Thursday, March 5, 2015

ராசி எப்போது பலன் தரும்? C - 009 - Raasi Eppothu Palan Tharum?


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 

கைப்பேசி எண் : 8681 99 8888 

ஜோதிடத்தில் “விதி கெட்டால் மதியைப் பார்” என்றொரு பழமொழி உண்டு.

இதன் அர்த்தம் என்னவெனில் விதி எனப்படும் ஒரு ஜாதகத்தின் ஆதாரத் தூணான லக்னமும், அதன் அதிபதியும் வலிமை இழந்திருந்தால் ராசி எனப்படும் சந்திரன் (சந்திரனுக்கு மதி என்றொரு பெயர் உண்டு.) இருக்கும் இடத்தையும் அதன் அதிபதியையும் கணித்துப் பலன் சொல்ல வேண்டும் என்பதுதான்.

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி வலுவாக இருக்கிறாரா அல்லது பலவீனமாக இருக்கிறாரா என்று கணிப்பதற்கே ஒரு ஜோதிடருக்கு அதிக அனுபவமும் கணிப்புத் திறனும் தேவைப்படும்.

மேம்போக்காக ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி நன்றாகவே இருக்கிறார் என்று தோன்றினாலும் நவாம்சம் போன்ற சூட்சும விஷயங்களில் அவர் பலவீனம் அடைந்திருந்தால் லக்ன அதிபதியால் ஜாதகரை வழி நடத்த முடியாது. இது போன்ற நிலையில் அந்த ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசியே லக்னம் போலவும், அந்த ராசியின் அதிபதியே லக்னாதிபதி போலவும் செயல்படுவார்.

பெரும்பாலான ஜாதகங்களில் லக்னாதிபதி செயலிழந்து ராசிநாதன் செயல்படும் அமைப்பை நான் பார்த்திருக்கிறேன். எனவே ஒருவருக்கு பலன் சொல்வதற்கு முன் ஜாதகத்தில் ராசி வலுவாக இருக்கிறதா, லக்னம் வலுவாக இருக்கிறதா என்பதைத் துல்லியமாகக் கணிக்கவேண்டியது அவசியம்.

ஒரு முக்கியமான அமைப்பாக, தாமத திருமணம் மற்றும் தாமத புத்திர பாக்கியம் போன்றவைகளைத் தரும் களத்திர மற்றும் புத்திர தோஷ அமைப்புள்ள ஜாதகங்களில் கண்டிப்பாக லக்னாதிபதி வலுவிழந்து இருப்பார். இதையே வேறுவிதமாகச் சொல்லப் போனால் லக்னாதிபதி வலுவாக இருக்கும் ஜாதகங்களில் எவ்வித தோஷங்களும் கெடுபலன்களைச் செய்வது இல்லை.

இந்த உலகில் சகலவிதமான சுகங்களையும், பாக்கியங்களையும், ஒருவர் நேர்மையான முறையில், சரியான பருவத்தில், அனுபவிக்க வேண்டுமெனில் அவரது ஜாதகத்தில் லக்னாதிபதி வலுப்பெற்று இருக்க வேண்டும் லக்னாதிபதி பாபக்கிரகமாக இருந்தால் ஆட்சி, உச்சம் போன்ற நேர்வலு அடைவதைவிட “’எனது பாபக்கிரகங்களின் சூட்சும வலுத் தியரி” ப்படி சூட்சும வலுப் பெற்று இருக்க வேண்டும்.

பாபக்கிரகங்களான சனி, செவ்வாய் சுபர் பார்வையின்றி நேரிடையாக லக்னத்தில் ஆட்சி பெறுவதும் ஜாதகம் வலுவிழந்த நிலைதான்.

இதன் விளக்கங்களை ஏற்கனவே நான் எழுதியுள்ள “பாபக் கிரகங்களின் சூட்சும வலு” எனும் ஆய்வுக் கட்டுரையிலும், சென்ற வருடம் எழுதிய “உங்கள் ஜாதகம் யோக ஜாதகமா” எனும் தொடர் கட்டுரைகளிலும் குறிப்பிட்டிருக்கிறேன்.

லக்னாதிபதி வலுவிழக்கும் போதுதான் தோஷங்களால் கெடுபலன்கள் உண்டாகும். பாக்கியங்கள் தடைப்படும். உதாரணமாக களத்திர தோஷம் எனப்படும் தார தோஷ மற்றும் புத்திர தோஷ ஜாதகங்களை எடுத்துக் கொண்டோமேயானால் கடுமையான தோஷங்கள் இருந்தாலும் லக்னாதிபதி வலுவாக இருக்கும் ஒருவருக்கு சரியான பருவத்தில் திருமணமும், புத்திர பாக்கியமும் கிடைக்கும்.

