Tuesday, February 17, 2015

மாசி மாத பலன்கள்


மேஷம்

மாசி மாதம் முழுவதும் உங்களின் ராசிநாதன் செவ்வாய் பனிரெண்டாம் வீட்டில் மறைந்தாலும் உச்ச சுக்கிரனுடன் இணைந்தும் உச்ச குருவின் பார்வையில் இருந்தும் இரண்டு பெரும் சுபர்களுடன் சம்பந்தப்பட்டு சுபத்துவம் அடைந்ததால் இந்த மாதம் முழுவதுமே மேஷ ராசிக்கு சுபகாரியங்கள் வீட்டில் நடக்க கூடிய மாதமாக இருக்கும்.

மாதம் முழுவதும் சூரியன் லாப ஸ்தானத்தில் பலத்துடன் இருக்கிறார் என்பதால் இந்த மாதம் குழந்தைகளால் சந்தோஷமான செய்திகள் இருக்கும். இந்த அமைப்பு வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளை வலுப்படுத்தும் என்பதால் சுயதொழில் புரிவோருக்கும், வியாபாரிகளுக்கும் நல்ல வருமானம் இருக்கும். வெளிநாட்டில் இருக்கும் மகன், மகளிடமிருந்து நல்ல செய்தி வரும். குறிப்பிட்ட சிலர் பேரன், பேத்திகளை பார்க்க வெளிநாடு சென்று வருவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் லாபங்களை பெறுவார்கள்.

அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களின் ஆலோசனையும், அறிவுரையும் ஏற்கப்படும். மற்றவர்களால் மதிக்க படுவீர்கள். மேலதிகாரியின் தொந்தரவு இருக்காது. நீண்ட நாட்களாக கேட்டு வந்த சம்பள உயர்வுக்கு முதலாளி இப்போது சம்மதிப்பார். அரசு ஊழியருக்கு இதர வருமானங்கள் சிறப்பாக இருக்கும். தனியார் துறையினருக்கு கூடுதல் வருமானம் உண்டு. கலைஞர்கள் சிறப்பு பெறுவார்கள். பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்பு கூடும்படியான சம்பவங்கள் இருக்கும்

ரிஷபம்

மாசி மாதம் ராசிநாதன் சுக்கிரன் பதினொன்றாம் வீட்டில் உச்ச பலத்துடன் இருப்பதும் பத்தில் சூரியன் அமர்ந்து தன் நான்காம் வீட்டை பலப்படுத்துவதும் ரிஷப ராசிக்கு நன்மைகளைத் தரும் அமைப்பு என்பதால் இந்த மாதம் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கும், கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் இனிய சம்பவங்கள் நடக்கும் மாதமாக இருக்கும்.

மாத ஆரம்பமே ஜோராக ராசிநாதனின் உச்சபலத்துடன் ஆரம்பிப்பதால் இந்த மாதம் குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் உள்ள மாதமாக உங்களுக்கு இருக்கும். மனைவி மற்றும் பங்குதாரர்கள் வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்லும் மனைவியால் உங்களுக்கு உதவிகளும் தேவைகளை நிறைவேற்றுதலும் இருக்கும். கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் மிகச் சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.

நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் இந்த மாதம் நல்லபடியாக முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவுவார்கள். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது. காவல் துறையினருக்கு இது நல்ல மாதம். பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும் படி மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு வேலை உறுதியாகும்.

மிதுனம்

பூரண யோகாதிபதி சுக்கிர பகவான் பத்தாம் இடத்தில் இருப்பது சாதக மற்ற நிலைதான் என்றாலும் அங்கு அவர் உச்ச பலத்துடன் இருப்பதாலும் செவ்வாயுடன் இணைந்திருப்பதாலும் உங்கள் ராசிக்கு நன்மை தரக்கூடியவராகி மாசி மாதம் முழுவதும் மிதுன ராசிக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது நிச்சயம்.

நடுத்தர வயதை தாண்டியவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை வைப்பது நல்லது. சிறிய விஷயத்திலும் அலட்சியம் வேண்டாம். பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கலாம். தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். சகோதரிகளால் செலவு உண்டு. கணவன், மனைவி உறவு சுமாராகத்தான் இருக்கும். அலுவலகத்தில் பெண்களின் கீழ் வேலை பார்ப்பவர்கள் இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும்.

