Thursday, 31 December 2015

கும்பம்: 2016 ராகு – கேது பெயர்ச்சிப் பலன்கள்

கும்பம்

கும்பராசிக்கு இதுவரை சாதகமற்ற பலன்களைக் கொடுத்து வந்த அஷ்டம ராகுவும், இரண்டாமிட கேதுவும் தற்போது கெடுபலன்களைத் தர இயலாத விதத்தில் ஏழாமிடத்திற்கும், ராசிக்கும் மாற இருக்கிறார்கள்.

ஏற்கனவே ராகு-கேதுக்கள் இருந்து வந்த எட்டு-இரண்டாமிடங்கள் கும்பத்தினரை கடுமையாகப் பாதித்து கெடுபலன்கள் நடந்த இடம் என்பதால் தற்போது மாற இருக்கும் ஒன்று, ஏழாமிடங்கள் என்பதால் நிச்சயமாக கெடுதல்கள் எதுவுமிருக்காது.

அதேவிட முக்கியமாக பெயர்ச்சியின் ஆரம்பத்தில் ஏழாமிடத்திற்கு வரும் ராகு ஏற்கனவே அங்கு நிலை கொண்டு உங்கள் ராசியைப் பார்த்து சில மாதங்களாக நல்ல பலன்களை உங்களுக்கு தந்து கொண்டிருக்கும் குருபகவானுடன் இணைந்து சுபத்தன்மை பெற்றவராகி உங்களுக்கு நற்பலன்களை அளிக்கும் தகுதி பெற்றவராகிறார் என்பதால் ஏழாமிடத்து ராகு உங்களுக்கு நன்மைகளைச் செய்வார்.

அதேபோல இதுவரை இரண்டாமிடத்தில் இருந்து உங்களின் தனம், வாக்கு, குடும்பம் ஆகியவற்றைப் பாதித்து உங்களின் பணவரவுகளைத் தடுத்து உங்களுக்குப் பொருளாதாரச் சிக்கல்களை இதுவரை கொடுத்துக் கொண்டிருந்த கேதுபகவானும் அந்த இடத்திலிருந்து மாறி ஜென்மம் எனப்படும் ராசிக்கு மாறுகிறார் என்பதால் கேதுவும் நற்பலன்களையே செய்வார்.

பொதுவாக ஜென்மகேது நன்மைகளைச் செய்வதில்லை என்ற கருத்து இருந்தாலும் கும்பம், விருச்சிகம், கன்னி ஆகிய மூன்று வீடுகளில் இருக்கும் கேது கெடுபலன்களைத் தரமாட்டார் எனும் விதிப்படி தற்போது உங்களின் ராசியில் அமரும் கேதுபகவான் கண்டிப்பாக உங்களுக்கு நன்மைகளை மட்டுமே செய்வார்.

அதிலும் பெயர்ச்சியின் ஆரம்பத்தில் சுமார் எட்டுமாதங்கள் வரை கேதுபகவான் குருவின் பார்வையில் இருப்பதால் மிகுந்த நன்மைகளை உங்களுக்குச் செய்வார் என்பது உறுதி.

ஏழாமிடத்து ராகுவின் குரு இணைவால் அந்த வீட்டின் சுபத்தன்மைகள் அதிகரித்து திருமணம், வாழ்க்கைதுணை லாபம், நண்பர்கள் உதவி, கூட்டுத்தொழில் மேன்மை, பயணநன்மை போன்ற பலன்கள் இனிமேல் கும்ப ராசிக்காரர்களுக்கு நடைபெற ஆரம்பிக்கும்.

அதேபோல கேதுபகவான் சுபத்தன்மை பெற்று ராசியில் இருப்பதால் குருபார்வை பெற்ற ராசிநாதன் சனியின் மறு உருவமாகி உங்களின் சிந்தனை, செயல்திறன், பேச்சு இவைகளைச் சீர்படுத்தி ஊக்கமும் ஏற்படுத்தி அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு ஏற்றதினை உண்டாக்குவார் என்பது உறுதி.

பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பணியில் இருக்கும் சில கும்ப ராசிக்காரர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு மதிப்பு வாய்ந்த பதவி, அல்லது அதிகாரம் தரும் பதவி மற்றும் அந்தஸ்து உண்டாகும் செயல்கள் கௌரவமான நிகழ்வுகள் நடந்து நீங்கள் புகழ் பெறுவதற்கான அமைப்பு இப்போது இருக்கிறது.

