Thursday, April 28, 2016

சிம்மத்திற்கு சனி தரும் பலன்கள் c - 043 - Simmaththirkku Sani Tharum Palangal...


சிம்மத்தின் நாயகன் சூரியனின் கடும் எதிரியாக சனி வேத ஜோதிடத்தில் குறிப்பிடப்படுகிறார். இருளும், ஒளியும் எதிரெதிரானவை என்பதன் அடிப்படையில் அதிக ஒளியுள்ள கிரகமான சூரியனும், ஒளியற்ற இருள் கிரகமான சனியும் எதிரிக் கிரகங்களாக நமது ஞானிகளால் சொல்லப்பட்டன.

சிம்ம லக்னத்திற்கு கடன், நோய், எதிரி ஆகியவற்றைக் குறிக்கும் ஆறாம் பாவத்திற்கும், மனைவி, நண்பர்கள், பங்குதாரர்கள் ஆகியவற்றைக் குறிக்கும் ஏழாம் பாவத்திற்கும் சனி அதிபதியாவார். மற்ற லக்னங்களுக்கு சனியின் பலன்களைப் பற்றி சொல்லும் போது அவயோகக் கிரகங்கள் மூன்று, ஆறு, பத்து, பதினொன்று எனப்படும் உபசய ஸ்தானங்களில் இருந்தால் மட்டுமே நன்மை செய்வார்கள் என்று குறிப்பிட்டதைப் போல சிம்மத்திற்கும், சனி மேற்கண்ட பாவங்களில் அமர்ந்து சுபத்துவமோ, சூட்சும வலுவோ அடைந்திருக்கும்போது நன்மைகளைச் செய்வார்.

இந்த லக்னத்திற்கு ஆறாமிடத்தில் சனி ஆட்சி பெறுவது நல்ல நிலை அல்ல. இதுபோன்ற அமைப்பில் லக்னாதிபதி சூரியன் வலுவிழந்தால், சனி தசையில் தனது ஆதிபத்திய பலன்களான கடன், நோய், எதிரித் தொல்லைகளை சனி கடுமையாகத் தருவார். சனியின் முக்கியமான காரகத்துவமே கடன், நோய் என்பதால் ஆறாமிடத்தில் சனி ஆட்சி பெறும்போது ஆதிபத்தியமும், காரகத்துவமும் ஒன்றாக இணைந்து சனி தசையில் ஜாதகனுக்கு கடன் தொல்லைகள் இருக்கும்.

எந்த ஒரு ஜாதகத்திலும் ஆறுக்கதிபதி வலுப் பெறக் கூடாது. அப்படி வலுப் பெற்றால், அவரை விட லக்னாதிபதி வலுவாக இருக்க வேண்டும். லக்னம் உங்களையும், ஆறாமிடம் உங்கள் எதிரியையும் குறிக்கும் என்பதால் லக்னம் வலுவிழந்து, ஆறாமிடம் பலம் பெறும் நிலையில் உங்களுடைய எதிரிகள் வலுப் பெறுவார்கள் என்பதோடு உங்களுக்கு கடன், நோய்த் தொல்லைகளும் இருக்கும். லக்ன நாயகன் ஆறாம் அதிபதியை விட வலுவாக இருந்தால், கடன் இருந்தாலும் அது கட்டுக்குள் இருக்கும். எதிர்ப்புகளை உங்களால் சமாளித்து அடக்கி ஆள முடியும்.

பத்தாமிடத்தில் நட்பு நிலை பெற்று சனி அமர்வது நல்ல நிலைதான். இந்த அமைப்பில் சுபர் சேர்க்கை, சுபர் பார்வையை சனி பெற்றிருந்தால் ஜாதகருக்கு நிலையான தொழில் அமைப்பு, வருமானம் இருக்கும். பதினொன்றாமிடமான மிதுனத்தில் சனி இருப்பதும் சிம்மத்திற்கு நன்மைதான். பத்து மற்றும் பதினொன்றாமிடங்களில் சனி அமரும் போது இந்த லக்னத்தின் தனாதிபதியும், அவரது நண்பருமான புதனுடன் இணைவது ஒருவகையில் சிம்மத்திற்கு மேன்மையான அமைப்பு. ஆனால் பத்தாமிடத்தில் சுக்கிரனுடன் அவர் இணைவது நன்மைகளைத் தராது.

