Wednesday, July 17, 2013

சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-5


நமது பூமி உள்ளிட்ட அனைத்துக் கிரகங்களும், பூமியில் உயிரினங்களும் தோன்றக் காரணமான சூரியனின் ஒளியையே சிறிது நேரம் மறைத்து பூமிக்கு கிடைக்காமல் தடுக்கும் ஆற்றல் ராகு கேதுக்களுக்கு இருப்பதாலேயே நமது மூல நூல்கள் ஒன்பது கிரகங்களின் வலிமையை கணக்கிடும்போது ராகு கேதுக்களுக்கு முதலிடம் அளிக்கின்றன.

ஒரு கிரகத்தின் காரகத்துவம் மற்றும் ஜாதகத்தில் அந்தக் கிரகம் ஏற்றுள்ள ஆதிபத்தியத்தின் தன்மைகளைத் தரவிடாமல் முழுமையாகத் தடுக்கும், அல்லது குறைக்கும் ஆற்றல் நவக்கிரகங்களில் ராகுவிற்கு மட்டுமே உண்டு

சூரியனுக்கு அருகே ஒரு குறிப்பிட்ட டிகிரிக்குள் நெருங்கும் கிரகங்கள் அஸ்தங்கம் எனும் பெயரில் எவ்வாறு வலுவிழக்கின்றனவோ, அதே போல் ராகுவிடம் நெருங்கும் கிரகமும் வலுவிழக்கும். குறிப்பாக ராகுவிற்கு எட்டு டிகிரிக்குள் நெருங்கும் கிரகம் ராகுவினால் சுத்தமாக பலவீனமாக்கப்பட்டு தனது இயல்புகள் அனைத்தையும் பறி கொடுத்து விடும்.


அதாவது அதிக ஒளியையும், ஒளியே இல்லாத இருட்டையும் நெருங்கும் கிரகங்கள் தங்களின் சுயத்தன்மையை இழப்பார்கள்.

உதாரணமாக, ராகுவிடம் மிக நெருங்கும் குருபகவான் குழந்தைகளையும், அதிகமான பணவசதியையும், நேர்மையான குணத்தையும், ஆன்மீக ஈடுபாட்டையும் தரும் சக்தி அற்றவர்.

ராகுவுடன் நெருங்கி இணையும் சுக்கிர பகவான் பெண் சுகத்தையும், உல்லாசத்தையும், காதல் அனுபவம் மற்றும் சுக வாழ்வையும் தர மாட்டார்.

செவ்வாய் பகவான் தன் இயல்புகளான கோபம் வீரம் வெறித்தனம் கடின மனம் சகோதரம் போன்றவற்றை இழப்பார்.

ராகுவிடம் சரணடையும் சனியால் வறுமை, தரித்திரம், கடன், நோய், உடல் ஊனம் போன்றவற்றைத் தர இயலாது. சந்திரன் மனதிற்கும், மனம் எடுக்கும் முடிவுகளுக்கும் காரணமானவர் என்பதால் ராகுவிடம் நெருங்கும் போது மனதைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை ஜாதகர் இழந்து மனநலம் குன்றுவார். தாயன்பு பறிபோகும்.

புதனுடன் இணையும் ராகுவால் நிபுணத்துவம் குறையும். அறிவாற்றல் அளவோடுதான் இருக்கும். கணிதத்திறமை காணாமல் போகும். சூரியன் ஆன்ம பலத்தையும், அரசுத்தொடர்பு, அரசலாபம், தந்தையின் ஆதரவு போன்றவற்றைத் தரும் வலிமையை இழப்பார்.

ஒரு கிரகம் உச்சம் மூலத்திரிகோணம் ஆட்சி போன்ற எத்தகைய வலிமை நிலையில் இருந்தாலும் சரி. அது ராகுவுடன் மிகவும் நெருங்கினால் அத்தனை வலிமையையும் இழக்கும். நான் மேலே சொன்னவைகளை நீங்கள் நன்றாக அறிந்த ஜாதகத்தில் ஒப்பிட்டு ஆராய்ந்து பாருங்கள். மிகச் சரியாக இருக்கும்.

உதாரணத்திற்கு நம் காலத்தில் வாழ்ந்த தெய்வம், காமாட்சி என்ற பெயர் தவிர பெண்ணின் வாசனை கூட அறியாமல், துறவுக்கு உண்மை அர்த்தமாய் சொகுசு வாழ்க்கை தவிர்த்து, நம் கண்முன் நடமாடிய மகான் காஞ்சி மகாபெரியவரின் அவதார ஜாதகத்தில் மீனத்தில் உச்ச சுக்கிரனுடன் ராகு இணைந்ததைச் சொல்லலாம்.

சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் பெற்றிருக்கும் நிலையில் கூட ஒரு கிரகம் பரிவர்த்தனை அடைந்திருந்தால் தன் சுயபலத்தை பெறும் என்றும் நமது கிரந்தங்களில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால் ராகுவிடம் இணைந்த கிரகங்களுக்கு அவ்வாறு விமோசனம் கிடையாது.

(எப்போதும் சூரியனுடன்இணைந்தே இயங்குவதால் புதனுக்கு அஸ்தங்க தோஷம் இல்லை என்று மகாபுருஷர் காளிதாசர் சொல்லுகிறார். அதுபோல சுக்கிரனுக்கும் அஸ்தங்க தோஷம் இல்லை என்று வேறு சில மூலநூல்கள் சொல்லுகின்றன.)

