Tuesday, July 16, 2013

ஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...!


ஏழரைச்சனி உங்களைப் பிடிக்கப் போகிறது என்றாலே அதைக் கேட்பவருக்கு சர்வ அங்கமும் ஆடிப் போய்விடும்.

சனி பகவான் சிவபெருமானை அணுகி “பரமேஸ்வரா.. தங்களை ஏழரை நிமிடம் பிடிக்க வந்திருக்கிறேன்” என்றதும் (நமக்கு ஒரு வருடம் என்பது தெய்வங்களுக்கு ஒரு நிமிடம்) அவர் “உன்னையும், சர்வ உலகத்தையும் படைத்த என்னை நீ பிடிக்க முடியுமா? ” என்றதற்கு “எவரும் எனக்கு விதிவிலக்கல்ல” என்று சனிபகவான் கூற..

சனி கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு ஈசன் பூமிக்கு வந்து ஒரு சாக்கடையின் அடியில் ஏழரை நிமிடம் ஒளிந்து கொண்டு, பிறகு வெளிவந்து எகத்தாளமாய் “பார்த்தாயா...என்னை உன்னால் பிடிக்க முடியவில்லை” என்றதும்,

சனி பகவான் பணிவுடன் “என்னையும், சர்வ உலகங்களையும் படைத்த நீர் எதற்காக கேவலம் பூமியில் ஒரு சாக்கடையின் கீழ் ஒளிய வேண்டும்? அந்த ஏழரை நிமிடமே நான் உம்மைப் பிடித்தேன்” என்ற கூறியதாய் ஒரு கதை இருக்கிறது.

சரி... அனைவரும் இவ்வளவு பயப்படுமளவிற்கு ஏழரைச் சனிக்காலம் அவ்வளவு கொடியதா? சனி பகவான் கொடுமைப் படுத்துவதையே குணமாகக் கொண்டவரா? என்றால் பதில் வேறாக இருக்கும்.


தவறு செய்த ஒருவனை காவல்துறை கைது செய்து நீதிபதியின் முன் நிறுத்துகிறது. அவன் செய்த தவறினுக்கேற்ப நீதிபதி அவனுக்கு தண்டனை விதிக்கிறார். அதாவது அவன் திருந்துவதற்கு, செய்த தவறைப் பற்றி சிந்திப்பதற்கு தண்டனை என்ற வாய்ப்பினை அளிக்கிறார். அதற்காக நீங்கள் நீதிபதியின் பேரில் குறை சொல்வீர்களா?

அதேபோல் தான் நீங்கள் செய்யும் தவறுகளுக்கு ஏழரைச்சனி எனும் தலை சிறந்த நீதிபதியினை குறை கூறுவது என்பது!

ஏழரைச்சனி ஒருவருடைய வாழ்வில் முதல் முறை வரும் போது அவர் பள்ளி, கல்லூரிப் பருவத்தில் இருப்பார். (சிலருக்கு பிறக்கும் போதே ஏழரை இருக்கும். அவர்களுக்கு முப்பது வயதுகளில் இரண்டாம் சனியாக வரும். ஆனால், அதுவும் முதல் சனி கணக்குத்தான்.)

அச்சமயத்தில் படிப்பில் கவனம் குறையும். படித்தது பரீட்சை ஹாலுக்குள் போனதும் மறந்து போகும். சோம்பல் வரும்.எட்டு மணிக்குத்தான் எழுந்திருக்க முடியும். தேவையற்ற பழக்க வழக்கங்கள் வந்து சேரும்.

கூடா நட்பு கேடாய் முடியும். உயிர் நண்பனுக்கு உதவுகிறேன் என்று சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். காதல் வந்து மற்ற எல்லாவற்றையும் மறக்கச்செய்து கடைசியில் தோல்வியில் முடியும். படிப்பை முடிக்க முடியாமல் அரியர்ஸ் வரும். பணம் இன்றி திண்டாடுவீர்கள்.

ஏழரைச்சனி காலத்தில் படிப்பில் கவனம் குறைவது என்பது பிற்பாடு நீங்கள் அதை உணர்ந்து, படிப்பு முடிந்ததும் சேரும் வேலையில் திறம்பட செயல்பட்டு பெயர்வாங்க வேண்டும் என்பதற்காகவே. காதல் தோல்வி என்பது எதிர் பாலினத்தைப் பற்றி நன்கு புரிந்து கொண்டு அந்த அனுபவத்தைக் கொண்டு திருமண வாழ்வை மிகச் சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே.

கூடா நட்பும் அப்படித்தான். பணத் திண்டாட்டம் வருவது எதற்காக என்றால், பிற்பாடு நீங்கள் ஏராளமாய் சம்பாதிக்க போகும் பணத்தை உருப்படியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே சனி பகவான் ஏழரைச்சனி காலத்தில் உங்களை திண்டாடச் செய்கிறார்.

சுருக்கமாய்ச் சொல்லப் போனால் அந்த ஏழரை ஆண்டு காலம் கிடைக்கும் அனுபவங்களை கொண்டு அடுத்த முப்பது ஆண்டு காலம் உங்கள் வாழ்க்கையை திறம்பட நடத்திச் செல்வதற்காகவே சனி பகவான் உங்களுக்கு இந்த படிப்பினைகளைத் தருகிறார்.