அதிக முனைப்பு இல்லாமலேயே தொழில் முயற்சிகளில் பெரிய லாபங்கள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. கமிஷன் தரகு போன்றவைகளின் மூலமாக நல்ல பெரிய தொகை ஒரே நேரத்தில் ‘லம்ப்’பாக கிடைக்கும். பங்குச் சந்தை லாட்டரி போட்டி பந்தயங்கள் போன்றவைகள் இப்போது கை கொடுக்கும். வருகின்ற வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. வீட்டுமனை, நிலம் போன்றவைகள் இப்போது வாங்கிப் போடுவீர்கள். குழந்தைகளின் பேரில் டெபொசிட் செய்வீர்கள்.

வியாபாரிகளுக்கு வியாபாரம் திருப்திகரமாக இருக்கும். நல்ல வேலைக்காரர்கள் அமைவார்கள். எந்த ஒரு விஷயமும் வெற்றி தரும். ஆரம்பிக்கும் காரியத்தை சுபமாக முடிக்க முடியும். கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.

சில தொழில்முனைவோர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப் பெற்று பெரும்பணக்காரர்கள் ஆவதற்கு தற்போது வாய்ப்பு இருக்கிறது. விடா முயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள்அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம்.

இளைய பருவத்தினர் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இப்போது சந்திப்பீர்கள். உங்கள் பிற்பகுதி வாழ்க்கையை நிர்ணயிக்கும் பெயர்ச்சியாக இது இருக்கும். உங்களின் புத்திசாலித்தனத்திற்கும், செயல் திறமைக்கும் சவால்கள் இருக்கும். மனதிற்குள் நீங்கள் போட்டு வைத்திருக்கும் திட்டங்களை இப்போது செயல்படுத்தி சோதனை செய்வீர்கள்.

வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இப்போது உங்களுக்கு கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் இருக்கும்.

புதிதாக வேலை தேடிகொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ற வேலை உடனடியாக கிடைக்கும். ஒருசிலருக்கு வெளியூரிலோ வெளிமாநிலத்திலோ தூரதேசங்களிலோ தங்கி வேலை செய்ய கூடிய அமைப்புகள் உருவாகும். இருக்கும் இடத்தில் இருந்து தொலைதூரம் செல்லும் படியான மாற்றங்கள் சிலருக்கு உருவாகும்.

அரசு வேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மத்திய மாநில அரசுகளின் முதன்மைத் தேர்வுகளான ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் போன்ற பதவிகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும். ஏற்கனவே தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

பெண்களுக்கு நன்மைகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். நீங்கள் சொல்வதையும் கேட்கலாமே என்று கணவர் நினைப்பார். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள்.

சிலருக்கு சொந்த வீடு அமையும் யோகம் மிகவும் அருமையாக இருக்கிறது. வாகன மாறுதல் கண்டிப்பாக இருக்கும். தற்போது இருக்கும் வாகனத்தை விட சிறப்பான புதிய வாகனம் வாங்க முடியும். இதுவரை வாகனம் இல்லாதவர்களுக்கு நல்ல வாகனம் வாங்கும் யோகம் இருக்கிறது.

கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பீர்கள். குழந்தைகளால் படிப்புச் செலவுகள் போன்றவைகள் இருந்தாலும் அவர்களைப் பற்றிய கவலை இருக்காது. குடும்பத்தில் பொருட் சேர்க்கை இருக்கும். சேமிக்க முடியும் அளவிற்கு வருமானம் இருக்கும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள்.

மகன் மகள்களால் பெருமைப்படக் கூடிய செய்திகள் இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்யும் பிள்ளைகளை தற்போது பார்க்க முடியும். பிள்ளைகள் விரும்பும் பள்ளி, கல்லூரிகளில் அவர்கள் விரும்பும் படிப்பில் சேர்க்க முடியும். இதுவரை சேமிக்க முடியாதவர்கள் குழந்தைகளின் பெயரில் அவர்களின் எதிர்காலத்திற்காக ஏதேனும் ஒரு வழியில் முதலீட்டு சேமிப்புகள் செய்ய முடியும்.

நீண்ட நாட்களாக தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு சிறப்பாகச் செய்ய முடியும். நேர்த்திகடன்கள் செலுத்துவீர்கள். ஞானிகள் தரிசனம் கிடைக்கும். ஷீரடி மகான் ராகவேந்திரர் மகாபெரியவர் பகவான்ரமணர் சத்யசாய் போன்ற ஆன்மிகத் திருவுருக்கள் அவதரித்து அருளாட்சி செய்த திருத்தலங்களை தரிசிப்பீர்கள்.

இதுவரை தீர்த்தயாத்திரை செல்லாதவர்கள் நினைத்த புனிதத்தலத்திற்கு சென்று வருவீர்கள். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் கயிலை போன்ற வடமாநில புனித யாத்திரை செல்லும் பாக்கியம் சிலருக்கு கிடைக்கும்.

