Monday, April 11, 2016

சனி சுபத்துவம் பெறும் படிநிலைகள்...C - 042 - Sani Subaththuvam Perum padiNilaigal.





ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 

கைப்பேசி எண் : 8681 99 8888

சனி சுபத்துவம் பெறும் படிநிலைகள்...

முந்தைய கட்டுரைகளில் ஒரே கிரகம் இரு வேறு முரண்பட்ட நிலைகளைத் தன்னுடைய சுப, அசுப நிலைகளின்படி தரும் என்பதை விளக்கியிருக்கிறேன்.

அதன்படி தன்னுடைய நேர்வலு மூலம் ஒரு மனிதனுக்கு தேவையற்றவைகளை மட்டுமே தர விதிக்கப்பட்டிருக்கும் சனி, சுபத்துவம் மற்றும் சூட்சும வலுப் பெறும் நிலைகளில் தனது இயல்பு நிலை மாறி அந்த ஜாதகருக்கு நன்மைகளைச் செய்வார்.

மேற்கண்ட இரு நிலைகளில் சனியின் சுபத்துவப் படிநிலைகளை தெளிவாகப் புரிந்து கொண்டால் ஒரு ஜாதகத்தில் சனி நன்மைகளைத் தருவாரா அல்லது தீய பலன்களைச் செய்வாரா என்பதை துல்லியமாகச் சொல்ல முடியும்.
 
சனியின் சுபத்துவப் படிநிலைகளை பின்வருமாறு வரிசைப் படுத்தலாம்.
1. வலிமை பெற்ற குரு சனியைப் பார்ப்பது,
2. குருவுடன் சனி இணைவது,
3. குருவின் வீட்டில் இருப்பது,
4. சுக்கிரன் சனியைப் பார்ப்பது,
5. தனித்த புதன் பார்ப்பது,
6. பூரண அல்லது வளர்பிறைச் சந்திரன் பார்ப்பது,
7. சுக்கிரனுடன் சனி இணைவது,
8. புதனுடன் இணைவது,
9. வளர்பிறைச் சந்திரனுடன் இணைவது,
10. சுக்கிரன் மற்றும் புதனின் வீட்டில் சனி இருப்பது.

மேற்கண்ட அமைப்புகளில் சனி திரிகோணங்களில் இல்லாமல், கேந்திரங்கள் மற்றும் 3, 6, 11 போன்ற உபசய ஸ்தானங்களில் இருக்கும் போது உச்சபட்ச சுபத்துவம் அடைந்து ஜாதகருக்கு முதல் தர நன்மைகளைச் செய்வார்.

இதில் குருவின் வீட்டில் இருக்கும் சனிக்கு மூன்றாவது நிலையைத் தந்து, சுக்கிரனின் வீட்டில் இருக்கும் சனிக்கு பத்தாவது நிலையைத் தந்திருக்கிறீர்களே.... சுக்கிரனின் வீடான துலாத்தில்தானே சனி உச்சம் பெறுகிறார் என்ற சந்தேகம் வருமானால் இன்னும் சனியை அவர் புரிந்து கொள்ளவில்லை என்றே அர்த்தம்.

உச்சத்தில் இருக்கும் சனி நேர் வலு மட்டுமே அடைவார். ஆனால் குருவின் வீட்டில் இருக்கும் சனி சுப வலு அடைவார் என்பதைப் புரிந்து கொள்வது நல்லது.

சனி என்பவர் ஒரு சுப ஒளியற்ற கிரகம். எனவே மனிதனுக்குத் தேவையான நன்மைகளை அவர் செய்ய வேண்டும் என்றால் அவர் தன்னுடைய தீய ஒளிக் கதிர்களை இழந்து வடிகட்டப்பட்டு, சுபக் கிரகங்களின் ஒளியைப் பெறவேண்டும்.

இதில் தன்னுடைய தீய ஒளியை எவ்வளவுக்கு எவ்வளவு இழந்து, அடுத்த சுப கிரகத்தின் ஒளியைப் பெறுகிறாரோ, அந்த அளவுக்கு சனியிடமிருந்து ஒரு மனிதனுக்கு நற்பலன்கள் இருக்கும்.

மிக முக்கியமாக சனிக்கு ஒளி தரும் கிரகமும் வலுவான நிலையில் இருக்க வேண்டும். எனவேதான் இங்கே சந்திரனின் நிலையைக் குறிப்பிடும்போது பூரணச் சந்திரன் மற்றும் வளர்பிறைச் சந்திரன் என்று வேறுபடுத்திக் காட்டியிருக்கிறேன்.