புதனுடன் இணையும்போது இரண்டிற்குடையவனுடன் சேரும் அமைப்பைப் பெறும் சனி, சுக்கிரனுடன் இணையும்போது, ஜீவனாதிபதியைக் கெடுக்கும் நிலையைப் பெறுவார். மேலும் எந்த ஒரு லக்னத்திற்கும் சுக்கிரனுடன் சனி இணைவதும் நல்லதல்ல. குருவிற்கு இணையான ஒரு சுப கிரகமான சுக்கிரனுடன் சனி இணையும்போது சுக்கிரன் அவரது நண்பர்தான் என்றாலும், சுக்கிரனின் சுப விஷயங்களை சனி தலைகீழாக்குவார். மேலும் சுக்கிரன் பெண்களைக் குறிக்கும் கிரகம் என்பதால் ஜாதகரைப் பெண்கள் விஷயத்தில் திசை திருப்புவார். கெட்ட பெயரையும் தருவார்.

அதேநேரத்தில் பத்தில் புதனுடன் இணையும் சனி, இணையும் தூரத்தைப் பொருத்து ஜாதகனை நல்ல வியாபாரியாகவும், பேச்சால் பிழைப்பவராகவும் மாற்றுவார். பதினொன்றில் இருக்கும் போது ஆறாமதிபதி அந்த இடத்திற்கு ஆறில் மறைகிறார் என்ற அமைப்பையும், ஒரு பாபக் கிரகம் பதினொன்றாமிடத்தில் இருப்பது நன்மை எனும் நிலையையும் சனி பெறுவார் என்பதால் இந்த இடத்தில் சிம்மத்தின் யோகாதிபதிகளான செவ்வாய் மற்றும் குருவின் நட்சத்திரங்களில் இருந்தால் நன்மைகளைச் செய்வார். பதினொன்றில் இருக்கும் அனைத்துக் கிரகங்களும் நன்மைகளைச் செய்யும் என்பதும் பொது விதி.

லக்னத்தில் சனி இருப்பது நல்ல நிலை அல்ல. சுபத்துவம் இல்லாத சனி இருக்கும் பாவம் இருளடையும் என்பதன்படி இங்கே அமரும் சனி பாபத்துவம் மட்டுமே பெற்றால், ஜாதகருக்கு உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படும். ஜாதகரின் குணநலன்கள் சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. சனியின் குணங்களை ஜாதகர் அப்படியே பிரதிபலிப்பார். இரண்டாம் வீட்டில் நட்பு நிலையில் இருப்பதும் சிம்மத்திற்கு யோகம் தராது. இங்கே தனித்து விரயாதிபதியின் சாரத்தில் இருக்கும் சனி தனது தசையில் குடும்பத்தை விரயம் செய்வார். வாழ்க்கைத் துணையைப் பிரிப்பார்.

அல்லது இழக்க வைப்பார். ஜாதகருக்கு திக்குவாய் அமைப்பு இருக்கலாம். இங்கிருக்கும் சனியால் தனம், வாக்கு, குடும்பம் மூன்றும் சனி தசையில் பாதிக்கப்படும். இரண்டாமிடச் சனி பொருளாதாரச் சிக்கலைத் தருவார். சனி தசையில் வேலையிழப்பு, தொழில்சரிவு, வியாபார நஷ்டம் போன்றவைகளின் மூலம் பணச் சிக்கல்கள் இருக்கும். சுபத்துவம் அடைந்திருந்தால் ஒழிய இந்த பலன்கள் மாறாது. சிம்மத்திற்கு இரண்டில் சனி தனித்திருப்பது நல்லதல்ல.

நான்காமிடத்தில் சனி இருப்பதும் சிம்மத்திற்கு கடுமையான பலன்களைத்தான் தரும். இங்கிருக்கும் சனி தனது மூன்றாம் பார்வையால் ஆறாமிடத்தை வலுப்படுத்தி, ஏழாம் பார்வையால் தொழில் ஸ்தானம் எனும் பத்தாமிடத்தைக் கெடுத்து தனது பத்தாம் பார்வையால் லக்னத்தையும் பார்ப்பார். மேற்கண்ட பார்வைகளால் ஆறாமிடம் வலுப் பெற்று, கடன், நோய்த் தொல்லைகளும், பத்தாமிடப் பார்வையால் தொழில் அமைப்பு கெட்டு ஜாதகருக்கு சாதாரண வேலையும், லக்னப் பார்வையால் ஜாதகருக்கு பிடிவாதம், குறுகிய மனப்பான்மை, சுயநலம், தாழ்வு மனப்பான்மை போன்ற குணங்களும் இருக்கும்.

