Monday, March 19, 2018

சுக்கிரனின் செயல்பாடுகள் c- 034 - Sukkiranin Seyalpadugal.....


சுக்கிரன் மீன ராசியில் அதிக பலம் எனும் உச்ச நிலையையும், கன்னி ராசியில் நீசம் எனப்படும் வலுவிழக்கும் தன்மையையும் அடைவார். சுக்கிரனின் இந்த நிலையிலும் ஒரு முரண்பாடு இருக்கிறது.அவர் அதிக வலுவை அடைவது தனது ஜென்ம விரோதியின் வீட்டில்.பலத்தை சுத்தமாக இழப்பது மிகவும் நெருக்கமான நண்பரின் வீட்டில்.

இது பற்றிய விளக்கத்தை நான் முன்பே விளக்கியிருக்கிறேன். தெரியாதவர்கள் ஏன் என்று யோசித்துப் பாருங்கள்.

உச்ச, நீச பாகைக் கணக்கில் ஒரு நுண்ணிய நிலையாக, சுக்கிரன் மீன ராசியில் இருபத்தி ஏழு டிகிரி வரை மட்டுமே உச்ச பலத்துடன் இருப்பார். கடைசி மூன்று டிகிரியில் இருக்கும்போது அவர் உச்ச நிலையில் இருப்பது இல்லை.

அதாவது ராசிச் சக்கரத்தின் இறுதி பாகமான மீன ராசியின் முன்னூற்றி ஐம்பத்தியேழு டிகிரி முதல் முன்னூற்றி அறுபது டிகிரி வரையிலான கடைசி மூன்று டிகிரிகளில் சுக்கிரன் உச்ச பலத்துடன் இருப்பது இல்லை. 

அதேநேரத்தில் அது அவருக்கு ஆட்சி நிலையும் அல்ல.
உச்ச பலமும் இல்லாமல், அதற்கு இணையான வலுவும் இல்லாத ஒரு திரிசங்கு நிலையில் அங்கு சுக்கிரன் இருப்பார். துல்லியமாகச் சொல்லப் போனால் ரேவதி நான்காம் பாதத்தில் உச்சமாகி வர்க்கோத்தமமாக இருக்கும் சுக்கிரன் தன் உச்ச பலன்களைத் தருவது இல்லை. இதை சில ஜாதகங்களில் அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.

சுக்கிரன் துலாம் ராசியில் உச்சத்திற்கு அடுத்த மூலத் திரிகோண நிலையையும், ரிஷபத்தில் ஆட்சி நிலையையும் பெறுவார். புதன் மற்றும் சனியின் வீடுகளான மிதுனம், மகரம், கும்பம் ஆகிய வீடுகளில் நட்பு நிலையை அடைவார். சூரியனும், சந்திரனும் அவரது எதிரிகள் என்பதால் கடக, சிம்மத்தில் இருக்கும் சுக்கிரன் பகை நிலை பெற்று தன் பலத்தை இழப்பார். இதனை நீசத்தை நோக்கி அவர் போய் கொண்டிருக்கும் போது ஏற்படும் சக்தி இழப்பு என்றும் சொல்லலாம்.

மேஷம், விருச்சிகம், தனுசு ஆகிய இடங்களில் அவர் நட்பு நிலைக்கு கீழாகவும், பகை நிலைக்கு மேலாகவும் உள்ள நிலையான சமம் எனப்படும் வலுவை அடைவார். பொதுவாக எந்த நிலையில் இருந்தாலும் வர்க்கோத்தமம் எனப்படும் ராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருக்கும் கிரகம் ஆட்சி நிலையை அடையும் என்பதால் ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் வர்க்கோத்தமம் அடைவது நல்லது.

