Tuesday, March 20, 2018

Astro Answers - Guruji Pathilkal - குருஜியின் மாலைமலர் பதில்கள் - 179 (20.3.18)

எம்.பாலசுப்பிரமணியம், சேலம்.

கேள்வி :

ஜோதிடஞானிக்கு வணக்கம். மூன்று வருடங்களுக்கு முன்பு எனக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று உங்களிடம் கேட்டேன். மிகத் துல்லியமாக என் திருமண காலத்தை சொல்லி என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறீர்கள். உங்களைப் போல துல்லியமாக பலன் சொல்பவரை இப்போதுதான் கேள்விப் படுகிறேன். மூன்று வருடங்களுக்கு முன்பு அனுப்பிய அதே கடிதத்தில் எனக்கு அரசுவேலை எப்போது கிடைக்கும் மற்றும் கிடைக்குமா? கிடைக்காதா? என்றும் கேட்டிருந்தேன். ஆனால் அந்தக் கேள்விக்கு பதில் தர மறந்து விட்டீர்கள். மீண்டும் இதற்கு பதில் வேண்டி பலமுறை கடிதம் எழுதி கஜினி முகமதுவாக ஆகிவிட்டேன். ஏற்கனவே பால் குடித்த குழந்தைக்கு மீண்டும் பால் கொடுக்க தாய் தவறுவாளா என்ன? எனக்கு எப்போது அரசு வேலை கிடைக்கும்? ஒரே வார்த்தையில் பதில் சொன்னால் கூட போதும்.



பதில் :

தேர்ந்தெடுக்கும் எந்த ஒரு கேள்விக்கும் நான் பதில் தர மறப்பது இல்லை. கிடைக்காத ஒன்றின் மேல் அதிகமான ஆர்வத்தோடு ஒருவர் கேட்கும் கேள்விக்கு சாதகமான பதில் தரமுடியாத நிலையில், பதில் சொல்லாமல் தவிர்த்து விடுகிறேன். அவ்வளவுதான்.

எஸ்.சௌமியா, சேலம்.

கேள்வி :

என்னுடைய பிரச்சினையை எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. எனக்கு நடந்த கொடுமை வேறு எந்தப் பெண்ணிற்கும் நடக்கக் கூடாது. திருமணமாகி 50 நாட்களில் என் வாழ்க்கை நரகமாகி விட்டது. கணவர் காவல்துறையில் பணி புரிந்தார். திருமணத்திற்கு முன்பே அவருக்கு ஆண்மைக்குறைவு இருப்பதை என் மாமியார் வீட்டார் மறைத்து விட்டனர். ஆனால் மணமாகி ஒரு வாரத்திலேயே ஏதாவது விசேஷம் உண்டா என்று கேட்டார்கள். இதேபோல வாரம் ஒருமுறை கேட்டு என்னைக் கொடுமைப் படுத்தினார்கள். கணவரும் தன்னுடைய பலவீனத்தை மறைக்க நண்பர்களிடம் என் மனைவி கருத்தரித்து இருக்கிறாள் என்று பொய் சொல்லி வந்திருக்கிறார். யாருக்கும் தெரியாமலேயே டாக்டரிடம் சிகிச்சையும் பெற்று வந்திருக்கிறார். விஷயம் வெளியே தெரிய வந்ததும் என் வாழ்க்கையில் இடி விழும் விதமாக கொடூரமான விதத்தில் தற்கொலை செய்து கொண்டார். மாமியார் வீட்டார் என் கணவரின் வேலையும், இன்சூரன்ஸ் பணமும் எனக்கு வரக் கூடாது என்பதற்காக என்மீது கேஸ் போட்டு இருக்கிறார்கள். எனக்கு பணமும், பதவியும் வேண்டாம். நிம்மதிதான் வேண்டும். கேஸ் எப்போது முடிவுக்கு வரும்? இரண்டாவது திருமணத்திற்கு மனம் இன்னும் பக்குவப்படவில்லை. என் இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையுமா?

