Sunday, July 21, 2013

சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்-10


     ஆமேடம் எருது சுறா நண்டு கன்னி
     ஐந்திடத்தில் கருநாகம் அமர்ந்து நிற்கில்
     பூமேடை தனில் துயிலும் ராஜயோகம்
     போற்றிடுவர் வேறு இன்னும் புகலக் கேளாய்
     ஏமாறாதே நான்கு கேந்திரத்தும்
     இடைவிடாமற் கிரகம் இருந்தாகில்
     தேமேவு பர்வதமா யோகமாகும்
     சீமான் ஆகுவான் ராஜயோகஞ் செப்பே...

தமிழ் ஜோதிட நூல்களில் மிகவும் மதிப்பு வாய்ந்ததான ”ஜாதக அலங்காரம்” ராகுவைப் பற்றி குறிப்பிடும் மேற்கண்ட பாடல் ஏறத்தாழ அனைத்து ஜோதிடர்களும் அறிந்த ஒரு புகழ் பெற்ற பாடல்.

இந்த பாடலின் முதல் மூன்று வரிகள் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து ராசிகளில் ராகு இருந்து அதனுடைய தசை வரும் போது அந்த ஜாதகருக்கு “ பூப்படுக்கையில் படுக்கும் ராஜயோகம்” எனச் சொல்லுகிறது.

அடுத்த வரிகள் நான்கு கேந்திரங்களிலும் தொடர்ந்து கிரகங்கள் இருந்தால் சிறப்பான பர்வத யோகத்தை தரும் எனக் குறிப்பிடுகிறது.

மேலே சொல்லப்பட்ட இந்த “நான்கு கேந்திரங்களில் கிரகங்கள்” எனும் அமைப்பை மேற்கண்ட ஐந்து ராசிகளில் இருக்கும் ராகுவிற்கு நான்கு கேந்திரங்களில் கிரகங்கள் இருந்தால் இந்த யோகம் என்று சிலரும், இந்த ராசிகளில் ராகு இருக்கும் நிலையில் லக்னத்திற்கு நான்கு கேந்திரங்களில் கிரகங்கள் இடைவிடாமல் இருந்தால் இது போன்ற சிறந்த பர்வதயோகம் என்று சிலரும் கருத்து வேற்றுமை கொள்கின்றனர்.

ஜாதக அலங்காரத்திலேயே இப்பாடலுக்கு லக்னத்திலிருந்து இடைவிடாமல் நான்கு கேந்திரங்களிலும் கிரகங்கள் இருந்தால் என்றுதான் விளக்கம் சொல்லப் பட்டிருக்கிறது.

என்னுடைய முப்பதாண்டு கால ஆய்வில் நான் உணர்ந்த உண்மை என்னவெனில் மேற்கண்ட மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய இடங்களில் ராகு அமர்ந்து இந்த பாவங்களில் இருக்கும் ராகுவிற்கு கேந்திரங்களில், அதாவது ராகுவின் முதலாம் கேந்திரமான அவர் இருக்கும் வீட்டில் அவருடன் இணைந்து ஒரு கிரகம், அடுத்து ராகுவிற்கு நான்கில் ஒன்று, அடுத்ததாக ராகுவிற்கு எதிரில் இருக்கும் கேதுவுடன் இணைந்து ஒரு கிரகம், அடுத்து ராகுவிற்கு பத்தாமிடத்தில் ஒரு கிரகம் என இடைவிடாமல் கிரகங்கள் இருந்தால் மிகப்பெரிய ராஜயோகத்தை ராகு தன் தசையில் செய்யும்.

இதுபோன்ற அமைப்பில் ராகு பதினொன்றில் இருந்தாரெனில் மற்ற அனைத்துக் கிரகங்களும் பணபரஸ்தானங்கள் என்று சொல்லப்படும் இரண்டு ஐந்து எட்டு பதினொன்றில் இருக்கும். அப்போது பாக்யாதிபதி இரண்டில் இருக்கலாம். ஜீவனாதிபதி ஐந்தில் அமர்ந்து ராகுவைப் பார்க்கலாம். தனாதிபதி எட்டில் அமர்ந்து தன் வீட்டைப் பார்க்கலாம். பஞ்சமாதிபதி ராகுவுடன் இணைந்திருந்து ஜீவனாதிபதியைப் பார்க்கலாம்.

இந்த கேந்திர அமைப்பில் ராகு அனைத்துக் கிரகங் களின் இணைப்பினால் அவர்களின் பலத்தைக் கவர்ந்து தன் தசையில் மிகப் பெரிய தனலாபத்தை பொருளாதார மேன்மை யைத் தரும்.

அதேபோல ராகு மூன்றா மிடத்தில் இருந்தாரெனில் மற்ற கிரகங்கள் ஆபோக்லிய ஸ்தானங்கள் என்று சொல்லப்படும் மூன்று ஆறு ஒன்பது பனிரெண்டு ஆகிய இடங்களில் இருக்கும். இந்த அமைப்பிலும் பாக்யாதிபதி தன் வீட்டிலோ அல்லது ராகுவுடன் இணைந்து தன் வீட்டைப் பார்வையிட்டோ மற்ற துர்ஸ்தானாதிபதிகள் ஒருவருக்கொருவர் மாறி அமர்ந்தோ இருந்தார்கள் எனில் ராகு யோகம் செய்வார்.