இயற்கைச் சுப கிரகங்களில் குருவை விட, சுக்கிரனே சனிக்கு நண்பர் என்றாலும் சுக்கிரன், சனியிடமிருந்து அதிக தூரத்தில் இருப்பதாலும், குரு சனிக்கு மிக அருகில் இருப்பதாலும் குருவின் தொடர்பே சனியைச் சுபராக்கும். அதிலும் குருவின் இணைவை விட, பார்வையே சனியைப் புனிதப்படுத்தும்.

சுபத்துவத்தோடு, சூட்சும வலுவும் இணைகையில் சனி முழுக்க முழுக்க ஒருவருக்கு நன்மைகளை மட்டுமே செய்யும் அதிகாரம் பெறுவார். “பாபக் கிரகங்களின் சூட்சுமவலு” வை ஏற்கனவே நான் ஒரு தியரியாக சுருக்கமாக விளக்கியிருக்கும் நிலையில், டிகிரி வாயிலான சனியின் சூட்சும வலு நிலைகளை இன்னும் சில ஆய்வுகளுக்குப் பின் புத்தகமாக வெளியிட இருக்கிறேன். அதில் சனியின் இன்னும் மேம்பட்ட துல்லிய நிலைகளை தெரிந்து கொள்ளலாம்.

இன்னொரு முரண்பட்ட நிலையாக, சனியைப் புனிதப் படுத்தும் சுபக் கோள் சனியோடு இணைந்தோ, அல்லது சனியை சம சப்தமமாக பார்க்கும் நிலைகளில், தான் அந்த ஜாதகருக்கு தனது சுப நிலைகளைத் தரும் தன்மைகளை இழக்கும்.

இதுபோன்ற நிலையில் அந்த சுபக் கோளின் வலிமையிழப்பு என்பது சம்பந்தப்பட்ட லக்னத்திற்கு அந்த சுப கிரகம் எந்த ஆதிபத்தியத்திற்கு உட்பட்டது மற்றும் அந்த சுபர் எந்த வீட்டில், எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பொருத்தது.

அடுத்து சனி அவ யோகம் தரும் லக்னமான கடக லக்னத்திற்கு அவர் அஷ்டமாதிபதி எனும் எட்டுக்குடைய கொடிய பாவி என்ற நிலையையும், மனைவி, நண்பர்கள், பங்குதாரர்களைக் குறிக்கும் ஏழாமிடத்திற்கும் அதிபதியாவர்.

கடகத்திற்கும், சிம்மத்திற்கும் சனி ஆட்சி மற்றும் மூலத் திரிகோண நிலைகளை மகர, கும்ப வீடுகளில் பெற்று வலிமையாக ஏழாமிடத்தில் அமரும்போது தனது கொடிய பார்வையால், ஒரு ஜாதகத்தின் உயிர் ஸ்தானங்களான, ஜாதகனைக் குறிக்கும் லக்னம், மற்றும் ஜாதகன் வந்த வழியான தாய், தந்தை ஸ்தானங்கள் எனும் நான்கு. ஒன்பதாமிடங்களைப் பார்த்துக் கெடுப்பார்.

இந்த நிலையால்தான் சிம்ம நாயகனான சூரியனுக்கும், கடக நாதன் சந்திரனுக்கும் சனி ஜென்மப் பகைவர் என்ற நிலை பெறுகிறார்.

கடகத்திற்கும், சிம்மத்திற்கும் சனி நன்மைகளைச் செய்யவேண்டும் என்றால் அவருடைய கொடிய பார்வை எனப்படும் கண்களும், கைகளும் கட்டப்பட்டிருக்க வேண்டும். மிகவும் சிக்கலான ஒரு சுபத்துவ, சூட்சும நிலைகளில் மட்டுமே அவர் கடக, சிம்ம லக்னங்களுக்கு நன்மை செய்வார்.

கடகத்திற்கு சனி தரும் நிலைகளைப் பார்ப்போமானால், உபசய ஸ்தானங்களான மூன்று, ஆறு, பதினொன்றாமிடங்களில் இருந்தால், அதாவது தனது நண்பர்களான புதன், சுக்கிரனின் வீடுகளிலும், தன்னைப் புனிதப்படுத்தும் குருவின் வீடுகளிலும் சுபத்துவ சூட்சும நிலைகளில் இருக்கும்போது பெரும் நன்மைகளைச் செய்வார்.

இந்த உபசய அமைப்பு அவ யோகக் கிரகங்களுக்கு நமது மூலநூல்களில் வலியுறுத்திச் சொல்லப்படும் சூட்சுமம் என்னவெனில், மேற்கண்ட மூன்று பதினொன்றாமிடங்களில் மட்டுமே ஒரு ஜாதகத்தின் எதிர்த்தன்மையுடைய லக்னத்தின் அசுபக் கிரகங்கள், அந்த ஜாதகத்தின் யோகக் கிரகங்களின் சாரங்களில் நட்பு நிலையில் அமர்ந்திருப்பார்கள்.