ஏற்கனவே சொன்னதைப் போல எந்த ஒரு ஜாதகத்திலும் இயற்கைச் சுப கிரகங்களான குருவும், சுக்கிரனும் வலுவிழக்கவே கூடாது. அதாவது முற்றிலும் தன் செயல்பாடுகளை, தன் சக்திகளை இவர்களில் ஒருவர் இழந்தாலும் அது யோக ஜாதகம் அல்ல. இது போன்ற நிலைகளில் சுக்கிரனும், குருவும் பரிவர்த்தனை பெறுவது மிகவும் அதிர்ஷ்டமான ஒரு அமைப்பு.
முக்கூட்டுக் கிரகங்கள் எனப்படும் சூரிய, சுக்கிர, புதன் மூவரும் எப்போதும் சூரியனை நெருங்கியே இருப்பார்கள் என்பதால் புதனும், சுக்கிரனும் அடிக்கடி அஸ்தமனம் அடைவார்கள். அஸ்தமனம் அடையும் கிரகங்கள் வலு இழப்பார்கள் என்பது ஜோதிட விதி.

இதில் புதனுக்கு மட்டும் அஸ்தங்கம் எனப்படும் அஸ்தமன தோஷம் இல்லை என்று நமது மூல நூல்கள் ஒருமித்துச் சொல்கின்றன. ஆனால் சுக்கிரனுக்கு அஸ்தமன தோஷம் உண்டு என்றும் இல்லை என்றும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆயினும் அஸ்தமனம் பெற்ற சுக்கிரன் பரிவர்த்தனை அடைந்திருந்தால் இழந்த வலுவை திரும்பப் பெறுவார்.

பரிவர்த்தனை என்பது இரண்டு கிரகங்கள் தங்களது வீடுகளில் மாறி அமர்வதாகும். வேத ஜோதிடத்தில் இந்த அமைப்பு மிகவும் அதிர்ஷ்டம் தரும் ஒரு நிலையாகக் குறிப்பிடப்படுகிறது. அதிலும் ஒரு மனிதனுக்கு மிகவும் தேவையான நன்மைகளைத் தரக் கூடிய குருவும், சுக்கிரனும் பரிவர்த்தனை அடையும் போது இருவரும் தங்களது சொந்த வீடுகளில் ஆட்சியாகும் நிலை பெறுவார்கள்.

ஜாதகத்தில் இவர்கள் மறைவு நிலை பெற்று பலவீனமாக இருந்தால் கூட பரிவர்த்தனையின் மூலம் மறைவு எனும் வலுவற்ற நிலை நீங்கி அந்த ஜாதகருக்கு தங்களது சொந்த வீடுகளில் இருந்து நன்மைகளை செய்யும் தகுதியைப் பெறுவார்கள்.

அதேநேரத்தில் எந்தவொரு யோகமும் சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசையில் மட்டுமே வேலை செய்யும் என்பதே மூல விதி. பரிவர்த்தனையும் அதற்கு விலக்கல்ல. சூட்சுமமான விசேஷ நிலைகளும், யோகங்களும் புக்திகளில் பலன் தருவது இல்லை. தசைகளில் மட்டும்தான் யோகத்தின் பலனை ஒரு கிரகம் அளிக்கும்.

இதன் காரணம் என்னவெனில் தசையின் உள்ளே இருக்கும் பிரிவான புக்திகளில் இருக்கும் புக்தி நாதர்கள் தசா நாதனுக்கு கட்டுப்பட்டவர்கள். தசா நாதனை மீறி புக்தி நாதர்கள் தன்னிச்சையாக செயல்பட முடியாது. தசையின் அதிபதி அரசன் என்றால் புக்தி நாதன் மந்திரி மட்டுமே. எந்த ஒரு தசையிலும் தசா நாதன் மட்டுமே முழு அதிகாரமுள்ள தலைவர்.

உதாரணமாக தசா நாதன் என்பவர் ஒரு அலுவலகத்தில் முதலாளியைப் போலவும், புக்தி நாதன் அவருக்குக் கீழே இருக்கும் மேனேஜரைப் போலவும், அந்தர நாதன் இருவருக்குமே கீழிருக்கும் தொழிலாளியைப் போலவும் செயல்படுவார்கள்.

எனவே ஒரு கிரகம் நேரடியாக வலுப் பெறாமல் பரிவர்த்தனை யோகம் போன்ற மறைமுகமாக வலுவடையும் சூட்சும நிலைகளில், புக்தி நாதனாக வரும் போது தசையின் அதிபதியை மீறி செயல்பட முடியாது. தன்னுடைய ஆளுகை காலமான தசை வரும்போது மட்டுமே அது தனது காரகத்துவங்களை ஜாதகருக்கு முழுமையாகச் செய்ய முடியும்.

தனது நண்பரான புதனுடன் இணைந்திருக்கும் போது சுக்கிரன் தனது முழு பலன்களையும் குறையின்றித் தருவார். மீனத்தில் புதன் நீசமடையும் போது அவருடன் உச்சனாகி இணைந்திருக்கும் சுக்கிரன் தன்னுடைய உச்ச பலத்தை அவருக்கு அளித்து அவரை வலுவாக்கி தான் வலுவிழப்பார். இதையே மகா புருஷர் காளிதாசரும் நீசனுடன் சேரும் கிரகம் சூன்ய பலத்தைப் பெறுகிறது என்று குறிப்பிடுகிறார்.

தன்னுடைய இன்னொரு நண்பரான சனியுடன் சேரும் போதும் சனியைப் புனிதராக்கி தான் வலுவிழப்பார். இதுபோன்ற நிலையில் சனி வேறு வகையிலும் சுபத்துவமாகி இருந்தால் சனி தசை முழுக்க நன்மைகளையும், சுக்கிர தசை மத்திம பலன்களையும் தரும்.

அடுத்து தான் நண்பராகக் கருதும் ராகுவுடன் இணையும் போது சனிக்குச் சொன்னது போலவே பலன் இருக்கும். அதேநேரத்தில் ராகுவுடன் இணையும் தூரத்தைப் பொருத்து சுக்கிரனின் வலுவிழப்பு இருக்கும். சூரிய, சந்திரர்களுடன் சுக்கிரன் இணைவது கலப்பு பலன்களைத் தரும். செவ்வாயுடன் இணைவதால் மாறுபட்ட பலன்களைத் தருவார்.

செவ்வாயுடன் சேரும் போது சுக்கிரன் முழுக்க தன் நிலை மாறி வலுவிழப்பார். ஒரு பரிபூரண ஆணிடம் ஒரு பெண் தன் வசமிழப்பதைப் போன்றது இது. அதிலும் சுக்கிரன் பகை, நீசம் போன்ற நிலை பெற்று செவ்வாயுடன் இணைவது ஒரு ஜாதகரை முழுக்க சுக்கிரனுடைய இயல்புகளைப் பெற தகுதியற்றவராக்கி விடும்.

குருவுடன் சுக்கிரன் இணையக் கூடாது என்பதை சுக்கிரனைப் பற்றிய முதல் கட்டுரையிலேயே விளக்கி இருந்தேன். கேதுவுடன் இணைவது தீய நிலை அல்ல.

ஒருவருக்கு சுப வலுப் பெற்ற சுக்கிரன் கீழ்க்காணும் அமைப்புகளின் மூலம் நன்மைகளைச் செய்வார்.

கலைத்துறை, இசை, நடனம், அழகிய பெண்கள், அழகுணர்ச்சி, தொலைக்காட்சி, ஹோட்டல் தொழில், அழகிய வீடு, கன்னிப் பெண், செல்வம், ஓவியம், சிற்பம், முடி திருத்துவோர், பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள், அவசியமற்ற பொருட்கள், ஆடம்பரம், டெக்ஸ்டைல்ஸ், சூதாட்டம், திருமணம், கேளிக்கை விளையாட்டுக்கள், சந்தோசம், இளமைத் துடிப்பு, காதல், உயர்தர வாகனம், பெண்தரும் இன்பம், விந்து, காமம், உல்லாசம், நகை, கப்பல்,கவிதை, இலக்கியம், சினிமா, உடல் உறவு விஷயங்கள், அந்தரங்க உறுப்புகள், பெண் தெய்வ வழிபாடு, புதிய ஆடை, வெள்ளை நிறம் கொண்ட பொருட்கள், மனைவி, பூக்கள், இளமை, வசீகரம், அழகுப் பொருட்கள், அலங்காரமான விஷயங்கள், நீர் சம்பந்தப்பட்டவை, வெள்ளி, வாகனங்கள், பெண்களால் லாபம், கண், அழகு, தென்கிழக்குத் திசை, உணர்ச்சி வசப்படுதல், நீச்சல், இளம் பருவம், இசைக் கருவிகள், வண்ணம், நறுமணப் பொருட்கள், வைரம், புளிப்புச் சுவை, அதிகமான பணம், பிராமணர் போன்றவைகளில் லாபங்களை தருவார்.

அதேநேரத்தில் சுக்கிரன் சுப வலு இழந்து பாபத் தன்மை பெற்றிருந்தால் மேற்கண்ட விஷயங்களில் தலைகீழாக கெடுபலன்கள் நடக்கும்.

உச்ச நீச பாகை விளக்கங்கள்...!

கிரகங்களின் அதி உச்ச, பரம நீச பாகை விஷயங்களில் மிக நுணுக்கமான சூட்சுமம் மறைந்துள்ளது. அதை விரிவாக விளக்க வேண்டும் என்றால் இங்கே கணிதத்துடன் படம் போட்டு விளக்க முடியாது. வேறொரு சந்தர்ப்பத்தில் இந்த அதி உச்ச, பரம நீச பாகையில் உள்ள சூட்சுமங்களைப் பார்க்கலாம்.

கன்னியில் சுக்கிரன் ராசியின் முதல் இருபத்தியேழு டிகிரி வரையே நீச நிலையைப் பெறுவார். ராசியின் இறுதிப் பகுதியான கடைசி மூன்று டிகிரிகளில் சுக்கிரன் வலுவிழப்பதில்லை.

இந்த பரம நீச, அதி உச்ச பாகை விஷயங்களை நாம் அனுபவப் பூர்வமாகவே ஜாதகங்களில் உணர முடியும். உதாரணமாக துலாம் ராசியில் சூரியன் நீசம் எனும் போது முதல் இருபது டிகிரியில், அதாவது துலாமினுள் அவர் நுழைந்த இருபது நாட்களுக்குள், ஐப்பசி இருபதாம் தேதிக்குள் பிறந்தவர்களுக்கு மட்டுமே வலுவிழந்து தன் காரகத்துவங்களைச் செய்யும் சக்தியற்று இருப்பார்.

அதனையடுத்த நாட்களில், ஐப்பசி கடைசியில் பிறப்பவர்களுக்கு சூரியன் தனது காரகத்துவங்களைத் தரும் வலிமையுடனேயே இருப்பார். இந்த நிலையை நன்கு தெரிந்த ஜாதகங்களில் ஒப்பிட்டு உணர முடியும்.

ஒருவருக்கு சொல்லும் பலன் தவறும் போது கணிப்பில் எங்கோ தவறு நேர்ந்து விட்டது என்று சமாதானம் சொல்லிக் கொண்டால் ஞானிகள் சொல்லியுள்ள இதுபோன்ற அதி உச்ச, பரம நீச பாகை போன்ற சூட்சும நிலைகளை உணர முடியாது.

ஒரு கணிப்பில் தவறு ஏற்பட்டவுடன் அது ஏன் ஏற்பட்டது என்று ஆராய்ந்து உணர்பவனே வெற்றி பெற்ற ஜோதிடர் ஆகிறான்.

உதாரணமாக சூரியன் நீசமடைந்திருப்பதாக கணித்துப் பலன் சொல்லி அது தவறும் போது, ஒரு ஜோதிடர் சூரியன் வேறு வகையில் நீச பங்கம் அடைந்திருக்கலாம் அல்லது அம்சத்தில் பலமாக இருந்திருக்கலாம் என்பது போன்ற நொண்டிச் சாக்குக் காரணங்களை தனக்குத்தானே சொல்லிக் கொள்ளாமல் உச்ச, நீசங்களில் ஞானிகள் சொன்ன இது போன்ற நுட்ப நிலைகளைக் கவனித்தாலே துல்லிய பலன் சொல்லி விடலாம்.

சுக்கிரனுக்கான பரிகாரங்கள்

சுக்கிரன் யோகராக அமைந்து வலுவிழந்து இருக்கும் நிலையில் ஒரு ஜென்ம நட்சத்திரம் அன்று சுக்கிரனுக்கான மூலக் கோவிலாகக் குறிப்பிடப்படும் கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனூர் சென்று வழிபட்டு கோவிலுக்குள் இரண்டரை மணி நேரம் இருப்பது நல்லது.