லக்னாதிபதி வலுவாக இல்லாத அதேபோன்று தோஷமுள்ள ஒரு நபருக்கு தாம்பத்திய சுகமும், வாரிசும் தாமதமாகும். இதுபோன்ற நிலையில் லக்னத்தின் பணியை ராசியே எடுத்து செய்யும். இதனால்தான் லக்னம், ராசி இரண்டையும் இணைத்தே பலன் சொல்லவேண்டும் என்று நமது ஞானிகள் அறிவுறுத்தினார்கள்.

லக்னம் வலுவில்லாமல் ராசி முன்னின்று செயல்படும் ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாமிடம், எட்டாமிடம் நன்றாக இருந்தும் ஒருவருக்கு திருமணம் தாமதமாகும்போது, ராசியைக் கவனித்தோமானால் ராசிப்படி ஏழு, எட்டாமிடங்கள் பலவீனமாக இருக்கும்.

இது போன்ற நிலையில் ராசிக்கு ஏழில் சனி, ராசிக்கு எட்டில் செவ்வாய் போன்ற அமைப்போ, ராகு, கேதுக்கள் ராசியோடு சம்பந்தப்பட்டோ, ராசிக்கு இரண்டு, எட்டு என்ற அமைப்பிலோ இருக்கும்.

ஒருவரின் ஜாதகத்தில் வாழ்க்கைத் துணையைக் குறிக்கும் ராசிக்கு ஏழாமிடத்திலோ, குடும்ப வீட்டிற்கு நேரெதிர் வீடான எட்டாமிடத்திலோ பாபக் கிரகங்கள் இருந்தால் திருமணம் தாமதமாகும்.

எட்டாமிடத்தில் இருக்கும் பாபக் கிரகம் குடும்ப பாவமான இரண்டாமிடத்தைப் பார்த்துப் பலவீனப்படுத்தும் என்ற அர்த்தத்தில் இங்கு ஏழாமிடத்தோடு எட்டாமிடமும் சேர்த்துச் சொல்லப்படுகிறது. இதைப் போலவே ராசிக்கு இரண்டாமிடத்தில் ஒரு பாபக் கிரகம் இருந்தாலும், ராசியிலேயே இருந்து ராசிக்கு ஏழாமிடத்தைப் பார்த்தாலும் இது பொருந்தும்.

பெரும்பாலான தாமத திருமணங்கள் மற்றும் விவாகரத்துக்குப் போகும் நிலைகள் போன்ற ஜாதகங்களைக் கவனித்தால், அதில் ராசிக்கு ஏழில் செவ்வாய், எட்டில் சனி, இரண்டில் செவ்வாய், ஏழில் சனி அல்லது இவர்கள் இருவரும் ராகு கேதுக்களோடு இரண்டு, ஏழு, எட்டில் மாறி அமர்வது போன்ற நிலைகளைக் காணலாம்.

இந்த தோஷம் ஆணாக இருந்தால் முப்பத்தி மூன்று வயது வரையிலும், பெண்ணாக இருந்தால் முப்பது வயது வரையிலும் நீடிப்பதால் இந்த வயதிற்குப் பிறகே இந்த அமைப்பு உள்ளவர்களுக்குத் திருமணம் நடக்கிறது. அதற்கு முன் திருமணம் நடந்தால் இரண்டு வாழ்க்கை நிலையை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் இது ஆணுக்கு முப்பத்தி ஐந்து, பெண்ணுக்கு முப்பத்திமூன்று வரை நீடிப்பதும் உண்டு.

ஏழாமிடத்தைப் போலவே லக்னத்தின் ஜீவன ஸ்தானத்தின்படி ஒருவர் சம்பந்தம் இல்லாத தொழிலைச் செய்து கொண்டிருக்கும் நிலையில். அவருடைய ஜாதகத்தை துணுக்கமாக கவனித்தால் லக்னாதிபதி வலுவிழந்து ராசிக்குப் பத்திற்குடைய தொழிலை அவர் செய்து கொண்டிருப்பார்.

உதாரணமாக ஒருவர் டாக்டருக்கு படிக்க முடியுமா என்ற கேள்விக்கு லக்னப்படி பத்தாமிடத்தோடு சூரியன், செவ்வாய், குரு சம்பந்தப்படவில்லை எனில் படிக்க முடியாது என்று கணிக்க வேண்டியிருக்கும்.

ஆனால் லக்னாதிபதி அந்த ஜாதகத்தில் ராசியை விட வலுவிழந்து, அதாவது லக்னத்தை விட ராசியும், ராசிநாதனும் வலுப் பெற்று ராசிக்குப் பத்தாமிடம் செவ்வாயின் வீடாகி அங்கே குரு பார்வையுடன் சூரியன் அமர்ந்திருந்தால் நமது கணிப்பு தவறும்.

ஒருவரின் தொழிலைக் கணிப்பது எப்படி?