நான் மேலே சொன்னவைகள் குறிப்பிட்ட கிரகங்களின் காரகத்துவங்கள் மட்டும்தான். ஜாதகத்தில் மேற்கண்ட கிரகங்கள் எந்த ஆதிபத்தியங்களுக்கு உரியனவோ அவைகளும் அந்தக் கிரகங்கள் வலுவிழந்ததால் பாதிக்கப்படும்.

அதாவது ஐந்துக்குடையவன் ராகுவுடன் நெருங்கினால் புத்திரபாக்கியமும், அதிர்ஷ்டமும், சிந்தனை மற்றும் செயல்திறனும் பாதிக்கப்படும். ஆறுக்குடையவன் இணைந்தால் ஜாதகர் நோயற்றநிலை, கடன் வாங்க அவசியமின்மை, எதிரிகளற்ற வாழ்வு போன்றவைகள் அமையப் பெறுவார்.

ஏழுக்குடையவனுடன் ராகு இணைவு பெற்றால் தாமததிருமணம் அல்லது திருமணமே இல்லாத நிலை, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் போன்ற பலன்கள் நடைபெறும். அஷ்டமாதிபதி ராகுவுடன் மிக நெருங்கி இருந்தால் அந்த ஜாதகர் தீர்க்காயுள் வாழுவது கடினம்.

அதே நேரத்தில் இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். தன்னுடன் மிக நெருங்காமல் அதே ராசியில் குறிப்பிட்ட டிகிரி இடைவெளியில் இருக்கும் கிரகங்களின் இயல்பை ராகு பெறுவார் என்பதால், தன்னுடன் இணைந்த கிரகங்களின் காரக மற்றும் ஆதிபத்திய பலன்களை ராகுபகவான் தனது தசை புக்திகளில் செய்வார். அதாவது அவர்களிடமிருந்து பறித்ததை ராகு தனது தசையில் தருவார்.

உதாரணமாக, குருவுடன் இணைந்து நல்ல ஸ்தானங்களில் அமர்ந்த ராகு தசையில் மிகப்பெரிய தனலாபம், புத்திர பாக்கியம் போன்றவைகளும் சுக்கிரனுடன் இணைந்து நல்ல இடங்களில் அமர்ந்த ராகுதசையில் சொகுசு வாழ்க்கையும் பெண்களால் சுகமும் இருக்கும்.

அதே போல பாவக்கிரகங்களுடன் இணைந்த ராகு அவர்களின் கெட்ட காரகத்துவங்களை தனது தசையில் பிரதிபலித்து ஜாதகரை கஷ்டங்களுக்கு உள்ளாக்குவார்.

குறிப்பாக சனி செவ்வாயின் பார்வையைப் பெற்ற ராகு தன் தசையில் நல்ல பலன்களைச் செய்வது கடினம். மேற்கண்ட இருவரும் லக்ன சுபர்களாக இருந்தாலும் இதே நிலைதான்.

ஒரு கிரகம் ராகுவுடன் எத்தனை டிகிரியில் இணைந்திருக்கிறது, வேறு ஏதாவது பலவீனத்தை அந்தக் கிரகம் அடைந்திருக்கிறதா, அதோடு அவர்கள் இருக்கும் ராசி எப்படிப்பட்டது, லக்னத்திற்கு அந்த ராசி எத்தனையாவது பாவம், மற்றும் ராகுவிற்கு அந்த பாவம் வலிமையான இடமா என்பதோடு

வேறு யாருடைய பார்வை மற்றும் தொடர்பு ராகுவிற்கு இருக்கிறது.... ராகுவும் அவருடன் இணைந்த கிரகமும் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறார்கள்.... அந்த நட்சத்திர நாதன் லக்னத்திற்கு சுபரா அசுபரா என்ன பாவத்திற்கு உரியவர்.... போன்ற நுணுக்கமான விஷயங்களை உங்களால் சரியாகக் கணிக்க முடிந்தால் போதும். ஒருவருக்கு ராகுதசை எத்தகைய பலன் தரும் என்பதை நீங்கள் துல்லியமாகச் சொல்லி விட முடியும்.

மேலும் இந்த நூற்றாண்டின் ஜோதிடஞானி, குருநாதர், ஜோதிஷவாசஸ்பதி, தெய்வக்ஞசிரோமணி மு. மாதேஸ்வரன் அய்யா அவர்கள் தன்னுடைய ஆராய்ச்சியில் ராகுவிற்கு 3 6 10 11 மிடங்களைப் போலவே பனிரெண்டாமிடமும் நல்ல பலன்களைத் தரும் இடம்தான் என்று கூறுகிறார்.

அதைப் பற்றியும் கேந்திர கோணங்களில் இருக்கும் ராகு கேதுக்கள் என்ன பலன்களைத் தருவார்கள் என்பது பற்றியும் அடுத்த மாதம் பார்க்கலாம்......

[ஆகஸ்ட் 2012 இதழில் வெளிவந்தது.]


2 comments :

  1. அருமை ஐயா.........

    ReplyDelete
  2. ராகுவை பற்றிய அருமையா விஷயங்களை தெளிவாக விலக்கியதற்கு மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete