரும். கலைஞர்களுக்கு வாய்ப்புக்கள் வரும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் இந்த வாரம் உங்கள் பிரச்னைகள் தீருவதற்கான சம்பவங்கள் நடக்கப் பெறுவீர்கள்.

தனுசு

சில தடைகளுக்குப் பிறகு நீங்கள் சாதனைகள் செய்யும் வாரம் இது. யோகாதிபதிகள் வலுப்பெற்று இருப்பதால் துயரங்கள் எதுவும் இல்லை. பூர்வபுண்ணிய ஸ்தானம் வலுவாக இருப்பதால் தெய்வ அருள் உங்களுக்கு உண்டு. வியாபாரிகளுக்கும் சுயதொழில் புரிவோருக்கும் கலைஞர்களுக்கும் நல்ல வாரம் இது.

கணவன், மனைவி உறவு சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத்துணை கேட்கும் உதவிகளை செய்வீர்கள். நட்பு வட்டாரம் கை கொடுக்கும். நீண்ட நாள் பிரிந்திருந்த ஒருவரை இந்த வாரம் பார்ப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கும். திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் உறுதி ஆகும்.

மருத்துவத்துறையினர், சிவில் இன்ஜினியர்கள், சிவப்புநிற பொருட்கள் சம்பந்தப்பட்டவர்கள், ரியல்எஸ்டேட் துறையினர், சீருடை பணியாளர்கள், காவல்துறை, ராணுவம் போன்றவர்களுக்கு நன்மைகள் இருக்கும். பிள்ளைகளால் பெருமை வரும். குல தெய்வத்திற்கு நேர்த்திக் கடன்களை நிறைவேற்ற முடியும்.

மகரம்

நீண்ட நாட்களாக தரிசிக்க நினைத்திருந்த புனித ஸ்தலங்களுக்கு சென்று பிராத்தனைகளை நிறைவேற்ற முடியும். தந்தையுடன் பிறந்த அத்தைகள் உதவுவார்கள். பூர்வீக சொத்து சம்பந்தமாக இருந்து வந்த முட்டுக்கட்டை விலகும். குறிப்பிட்ட சிலருக்கு வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும்.

பெண்களுக்கு அலுவலகங்களில் இருந்து வந்த வேலைப்பளு குறையும். வீட்டிலும் உங்கள் பேச்சை மற்றவர்கள் கேட்பார்கள். சற்று நிம்மதியாக உணர்வீர்கள். வியாபாரிகள், கலைஞர்கள், இளைஞர்கள், தலைமைப் பதவியில் இருப்பவர்கள், தொழில் அதிபர்கள், அரசு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள்,

கடன் தொல்லைகள் எதுவும் இருக்காது. எதிரிகள் உங்களைக் கண்டாலே ஓடி ஒளிவார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல்கள் உண்டு. அம்மாவின் வழி உறவினர்களால் குடும்பத்தில் மனக்கசப்புக்கள் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு அதிகார பதவி கிடைக்கும். மொத்தத்தில் பிரச்னைகள் இல்லாத வாரம் இது.

கும்பம் 

பத்தாம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் வியாபாரம், வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் தொந்தரவுகள் எதுவும் இருக்காது. வியாபாரிகளுக்கு கொள்முதல் சற்று முன் பின்னாக இருந்தாலும், லாபத்தில் குறைவிருக்காது. சொந்தத்தொழில் செய்பவருக்கு நல்ல வருமானம் உண்டு.

நடுத்தர வயதுக்காரர்கள் உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். கடன் வாங்க கூடிய அமைப்புகள் இருப்பதால் அனாவசிய தேவையற்ற செலவுகளுக்கு கடன் வாங்க வேண்டாம். அலுவலகத்தில் உங்களை பிடிக்காதவரின் கை தற்காலிகமாக ஓங்கி இருக்கும் என்பதால் எங்கும், எதிலும் நிதானமாக செயல்படுங்கள். வீண்வாக்குவாதம் வேண்டாம்.

இளைஞர்களுக்கு சில நல்ல அனுபவங்கள் இருக்கும். அரசு ஊழியர்கள், பத்திரிக்கை துறையினர், தொலைக்காட்சித் துறையினர் நன்மைகளை பெறுவார்கள். மக்கள் பிரதிநிதிகளுக்கு இது சிறப்பான நல்ல பலன்களை தரும் வாரமாக அமையும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் உண்டு.

மீனம்

பாக்யாதிபதி வலுவாக இருப்பதால் எதையும் சமாளிப்பீர்கள். பெண்களால் லாபம் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். உங்களின் செயல்திறன் கூடும். தன்னம்பிக்கையுடன் வலம் வருவீர்கள். நட்பு வட்டாரத்தால் பாராட்டப் படுவீர்கள்.

வாழ்க்கைத்துணை விஷயத்தில் இனிமையான சம்பவங்கள் நடைபெறும். நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருப்பவருக்கு திருமண உறுதி செய்யும் நிகழ்ச்சிகள் இருக்கும். கூட்டுத் தொழில் சிறப்படையும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். அம்மா வழியில் ஆதாயங்கள் உண்டு. புதிய வாகனம் வாங்குவீர்கள்.

வீட்டுக்கடன் பெற்று வீடு வாங்குவதற்கான ஆரம்பங்கள் இருக்கும். ஒரு சிலர் கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பிள்ளைகளிடமிருந்து மகிழ்ச்சியான செய்திகள் வரும். வியாபாரிகள் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சிறப்பான வாரம்.

No comments :

Post a Comment