சொல்லிக்கொடுக்கும் பணி, சாப்ட்வேர், அச்சகம், புத்தகம், அக்கவுண்ட்ஸ், பத்திரிக்கைத்துறை போன்ற துறைகளில் இருக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி அபரிதமான நன்மைகளைத் தரும். மேற்கண்ட துறைகளில் இருப்போரின் வாழ்க்கை லட்சியங்கள் இப்போது நிறைவேறும்.

ரியல்எஸ்டேட், வீடுகட்டி விற்போர், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், காய்கறி மொத்த வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு பட்ஜெட்டை மீறி செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் நல்ல வருமானம் வந்து அனைத்தையும் ஈடு கட்டும்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும். தாய்வழி சொந்தங்களிடம் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் தீரும். அம்மாவின் ஆதரவு கிடைக்கும். தாயார் வழியில் நன்மைகள் உண்டு. மாமன்கள், சித்திகள் உதவுவார்கள். உயர்கல்வி கற்க இருந்து வந்த தடைகள் நீங்கி சிலர் மேற்படிப்பு படிப்பீர்கள்.

இந்தப் பெயர்ச்சி முழுக்க உங்களின் பொருளாதார நிலைமை கவலைகள் இன்றி மிகவும் சரளமாகவும் மேன்மையாகவும் இருக்கும். ஆரம்பத்தில் இருந்தே. ஏதேனும் ஒரு வகையில் பணம் வந்து போய்க் கொண்டிருக்கும். என்பதோடு வருமானக் குறைவு என்பது இருக்கவே இருக்காது என்பதால் இந்த ராகு கேது பெயர்ச்சியை நீங்கள் வரவேற்கவே செய்வீர்கள்.

அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு:

இந்தப் பெயர்ச்சியால் உங்களுக்கு இரட்டிப்பு நன்மைகள் கிடைக்கும். பணப்பிரச்னைகள் தீரும். கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது. ஒரு சிலர் வெளிநாட்டில் வேலை செய்யப் போக வேண்டியிருக்கும். பூமி லாபம் கிடைக்கும். வீடு, காலிமனை கண்டிப்பாக வாங்க முடியும். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கு மிகவும் நல்ல பலன்கள் உண்டு. எதிர்கால முன்னேற்றத்திற்கான திருப்புமுனைகள் இப்போது இருக்கும். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்த படியே நடக்கப்போகும் காலம் இது.

சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு:

உங்களுக்கும் இந்தப் பெயர்ச்சி நல்ல பலன்களைக் கொடுக்கும். உங்களில் சிலர் கிழக்கு நாடுகளுக்கு வேலை விஷயமாகச் செல்வீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். எதிர்கால நல்வாழ்விற்கு சேமிப்பது நல்லது. வீண் செலவுகளை முடிந்தவரை குறைத்துக் கொண்டால் வளமான வாழ்க்கை உண்டு. சுயதொழில் வியாபாரம் போன்றவைகளை நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆயினும் வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாக முன்னேற்றத்திற்கானதாக வருமானம் வரும் வகையில்தான் செலவாகும்.

பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு:

கலைஞர்கள் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு சில நல்ல முன்னேற்ற வாய்ப்புக்கள் கிடைக்கும். ஏதேனும் ஒரு செயல் அல்லது நிகழ்ச்சியால் நீங்கள் புகழ் அடைவீர்கள்.உங்களில் கணக்கிலும், கம்ப்யூட்டரைக் கையாளுவதிலும் புலியான சிலருக்கு புதிய வேலை மாற்றங்களும், பன்னாட்டு கம்பெனியில் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கும். டிரெயினிங்கிற்காக வெளிநாடு போவீர்கள். எதிரிகள் உங்களைக் கண்டாலே ஒளியும்படி இருக்கும். மறைமுக எதிரிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் நடக்க இருக்கிறது.

பரிகாரங்கள்

ராகுபகவானால் ஏற்பட இருக்கும் நன்மைகளைக் கூட்டிக்கொள்ள சலவைத் தொழிலாளி ஒருவருக்கு சனிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் அவர் இருக்கும் இடத்திற்கு தேடிச் சென்று அடுப்புக்கரியினை ஏழு கிலோவிற்குக் குறையாமல் தானம் செய்யுங்கள்.

2 comments :

 1. appa nenjila paala vaarthinga gurugi
  thank you very much

  ReplyDelete
 2. dear guruji.
  born 4-11-1988
  chennai
  night 11.40 pm
  age 27 , lots of problems and hurdles , one year ah job edhum illa pls show some remedies,
  does the dasa and buthi doing this pls help thank u

  ReplyDelete