Thursday, December 31, 2015

மீனம்: 2016 ராகு – கேது பெயர்ச்சிப் பலன்கள்

மீனம்

இந்த ராகு-கேதுப் பெயர்ச்சியில் நல்ல பலன்களை அனுபவிக்க போகும் ராசிகளில் மீனமும் ஒன்று. இதுவரை மீனத்திற்கு ஒன்று, ஏழாமிடங்களில் அமர்ந்து சாதகமற்ற பலன்களைக் கொடுத்துக் கொண்டிருந்த ராகு-கேதுக்கள் மிகவும் நல்ல பலன்களைத் தரக்கூடிய ஆறு, பனிரெண்டாமிடங்களுக்கு மாறுவதால் மீன ராசிக்கு இந்தப் பெயர்ச்சி மிகுந்த நன்மைகளை தரும்.

ஆறாமிடத்திற்கு மாறும் ராகுவால் கடன் தொல்லை நீங்குதல், ஆக்கபூர்வமான கடன் அமைதல், கடனால் பிரச்சினை இல்லாத சூழல், ஆரோக்கிய மேன்மை, இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் அகலுதல் வேலை, செய்யும் இடத்தில் பிரச்சினை இல்லாத தன்மை போன்ற நல்ல பலன்கள் நடக்கும் என்பதால் இந்த பெயர்ச்சி மீனத்திற்கு சந்தோஷத்தைத் தரும் என்பது நிச்சயம்.

ஏற்கனவே ராகு ஏழாமிடத்தில் இருந்த பாதிப்புகளால் மணவாழ்வில் குறைகள் இருந்தவர்கள் வாழ்க்கைத் துணையால் நிம்மதிக் குறைவை சந்தித்தவர்கள் இனிமேல் அது நீங்கப் பெறுவீர்கள். கருத்துவேறுபாடுகளாலோ, வேலை விஷயமாகவோ பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்று சேர்வீர்கள்.

கூட்டுத்தொழிலில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி பங்குதாரர்களிடையே இணக்கமான சூழ்நிலை உருவாகி தொழில் மேன்மை பெறும். தவறான மூன்றாம் நபர்களால் பிரிக்கப்பட்ட நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் ஒன்று சேர்வீர்கள்.

சண்டை போட்டுக் கொண்டிருந்த எதிர்கால தம்பதியினர் தவறுகளை உணர்ந்து ஒருவருக்கொருவர் குணங்களை மாற்றிக் கொள்வீர்கள். இதுவரை தாமதமான இளைய பருவத்தினருக்கு உடனடியாக திருமணம் கூடி வரும்.

இதுவரை உங்கள் ராசியில் இருந்து உங்களை முடக்கி வைத்திருந்த கேது பகவான் தற்போது அவருக்கு பிடித்த வீடான கும்ப வீட்டிற்கும், பனிரெண்டாமிடத்திற்கும் மாறி செல்வதால் இதுவரை உங்களை விட்டு விலகியிருந்த சுறுசுறுப்பு மீண்டும் உங்களிடம் வந்து ஒட்டிக்கொள்ளும்.

தவறான முடிவுகளை எடுத்து வருந்திக் கொண்டிருந்தவர்கள் இப்போது உங்களை சீர்ப்படுத்திக் கொள்வீர்கள். ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தற்போது நிவாரணம் கிடைக்கும்.

உங்கள் சிந்தனை தெளிவாக இருக்கும். பேச்சு சிறக்கும், செயல்திறன் கூடும், உங்களுடைய நல்ல வார்த்தைகளைக் கொண்ட பேச்சுக்களால் அடுத்தவர்களால் விரும்பப்படுவீர்கள். குறிப்பிட்ட சிலருக்கு இதுவரை இருந்து வந்த தாழ்வுமனப்பான்மை இனிமேல் நீங்கும்.

பனிரெண்டாமிடத்து கேதுவின் முக்கிய பலனாக குறிப்பிட்ட சில மீனராசிக்காரர்களுக்கு இதுவரை இல்லாத அளவிற்கு ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். 2016 ஆரம்பத்திலேயே சிலருக்கு கோவில் பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். சிலர் சிதிலமடைந்து கவனிப்பாரற்று கிடைக்கும் பழைய கோவில்களை புனருத்தானம் செய்வித்து அதன் மூலம் ஏழு தலைமுறைக்குத் தேவையான புண்ணியத்தை சேர்த்துக் கொள்வீர்கள்.