எம்பெருமான் திருவரங்கன் படுத்துக் கிடந்து அருள் புரியும் ஸ்ரீரங்கத்தில் ஒரு வெள்ளிக் கிழமை வழிபட்டு குறைந்தது ஒரு முகூர்த்தம் எனப்படும் நாற்பத்தி எட்டு நிமிடம் திருக் கோவிலின் உள்ளே இருக்கலாம்.

தொண்டை மண்டலம் எனப்படும் சென்னைக்கு அருகில் இருப்பவர்களுக்கு சென்னை மாங்காட்டில் உள்ள அருள்மிகு வெள்ளீஸ்வரன் ஆலயம் கண்கண்ட சுக்கிர ஸ்தலம். இங்கே வெள்ளிக் கிழமை தோறும் வழிபட்டு ஒரு நாழிகை எனப்படும் இருபத்தி நான்கு நிமிடம் ஆலயத்தினுள் இருப்பது சுக்கிர வலுவைக் கூட்டும்.

அதேபோல சென்னை திருமயிலையில் அமைந்திருக்கும் வெள்ளீஸ்வரன் ஆலயமும் பழமையான சுக்கிர ஸ்தலம்தான். தமிழகம் முழுவதிலும் அமைந்துள்ள வெள்ளீஸ்வரன் எனும் திருநாமத்தை முதன்மையாகக் கொண்ட திருக் கோவில்கள் அனைத்துமே சுக்கிர பரிகார ஸ்தலங்கள் தான்.

சுக்கிரனால் சோதனைகள் இருக்கும் போது, வெளிநாட்டில் இருப்பது போன்ற பரிகார ஆலயங்களுக்குச் செல்ல இயலாத நிலை இருப்பின், இருக்கும் இடத்திலேயே, ஒரு வெள்ளிக் கிழமை இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள், சுக்கிர ஹோரையில், ஒரு பதினைந்து அல்லது பதினாறு வயது இளம் கன்னிப் பெண்ணிற்கு (தானம் வாங்குபவர் சந்தேகத்திற்கிடமின்றி கன்னிப் பெண்ணாக இருக்க வேண்டியது அவசியம். அதற்காகவே சிறு வயதுப் பெண்ணைக் குறிப்பிடுகிறேன்.) ஒரு எவர்சிவர் தட்டில் (வசதியிருப்பின் வெள்ளித் தட்டில் வைத்தும் தரலாம்) ஒரு தூய வெள்ளை நிற பேன்சி டிரஸ், கொஞ்சம் மல்லிகைப் பூ, ஒரு வெள்ளிக் காசு, கொஞ்சம் தயிர், இரு கை நிறைய வெண் மொச்சை, ஒரு சென்ட் பாட்டில் வைத்து தானம் செய்யுங்கள்.
சுக்கிரன் நன்மைகளைத் தரும் அமைப்பில் இருக்கும் போது இந்த தானத்தை தரக் கூடாது.

திருமணம் தாமதமாகும் நிலையிலோ, தாம்பத்திய சுகத்தை தர இயலாத பலவீனமான அமைப்பிலோ சுக்கிரன் இருக்கும் போது, அவரது தான்யமான வெண் மொச்சையை வெள்ளிக் கிழமை தோறும் இருபது வாரங்கள் தொடர்ந்து தலைக்கடியில் வைத்துப் படுத்து, இருபது பொட்டலங்கள் சேர்த்து, கடைசி வாரம் மொத்தமாக சேர்த்து, ஜாதகத்தில் சுக்கிரன் இருக்கும் சர, ஸ்திர, உபய ராசி அமைப்பைப் பொருத்து, கிணறு, குளம், ஓடும் நதி, கடல் இவற்றில் போட வேண்டும். இதன் மூலம் சுக்கிர தோஷம் நிவர்த்தியாகும்.

(செப் 24 -2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)

17 comments :

  1. அருமையான பதிவு சார்... நன்றி...