பதில் :


சுக்

சூ,கே

பு

சனி

5-6-1993,
பகல் 12.44, சேலம்

செவ்


சந்

ராகு

குரு

(சிம்ம லக்னம், தனுசு ராசி. 2-ல் குரு. 4-ல் ராகு. 5-ல் சந். 7-ல் சனி. 9-ல் சுக். 10-ல் சூரி, கேது. 11-ல் புத. 12-ல் செவ். 5-6-1993, பகல் 12.44, சேலம்)

லக்னத்திற்கு ஏழில் சனியும், ராசிக்கு எட்டில் செவ்வாயும் சுபத்துவமின்றி பாப வலுப் பெற்றுள்ள நிலையில் உனக்கு 28 வயதிற்கு முன்பு திருமணம் செய்து வைத்தது தவறு. ஆயினும் நடப்பவை அனைத்தும் நம்முடைய கர்மாவின் படிதான் என்பதால் சிலவற்றை நீ அனுபவித்தேதான் ஆகவேண்டும்.
விருச்சிகராசியின் வேதனைகள் விடியத் தொடங்கியிருக்கும் நிலையில் தனுசு ராசிக்காரர்களின் இன்னல்கள் பற்றிய கேள்விகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. என்னிடம் நேரில் ஜாதகம் பார்க்க வருபவர்களில் தனுசுவினர் கூடிக் கொண்டே இருக்கிறார்கள். நீயும் தனுசு ராசிதான்.
கடுமையான ஜென்மச்சனி உனக்கு நடந்து கொண்டிருப்பதால் அடுத்த இரண்டு வருடங்களுக்கு உன் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு இல்லை. லக்னாதிபதி சூரியன் பத்தாமிடத்தில் திக்பலமாக இருப்பதாலும், 2020 முதல் சூரியதசை ஆரம்பிக்க இருப்பதாலும், இன்னும் இரண்டு வருடம் கழித்து உன் சிக்கல்கள் தீரத் துவங்கும். 28 வயதிற்கு பிறகு உன்னுடைய இரண்டாவது வாழ்க்கை ஆரம்பித்து நன்றாகவும் இருக்கும்.

பி.விஜயலட்சுமி, அம்பாசமுத்திரம்.

கேள்வி :

17 வருடங்களுக்கு முன் கணவர் என்னை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். எங்கு சென்றார் என்று தெரியவில்லை. எங்கு இருக்கிறார்? மீண்டும் அவரைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா?

பதில் :

இதுபோன்ற கேள்விகளுக்கு கணவன், மனைவி இருவரின் ஜாதகமும் இருந்தால்தான் துல்லியமான பதிலைச் சொல்ல முடியும். இருப்பினும் உங்களுடைய ஜாதகப்படி கடகலக்னம், மகரராசியாகி தற்போது உங்களுக்கு எட்டுக்குடைய சனியின் தசை நடந்து கொண்டிருப்பதால் இன்னும் நான்கு வருடங்களுக்கு 2022 செப்டம்பர் வரை அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. அதன்பிறகு உறுதியான தகவல்கள் தெரியும்.

எல்.மணிரத்தினம், சென்னை-21.

கேள்வி :

தற்போது கால் டிரைவராக வேலை செய்கிறேன். இதற்கு முன் செங்கல், மணல், கமிஷன், தொழில் செய்தேன். இரண்டு பெண் குழந்தை உள்ளது. சேமிப்பு என்று எதுவும் இல்லை. பழையபடி செங்கல், மணல் கமிஷன் தொழில் செய்யலாமா? அதையும் தந்தையுடன் இணைந்து செய்யலாமா? பணம் சேமிக்கும் நிலை எப்போது வரும்? எதிர்காலம் எப்படி இருக்கும்?

பதில் :


சு,ரா

சூ,செ

28-6-1985
4.00pm
சென்னை

பு
குரு

சந்,கே
சனி

(விருச்சிக லக்னம், துலாம் ராசி. 3-ல் குரு. 6-ல் சுக், ராகு. 8-ல் சூரி, செவ். 9-ல் புத. 12-ல் சனி, சந், கேது. 28-6-1985, மாலை 4 மணி, சென்னை).

செவ்வாயின் விருச்சிக லக்னத்தில் பிறந்து தொழில் ஸ்தானாதிபதியான சூரியனுடன் செவ்வாய் இணைந்துள்ள நிலையில் டிரைவர் தொழிலை விட செங்கல், மணல் தொழில்தான் உங்களுக்கு ஏற்றது. கடந்த ஏழு வருட காலமாக ஏழரைச்சனி நடந்ததால் சேமிக்கும் அளவிற்கு உங்களுக்கு வருமானம் இல்லை.