தந்தை வழியில் நல்ல சம்பவங்கள் இருக்கும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கங்கள் விலகும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும். கணிதம், அக்கௌன்ட், மென்பொருள் துறையினர்கள் மேன்மை அடைவார்கள். வியாபாரிகளுக்கு இந்த மாதம் சுமாரான நன்மைகள் உண்டு. கலைஞர்களுக்கு முயற்சிகளுக்கு பின்புதான் நல்லவை நடக்கும். சுயதொழில் செய்பவர்கள் வளம் பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு அலுவலகங்களில் நெருக்கடிகள் இருக்கும். பத்திரிக்கை துறையினருக்கு இது நல்ல மாதம்.

கடகம்

மாத ஆரம்பத்தில் ராசிநாதன் சந்திரன் ஆறில் மறைவதும். மாதம் முழுவதும் சூரியன் எட்டில் இருப்பதும். கடக ராசிக்கு சாதகமற்ற நிலைதான் என்றாலும் ராசியில் உச்ச குரு இருந்து ராசியை தனிப்புதன் பார்ப்பதால் ராசிக்கு சுபத்துவம் உண்டாகி மாசி மாதம் எவ்வித சிக்கலும் இல்லாமல் நன்மைகளைத் தரும் மாதமாகவே அமையும் என்பது உறுதி. அதே நேரத்தில் சகல விஷயங்களும் முயற்சிகளுக்கு பின்பே வெற்றி அடையும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

பிள்ளைகள் விஷயத்தில் சங்கடங்கள் இருக்கலாம். குறிப்பாக கல்லூரிக்கு செல்லும் பிள்ளைகளை கண்காணிப்பது நல்லது. நீண்ட காலமாக முடியாமல் இழுத்துக் கொண்டு இருந்த விஷயங்கள் சாதகமான முடிவுக்கு வரும். தனாதிபதி சூரியன் மாதம் முழுவதும் இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பாராத நல்ல பண வரவு உங்களுக்கு இருக்கும்.குலதெய்வ தரிசனம் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவீர்கள்.

கணவன், மனைவி உறவு அனுசரணையாக இருக்கும். நண்பர்கள் உதவுவார்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. விளையாட்டு துறையினர், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் திருப்பு முனையாக அமையும். ஆன்மீக விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். வெகு சிலருக்கு திருத்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு தற்போது திருமணம் கை கூடும் நேரம்.

சிம்மம்

நீண்ட நாட்களுக்கு பிறகு ராசிநாதன் சூரியன் மாதம் முழுவதும் ராசியைப் பார்க்கும் அமைப்பு மாசி மாதத்தில் உருவாவதாலும் தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் எட்டில் மறைந்து உச்சம் பெறுவதாலும் இந்த மாதம் சிம்மத்தின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நன்மை தரக்கூடிய மாறுதல்களும், உயர்வுகளும் உள்ள மாதமாக இருக்கும்.

பொதுவாழ்வில் அக்கறையும், நேர்மையான எண்ணங்களையும் கொண்டவர்களான உங்களுக்கு இந்த மாதம் செலவுகள் அதிகமாக இருக்கும் என்று கிரக நிலைகள் காட்டுகின்றன. பணம் இருந்தால் தானே செலவு செய்ய முடியும். எனவே பணவரவும், தனலாபங்களும் இந்த மாதம் உங்களுக்கு நிறைவாகவே இருக்கும். இதுவரை நல்ல வேலை கிடைக்காத இளைய பருவத்தினர் இந்த மாதம் மனதிற்கு பிடித்த வேலையில் சேருவீர்கள். சிலருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும்.

நீண்ட நாட்களாக அம்மாவை விட்டுப் பிரிந்து இருப்பவர்கள் இந்த மாதம் அவரை நேரில் சென்று பார்த்து, ஆசிர்வாதங்களைப் பெற்று வருவது உங்களுக்கு இன்னும் சிறப்புகளைச் சேர்க்கும். பெண்கள் விஷயத்தில் நன்மை நடக்கும். பெண்கள் உதவுவார்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல லாபம் உண்டு. சுயதொழில் செய்பவருக்கு இந்த மாதம் நல்ல முன்னேற்றம் உண்டு. ஒரு சிலருக்கு எதிர்கால நல்வாழ்விற்கான அறிமுகங்கள் அடிப்படையான சில நிகழ்ச்சிகள் இந்த மாதம் நடக்கும்.