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. ராசிச் சக்கரத்தில் உச்சம் பெற்ற கிரகம் அம்சத்தில் நீசம் பெறும் போதும், நீசம் பெற்ற கிரகம் அம்சத்தில் உச்சம் பெறுவதும் என்ன மாதிரியான பலனைத் தரும்.

    ReplyDelete
  4. கூட்டு க்ரஹ நிலைப்பாட்டில் சுக்கிரன் தனது உச்ச வீட்டில் வலிமையை கடைசி மூன்று பாகையில் ( இழந்தாலும் ) உத்திராட நட்சத்திரம் நாலாம் பாத சாரம் பெற்ற சூரியனுடனும் உத்திராடம் நாலாம் பாதம் சாரம் பெற்ற புதனுடனும் சூரியனும் புதனும் ஒரே சாரத்தில் உள்ளபொழுதும் சுக்கிரனும் அதே சாரத்தில் இருந்தால் அதாவது உத்திராடம் நாலாம் பாதம் என்ற நிலையில் சுக்கிரன் கூட்டு க்ரஹ வலிமை பெற்று அம்சத்தில் மீனா ராசியில் அவர் உள்ளபொழுது மூன்று க்ரஹங்களும் குருவின் வலிமையான அம்ச சாரத்தினால் குருவின் வீட்டில் இருந்து கொண்டு சுப பலனையும் ,சுக்கிரன் மட்டும் சதய நட்சத்திர நாலாம்பாத சாரம் பெற்று (இராகு சாரம் )மீன இராசியிலேயே இருந்தால் சுக்கிரன் வலிமை இழந்து அசுப பலனையே தருகிறார்.

    ReplyDelete
  5. அய்யா எனக்கு சுக்கிரன், சூரியனுடன் இனைந்து லக்கிணத்திற்கு 11ல் மிதுன ராசியில் உள்ளார் மேலும் புதன், குருவுடன் இணைந்து லக்கிணத்திற்கு 10 ல் உள்ளது இந்த அமைப்பு பற்றி விளக்கம் அளிக்கவும்

    ReplyDelete
  6. ஒரு நுணுக்கமான விஷயத்தை எளிமையாக விளக்கியமைக்கு நன்றி குருஜி. ரேவதி நான்காம் பாதத்தில் இராசிபடி உச்சாமாகும் சுக்கிரன், வர்கோத்தமம் பெற்றாலும் கூட அது ஒர் உச்ச நிலை அல்ல எனும் விளக்கம் அருமை. ஆயினும், வர்கோத்தமம் பெறும் கிரகம், ஆட்சி நிலைக்கு நிகரான வலுவை பெறும் என குருஜி விளம்பியதற்கு ஆட்படாமல் சுக்கிரனின் நிலைபாடு மாறுவதின் நிலைபாடு என்ன? நன்றி

    ReplyDelete
    Replies
    1. அனைத்து கேள்விகளுக்கும் பதில் தர ஆசைதான். நேரம் இல்லையே என்ன செய்வது. என் நேரம் இப்போது என்னிடம் இல்லை. பிரபலமானதற்கு நான் கொடுத்த விலை இது. பின்னால் விளக்குகிறேன்

      Delete
  7. நல்ல பயன்படும் பதிவினை தந்தாமைக்கு நன்றி குருஸி

    ReplyDelete
  8. நல்ல பயன்படும் பதிவினை தந்தாமைக்கு நன்றி குருஸி

    ReplyDelete
  9. magara rasi kanya laknam suriyan sukaran elam edthil ullathu enna palan naparkaley

    ReplyDelete
  10. மிகுந்த பயன் தரும் பதிவு. சுக்கிரன் பரிகாரங்கள் மிக எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி கூறியிருப்பது மிக அருமை. நன்றி ஐயா.

    ReplyDelete
  11. அருமையான பதிவு. சுக்கிரன் பரிகாரங்கள் மிக எளிதாக அனைவரும் புரிந்து கொள்ளும்படி கூறியிருப்பது மிக்க அருமை. நன்றி ஐயா.

    ReplyDelete
  12. எனக்கு அஸ்தம் 4 பாதம் சுக்கிரன் எந்த நிலையில் உள்ளது?

    ReplyDelete
  13. அருமைங்க சார்.. 🙏🙏🙏🙏🙏

    ReplyDelete