Monday, 27 June 2016

போகம் தரும் ராகு - C-050

நமது மூலநூல்கள் ராகுவைப் போகக்காரகன் என்றும் கேதுவை ஞானக்காரகன் என்றும் வர்ணிக்கின்றன. கேதுவைப் பற்றி அடுத்து வரும் வாரங்களில் நாம் பார்க்க இருக்கும் நிலைகளில் இப்போது ராகுவின் சில நுணுக்கமான நிலைகளைப் பற்றிப் பார்ப்போம்.

ஒருவருடைய ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் பலவீனம் அடைந்து கெட்டிருந்தாலும் ராகு ஒருவர் மட்டும் சுபவலு அடைந்து ராகுதசை நடந்தால் எவ்வளவு கீழ்நிலையில் ஜாதகர் இருந்தாலும் வாழ்வில் நல்ல மேலான நிலைக்கு வந்தே தீருவார்.

பருப்பொருள் அற்ற கண்ணுக்குக் தெரியாத கிரகங்கள் மற்றும் மறைந்து வலம் வரும் இருள்கிரகங்கள் ராகுகேதுக்கள் என்பதால் நம் வாழ்வின் பின்னால் மறைந்து நிற்கும் நமக்குத் தெரியவராத, நமது இந்தப்பிறவிக்கு முந்தைய பிறவியில் நாம் செய்த பாவபுண்ணியங்களை ராகுகேதுக்கள் பிரதிபலிப்பார்கள்.

பூர்வபுண்ணியம் வலுவடைந்த நிலையில் இருக்கும் ஒருவருக்கு அதாவது சென்ற பிறவியில் நன்மைகள் செய்து நற்கர்மவினைகளைச் சேர்த்து வைத்திருக்கும் ஒருவருக்கு அந்தக் கர்மாவை வைத்து இப்பிறவியில் சொகுசாக வாழத் தன் தசையில் ராகு துணை புரிவார்.

இது போன்ற அமைப்பில் பிறந்த ஒருவருக்கு ராகுபகவான் நமது மூலநூல்களில் சொல்லியுள்ளபடி மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரம் ஆகிய ஐந்து இடங்களில் ஏதாவது ஒன்றில் அமர்ந்து அவருக்கு வீடு கொடுத்த கிரகமும் வலுப்பெற்று ராகுதசை வாழ்க்கையின் முக்கிய கட்டத்தில் நடக்குமானால் அந்தநபர் வாழ்வில் உயர்நிலைக்குச் செல்வார்.

மேற்கண்ட ஐந்து இடங்களில் இருக்கும் ராகு மட்டுமே சுயமாக நன்மை தரும் அதிகாரம் பெற்றவர் என்று நமது மூலநூல்களில் தெளிவாகச் சொல்லப் பட்டிருக்கிறது. எனவே ராகுதசை நன்மை செய்யுமா என்று கணிப்பதற்கு முன் இந்த வீடுகளில் ராகு அமர்ந்திருக்கிறாரா என்று பார்க்க வேண்டியது மிகவும் முக்கியம்.

என்னுடைய நீண்ட ஜோதிட அனுபவத்தில் மேற்கண்ட ஐந்து இடங்களில் இருக்கும் ராகுபகவான் அவை ஜாதகத்திற்கு கெட்ட இடங்களாக இருந்தாலும் கடுமையான கெடுபலன்களைத் தருவதில்லை என்பதை உணர்ந்திருக்கிறேன். எனவே மேற்கண்ட பாவங்களில் இருக்கும் ராகு கெடுதல்களைச் செய்வதில்லை.

மேலும் இந்த ஐந்து இடங்களைத் தவிர்த்து மற்ற ஏழுராசிகளில் இருக்கும் ராகு இயற்கைச் சுபர் வீட்டில் இருந்தாலும் அவர் தரும் நன்மைகள் இரண்டாம் பட்சமாகவே இருக்கும் இதுபோன்ற அமைப்பில் அமர்ந்த வீட்டின் அதிபதியின் ஆதிபத்திய மற்றும் காரகத்துவத்தை ராகு அப்படியே பிரதிபலிப்பார்.