கேதுபகவான் ராசியிலிருந்து விலகுவதால் உங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். முகத்தில் எந்நேரமும் சந்தோஷம் தெரியும். இதுவரை மனதில் இருந்து வந்த குழப்பங்கள் உடனே விலகும். சென்ற காலங்களில் உங்களை வாட்டி வதைத்த சோம்பல், மந்தம், விரக்தி மற்றும் தோல்வி மனப்பான்மைகள் இனிமேல் உங்களிடம் நெருங்காது. அனைத்து விஷயங்களிலும் இருந்த வந்த தொல்லைகள் தடைகள் தாமதங்கள் விலகி அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசப் போகிறது.

இந்தக் ராகு கேதுப் பெயர்ச்சிக்குப் பிறகு புதிய மனிதரைப் போல உணருவீர்கள். உங்களின் அந்தஸ்து மதிப்பு அனைத்தும் உயரும் நேரம் இது. அடுத்தவர்களால் கௌரவமாக நடத்தப் படுவீர்கள். நீங்கள் தொட்டது துலங்கும் நேரம் இது. நீங்கள் நினைத்தது நடக்கும் காலம் இது. பிறந்த ஜாதகத்தில் நல்ல யோக தசா புக்திகள் நடந்து கொண்டு இருந்தால் உங்களில் சிலர் சாதனைகளை படைத்து புகழின் உச்சிக்கு செல்வீர்கள்.

இதுவரை வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த போட்டிகளும், எதிர்ப்புகளும், பொறாமைகளும், தடைகளும் விலகி அனைத்தும் உங்களுக்கு நன்மை தரும் விஷயங்களாக மாறும். பணிபுரியும் இடங்களில் இதுவரை இருந்து வந்த நிம்மதியற்ற சூழல் இனிமேல் இருக்காது.

உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களுக்கு தொல்லை கொடுத்த மேல் அதிகாரிகள் மாறுதலாகி உங்களைப் புரிந்து கொண்டவர்கள் அங்கே வருவார்கள். இதுவரை தடைப்பட்ட பதவிஉயர்வு, சம்பளஉயர்வு போன்றவைகள் இப்போது கிடைக்கும்.

தொழில்அதிபர்கள், உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் உள்ளிட்ட எல்லாத் துறையினருக்கும் இது மிகவும் நல்ல நேரம். எந்தக் காரியமும் உங்களுக்கு அதிக முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். ஊரில் இருக்க முடியாமல் வெளியூர் சென்றவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பி பழைய வாழ்க்கையைத் தொடரும்படி சம்பவங்கள் நடைபெறும். காதலால் மனஉளைச்சலுக்கு ஆளானவர்கள் மற்றும் காதலைப் பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவார்கள் அல்லது புதிய துணை கிடைக்கும்.

சிலருக்கு வாழும் ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உண்மையான அவதார புருஷர்களை அடையாளம் காண்பீர்கள். உங்களில் சிலர் ஆன்மிகத்தின் உச்ச நிலைக்கு சென்று அடுத்தவரால் ஆராதிக்கப்படுவீர்கள்.

நீண்ட தூர புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

கோவில் அர்ச்சகர்கள், நமது பாரம்பரியம் பண்பாடு சம்பந்தப்பட்ட கலைகளை கற்றுத்தருபவர்கள் நீதித்துறையில் பணிபுரிபவர்கள், மேன்மை தங்கிய நீதியரசர்கள், சட்டவல்லுனர்கள், பணம் புரளும் துறைகளான வங்கி சிட்பண்ட் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இந்தப் பெயர்ச்சி மிகுந்த நன்மைகளைத் தரும்.

இதுவரை உங்களைப் பிடிக்காமல் உங்களை எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் உங்களைப் பார்த்து பயப்படும்படியாக நிலைமை மாறும். கடன் பிரச்னைகள் தலை தூக்காது. புதிய கடன்கள் வாங்கும்படி நேரிட்டாலும் பழைய கடன்களை சுத்தமாக அடைத்துவிட்டு நிம்மதியாக இருப்பீர்கள்.

வேறு இன மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் இந்த வருடம் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும். வெகு தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆனாலும் உற்சாகமாக இருப்பீர்கள்.

ஆகஸ்டுக்குப் பிறகு குருபகவானால் நல்ல மாறுதல்கள் இருக்கும். வீடு மாற்றம் தொழில் மாற்றம் வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான ஒரு விஷயத்தில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும். இயந்திரம் சம்பந்தப்பட்ட தொழில், நகரும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு இப்போது தொழில் மாற்றங்கள் இருக்கும். அது நல்லதாகவும் இருக்கும்.

பூர்வீக சொத்து சம்பந்தமாக இது வரை இருந்து வந்த பாகப்பிரிவினை பிரச்னைகள், பங்காளித் தகராறு போன்றவைகள் இந்த வருடம் சுமுகமாக உங்களுக்கு லாபகரமாக முடிவுக்கு வரும். போலீஸ், கோர்ட், கேஸ் என்று அலைந்தவர்கள் உங்கள் கண்முன்பே உங்களுக்கு சாதகமாய் பிரச்னைகள் முடிவதைக் காண்பீர்கள்.

கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். இதுவரை இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. எனவே ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும்.

இதுவரை மகன் மகள் விஷயத்தில் இருந்து வந்த மனக் கவலைகள் தீரப் போகிறது. வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்த இளைய வயதினருக்கு நல்ல வேலை கிடைக்கும். தாமதமாகிக் கொண்டே வந்த மகன், மகள் திருமணத்தை நடத்த முடியும். குழந்தைகளால் பெருமைப் படத்தக்க சம்பவங்கள் இருக்கும்.

பங்குதாரர்கள் இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிதாக ஆடம்பர வாகனம் வாங்குவீர்கள். அரசாங்க வழியில் நன்மைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உங்களுடைய மாற்றங்களை அடுத்தவர்கள் உணரும்படி நடந்து கொள்வீர்கள்.
 
பெண்களுக்கு இது மிகச் சிறப்பான நன்மைகளைத் தரும் பெயர்ச்சியாகும்.. உங்களின் மதிப்பு உயரும். நான்குபேர் கூடும் இடத்தில் தனித்துவமாக தெரிவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

இதுவரை காணாமல் போயிருந்த உங்களின் மனதைரியம் இப்போது மீண்டும் வரும். எதையும் சமாளிப்பீர்கள். ஒரு சிலர் ஏதேனும் ஒரு செயலால் புகழ் அடைவீர்கள். சகோதர உறவு மேம்படும். இளைய சகோதரத்தால் நன்மை உண்டு. தம்பி தங்கையர்களுக்கு நல்லது செய்ய முடியும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள்.

மொத்தத்தில் மீனத்திற்கு திருப்புமுனையாக இந்தப் பெயர்ச்சி அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:

தொழில் வியாபாரம் வேலை மற்றும் இருப்பிடங்களில் நல்ல மாற்றம் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்பெறும். சிலர் வெளிநாட்டுப் பயணம் செய்வீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தற்போது வேலை கிடைக்கும். மாணவர்கள் இளைஞர்களின் எதிர்கால நல்வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் இது. வருங்காலத்தில் நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்தப் பெயர்ச்சி நிர்ணயிக்கும் என்பதால் மிகவும் பயனுள்ள அமைப்பாக இது இருக்கும். இந்த வருடம் அறிமுகமாகும் ஒருவர் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு தொடரும் உறவாக மாறுவார்.

உத்திராட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:

வேறு இன மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் இப்போது நல்ல நண்பர்களாகக் கிடைப்பார்கள். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். உங்களின் தொழில், வேலை விஷயங்களில் இப்போது நல்ல மாற்றங்கள் உண்டு. குறிப்பாக மருத்துவம், ஆன்மிகம், எலக்டிரிகல் எலக்ட்ரானிக்ஸ், அழியும் பொருட்கள் போன்ற துறைகளில் இருப்பவர்கள் மிகப்பெரிய லாபம் அடைவீர்கள். இயல்பாகவே மனசாட்சிப்படியும் கடவுளுக்குப் பயந்தும் நடக்கக் கூடிய உங்களுக்கு இம்முறை அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.

ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு:

பணம் சம்பாதிப்பதில் இந்த காலகட்டம் உங்களுக்கு மறக்க முடியாத வகையில் இருக்கும். நீங்கள் நேர்மையான வழிகளையே கடைப்பிடிப்பவர் என்பதால் தனயோகம் இப்போது முழுமையாக உண்டு. தந்தைவழியில் உங்களுக்கு எல்லாவகையான ஆதரவுகளும் கிடைக்கும். உங்களின் ஆன்ம பலம் கூடும். மிகவும் நம்பிக்கையாக இருக்க முடியும். கலைத்துறையினருக்கு இதுவரை இருந்த அனைத்துத் தடைகளும் விலகுகிறது. அரசாங்கம் சம்பத்தப்பட்ட அனைத்தும் இனிமேல் உங்களுக்கு கைகூடி வரும். ஏதேனும் ஒரு பொறுப்பு கிடைக்கும். இனி எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகிறது.

பரிகாரங்கள்

ராகு கேதுக்களால் ஏற்படும் நன்மைகளைக் கூட்டிக் கொள்ள ஒரு முறை ஸ்ரீகாளஹஸ்தி திருநாகேஸ்வரம் குன்றத்தூர் நாகநாதசுவாமி திருக்கோவில் காஞ்சிபுரம் சித்திரகுப்தன் ஆலயம் போன்ற திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்.

3 comments :

  1. புது ஆங்கில வருட புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா. நன்றி.

    ReplyDelete