அதாவது ஒரு ஜாதகத்தின் மூன்று, பதினோராம் பாவங்களில் அடங்கியுள்ள நட்சத்திரங்கள், அந்த ஜாதகத்தின் யோகர்களின் நட்சத்திரங்களாக இருக்கும். மேலும் அவயோக கிரகங்களின் நட்பு ஸ்தானங்களாகவும் அந்த பாவங்கள் இருக்கும்.

இந்த அமைப்பின்படி சனி கடக லக்னத்திற்கு மூன்று, பதினொன்றாமிடங்களில் நட்பு நிலைகளில் இருப்பதோடு முழுக்க முழுக்க இவ்விடங்களில் கடகத்தின் லக்னாதிபதி சந்திரன், தனாதிபதி சூரியன் மற்றும் ராஜயோகாதிபதி செவ்வாயின் சாரங்களில் இருப்பதால் நன்மைகளைச் செய்வார்.

இன்னொரு உபசய ஸ்தானமான ஆறாமிட தனுசுவில் அதன் கடைசிப் பாதமான தனாதிபதி சூரியனின் உத்திராடம் ஒன்றாம் பாதத்தில் மறைந்து வர்கோத்தமம் பெறும் நிலையில் சனியால் நன்மைகள் இருக்கும்.
மீதமுள்ள உபசய ஸ்தானமும், கேந்திரமுமான பத்தாமிடத்தில் நீசம் பெறுவதும் கடகத்திற்கு நன்மைகளைத் தரும் நிலைதான். ஆனால் இங்கும் அவர் தனாதிபதியான சூரியனின் கிருத்திகை ஒன்றாம் பாதத்தில் அமர்ந்து நவாம்சத்தில் மகரத்தில் ஆட்சி பெறுவது வெகு சிறப்பு.

ஆனால் இங்கே அவர் நீச வக்ரம் பெற்று உச்ச வலிமை பெறுவதோ சூரியன் அல்லது செவ்வாயுடன் இணைந்து நீச பங்கம் அடைவதோ நன்மைகளைக் குறைக்கும்

கடகத்திற்கு லக்னத்தில் சனி இருப்பது சரியான அமைப்பு அல்ல. இந்நிலையால் ஜாதகர் யார் சொல்லையும் கேட்காத பிடிவாதக்காரராகவும், தனக்கென ஒரு கொள்கை கொண்டவராகவும், ஊரோடு ஒத்துப் போகாதவராகவும் சுயநலக்காரராகவும் இருப்பார். லக்னத்தில் அவர் சுபத்துவம் அடையும் நிலைகளில் மட்டுமே இந்த குணங்கள் வெளித் தெரியாத நிலையும், ஆன்மிக ஈடுபாடும் இருக்கும்.

இரண்டாம் வீடான சிம்மத்தில் இருப்பது ஜாதகரின் பொருளாதார நிலையையும், அவரது குடும்பத்தையும் சனி தசையில் பாதிக்கும். எந்த ஒரு லக்னத்திற்குமே இரண்டில் சனி இருப்பது நன்மைகளைத் தராது.

நான்காமிடத்தில் அவர் உச்சநிலை பெறுவதும் கடகத்திற்கு நன்மைகளைச் செய்யாது. . இங்கே உச்சம் பெறும் சனி வக்ரம் பெறுவதும், சுப மற்றும் சூட்சும வலு அடைவதும் மட்டுமே நன்மைகளைச் செய்யும். ஐந்தாமிடத்தில் அமர்ந்தால் அதிர்ஷ்டத்தையும் பூர்வ புண்ணிய பலத்தையும் குழந்தை பாக்கியத்தையும் பாதிப்பார்.

ஏழாமிடத்தில் அமரும் நிலையில் சுபத்துவம் அடைந்தால் மட்டுமே நல்ல மண வாழ்வு இருக்கும். இல்லையெனில் தாமத திருமணம், திருமணமே ஆகாத நிலை, திருமணத்திற்குப் பிறகும் நிம்மதியற்ற மண வாழ்வு ஆகியவற்றைத் தருவார்.