மேலே சொன்ன ஐந்து இடங்களில் இருக்கும் ராகு சுபவலு பெற்றவராகி தான் இருக்கும் வீட்டின் அதிபதி உச்சம் பெற்று அந்த வீடுகளும் மூன்று ஆறு பதினொன்று பனிரெண்டாம் வீடுகளாகி சுபருடன் இணைந்து சுபர் பார்வை பெற்று சனி செவ்வாயின் பார்வை மற்றும் இணைவைப் பெறாமல் இருக்கும் நிலைகளில் தனது தசையில் மிகப்பெரிய யோகங்களைச் செய்வார்.

இதுபோன்ற அமைப்பில் இந்த மண்ணில் ஒருவருக்கு கிடைக்கும் மண் பொன் பெண் ஆகிய அனைத்துப் போகங்களையும் குறைவின்றி திகட்டத் திகட்ட அனுபவிக்கச் செய்வார் ராகுபகவான்.

அதே நேரத்தில் ராகுபகவான் சனி செவ்வாயின் ஸ்திர ராசிகளான விருச்சிகம் கும்பம் ஆகிய இடங்களில் அமர்ந்து அந்த வீடுகள் ஜாதகருக்கு ஆறு எட்டாம் வீடுகளாகி இங்கே சனி செவ்வாய் அல்லது லக்ன அஷ்டமாதிபதி அல்லது ஆறுக்குடையவன் இணைவு பார்வையைப் பெற்று தசை நடத்துகையில் ஜாதகரின் வயதுக்கேற்ப கடுமையான பலன்களைத் தருவார்.

ராகுபகவானின் இன்னுமொரு சிறப்பு அம்சம் என்று பார்க்கப்போனால் நமது மூலநூல்கள் ராகுவின் காரகத்துவமாகக் குறிப்பாகச் சொல்லும் நானாவித வேடத்தொழில் என்பதைச் சொல்லலாம்.. இந்த வார்த்தைக்கு சகலவிதமான நடிப்பு என்று அர்த்தம்.

ராகுபகவான் போகக்காரககன் என்பதால் பத்தாமிடத்தொடு அல்லது தொழில் ஸ்தானாதிபதியோடு தொடர்பு கொள்கையில் ஒருவரை பெண்சுகம் மிக எளிதாகக் கிடைக்கும் பெண்கள் சம்பந்தப்பட்ட துறைகள் அல்லது சினிமா தொலைக்காட்சி போன்ற மீடியாத்துறையில் ஈடுபடுத்துவார்.

சினிமா தோன்றாத அந்தக் காலத்தில் நடிகர்கள் மேடையில் நாடகங்களில் நடித்தார்கள். அதிலும் ஒரு நாடகம் விடியவிடிய நடத்தப்பட்ட.நிலையில் அதில் பங்கு பெறும் ஒருவரே நான்கு வேடங்களை ஏற்று நடிப்பதும் பொது மக்களிடையே பலத்த கைதட்டல்களைப் பெறுவதும் நடந்தது.

உதாரணமாக சம்பூர்ணராமாயணம் நாடகம் விடிய விடிய நடத்தப்படுகிறது என்றால் பரதனாக வருபவரே ஜடாயுவாகவும், கோசலையாகவும் இந்திரஜித்தாகவும் நான்குவித வேடங்களில் வருவதுண்டு. இதுபோன்ற சகலவிதமான வேடங்களை ஏற்று நடிப்பதற்கு காரணமானவர் ராகுபகவான்.

இன்றைய காலகட்டங்களில் நாடகங்கள் மறைந்து போய் சினிமாவாக மாறி மேடைகள் அரசியலுக்கு என்றாகி விட்ட சூழலில் ஒருவரை பொதுமக்கள் மத்தியில் அரசியல்வாதியாக மேடைகளிலோ, நடிகராக தொலைக்காட்சிகளிலோ, சினிமாக்களிலோ பிரபலப்படுத்துபவர் ராகுபகவான்தான்.

இன்றைய காலகட்டத்தில் அரசியல்வாதியும் மேடையில் பேசும்போது பார்வையாளர்களைக் கவர்வதற்காக அங்க அசைவுகளுடன் உணர்ச்சிகரமாக நடிக்க வேண்டியிருப்பதால் அரசியலில் ஒருவரைப் பிரபலமாக்குபவரும் ராகுபகவான்தான்.

ராகுபகவான் சுபரோடு சேர்ந்து சுபர் வீட்டில் அமர்ந்து அவருக்கு வீடு கொடுத்தவர் வலிமை பெற்றிருக்கும் நிலையில் செவ்வாய், சனியின் இணைவையோ தொடர்பையோ, பார்வைகளையோ பெறாமல் இருக்கும் நிலையில் மிகப்பெரிய நன்மைகளை செய்வார்.

குறிப்பாக அந்த ஜாதகரை அரசியல், சினிமா போன்ற பாப்புலாரிட்டியை தரும் துறைகளில் ஈடுபடுத்தி வாழ்க்கையின் உச்சத்திற்கு கொண்டு செல்வார். சினிமாவில் வெற்றி பெறுவதற்கு சுக்கிரனை விட சுக்கிரனுடன் தொடர்பு கொண்ட ராகு அல்லது சுக்கிரனின் வீட்டில் அமர்ந்த ராகுவின் தயவு மிக முக்கியம்.

இன்றைய சினிமா அல்லது தொலைக்காட்சி, அரசியல் ஆகியவற்றில் முக்கிய இடத்தைப் பெற்று உச்சத்தில் இருக்கும் பிரபலங்களின் ஜாதகங்களை ஆராய்ந்தால் அவர்களைப் பொதுமக்கள் மத்தியில் கொண்டு வந்தது ராகு தசையாகத்தான் இருக்கும்.

ராகுபகவானே பிரபலமடைந்த ஒருவரை அவரது வாழ்வில் உச்சத்திற்கு கொண்டு செல்ல இருக்கும் வேலைகளை செய்வார். ராகுதசைக்கு அடுத்து சகல பாக்கியங்களையும் தர இருக்கும் குருவின் தசை நடக்கும் என்பதால் குருவின் தசையில் ஒருவருக்கு கிடைக்க இருக்கும் அனைத்து நன்மைகளுக்கும் அடிப்படையாக ராகுதசை அமையும்.

ராகுவைப் பற்றிய மேலும் நுணுக்கங்களை அடுத்த வாரம் தொடருவோம்....

காதல் செய்ய வைக்கும் ராகுபகவான்...!

ஒருவரைத் தகுதிக்கும் வயதுக்கும் மீறி அனைத்து வகை இன்பங்களை அனுபவிக்கச் செய்பவர் சுபர் வீடுகளில் அமர்ந்த ராகுபகவானே. அதனால்தான் இன்பங்களைத் துய்க்க வைப்பவர் என்ற அர்த்தத்தில் வேதஜோதிடத்தில் போகக்காரகன் என்று அழைக்கப் படுகிறார்.

அதே நேரத்தில் எத்தனை சுபநிலையில் இருந்தாலும் சுக்கிரதசையைப் போலவே இளம்வயதில் பள்ளிப் பருவத்தில் வரும் ராகுதசை ஒருவருக்கு நன்மைகளைச் செய்வது இல்லை. உடலும் மனதும் இன்பங்களை முழுமையாக அனுபவிக்க தகுதியாக உறுதியாக இருக்கும் நடுத்தர வயதில் வரும் ராகுதசையே ஒருவருக்கு முழுமையாக நன்மைகளைச் செய்யும்.