தற்போது சனி முடிந்து விட்டதாலும், அடுத்து வரும் தசாபுக்திகள் நன்றாக இருப்பதாலும் இந்த வருடம் ஜூன் மாதத்தில் இருந்து வருமானம் வரும் தொழில் அமைப்புகள் உங்களுக்கு அமையும். தந்தைக்கு மேஷராசியாகி அஷ்டமச் சனி முடிந்து விட்டதால் அவருடன் இணைந்தே தொழில் செய்யலாம். செங்கல் தொழிலில் இனிமேல் சேமிக்கும் அளவிற்கு வருமானம் வரும். எதிர்காலம் பயப்படும் படியாக இருக்காது.

சி.ஆறுமுகம், கன்னியாகுமரி.

கேள்வி :

எலக்டிரிக்கல் படிப்பை முடித்து ஒருவருடம் மின்சார வாரியத்தில் தொழில் பழகுனராக இருந்தேன். அதன் பிறகு படிப்பு சம்பந்தமான எந்த வேலையும் கிடைக்கவில்லை. ஆனால் படித்து முடித்ததில் இருந்தே அரசுவேலையில் சேர வேண்டும் என்கிற எண்ணம் அதிகமாக இருக்கிறது. இப்போது வரைக்கும் அதில் ஒரு விழுக்காடு கூட குறையவில்லை. மிகவும் கவனம் செலுத்தி முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய ஜாதகத்தை பார்த்து நல்ல பரிகாரமும், பதிலும் தரும்படி கேட்டுகொள்கிறேன்.

பதில் :


ரா

குரு

சந்

15-9-1987, காலை 9.20, நாகர்கோவில்

சூ,செ

சனி

பு,சு
கே

(துலாம் லக்னம், மிதுன ராசி. 2-ல் சனி. 6-ல் ராகு. 7-ல் குரு. 9-ல் சந். 11-ல் சூரி, செவ். 12-ல் புத, சுக், கேது. 15-9-1987, காலை 9.20, நாகர்கோவில்)
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவிழந்தாலே அதிக முயற்சிகளுக்கு பிறகுதான் எதுவும் நடக்கும். உங்கள் ஜாதகப்படி லக்னாதிபதி சுக்கிரன் நீசமானாலும், உச்சபுதனுடன் இணைந்து நீசபங்கமாகி இருப்பதாலும், மின்சாரத் துறைக்கு காரணமான சூரியன் சிம்மத்தில் அமர்ந்து குருவின் பார்வையில் இருப்பதாலும் உங்களுக்கு மின்சார வாரியத்தில் நிச்சயமாக இந்த வருடம் நவம்பருக்கு பிறகு நிரந்தர வேலை கிடைக்கும். சுக்கிரனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை ஏற்கனவே மாலைமலரில் எழுதி இருக்கிறேன். அதைச் செய்து கொள்வது நல்லது.

கா.அறிவுமதி, ராமநாதபுரம்.

கேள்வி :

அதிகமாக சாமி கும்பிடுகிறேன். ஆனால் எந்த சாமியும் என் வேண்டுதலை ஏற்றுக் கொள்ள மாட்டேங்கிறது. நான் கும்பிடுகிற விதம் சரியில்லையா? எப்படி கும்பிட்டால் சாமி நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றும்? என்னுடைய ஜாதகத்திற்கு ஏற்ற பெயர் அறிவுமதியாக இருக்குமா? இது பொருத்தம்தானா? 37 வயதாகியும் என் அண்ணனுக்கு இன்னும் வரன் அமையவில்லை. அண்ணனுக்கு முடிந்த பிறகுதான் எனக்கு முடியும் என்று ஜாதகத்தில் உள்ளதாக இங்குள்ள ஜோதிடர்கள் சொல்கிறார்கள். அவனுக்கு முடிந்த பிறகு எனக்கு திருமணமானால்தான் எனக்கு சந்தோஷம். இது நடக்குமா? என் திருமணம் எப்போது?

பதில் :


பு
சூ,சு
ரா

குரு

20-4-1986, மதியம் 1.04, கமுதி


சந்

செவ்

சனி

கே

(கடக லக்னம், சிம்ம ராசி. 2-ல் சந். 4-ல் கேது. 5-ல் சனி. 6-ல் செவ். 8-ல் குரு. 9-ல் புத. 10-ல் சூரி, சுக், ராகு. 20-4-1986, மதியம் 1.04, கமுதி)

