Tuesday, 12 April 2016

2016 சித்திரை மாதபலன்கள்

மேஷம்:

ராசிநாதன் செவ்வாய் ஆட்சி, ஐந்திற்குடைய சூரியன் உச்சம், ராசிக்கு பாக்கியாதிபதி குருவின் பார்வை என்ற நிலையில் இந்த மாதம் ஆரம்பிப்பதால் அஷ்டமச்சனி அமைப்பையும் மீறி மேஷராசிக்காரர்களுக்கு இப்போது தந்தை வழி நன்மைகளும் அப்பாவின் ஆதரவு மற்றும், பூர்வீக சொத்து கிடைப்பதும் ஞானிகள் தரிசனம், புனிதயாத்திரை, கோவில் திருப்பணி என ஆன்மிகத்தொண்டு பாக்கியங்கள் கிடைக்கும் அருமையான மாதமாக இது இருக்கும்.

அலுவலகத்தில் தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக நடக்கும். போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு நன்மைகள் உண்டு.

செலவுகள் இருக்கும் என்றாலும் செலவு செய்வதற்கு ஏற்ற பணவரவும் இருக்கும். பணம் இருந்தாலே பாதிப்பிரச்னை தீர்ந்து விடும் என்பதால் பிரச்னைகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். பிரிட்ஜ், ஏசி, வாஷிங்மிஷின், செல்போன் போன்ற பொருட்களை வாங்குவீர்கள். சிலருக்கு பொன்பொருள் சேர்க்கை உண்டு. குழந்தைகள் பேரில் சேமிக்க முடியும். தனலாபங்கள் இருக்கும்.

ரிஷபம்:

மாதத்தின் பெரும் பகுதி நாட்கள் ராசிநாதன் சுக்கிரன் வலுவான உச்ச நிலையில் இருப்பதோடு தைரிய வீரிய ஸ்தானாதிபதியான மூன்றுக்கு அதிபதி சூரியனும் உச்சமாகி உங்கள் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் அதிகப்படுத்துவதாலும் சித்திரைமாதம் ரிஷபராசிக்கு சிறப்பான மாதமாக இருக்கும் என்பதோடு உங்களின் எதிரிகளோ, எதிர்ப்புகளோ உங்களுக்கு விரோதமாக எதையும் செய்யத் தயங்கும் மாதமாகவும் இருக்கும்.

பணவிஷயத்தில் குறைப்பட்டுக் கொள்ள எதுவும் இல்லை. பணப்புழக்கம் கையில் இருக்கும். கொடுக்கும் வாக்கைக் காப்பாற்ற முடியும். சிலருக்கு வீடு வாங்குவதற்கு இருந்துவந்த தடைகள் நீங்கி கட்டிய வீடோ அல்லது காலிமனையோ, வாங்க இப்போது ஆரம்பங்கள் இருக்கும். இளைய பருவத்தினருக்கு அவர்கள் படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவைத்தொகை கைக்கு வரும்.

மாமியார் வீட்டில் இருந்து வாழ்க்கைத்துணையின் பங்காக ஏதேனும் ஒரு சொத்தோ, அல்லது நல்ல ஒரு தொகையோ கிடைக்கும். வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி போன்றவைகளிலும், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் வகைகளிலும் இருப்பவர்களுக்கு இந்தமாதம் நல்ல வருமானம் இருக்கும். சினிமா தொலைக்காட்சி போன்ற துறைகளில் இருப்போர் இந்த சாதகமான நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மிதுனம்:

ஆறில் செவ்வாய் சனி, மூன்றில் ராகு, பதினொன்றில் சூரியன், என்ற சாதகமான கிரகநிலைகளை விட மாதம் முழுவதிலும் யோகாதிபதி சுக்கிரன் உச்ச நிலையில் இருப்பதால் சித்திரைமாதம் மிதுனராசிக்காரர்களின் மனம் மகிழும் மாதமாக இருக்கும் என்பதோடு குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் குடும்பத்தினர் கேட்கும் பொருட்களை வாங்கி கொடுத்து செலவு செய்யும் மாதமாகவும் இருக்கும். சிலருக்கு பெண்களினால் உதவிகளும் ஆதரவுகளும் நல்லபலன்களும் இருக்கும்.

தனலாபம் இந்தமாதம் உண்டு. பணத்திற்கு பஞ்சம் இருக்காது. யார் வீட்டு பணமாக இருந்தாலும் கையில் தாராளமாக நடமாடும். வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். வாக்குப் பலிக்கும். வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு எல்லா அமைப்புகளும் கூடி வந்து இந்தமாதம் வீட்டுக்கனவு நனவாகும். ஆனாலும் லோன் போட்டுத்தான் வீடு கட்டவோ வாங்கவோ செய்வீர்கள்.

வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா போன்ற பெண்கள் சம்பந்தப்பட்ட மங்கள நிகழ்ச்சிகளால் நீங்கள் சகோதரிகளுக்கோ, மகள்களுக்கோ, பேத்திகளுக்கோ கடன் வாங்கி சுபச்செலவு செய்ய வேண்டி இருக்கும். மறைமுக எதிரிகள் உருவாகக் கூடும். நெருங்கியவர்களே உங்களுக்கு எதிராகத் திரும்ப வாய்ப்பு இருப்பதால் அனைத்திலும் கவனமாக இருங்கள். உறவினர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள், சிறு சண்டைகள் வரலாம்.

கடகம்:

இரண்டு, பத்துக்குடைய சூரியனும், செவ்வாயும் சித்திரை மாதம் உச்சம் ஆட்சி எனும் சிறப்பான நிலைகளில் இருப்பதாலும் இரண்டில் குருபகவான் இருந்து உங்களுக்கு ஏற்படும் அனைத்து சிக்கல்களில் இருந்தும் உங்களை விடுவிக்க பணவரவை அருளும் நிலையில் இருப்பதாலும் கடக ராசிக்கு சித்திரை மாதம் பெரிய தொல்லைகள் எதுவும் தராமல் எதிலும் ஒரு சீரான செயல்பாட்டை தரும் மாதமாக இருக்கும்.

மத்திய மாநில அரசுகளின் தேர்வுகள் மற்றும் வங்கி சம்பந்த பட்ட தேர்வுகள் எழுதுவோருக்கு இம்முறை வெற்றி கிடைக்கும். ஏற்கனவே எழுதி முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் இந்தமாதம் உண்டு. பொதுவாக கடகராசிக்காரர்கள் பள்ளிப் படிப்பை விட அனுபவத்தை வைத்தே வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். சுலபத்தில் உங்களை ஏமாற்ற முடியாது. யாராவது உங்களை அன்பு காட்டி ஏமாற்றினால்தான் உண்டு. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய மாதம் இது. அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள்.

தெய்வ தரிசனம் கிடைக்கும். வெகு நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்த வடமாநில புனிதயாத்திரை போகமுடியும். ஞானிகள் அருள்புரியும் ஜீவசமாதிகளுக்கு சென்று அவர்களின் ஆசி பெறுவீர்கள். ஆலயப்பணிகளில் ஈடுபாடு வரும். திருக்கோயில்களைச் சுற்றித் தொழில்புரிபவர்கள் மேன்மை அடைவீர்கள். அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும், பேச்சினால் தொழில் செய்யக்கூடிய ஆசிரியர்கள் வக்கீல்கள் போன்றவர்களுக்கும் வீடுமாற்றம், அலுவலக இடமாற்றம், ஊர்மாற்றம் போன்றவைகள் நடக்கும்.

சிம்மம்:

மாதம் முழுவதும் ராசிநாதன் சூரியன் எவ்வித பங்கமும் இன்றி உச்ச நிலையில் அதிக வலிமையுடன் இருக்கும் நிலையில் சிம்மராசிக்காரர்களுக்கு எல்லா சிறப்புக்களையும் தரும் மாதமாக சித்திரை மாதம் இருக்கும். பொதுவாக சூரியன், வருடம் ஒரு முறை சித்திரை மாதம் மட்டுமே அதிக வலுவடைவார் என்பதால் எப்போதுமே சித்திரை மாதம் சிம்மத்திற்கு சிறப்பான மாதமே. சிம்மத்திற்கு இப்போது தடைகள் எதுவும் இல்லை.

எதிர்பார்க்கும் இடத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சகோதர சகோதரிகளின் விஷயங்களில் நல்ல சம்பவங்களும் ஒருவருக்கொருவர் ஆதரவான நிகழ்வுகளும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கித் தருவீர்கள். வீட்டில் ஆபரணச் சேர்க்கையும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குதலும் நடக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் ஆதரவு உண்டு. பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். பிள்ளைகளுக்கான கடமைகளை பெற்றோர்கள் சரியாகச் செய்ய முடியும்.

நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு. தந்தைவழியில் எல்லா வகையான ஆதரவுகளும் கிடைக்கும். உங்களின் ஆன்ம பலம் கூடும். மிகவும் நம்பிக்கையாக இருக்க முடியும். அரசாங்கம் சம்பத்தப்பட்ட அனைத்தும் இனிமேல் கைகூடி வரும். ஏதேனும் ஒரு பொறுப்பு கிடைக்கும். மற்றவர்களை வழி நடத்துவீர்கள். இனி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது.

கன்னி:

பனிரெண்டிற்குடையவனும், எட்டிற்குடையவனும் ஆட்சி உச்ச நிலையில் இருப்பதும் ராசிநாதன் புதன் பெரும்பகுதி நாட்கள் எட்டாம் வீட்டில் இருப்பதும் இந்த மாதம் கன்னி ராசிக்காரர்களுக்கு எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடக்கக்கூடிய மாதமாக இருந்தாலும் ராசிநாதன் புதனும் யோகாதிபதி சுக்கிரனும் வலுவான நிலைகளில் இருப்பதால் எந்த ஒரு விஷயமும் கெடுதலாக நடக்காமல் உங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் அனைத்தும் நீடிக்கும் மாதமாக இந்த மாதம் இருக்கும்.

தொழில் வேலை வியாபாரம் போன்ற அமைப்புக்கள் சுமாரான பலன்களைத்தான் தரும். வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம். எந்த நேரமும் பரபரப்பாக அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அதற்கு தகுந்த பிரதிபலன் கிடைப்பது கஷ்டமாக இருக்கும். வயதானவர்கள் காசி கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும்.

ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில்கள் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு இந்த மாதம் யோகத்தை தரும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து சங்கடப்படுத்தலாம். அனைத்தையும் பொறுமையாக எதிர்கொண்டால் சிக்கல்கள் இருக்காது.

துலாம்:

சித்திரை மாதம் முழுவதும் செவ்வாயும், சூரியனும் வலுப்பெற்று அதில் சூரியன் ராசியைப் பார்ப்பது துலாராசிக்காரர்களுக்கு சாதகமற்ற நிலைதான் என்றாலும் ராசிநாதன் சுக்கிரன் உச்சநிலை பெற்று இருப்பதும் பதினொன்றாமிடத்தில் ராகுபகவான் குருவுடன் இணைந்திருப்பதும் அனைத்து எதிர்ப்புகளையும் வெல்லும் வலிமை தரும் என்பதால் துலாம்ராசிக்காரர்கள் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அதே நேரத்தில் இரண்டில் சனி செவ்வாய் இணைந்திருப்பதால் கொடுக்கல் வாங்கல்களில் நிதானம் தேவை.

தொழில்ரீதியான பயணங்கள் இருக்கும். வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள். தொழில் அமைப்புக்களில் சிக்கல்கள் தடைகள் இருந்தாலும் வீட்டில் நிம்மதி இருக்கும். லாபகுருவின் வலுவால் வீட்டில் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் இந்த மாதம் வாங்க முடியும். செலவுகள் அதிகம் இருக்கும் என்பதால் வரும் வருமானத்தை முதலீடாக மாற்றி நல்ல விதமாக விரயம் செய்வது புத்திசாலித்தனம். எனவே வரும் வருமானத்தை முதலீடாக்குவது நல்லது.

வியாபாரிகளுக்கு வியாபாரம் குறையும் என்றாலும் லாபம் அதிகம் இருக்கும் என்பதால் குறை சொல்ல எதுவும் இல்லை. வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. சொந்தத்தொழில் செய்பவர்கள் தங்களுடைய தொழில் விரிவாக்கத்தினை சற்றுக் கவனமுடன் செயல்படுத்துவது நல்லது. வேலைக்காரர்களை நம்ப வேண்டாம். வேலைக்காரர்கள் திருடுவது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. விலை உயர்ந்த பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

விருச்சிகம்:

ராசிநாதன் செவ்வாய் ராசியிலேயே ஆட்சி பெற்றிருப்பதும் தொழில் ஸ்தானாதிபதி சூரியன் மாதம் முழுவதும் உச்சம் பெற்றிருப்பதும் விருச்சிக ராசிக்கு பணவரவுகளிலும் தொழில் விஷயங்களிலும் நிமமதியைத் தரும் அமைப்புகள் என்பதால் விருச்சிகத்திற்கு சித்திரை மாதம் எவ்வித சிக்கலும் இல்லாத மாதமாக இருக்கும். கடுமையான ஏழரைச்சனியின் கெடுபலன்களால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு சற்று மூச்சு விட்டுக் கொண்டு இளைப்பாற இடங்கொடுக்கும் மாதமாகவும் இது இருக்கும்.

குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.குழந்தைகள் விரும்பும் பள்ளியிலோ, படிப்பிலோ அவர்களை சேர்த்து விட முடியும். நல்ல காலேஜில் சீட்டு கிடைக்கும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இப்போது குழந்தை பிறக்கும்.

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் என்பதால் செலவுகள் அதிகமாக இருக்கும். எனவே குடும்பத்தில் சேமிப்பு இருக்க வேண்டியது அவசியம். யாரிடமும் தேவையற்ற வீண் வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம். நல்ல நண்பர்களும் சிறு பிரச்னைகளால் இந்தமாதம் எதிரிகளாக மாறுவார் எனபதால் தேவையற்ற பிரச்னைகளில் தலையிட வேண்டாம். யாரையும் நம்பி கையெழுத்து போடுவதோ எவருக்கும் ஜாமீன் கொடுப்பதோ கூடாது. குழந்தைகளால் நல்ல சம்பவங்கள் இருக்கும்.

தனுசு:

ராசிக்கு ராசிநாதன் குருபகவானின் பார்வை. ஐந்திற்குடைய செவ்வாய் ஆட்சி. ஒன்பதிற்குடைய சூரியன் உச்சம் என யோகக்கிரகங்கள் அனைத்தும் வலுவான நிலையில் இருப்பதால் தனுசுராசிக்காரர்களுக்கு சித்திரை மாதம் செழிப்புகளை தரும் மாதமாக இருக்கும். பிறந்த ஜாதகத்தில் யோக தசாபுத்திகள் நடப்பவர்களுக்கு பருத்தி புடவையாய் காய்த்தது எனும் வகையில் இரட்டிப்பான அதிர்ஷ்ட நிகழ்வுகள் இந்த மாதம் இருக்கும்.

மதிப்பு மரியாதை அந்தஸ்து கௌரவம் தொழில்மேன்மை தனலாபங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற நன்மைகள் இந்த மாதம் உங்களுக்கு உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை இருந்து வந்த மனக்கவலைகள் குழப்பங்கள், எதிர்மறை எண்ணங்கள் தடைகள் போன்றவைகள் தீரும். உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். உற்சாகமாக இருப்பீர்கள்.. எந்த ஒரு செயலையும் உடனுக்கு உடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும். உங்களுடைய பேச்சை அனைவரும் கேட்பார்கள்.

வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இருக்காது. பதவிஉயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சம்பள உயர்வும் பாக்கித் தொகையும் பெறுவீர்கள். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றங்கள் உண்டு. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகளும் அதிருப்தியான நிலைமையும் மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும் பங்குதாரர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.

மகரம்:

மாதம் முழுவதும் ராசிக்கு ராசிநாதன் சனியின் பார்வை இருப்பதோடு ராஜ யோகாதிபதி சுக்கிரனும் உச்ச நிலையில் இருப்பதால் சித்திரை மாதம் மகர ராசிக்கு சிறப்பான மாதம்தான். ஜீவன லாபாதிபதிகளான செவ்வாயும், சுக்கிரனும் ஆட்சி உச்சம் பெறுவதால் நீங்கள் எல்லா நலன்களையும் பெறுவீர்கள் என்றாலும் கூடவே அஷ்டமாதிபதி சூரியனும் இந்த மாதம் முழுவதும் உச்சவலுப் பெறுவதால் நல்லவைகளை அனுபவிக்க இயலாத நிலை ஏற்படும் என்பதையும் காட்டுகிறது.

வெளிநாட்டு விஷயங்கள் நல்லபலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசம் வெளிமாநிலத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். திருமணம், குழந்தைபிறப்பு, வீடுவாங்குதல் போன்ற சுபநிகழ்ச்சிகள் குடும்பத்தில் உண்டு. வீடுமாற்றம் தொழில்மாற்றம் போன்றவைகள் நடக்கும். இளைஞர்களுக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் மாதமாக அமையும். இப்போது ஏற்படும் அனுபவங்களால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள்.

அரசு தனியார்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்வது நல்லது. அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை வரலாம். சில நேரங்களில் சுவர்களுக்கு கூட கண்களும் காதுகளும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள். ஞானிகளின் ஜீவசமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்

கும்பம்:

சூரியனும் செவ்வாயும் மூன்று பத்தாமிடங்களில் வலுப்பெறுவதும் மாதம் முழுவதும் ராஜயோகாதிபதி சுக்கிரன் சிறப்பான உச்சநிலையில் இருப்பதும் சித்திரை மாதம் உங்களை எவ்வித சிக்கல்களும் இல்லாமல் சந்தோஷத்தில் வைக்கும் மாதமாக இருக்கும் என்பதை காட்டுகிறது. இளையபருவ கும்பராசிக்காரர்களுக்கு எதிர்காலத்தில் இருக்கப் போகும் நல்ல வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக அமையக்கூடிய சம்பவங்களும் அறிமுகங்களும் இந்த மாதம் நடக்கும் என்பது உறுதி.

எதிர்பாராத தனலாபங்கள் இந்த மாதம் இருக்கும். நீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த ரியல் எஸ்டேட் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று முடிவுக்கு வந்து ஒரு நல்லதொகை கைக்கு கிடைக்கும். வீடு வாங்குவதற்கு இதுவரை இருந்துவந்த தடைகள் நீங்குகிறது. இருக்கும் வாகனத்தை மாற்றிவிட்டு அதைவிட நல்ல வாகனம் வாங்க முடியும். வாகனம் இல்லாதவர்களுக்கு தற்போது வாகனம் வாங்குவதற்கான யோகம் இருக்கிறது.

பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். அவர்களின் கல்வியில் முன்னேற்றங்கள் இருக்கும் எவரையும் நம்பி ஜாமீன் போடுவதோ, யாருக்கும் வாக்கு கொடுப்பதோ கூடாது. போட்டி பந்தயங்கள் லாட்டரி சீட்டு ரேஸ் போன்றவை தற்போது கை கொடுக்காது. யூகவணிகம், பங்குச்சந்தை போன்றவைகள் சிறிது பணம் வருவது போல் ஆசைகாட்டி முதலுக்கே மோசம் வைக்கும் என்பதால் கொஞ்ச நாட்களுக்கு பங்குச் சந்தை போன்ற விவகாரங்களில் தலை காட்டாமல் இருப்பது நல்லது. இளைய பருவத்தினர் சிலருக்கு காதல் போன்ற விஷயங்கள் வரும்.

மீனம்:

இரண்டு ஒன்பதுக்குடைய செவ்வாய் ஆட்சி பத்துக்குடைய குருபகவான் பத்தாமிடத்தைப் பார்ப்பது என தர்மகர்மாதிபதிகள் சிறப்பான நிலையில் இருக்கும் சித்திரைமாதம் இது. அதேநேரத்தில் ஆறுக்குடைய சூரியனும் எட்டுக்குடைய சுக்கிரனும் உச்சமாக இருப்பது எந்த ஒரு நல்லதும் உங்களுக்கு கடுமையான முயற்சிகளுக்குப் பிறகே கிடைக்கும் என்பதையும் மறைமுக எதிரிகளும், போட்டிகளும் இந்த மாதம் உங்களுக்கு இருக்கும் என்பதையும் காட்டுகிறது.

எந்த ஒரு விஷயமும் நீண்ட முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும் என்பதால் கடினஉழைப்பும் விடாமுயற்சியும் இந்தமாதம் தேவைப்படும். அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு இரண்டுமுறை யோசித்து செயல்படுவது நல்லது. பெண்களுக்கு இந்த மாதம் நல்லபலன்கள் அதிகம் இருக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்களுக்கும் அதிகமாக நன்மைகள் நடைபெறும்.

போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அவைகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது கடினம். தேவையில்லாமல் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது. உடல்நல விஷயத்தில் கவனமாக இருங்கள். சிறு சிறு உடல் கோளாறுகள் வரலாம். நீடித்த குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. முக்கியமாக கண் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

No comments :

Post a Comment