திரிகோண ஸ்தானமான ஐந்தாமிடத்தில் பாபக் கிரகங்கள் அமரக்கூடாது என்று ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இங்கிருக்கும் சனி புத்திர தோஷத்தைக் கொடுப்பார். இங்கே சனி இருப்பதன் மூலம் ஜாதகருக்கு பூர்வ புண்ணிய பலம் குறைவு என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதேநேரத்தில் ஐந்தாமிடம் குருவின் வீடான தனுசு என்பதால் சனியின் கொடூர குணங்கள் இங்கே குறைந்திருக்கும். இங்கே சனி சுபத்துவம் அடையும் நிலைகளில் ஜாதகர் சட்டத்துறையில் வக்கீலாகவோ, நீதிபதியாகவோ இருப்பார். வக்கீலா, நீதிபதியா என்பது குருவின் வலுவைப் பொருத்தது. ஐந்தாமிட சனியால் தாமத புத்திர பாக்கியமும், ஆண்வாரிசு இல்லாத நிலைமையும் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் இங்கிருந்து தனது ஏழாம் வீட்டை சனி சுபத்துவம் பெற்றுப் பார்ப்பார் என்பதால் வலுவான மனைவி அமையும். சிம்மத்திற்கு ஏழில் சனி அமரும்போது உச்ச நிலைக்கு அடுத்த மூலத் திரிகோண வலுவைப் பெறுவார். இங்கே அமரும் சனி ஒரு ஜாதகத்தின் உயிர் ஸ்தானங்களான தாய், தந்தை மற்றும் ஜாதகனைக் குறிக்கும் லக்னம் ஆகிய ஒன்பது, ஒன்று, நான்கு ஆகிய இடங்களைப் பார்த்துக் கெடுப்பார் இந்த அமைப்பால்தான் சனி, சூரியனுக்கு கடும் பகைவராகிறார் என்பதை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

மேலும் நமது ஞானிகள் சிம்மத்தை சனி வலுப் பெற்றுப் பார்க்கக் கூடாது என்று குறிப்பிடுவதும் இந்தக் கும்பச் சனி எனும் அமைப்பைத்தான் குறிக்கிறது. சிம்மம் என்பது பொதுவாக ஒரு ஜாதகனுக்கு தொழில் அமைப்பைக் குறிப்பிடும் பாவமாகும். சிம்மம் கெட்டால் தொழில் கெடும் என்பதும் ஒரு பொதுவிதி. ஒருவன் அதிகாரம் செய்யும் அமைப்பில் அதாவது தலைமை தாங்கும் நிலையில் இருப்பானா என்பதை சிம்மமே குறித்துக் காட்டும் என்பதால் சிம்மத்திற்கு நேர் எதிரே சனி மூலத் திரிகோண வலுவில் இருக்கக் கூடாது. சனி இங்கே முழுமையான பாபத்துவ அமைப்பில் இருக்கும் பட்சத்தில் ஜாதகருக்கு தாமத திருமணம், திருமணமே ஆகாத நிலை, ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள், திருமணத்திற்குப் பிறகு நிம்மதியற்ற நிலை போன்றவைகள் இருக்கும்.

மேற்கண்ட பலன்கள் நடக்காமல் இருப்பது சனியின் சுப, சூட்சும வலுவைப் பொருத்தது. சனி இங்கே ஏழாமிட அதிபதியாகி, தனது வீட்டில் தானே அமர்ந்து ஏழை வலுப் படுத்துகிறார் என்று கணிக்காமல் ஏழில் வலுப் பெற்று அமர்ந்து அந்த பாவத்தைக் கெடுக்கிறார் என்று கணிப்பதே சரியான நிலையாக இருக்கும். இங்கிருக்கும் சனி சுபத்துவம் பெறும் போது மட்டுமே மனைவி விஷயத்தில் நன்மைகளைச் செய்வார். எட்டில் இருக்கும் போது அஷ்டமாதிபதியான குருவின் நிலையைப் பொருத்து ஜாதகனை தனது தசை, புக்திகளில் மேற்குத் திசை நாடு ஒன்றில் வேலை செய்ய வைப்பார்.

