Monday, March 28, 2016

கன்னி : 2016 -  தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

கன்னி:

கன்னிராசிக்கு கடந்த வருடம் இருந்து வந்த வீண்செலவு மற்றும் விரையங்களை தடுத்து நிறுத்தி சேமிக்கும் அளவிற்கு வருமானத்தை தரும் வருடமாக இந்த தமிழ்ப்புத்தாண்டு இருக்கும் புதிதாகப் பிறக்க இருக்கும் துன்முகி வருடத்தில் துன்பங்கள் எதுவுமின்றி இன்பங்களை மட்டுமே கன்னி ராசிக்காரர்கள் பெறுவீர்கள் என்பது உறுதி.

இதுவரை நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.

வியாபாரிகளுக்கு இதுவரை இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். பங்குதாரர்கள் இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். சொந்தத்தொழில் செய்பவர்கள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம். சுயதொழிலர்களுக்கு பணவரவு தடைப்படாது.

வியாபாரிகளுக்கு போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகளுக்கு இம்முறை இயற்கை ஒத்துழைக்கும். தேவையான நேரத்தில் மழை பெய்யும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு பெரிய நன்மைகள் உண்டு.

இதுவரை தள்ளிப் போய் இருந்த வெளிநாடு தொடர்பான வேலை விஷயங்களும் வெளிநாட்டு பயணங்களும் தற்போது வெற்றிகரமாக கை கூடி வரும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும். பெற்றோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பங்காளிச் சண்டை தீரும். பூர்வீக சொத்துப் பிரச்னை சுமுகமாக ஒரு முடிவுக்கு வரும்.

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் தற்போது கிடைக்கும்.

பணவிஷயத்தில் குறைப்பட்டுக் கொள்ள எதுவும் இல்லை. தாராளமான பணப்புழக்கம் இருக்கும். ஆறாமிட கேதுபகவானால் குறிப்பிட்ட சிலருக்கு எதிர்பாராத நல்ல பணவரவு உண்டு. கொடுக்கும் வாக்கைக் காப்பாற்ற முடியும்.

வீடு வாங்குவதற்கு இதுவரை இருந்துவந்த தடைகள் நீங்கி கட்டிய வீடோ அல்லது காலிமனையோ, குறைந்தபட்சம் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பிளாட்டோ வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை மாற்றிவிட்டு அதைவிட நல்ல வாகனம் வாங்க முடியும். இதுவரை வாகனம் இல்லாதவர்களுக்கு தற்போது வாகனம் வாங்குவதற்கான யோகம் இருக்கிறது.

பெண்களுக்கு நல்ல பலன்கள் அதிகம் இருக்கும். இதுவரை உங்களை புரிந்துக் கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். கூட்டுக் குடும்பத்தில் மருமகளின் பேச்சு மாமியாரால் ஏற்கப்படும்.

வயதானவர்கள் உடல்நலத்தில் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் இப்போது வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைப்பது இப்போது நடக்கும். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து பெரும்தொகை கைக்கு கிடைக்கலாம்.

குறிப்பிட்ட சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும். ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற மிகப்பெரும் புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும்.

தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். தந்தையிடமிருந்து ஏதேனும் ஆதாயம் இருக்கும். மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால் உதவிகள் இருக்கும். அண்ணன் தம்பி அக்கா தங்கை உறவுகள் பலப்படும்.

குடும்பப் பிரச்னை காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். விவாகரத்து வரை போன தம்பதிகள் வழக்கைத் திரும்பப் பெற்று சமரசமாகி திரும்ப இணைவீர்கள். முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும். தனிப்பட்ட வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த கசப்பான அனுபவங்கள் நீங்கி இனிமேல் வாழ்க்கை சரியான பாதையில் போகத் துவங்கும் என்பதால் இனிமேல் கவலைகளுக்கு இடமில்லை.

பூர்வபுண்ணிய ஸ்தானம் வலுப்பெறுவதால் இனிமேல் அதிர்ஷ்டம் உங்களுக்குக் கை கொடுக்கும். பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் ஆதரவு உண்டு. மகன் மகள்களால் பெருமைப்படக் கூடிய செய்திகள் இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்யும் பிள்ளைகளை தற்போது பார்க்க முடியும். பிள்ளைகள் விரும்பும் பள்ளி, கல்லூரிகளில் அவர்கள் விரும்பும் படிப்பில் சேர்க்க முடியும்.

இதுவரை சேமிக்க முடியாதவர்கள் ஏதேனும் ஒரு வழியில் சேமிப்புகள் செய்ய முடியும். ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது. சிறிது லாபம் வருவது போல் ஆசைகாட்டி பிறகு மொத்தமாக இருப்பதையும் இழக்க வைக்கும் என்பதால் மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும்.

பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதிநிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிருங்கள். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் பற்றாக்குறையை விரயராகு ஏற்படுத்துவார் என்பதால் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

வயதான கன்னிராசிக்கார்கள் சிலருக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரன், பேத்திகளை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலர் மகன், மகள்களுக்கு உதவி செய்ய வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள்.

3 comments :

  1. இதை படித்தபோது மனதுக்கு தெம்பாக இருந்தது. இதுபோல் நடக்கவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு மட்டும் உள்ளது.இந்த ஆண்டு இதுபோல் நடந்தால், உடன் நான் நேரில் நீங்கள் எங்கு இருந்தாலும் வந்து பார்த்துவிடுவேன்.

    ReplyDelete
  2. சார் உங்கள் பக்கத்தில் உள்ள தகவல்கள், சில காலம் கழித்து இருப்பதில்லை. ஆகவே, பிரிண்ட் எடுக்க ஒரு option வையுங்கள் சார் .நலமாக இருக்கும்

    ReplyDelete