அறிவுமதி என்ற அழகான, அருமையான பெயரை வைத்துக் கொண்டிருக்கும் உனக்கு எதற்கம்மா இந்த சந்தேகம்? பெயரை மட்டும் வைத்து எதையும் சாதித்து விடலாம் என்றால் கோவில் வாசலில் உள்ள பிச்சைக்காரர்கள் அனைவருக்கும் பெயர் மாற்றி வைத்து விடலாமே?
உன் அண்ணனுக்கு எப்போது திருமணம் ஆகும் என்பதை அவருடைய ஜாதகத்தை வைத்துத்தான் சொல்ல முடியும். உனக்கு கடக லக்னம், சிம்ம ராசியாகி திருமணத்தை தரக்கூடிய ஏழாம் அதிபதியான சனியின் புக்தி கடந்த மாதம் ஆரம்பித்துள்ளதால் வரும் ஆவணி முதல் தைக்குள் திருமணம் நடந்து விடும்.

குரு பார்த்த லக்னாதிபதியின் தசை நடந்து கொண்டிருப்பதாலும், அடுத்தடுத்து யோகதசைகள் நடக்க இருப்பதாலும் நிரந்தரமான வேலை பார்க்கும் நல்ல மாப்பிள்ளை உனக்கு அமைந்து திருமணத்திற்குப் பிறகு பெயர் பொருத்தமாக இருக்கிறதா என்று சந்தேகப்படத் தேவையில்லாத அளவிற்கு நன்றாக இருப்பாய் அம்மா. வாழ்த்துக்கள்.

பூர்வீகச் சொத்துக்களை அழித்து விடுவாரா?

வி.வினாயகம், புதுச்சேரி.

கேள்வி :

நண்பரின் மகன் ரெஸ்ட்டாரண்ட் தொழில் செய்து வருகிறான். கடந்த நான்கு வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு ஆடம்பரமாக வீண்செலவுகளைச் செய்து கொண்டிருக்கிறான். எந்த நோக்கில் இதையெல்லாம் செய்கிறான் என்று தெரியவில்லை. பூர்வீகச் சொத்துக்களை அழித்து விடுவானோ என்று நண்பர் மன உளைச்சலில் இருந்து வருகிறார். அவனது எதிர்காலம் நன்றாக அமையுமா?

பதில் :


ல,கே

11-11-1991, இரவு 8.15, சென்னை

சனி

குரு
சந்
ரா

பு

சூ,செ

சுக்

(மிதுன லக்னம், தனுசு ராசி. 1-ல் கேது. 3-ல் குரு. 4-ல் சுக். 5-ல் சூரி, செவ். 6-ல் புத. 7-ல் சந், ராகு. 8-ல் சனி. 11-11-1991, இரவு 8.15, சென்னை.)

ஒருவருக்கு ஆறு அல்லது எட்டுக்குடையவரின் தசை நடக்கும்போது ஏழரைச் சனியும் சந்திக்குமானால் கெடுபலன்கள் அதிகமாக நடக்கும். நண்பரின் மகனுக்கு மிதுன லக்னத்திற்கு வரக்கூடாத ஆறுக்குடைய செவ்வாய் தசை 2013 முதல் நடந்து கொண்டிருக்கிறது. செவ்வாய், நீச சூரியனுடன் இணைந்திருப்பதாலும், ஏழரைச்சனி நடந்து கொண்டிருப்பதாலும் அனைத்திலும் ஏறுக்குமாறான விஷயங்களை மட்டுமே செய்து கொண்டிருப்பார். அரசியல் இவருக்கு ஒத்து வராது. ஆனால் சொல்வதைக் கேட்கும் மனநிலையில் இவர் இருக்க மாட்டார்.

இன்னும் இரண்டு வருடங்களுக்கு இவருக்கு நல்ல பலன்கள் எதுவும் நடப்பதற்கு இல்லை. அடுத்து வரும் ராகுதசையும், குருவின் வீட்டில் குருவின் பார்வையில் இருந்தாலும் நீச சுக்கிரனின் நட்சத்திரத்தில் இருப்பதால் பெரிய நன்மைகளை செய்யாது. லக்னாதிபதி ஆறில் மறைந்து ஒன்பதுக்குடையவன் எட்டில் அமர்ந்திருப்பதால் பூர்வீக சொத்துக்களை இவர் அழிக்கவே செய்வார். நீசமான சுக்கிரனும் அதை உறுதி செய்கிறார். சொத்துக்கள் இவர் பெயரில் இல்லாமல் இவரது வாரிசுகள் அனுபவிக்கும்படியான காரியங்களை செய்து கொள்ளவும்.

No comments :

Post a Comment