 சனி பெட்ரோலைக் குறிப்பவர் என்பதால் அரபு நாடுகளில் வேலை இருக்கும். சுபத்துவம் பெறாமல் எட்டில் இருந்தால் ஜாதகரை மிகவும் கொடுமைக்குள்ளாக்குவார். சனி தசையில் குடும்பத்தில் கடுமையான குழப்பங்களும், கடன்களும் இருக்கும். எட்டாமிடமான மீனம் நீர் ராசி என்பதால் ஜாதகருக்கு குடிப் பழக்கத்தை ஏற்படுத்தி மனைவி, குழந்தைகளைப் பிரிப்பார். விபத்துக்களில் கால் ஊனத்தை ஏற்படுத்துவார். ஒன்பதாமிடத்தில் நீசம் அடையும்போது அவர் வக்ரம் அடையாமலோ, நீசபங்கம் அடையாமலோ சுபத்துவம் மட்டும் அடையும் போது நன்மைகள் இருக்கும். முறையான நீசபங்கம் என்பது உச்ச நிலை என்பதால் இங்கே சனி நீசபங்கம் அடையக்கூடாது.

ஆனால் சுபத்துவம் பெற வேண்டும். பனிரெண்டில் அமரும்போது தன் ஆறாம் வீட்டைப் பார்த்து வலுப்படுத்துவார் என்பதால் இங்கே இருப்பது சரியல்ல. ஆனால் சுப, சூட்சும வலுவில் இருக்கும்போது சில நிலைகளில் சட்டத்துறை போன்ற பேச்சு சாமர்த்தியத்தால் பிழைக்கும் அமைப்பிலும், வெளிநாட்டு யோகத்தையும் தருவார். ஜாதகர் பொய் சொல்லிப் பிழைக்க வேண்டியிருக்கும்.

 சிம்மத்திற்கு சனியால் ராஜயோகம் எப்போது?

அதிகமான மக்கள் இருக்கும் இடங்களையும், பெரும் கூட்டத்தையும், பொதுஜனங்களிடம் பிரபலமாகி தலைவன் ஆவதையும், பொதுமக்கள் தொடர்பான விஷயங்களையும், ஊராட்சி மன்றங்கள், நகர சபைகள் போன்றவற்றில் பதவி வகிப்பதையும் சுபத்துவம் பெற்ற சனி குறிப்பிடுவார் என்பதால் சனிக்கு சுபத்துவமும், சூட்சும வலுவும் ஒருசேர அமைந்திருந்தால் தனது தசையில் ஒருவரை அரசனாக்குவார். மேலும் சிம்மம் ராஜ ராசி என்பதால் லக்னமோ, லக்னாதிபதி சூரியனோ பலவீனமாகாமல், லக்னத்திற்கு சுபர் பார்வை அமைந்து, மூன்றாமிடத்தில் சனி உச்சம் பெற்று வலுப் பெற்ற குருவின் பார்வையை அடையும்போது அந்த ஜாதகருக்கு சனியால் அரசனாகும் யோகம் கிடைக்கும்.

அரசன் என்பதை இந்தக் காலத்தில் எம்.பி., எம்.எல்.ஏ., மந்திரி, முதல்வர், பிரதமர் என்று அர்த்தம் கொள்ளலாம் என்பதால் மேற்கண்ட அமைப்பில் இருக்கும் சனி தனது சுப, சூட்சும வலுவிற்கேற்ப ஒருவரைப் பிரதமர் முதல் ஊராட்சித் தலைவர் வரை பதவி வகிக்க வைப்பார்.. இந்த நிலையின்படி சிம்மத்திற்கு, ஆறுக்குடைய சனி உச்சம் பெற்றாலும் சுபத்துவம் அடைந்து, லக்னமும், லக்னாதிபதியும் வலுப் பெறும் போது இது நடக்கும். சனி மட்டும் உச்சம் பெற்று சுபத்துவ அமைப்பு இருக்கும் நிலையில் லக்னாதிபதியும், லக்னமும் வலுவிழந்தால் நன்மைகள் இருக்காது. மாறாக சனியால் தீமைகள் இருக்கும். எந்த ஒரு யோகத்தையும் அனுபவிக்க லக்னாதிபதி மற்றும் லக்னத்தின் வலு மிகவும் அவசியம்.

( டிச 31 - 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

3 comments :

  1. மூன்றாமிடத்து சனி பற்றி கட்டுரையில் இல்லையே

    ReplyDelete
  2. வணக்கம் குருஜீ. கிரகங்களின் இஷ்ட பலம் மற்றும் கஷ்ட பலம் என்பது எதனை குறிக்கும்.

    ReplyDelete
  3. பிறந்த தேதி 4-11-1988

    சென்னை இரவு 11-40 மனி

    ஒரு வருடமாக வேலை இல்லை ஏன் மற்றும் என்ன பரிகாரம் தயவு செய்து உதவுங்கள்

    நனறி
    மோகனசுந்தரம்

    ReplyDelete