கன்னி

மாசிமாதம் முழுவதும் ராசிநாதன் புதன் ஐந்தாம் இடத்தில் நட்பு வலுவுடன் இருப்பதும் ராசியை உச்ச சுக்கிரன் பார்ப்பதும் சிறப்பான ஒருநிலை என்பதால் கன்னி ராசிக்கு எதிர்காலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும், வழிமுறைகளையும் இளைய பருவத்தினருக்கு சுட்டிக்காட்டும் மாதமாக மாசி மாதம் அமையும். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இந்த மாதம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் இருக்கும்.

நீண்ட நாள் நடக்காமல் இழுத்துக்கொண்டு இருந்த விஷயங்கள் நல்லபடியாக முடிவுக்கு வரும்.குறிப்பிட்ட சில கன்னி ராசிக்காரர்களுக்கு வேலைமாற்றம், தொழில் மாற்றம், வீடு மாற்றம் போன்றவைகள் நடக்கும். இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் நல்லவைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

தனலாபாதிபதிகள் வலுவாக இருப்பதால் தாராளமான பணவரவு இந்த மாதம் இருக்கும். வெளிநாட்டில் இருந்து பணம் வரும். சகோதரர்களால் நன்மை உண்டு. தந்தைவழி உறவினர்கள் உதவுவார்கள். குறிப்பாக அத்தைகளால் உதவிகள் இருக்கும். வயதான சிலர் பேரன், பேத்திகளை பார்ப்பதற்காக வெளிநாடு போவீர்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு இந்த மாதம் மிகவும் நல்ல மாதமே. குறிப்பாக காவல்துறை போன்ற அதிகாரம் மிக்க துறையினர் வளம் பெறுவார்கள்.

துலாம்

துலாம்நாதன் சுக்கிரன் செவ்வாயுடன் இணைந்து ஆறாம் வீட்டில் இருந்தாலும் அவர் உச்ச பலம் அடைந்திருப்பதால் இதுவரை தடைப்பட்டுக் கொண்டிருந்த உங்களது அனைத்து முயற்சிகளும் மாசி மாதம் முதல் தடைகள் நீங்கி ஏழரைச் சனியின் தாக்கம் இல்லாமல் உங்கள் வாழ்க்கையை முன்னேற்றப் பாதையில் செல்ல வைக்கும்.

‘பருத்தி புடைவையாய்க் காய்த்தது’ என்பதைப் போல சுக்கிரன் சனியின் சுபபலம் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். அதிக முயற்சி இல்லாமலே இந்த மாதம் அதிர்ஷ்டத்தினால் சில காரியங்கள் நடந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். யோகக் கிரகங்கள் அனைத்தும் வலுவாக இருப்பதால் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விஷயங்களும் இந்த மாதம் நல்லபடியாக நடக்கும். குறிப்பிட்ட சிலருக்கு அவர்களின் வாழ்க்கை லட்சியத்தை அடைவதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகள் இந்த மாதம் இருக்கும்.

பெண்களால் லாபம் இருக்கும். சகோதரிகள் உதவுவார்கள். அம்மாவின் ஆசிர்வாதம் கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்ஷம் நிலவும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். கணவன், மனைவிக்குள் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும். வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் உண்டு.எதிர்கால முன்னேற்றதிற்கான மாற்றங்கள் இந்த மாதம் நடைபெறும். ஒரு சிலருக்கு அடிப்படை அமைப்புகளில் மாற்றங்கள் இருக்கும்.

விருச்சிகம்

ராசிநாதன் செவ்வாய் ஐந்தாம் வீட்டில் உச்ச சுக்கிரனுடன் இணைந்து உச்ச குருவின் பார்வையில் இருப்பதால் ராசியும், ராசிநாதனும் சுபத்துவம் அடையும் நிலையில் விருச்சிக ராசிக்கு மாசி மாதம் எவ்வித கெடுபலன்களையும் தராமல் நன்மைகளையே தரும் மாதமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சிலருக்கு வீடுமாற்றம், தொழில் இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவைகள் நடக்கலாம்.