ஏழரைச்சனிக்காலத்தில் முதலில் பனிரெண்டாமிடத்தில் விரயச் சனியாக வரும் சனி பகவான் தன ஸ்தானத்தையும், பாக்ய ஸ்தானத்தையும், ருண ஸ்தானத்தையும் பார்வையிட்டு பணத்தால் பிரச்சனைகளையும், அலைச்சல்களையும் உண்டு பண்ணுவார்.

அடுத்து ஜென்மத்தில் அமர்பவர் ஜாதகரின் மனதை ஆளுவார். மன உளைச்சல் தந்து தடுமாற வைப்பார். துவள வைப்பார். வாய் விட்டு கதற வைப்பார். (அதிலும் ஜென்ம நட்சத்திரத்தில் சனி செல்லும் போது மிகவும் கஷ்டப்படுத்துவார். கடுமையான பலன்களைத் தருவார்.)

ஏழாமிடம் என்பது எதிர்பாலினத்தின் இடம் (கணவன் – மனைவி). வாழ்க்கைத் துணை பற்றிய இடம். ஜென்மத்தில் இருக்கும் போது ஏழாமிடத்தைப் பார்வையிட்டு காதலின் இன்னொரு பரிமாணத்தை உணர வைப்பார்.

அதாவது காதலிப்பவரின் உண்மையான முகத்தைப் புரிய வைப்பார். பத்தாமிடத்தையும் பார்வையிட்டு தொழிலில் அல்லது வேலையில் புதுப்புது பிரச்சனைகளை உருவாக்குவார். அல்லது வேலையை விட்டு நீக்குவார்.

இறுதியாக இரண்டாமிடத்தில் அமருபவர் எட்டாமிடத்தையும், நான்காமிடத்தையும் பார்வையிட்டு இதுவரை கொடுத்த அனுபவங்களின் கடுமையைக் சற்று குறைப்பார்.

எட்டாமிடத்தை தனது பார்வையால் கெடுத்து இதுவரை இருந்து வந்த தலைகுனிவை தடுத்து நிறுத்துவார். மீண்டும் மனிதனாக மாறத் துணை புரிவார். பறிபோன கௌரவத்தையும் அந்தஸ்தையும் ஏழரைச்சனி முடிவில் திரும்பக் கிடைக்கச் செய்வார்.

சனி பகவானை சனீஸ்வரன் என்று மற்ற எட்டு கிரகத்திற்கும் இல்லாத ‘ஈஸ்வர’ பட்டம் சிலர் அளிக்கிறார்கள். அது தவறு. ‘சனைச்சர’ என்றால் சம்ஸ்கிருதத்தில் ‘மெதுவாக நகர்பவர்’ என்று பொருள். அதுவே மருவி சனீஸ்வரர் ஆகியுள்ளது.

சனி பகவானுக்கு சூரிய சந்திரர்கள் என்றாலே ஆகாது. ஏழரைச் சனி நடப்பில் இருக்கும் போது சூரிய திசையோ, சந்திர திசையோ நடக்குமானால் சனியின் கடுமை இன்னும் அதிகமாக இருக்கும். கவனமுடன் இருக்க வேண்டும். ராகுதசை நடக்கும் போதும் ஏழரைச் சனி நடைபெற்றால் சற்று மோசமான பலன்களே நடைபெறுகின்றன.

வேதனைகளைத் தரும் சனி பகவானை எப்படி சாந்தப் படுத்தலாம்?

• திருநள்ளாறு, குச்சானுர், சென்னை பொழிச்சலூர் போன்ற சனி பகவானின் திருத்தலங்களுக்குச் சென்று சனிபகவானுக்குரிய பரிகாரங்களைச் செய்யலாம்.

• இரவில் படுக்கும் போது கைப்பிடி அளவு எள்ளை தலைக்கு கீழே வைத்து படுத்து உறங்கி காலை எழுந்து அந்த எள்ளை புதிதாக வடித்த சாதத்துடன் கலந்து காகத்திற்கு அன்னமிடலாம். (ஒன்பது சனிக்கிழமைகள் தொடர்ந்து செய்ய வேண்டும்.)

• சனி பகவானை திருப்தி படுத்த மாற்றுத் திறனாளிகள், (குறிப்பாக பார்வை இழந்தவர்கள், நடக்க இயலாதவர்கள்) வயதானவர், ஆதரவற்றவர்களுக்கு உதவலாம்.

• சனிக்கிழமைகளில் காலபைரவருக்கு வெள்ளைப் புதுத்துணியில் மிளகை முடிச்சிட்டு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். (எள் தீபம் கூடாது.எள்ளை எரிப்பது தோஷம். எரிக்கக் கூடாது)

• சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி தொல்லைகளில் இருந்து விடுவிக்கும்படி மனமுருக வேண்டி வழிபடலாம்.

• பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம்

ஏழரைச் சனி என்பது அனுபவங்களின் தொகுப்பே. அக்காலத்தில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்று நீங்கள் தெரிந்து கொள்ளும்படி உங்கள் கண்களை திறக்கிறார் சனி பகவான். அந்த அனுபவங்களை ஏற்றுக் கொண்டு, அதன் துணை கொண்டு அதன் பின்வரும் வாழ்க்கையை ஜெயிப்பதற்கே அதனை சனிபகவான் அருளுகிறார்.

அனுபவங்களைப் பற்றிய கவியரசு கண்ணதாசனின் கவிதை இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும்.

பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்
இறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்
அனுபவித்தே தான் அறிவது வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக்கேட்டேன்
ஆண்டவன் சற்றே அருகினில் வந்து
அந்த அனுபவம் என்பதே நான்தான் என்றான்
                             
                                                                       - கண்ணதாசன்

[ஜூலை 13-19, 2011 திரிசக்தி ஜோதிடம் வார இதழில் வெளிவந்தது.]





12 comments :

  1. villupuram arugea KOLIYANUR-il famousana saniswarar koil ullathu.

    ReplyDelete
  2. சிவபெருமான் பற்றிய கதை டுபாக்கூர் என்பது எனது தாழ்மையான கருத்து. உண்மையில் நவக்கிரகங்கள் பூமியில் இருப்பவர்களின் மேல் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும். ஆதியும் அந்தமும் இல்லாத, அனைத்தையும் படைத்து காத்து இரட்சிக்கும் இறைவனின் மேல் எதுவும் ஆதிக்கம் செலுத்த இயலாது. இந்த கதைகள் எதனால் புனையப்பட்டது என்றால், மக்களுக்கு நவக்கிரகங்களின் வலிமையும், வேறுபாடு இல்லாமல் அவரவரின் கர்மத்தை பொறுத்து பலனை அளிக்கும் தன்மையும் புரிய வேண்டும் என்பதாலேயே. அதில் போய் ஏதோ சிவபெருமான் சாக்கடையின் அடியில் போய் அமர்ந்ததாகவும், எகத்தாளம் பேசுவது போல் சித்தரிப்பதும், நவக்கிரகங்களை படைத்த இறைவனுக்கு அவற்றில் ஒன்றிடம் மூக்கறுபடுவது போல் சித்தரிப்பதும் விஷமத்தனம் அல்லது சுத்த அரை வேக்காட்டுத்தனம். இது போன்ற கதைகளை உதாரணத்திற்கு கூட தாங்கள் பயன்படுத்த வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய கருத்து முற்றிலும் ஏற்புடையதே.. இது போன்ற கதைகளின் நோக்கம் கிரகங்களைப் பற்றி சொல்லித் தருவதே தவிர இவற்றில் உண்மை இல்லை என்பதை வேறு சில கட்டுரைகளிலும் எழுதியிருக்க்றேன். சர்வேஸ்வரனுக்கு நிகர் எது? இந்தக்கட்டுரை நான் எழுதிய இரண்டாவது கட்டுரை. இதன் பிறகு வேறு எதிலும் இதுபோன்ற புனையப்பட்ட கதைகளை நான் பயன்படுத்தவில்லை. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

      Delete
    2. வணக்கம். இந்த எளியவனின் கருத்தையும் ஏற்றுக் கொண்ட மேன்மைக்கு எனது பணிவான நன்றி. எனது எழுத்தில் கடுமை சற்று தெரிந்தாலும் அது தங்களை நோக்கியது அல்ல என்று புரிந்து கொண்டமைக்கும் நன்றி. சர்வேஸ்வரனின் சாதாரன அடியாரான எனக்கு இது போன்ற கதைகள் சற்று வேதனை அளித்ததால் அந்த பதிவு. மற்றபடி உங்களின் எழுத்துகளுக்கு நானும் ஒரு இரசிகனே. எனது பதிவை வெளியிட்டது மட்டுமன்றி அதில் உள்ள நியாயத்தையும் புரிந்து கொண்டு தாங்கள் கருத்து தெரிவித்தது தங்களின் மேல் உள்ள மரியாதையை அதிகப்படுத்தி இருக்கிறது. மிக்க நன்றி.

      Delete
    3. Thanks to guruji and pandian sirs

      Delete
    4. correct.. 100% Absolute Ur Word IS True ...

      Delete
  3. Gurujiyin thanithanmaiye anaivarin karuthukkalaiyum eatru muzhu manathudan pakkuvapattu sariyana muraiyil pathil uraippathe. Vazhthukkal ji

    ReplyDelete
  4. Eallarai sani patriya thangkalin karuthukkal makayum unnmai.Thullaam [swathi]raasikaranaka irunthu naan patta,padum kashtathai appadiye solli irukkireerkal.

    ReplyDelete
  5. இந்த பதிவில் பரமேசுவரன் சனிக்கு பயந்து சாக்கடையில் ஒளிந்து கொண்டார் என்பதை இந்திரன் ஒளிந்திருந்ததாக படித்துள்ளேன்.

    ReplyDelete
  6. கேது திசை

    ReplyDelete