ஒருவர் என்ன தொழில் செய்வார் என்று துல்லியமாகக் கணிப்பதற்கான விதிகள் நமது வேதஜோதிடத்தில் குறைவாகவே சொல்லப்பட்டிருக்கின்றன. முந்தைய காலத்தில் தொழில்கள் குறைவாக இருந்ததும், குலத்தின் அடிப்படையில் தொழில்கள் பிரித்துக் கொள்ள்ளப்பட்டதும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

பெரும்பான்மையான நமது மூலநூல்கள் பத்தாம் வீட்டு அதிபதி நிற்கும் நவாம்ச அதிபதியின் தொழில் ஒருவருக்கு அமையும் என்று சொல்கின்றன. ஆயினும் எனது முப்பதாண்டுகளுக்கும் மேலான ஆய்வில் இந்த விதி பத்து சதவிகித ஜாதகங்களில் கூட பொருந்தி வரவில்லை.

அதேபோல லக்னாதிபதி வலுவாக இருப்பது என்பதும் வெறும் பத்து சதவிகித ஜாதகங்களில்தான். இதன் உண்மையான அர்த்தம் என்னவெனில் இந்த உலகில் முயற்சியின்றி அதிர்ஷ்டத்தால் எதையும் அனுபவிக்கப் பிறந்தவர்கள் வெறும் பத்து சதவிகிதம் பேர்தான். மற்றவர்கள் அனைத்தையும் போராடியே பெறுவதற்குப் பிறந்தவர்கள்.

ஆகவே தொண்ணூறு சதவிகித ஜாதகங்களின் தொழில் அமைப்புகளைப் பார்த்தோமேயானால், ராசிப்படி அவரது பத்தாம் பாவத்தின் தன்மை என்ன? அது சரமா, ஸ்திரமா, உபய ராசியா?, அது நெருப்பு, நிலம், காற்று, நீர்த் தத்துவத்தில் எந்தப் பிரிவைச் சேர்ந்தது? பத்தாம் வீடு மேஷம் எனப்படும் சர நெருப்பா? கன்னி எனும் உபய நிலமா? விருச்சிகம் எனப்படும் ஸ்திர நீரா? போன்றவைகளையும், அதன் அதிபதி யார்? பாபக் கிரகமா? சுப கிரகமா? அவரின் குணங்கள், தன்மைகள் என்ன? என்பதைப் பின்பற்றியே இருக்கும்.

இதனுடன் பத்தாம் வீட்டிற்கு கிடைக்கும் பார்வைகளையும், பத்தாம் அதிபதிக்கு கிடைக்கும் சேர்க்கை போன்ற தொடர்புகளையும் இணைத்துப் பார்த்தோமேயானால் ஒருவரின் தொழிலைத் கிட்டத்தட்ட சரியாகச் சொல்லி விடலாம்.

ஜோதிடத்தில் எதுவுமே எளிமையானது இல்லை. என்னதான் நீங்கள் கணித்தீர்கள் என்றாலும் நடக்கும் விளைவு என்பது பரம்பொருளின் ஆளுகைக்கு உட்பட்டது என்பதால் ஒரு ஜோதிடனின் எந்தக் கணிப்பும் நூறு சதவிகிதம் துல்லியமானது அல்ல.

சில நேரங்களில் லக்னநாதனும், ராசிநாதனும் ஒருவராக இருக்கும் சூழ்நிலைகளிலும், ராசிக்கும், லக்னத்திற்கும் பத்தாம் அதிபதி கெட்டிருக்கும் சூழல்களிலும், ஒருவரின் தொழிலைக் கணிப்பது கடினமாக இருக்கும். இதுபோன்ற நிலைகளில் அப்போது நடந்து கொண்டிருக்கும் தசையின் நாதனே அவருக்குத் தொழிலைத் தரும் பொறுப்பை ஏற்பார்.

சிலர் நிரந்தரமில்லாமல் ஒவ்வொரு மகாதசை நடக்கும்போதும் தசைக்கு ஒரு தொழில் செய்வது இதுபோன்ற அமைப்பினால்தான்.

மார்ச்  5, 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது)

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

8 comments :

  1. ஐயா தங்களை நேரில் எங்கே தொடர்பு கொள்ளலாம்

    ReplyDelete
    Replies
    1. எனது உதவியாளர்களின் எண் 8870998888 அல்லது 8681998888 தொடர்பு கொள்ளவும்

      Delete
    2. உதவியாளர் உங்களை தொடர்பு கொள்வதற்கு பணம் கேட்கிறார்...என்ன செய்வது? விளக்கம் கூறுங்கள் குருஜி

      Delete
    3. Account moolamaa sent pannittu guruvoda appointment vaangunga...avanga fix pannuvaanga...

      Delete
  2. Thank you Guruji for sharing your knowledge...

    ReplyDelete
  3. அற்புதமான கட்டுரை நன்றி குருஜி அவர்கட்கு

    ReplyDelete
  4. சிந்தனையை தூண்டும் நல்ல பதிவு ஐயாஂநன்றி

    ReplyDelete
  5. குருவே சரணம் 🙏 விதியை மதியால் (சந்திரன்) வெல்லலாம் என்று உணர்த்திவிட்டீர்கள் ☺️🙏

    ReplyDelete