தேவைக்கு அதிகமாக கடன் வாங்க வேண்டாம். உடல் நலத்தில் இந்த மாதம் அக்கறை காட்டவேண்டி இருக்கும். யாரையும் நம்பி வாக்குறுதி கொடுக்க வேண்டாம். கிரெடிட்கார்டு இருக்கிறது என்று தேவை இல்லாததை வாங்கிவிட்டு சிக்கலில் மாட்டாதீர்கள். ராசிநாதன் சுபத்துவம் பெறுவதால் ஜென்மச் சனியின் கெடுபலன்கள் குறைந்து நல்ல பலன்கள் நடைபெற ஆரம்பிக்கும். நீண்ட நாள் நிலுவையில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். போலீஸ், கோர்ட், கேஸ் உள்ளவருக்கு சாதகமான திருப்பங்கள் உண்டாகும்.

வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனகசப்புகள் விலகும். விருச்சிக ராசி இளைஞர்களுக்கு இதுவரை நடந்து வந்த எதிர்மறையான பலன்கள் நீங்கி, நல்ல பலன்கள் இனிமேல் நடக்கும். இளைய பருவத்தினர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த மாதம் சந்திப்பீர்கள். சிறிய விஷயங்களால் பிரிந்து இருந்தவர்கள் அதை மறந்து ஒன்று கூடுவீர்கள். வெளிநாடு சம்பந்தப்பட்ட இனங்களில் வேலை செய்பவர்களுக்கு உயர்வுகள் இருக்கும்.

தனுசு

ராசிநாதன் குருபகவான் உச்ச வக்ரம் பெற்று இருந்தாலும் ஒன்பதிற்குடைய சூரியன் பாக்கிய ஸ்தானத்தை பார்த்து வலுப்படுத்துவதால் தனுசு ராசிக்கு மாசி மாதம் மோசமான பலன்கள் எதையும் தராமல் நல்ல பலன்களையே தரும் மாதமாக இருக்கும் என்பதோடு உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் சூரியனைக் கண்ட பனி போல இப்போது விலகும் என்பது உறுதி.

மாத ஆரம்பத்தில் செவ்வாயும் உச்ச சுக்கிரனும் இணைந்து உங்களின் தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவதால் எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும் உங்களுடைய வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் பாதிக்கப்படாது. வியாபாரிகளுக்கு இது சுமாரான காலகட்டம் தான். வேலைக்காரர்களை நம்ப வேண்டாம். அரசு, தனியார்துறை ஊழியர்கள் தங்களுடைய மேலதிகாரிகளின் பேச்சை கேட்டு செயல்படுவது நல்லது. சட்டத்தை மீறி யாருக்கும் சலுகைகள் காட்டாதீர்கள்.

காவல்துறை, சாப்ட்வேர் போன்ற நுணுக்கமான துறைகளில் இருப்பவர்கள் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் ஏற்படும் சிறிய கருத்து வேற்றுமைகளுக்கு விட்டுக் கொடுத்து போவது நல்லது. வீண் வாக்கு வாதங்களை தவிருங்கள். அடுத்தவருக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் போகும் என்பதல் யாருக்கும் எதுவும் தருவதாக ப்ராமிஸ் செய்யும் முன் யோசிப்பது நல்லது. குலதெய்வ வழிபாடு மற்றும் நேர்த்திக்கடன்களை இந்த நேரங்களில் நிறைவேற்ற முடியும்.

மகரம்

எட்டிற்குடையவன் இரண்டாம் வீட்டில் இருந்தாலும் ராசியில் புத பகவான் சுபத்துவத்துடன் இருந்து ராசியும் ராசிநாதனும் குருவின் பார்வையில் இருப்பதாலும் சுக்கிரன் உச்சம் பெற்றுள்ளதாலும் மாசி மாதம் மகர ராசிக்கு மேன்மைகளையும், நன்மைகளையும் தரும் மாதமாக இருக்கும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிறைவேற்றாமல் இருந்த நேர்த்திக் கடன்களை செலுத்த முடியும்.