பள்ளிப்பருவத்தில் நடக்கும் ராகுதசை ஒருவருக்கு அமைந்திருக்கும் நிலையைப் பொறுத்து படிப்பில் ஆர்வக்குறைவையோ அல்லது கல்வித் தடையையோ நிச்சயமாகத் தரும்.

மேலும் ஒரு முக்கிய நிலையாக இளம் பருவத்தினரிடையே காதல் என்ற பெயரில் காமத்தை அறிமுகப்படுத்துபவரும் ராகுபகவான் தான். குறிப்பாக ஆறு எட்டுக்குடையவருடன் இணைந்து ஆறு அல்லது எட்டாமிடங்களில் சுபத்துவமில்லாமல் இருக்கும் ராகு தனது தசை புக்தியில் ஒரு பெண்ணை காதலில் ஈடுபடுத்தி சந்தோஷமாக கற்பிழக்க வைத்து பின்னர் ஏமாந்து விட்டோமே என்று கண்ணீர் விட வைப்பார்.

ஒரு பெண்ணை சம்மதத்துடன் கற்பிழக்கச் செய்பவை ஆறு எட்டாமிடங்களின் சம்பந்தம் பெற்ற பாபக்கிரகங்கள்தான். அதிலும் சனி செவ்வாய் தொடர்பைப் பெற்று சுக்கிரனின் வீடுகளில் இருக்கும் ராகுகேதுக்கள் இளம் வயதில் நிச்சயமாக இந்த அனுபவத்தைக் கொடுப்பார்கள்.

ராகுவின் நிலையையும் கிரகத்தொடர்புகளையும் வைத்து ஒன்றுக்கு மேற்பட்ட காதல் பல ஆண்கள் என்று இந்த நிலை அமையும். அமரும் வீட்டு அதிபதி கிரகத்தின் செயல்களை அப்படியே செய்பவர் ராகு என்பதால் இதுபோன்ற பலன்களை ஓரளவு அனுபவமுள்ள ஜோதிடரால் முன் கூட்டியே துல்லியமாகக் கணிக்க முடியும்.

இதுபோன்ற அமைப்பு ஒரு பெண்ணுக்கு நடக்கும் போது ராகுகேதுக்கள் முதலில் அந்தப் பெண்ணிற்கு கல்வி அல்லது வேலை என்ற பெயரில் இடமாற்றத்தைக் கொடுத்து இருக்கும் இடத்தை விட்டு அல்லது பெற்றோரை விட்டு தூர நகர்த்தி வெளிமாநிலம் வெளிநாடு போன்ற இடங்களில் தைரியமாக கேட்க ஆளில்லாமல் சுதந்திரமாக தவறு செய்ய வைப்பார்.

( பிப் 4 - 2016 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

3 comments :

 1. அதி உத்தமமான கருத்துக்கள் ஐயா. கடக லக்கின ஜாதகருக்கு கோதண்ட ராகுவாக தனுசில் அமரும் ராகுவை, சிம்மத்தில் அமரும் குரு பார்க்க, 6ம் இட ஆதிபத்யத்திற்குண்டான பலன்களையே ராகு தான் திசையில் செய்வார். எனின் குருவின் காரகத்துவ பலன்களாக எவ்வித நன்மைகளை நாம் எதிர்பார்க்கலாம் ஐயா? பள்ளிக்கால ராகு திசை கடன், எதிரிகளை விட 6ம் இட ஆதிபத்திய பலனாக நோய், காதல் தொடர்புகள், படிப்பில் நாட்டமின்மை, உடல் பருமனாதல், இளவயது சக்கரை நோய் என்பவற்றை கொடுத்தால், காரகத்துவமாக அதிகமாக நன்மையையே செய்யும் குருவிடமிருந்து இவற்றை பிராப்தம் பெறமுடியும் ஐயா?

  ReplyDelete
  Replies
  1. அற்புதமான பதிவு

   Delete
 2. Nice to hear..Experiments with SivajiGaneshan's Horoscope.

  ReplyDelete