எட்டாமிடத்தில் சுபத்துவம் பெற்றால் ஜாதகரை வெளிமாநிலம், வெளிநாட்டிற்கு அனுப்பி சம்பாதிக்க வைப்பார். ஆயினும் அங்கும் சிக்கல்களையே செய்வார். எட்டாமிட சனியால் தீர்க்காயுள் உண்டு. ஒன்பதாமிடத்தில் அமர்ந்தால் தந்தையைக் கெடுப்பார். இளம் வயதிலேயே தந்தை மரணம் அல்லது தந்தை இருந்தும் இல்லாத நிலை, தகப்பனுக்கும் மகனுக்கும் ஆகாத நிலை ஆகியவற்றை உண்டு பண்ணுவார்.

விரய ஸ்தானமான பனிரெண்டாம் வீடு அவருக்கு நட்புக் கிரகமான புதனின் வீடு என்பதால் இங்கு அமரும் சனி பெரிய கெடுதல்களைச் செய்யமாட்டார். இங்கிருக்கும் சனி தூர இடங்களுக்குச் செல்லும் நிலையையும், வெளிமாநில, வெளிநாட்டுத் தொடர்களையும் ஏற்படுத்துவார்.

சனி தரும் அதி உச்ச ஈஸ்வர நிலை....

சனி தரும் ஒரு உன்னத பலனான ஆன்மிக நிலையினை சென்ற அத்தியாயங்களில் விவரிக்கும் போது, ஒரு மனிதனின் ஞான உன்னத நிலையான சித்து நிலைகளுக்கும், எளிதில் விடைகாண முடியாத தேடல்களான, போன பிறவியில் என்னவாக இருந்தேன், இறந்தபின் எங்கு செல்வேன் போன்ற சிந்தனைகளுக்கும் சனி காரணமானவர் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன்.

நமது புனித நூல்கள், பிறக்கும் போதே ஐந்தறிவு படைத்த மிருகங்களை விட மேம்பட்டுப் பிறந்த பிறவியான, ஆறறிவு கொண்ட மனிதன் தவம், தியானம் போன்ற அமைப்புகளினால் அந்த ஆறறிவுக்கும் மேலான ஏழாவது அறிவைப் பெறுவது இந்திர நிலை என்று குறிப்பிடுகின்றன.

இந்த ஏழாவது அறிவான இந்திர நிலையை விடவும் முன்னேறி, ஒருவர் எட்டாவது அறிவைப் பெறும் போது, அவர் அஷ்டமா சித்திகளைப் பெற்று அனைத்தையும் உணர்ந்த சித்தராகிறார். இந்த சித்து நிலையை எட்டும் போது ஒருவரால் முக்காலத்தையும் அறிய முடியும்.

மேற்சொன்ன எட்டாவது அறிவைப் பெற்று சித்தனாகும் ஒருவர் தனது ஞானத் தேடலில் மேலும் முன்னேறி, ஆன்மிக உச்ச நிலையான ஒன்பதாவது அறிவை எட்டும் போது ஈஸ்வர நிலை பெற்று பரம்பொருளுடன் இரண்டறக் கலந்து இறைத்தன்மை பெறுவார். இந்த ஈஸ்வர நிலையையே ஆன்மிகத்தில் மிக உயர்ந்த ஒரு இறுதி அமைப்பாக நமது புனிதநூல்கள் குறிப்பிடுகின்றன.

இந்த ஒன்பதாவது அறிவுக்கு ஒரு மனிதனை உயர்த்தும் நிலையினை, லக்னம் அல்லது ராசிக்கும், தனக்கும், வலிமையான குருவின் பார்வை அல்லது தொடர்பினைப் பெற்ற சனி, இன்னொரு ஆன்மிகக் கிரகமான கேதுவின் தொடர்பைப் பெற்று அமையும்போது செய்வார். இப்படிப்பட்ட நிலையில் சனி அதிகபட்ச சுபத்துவ நிலைகளில் இருப்பார்.

இந்த ஆன்மிக நிலையினில் மறைந்திருக்கும் இன்னொரு சூட்சுமம் என்னவெனில், தனித்து சனியினால் இது போன்ற உன்னத நிலையினை ஒருபோதும் தர முடியாது. லக்னத்திற்கோ, ராசிக்கோ ஆன்மிக முதன்மைக் கிரகமான குருவின் தொடர்பு இருக்கும்போது மட்டுமே ஒருவரை சனியால் ஆன்மிகத்தில் ஈடுபடுத்த முடியும்.

அதுவன்றி குரு மற்றும் கேதுவின் தொடர்பற்ற சனியால் ஒருவரை ஆன்மிக உச்ச நிலைக்குக் கொண்டு செல்லவே முடியாது. சனி ஒரு சுப ஒளியற்ற பாபக் கிரகம் என்பதால் எந்த ஒரு சூழலிலும் அவரால் தனித்து இயங்கவே முடியாது.

( டிச 18 - 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

No comments :

Post a Comment