மாதம் முழுவதும் அஷ்டமாதிபதி சூரியன் இரண்டாம் வீட்டில் அமர்ந்து தனது எட்டாம் வீட்டையே பார்ப்பதால் தனம், வாக்கு, குடும்பஸ்தானம் பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த மாதம் பேச்சில் கவனமாக இருங்கள். நிதானம் இழந்து எவரையும் பேசிவிட வேண்டாம். ஐந்துபத்துக்குடைய சுக்கிரன் உச்சமடைந்திருப்பதும் ஒன்பதாம் அதிபதி ராசியில் இருப்பது என்பது எப்பொழுதோ ஒருமுறை அமையும் விசேஷ அமைப்புக்கள் என்பதால் உங்கள் ராசிக்கு கிரகங்களால் தற்போது ஏற்பட்டிருக்கும் சாதக நிலையை உபயோகப்படுத்திக் கொண்டு மகர ராசிக்காரர்கள் தங்களது நீண்டகால லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

சமுதாயத்தில் அனைத்து தரப்பு மகர ராசிக்காரர்களுக்கும் இந்த மாதம் ஏதேனும் ஒரு வகையில் நன்மைகளை தரும் மாதமாக இருக்கும். இளைய பருவத்தினருக்கு முக்கியமான திருப்பு முனைகள் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாதவருக்கு அது உறுதி ஆகும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் சந்தோஷத்தை தருவார்கள். வெகு சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் இருக்கும்.

கும்பம்

யோகாதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று இன்னொரு யோகாதிபதி புதன் குருவின் பார்வை பெற்று இருக்கும் நிலையில் மாசி மாதம் பிறப்பதால் கும்ப ராசிக்கு இப்போது இருந்து வரும் தடைகள் நீங்கி பொருளாதார மேன்மைகளையும், வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் நன்மைகளையும் செய்யும் மாதமாக இது இருக்கும்.

கும்ப ராசிக்கு இதுவரை நடந்து வந்த எதிர்மறை பலன்கள் இனிமேல் இருக்காது. ஜூலை மாதம் நடைபெறப் போகும் குருப்பெயர்ச்சி மிகவும் அற்புதமான பலன்களை மகர ராசிக்கு தரும் என்பதல் நாளை நீங்கள் நன்றாக இருக்க போவதற்கான வழிமுறைகள் இப்போதே ஆரம்பிக்கத் துவங்கும். பண வரவு தாராளமாக இருக்கும். கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த ஒரு காரியம் உங்கள் எண்ணம் போல் நிறைவேறும்.
கணவன், மனைவி உறவில் கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். 

ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள். வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்போது எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. பண வரவுகள் தாராளமாக இருந்தாலும் சிக்கனத்தை கடைபிடியுங்கள். தேவையற்ற பொருட்கள் வாங்குவதால் விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மீனம்

எட்டிற்குடையவன் ராசியில் உச்சம் பெற்று கெடுதல் தரும் நிலையில் இருந்தாலும் ராசிநாதனின் உச்சபார்வை அவரை வலிமை இயக்க செய்யும் என்பதால் சுக்கிரனால் வரும் கெடுபலன்கள் அனைத்தும் மீன ராசிக்கு இல்லாமல் மாசி மாதம் நற்பலன்களையும், சாதகமான மாற்றங்களையும் தரும் மாதமாகவும் இருக்கும்.

பாக்கெட்டில் இருந்து பணம் எடுக்கும் முன் ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பது நல்லது. ‘வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்’ என்ற பழமொழியை இந்த மாதம் மீன ராசிக்காரர்கள் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். சுக்கிரன் ராசியில் உச்ச பலத்துடன் அமர்ந்து ஏழாம் பாவத்தை வலுப்படுத்துவதால் மனைவி, நண்பர்கள் போன்ற வழியில் சந்தோஷமான நிகழ்சிகளும், சுபகாரியங்களும் இருக்கும். உல்லாசமாக இருப்பீர்கள். கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள்.

குருபகவான் ராசியை பார்ப்பதால் வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகள் எந்தவித சிக்கலும் இன்றி நல்ல படியாக நடக்கும்.பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் மேல் ஒரு கண் இருக்கட்டும். அவர்கள் யாருடன் பழகுகிறார்கள் என்பதை கண்காணியுங்கள். வேலை செய்யும் இடங்களில் அனாவசியமாக எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம்.சூரியன் வலுவாக இருப்பதால் அரசு ஊழியர்கள், அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டவர்கள், காண்ட்ராக்டர்கள் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது நன்மைகளைத் தரும் மாதம். அதே போல தந்தையின் தொழிலை செய்பவர்களுக்கும் இந்த மாதம் நன்மைகள் நடக்கும்.

No comments :

Post a Comment