அதே நேரத்தில் ராகுவுக்கு நான்கு கேந்திரங்களிலும் இடைவிடாமல் கிரகங்கள் இருக்கும் நிலையில் யோகம் பூரணமாகக் கிடைக்கும். ஏதேனும் ஒரு இடத்திலோ அல்லது ராகு கேதுவுடன் கிரகங்கள் இணையாமல் ராகுவிற்கு இரண்டு பக்கங்களில் மட்டும் கிரகங்கள் இருந்தாலும் யோக அமைப்புத்தான்.

ஆனால் இந்த யோகம் செயல்பட வேண்டுமெனில் ராகுதசை வர வேண்டும். புக்திகளில் இந்த அமைப்பு பலன் அளிக்காது.

ஒரு வகையில் ராகு பகவானை நான் இராமாயணத்தில் ராமபிரானால் மறைமுக வழியால் வீழ்த்தப்பட்ட வாலியுடன் ஒப்பிடுவேன். எப்படியெனில் ராமாயணத்தில் வரும் கதாபாத்திரமான வாலி தன் எதிரில் நின்று சண்டையிடுபவர்களின் பலத்தை தன்வசமாக்கிக் கொள்ளும் திறமை படைத்தவர். அதனாலேயே ஸ்ரீராமர் வாலியை மறைந்திருந்து அம்பெய்தி வீழ்த்தினார்.

அதுபோவே ராகுவும் தன் எதிரில் அமர்ந்து தன்னைப் பார்க்கும் கிரகங்களின் பலத்தை முற்றிலும் தனதாக்கிக் கொண்டு அந்த கிரகங்களை ஒன்றுமில்லாமல் செய்து விடுவார்.

உதாரணமாக கேதுவுடன் இணைந்து ராகுவைப் பார்க்கும் செவ்வாயின் தசையில் நல்ல, கெட்ட பலன்கள் எதுவும் முழுமையாக இருக்காது. ஆனால் அடுத்து நடைபெறும் ராகு தசையில் ராகு, செவ்வாயின் பலன்களை முழுமையாகச் செய்வார். அதேபோல் கேதுவுடன் இணைந்து கேளயோகத்தில் இருக்கும் குருபகவானின் பலனை ராகு முழுக்க தனது தசையில் செய்து விடுவார். குருதசை ராகு தசையின் பலன்களின் தொடர்ச்சியாகத்தான் இருக்கும்.

அதே நேரத்தில் தனக்கு எதிரில் இல்லாமல், தன்னை தனது சிறப்புப் பார்வைகளால் பார்க்கும் குருபகவானின் முழுபலத்தையும் ராகுவால் பறிக்க முடியாது. அதாவது ராகுவிற்கு திரிகோணங்களில் இருந்து தனது ஐந்து, ஒன்பதாம் பார்வைகளால் ராகுவைப் பார்க்கும் குரு தனது பலத்தை இழக்க மாட்டார்.

இன்னொரு நிலையாக சிறப்பு கேந்திரப் பார்வைகளைப் பெற்ற சனியும், செவ்வாயும் குறிப்பிட்ட ஒரு நிலையில் ராகுவை பார்ப்பது நல்ல பலன்களைத் தராது.

அதாவது செவ்வாய் நான்காம் பார்வையையும் சனி பத்தாம் பார்வையையும் சிறப்பு கேந்திரப் பார்வைகளாகக் கொண்டவர்கள். இவர்கள் இருவரும் ராகுவிற்கு கேந்திரங்களில் அதாவது ராகுவிற்கு நான்கில் சனியும், பத்தில் செவ்வாயும் இருந்தால் இருவருமே ஒரு சேர ராகுவைப் பார்ப்பார்கள்.

(ஏற்கனவே இந்த தொடரில் நான் ராகுபகவான் செவ்வாய், சனி தொடர்பை பெறக்கூடாது என்று சொல்லி இருக்கிறேன்)

இது போன்று அமைப்பில் ராகு இருக்கும் பட்சத்தில் ராகு அந்த ஜாதகத்தில் சனியும் செவ்வாயும் எந்த ஆதிபத்தி யங்களுக்கு உரியவர்களோ அந்த ஆதிபத்தியங்களையும் இருவரின் காரகத் துவங்களையும் தனது தசை புக்தி அல்லது அவர்களின் தசை புக்திகளில் கெடுப்பார்.

குறிப்பாக இதுபோன்று கேந்திர அமைப்பில் சனி செவ்வாய் இருந்தால் ராகு தசை சனிபுக்தி அல்லது சனிதசை ராகு புக்திகளில் சனி அடிமைவேலை மற்றும் தொழில்காரகன் என்பதால் ஜாதகருக்கு வேலையிழப்பு, தொழில்சரிவு போன்ற வைகளும் செவ்வாய் சகோதர காரகன் என்பதால் ராகு தசை செவ்வாய் புக்தி அல்லது செவ்வாய் தசை ராகு புக்திகளில் சகோதர இழப்பு, சகோதரவிரோதம் போன்ற பலன்களும் மேற்படி கிரகங்களின் ஜாதக ஆதிபத்தி யங்களில் கெடுதல்களான நிகழ்வுகளும் நடக்கும்.

இதே அமைப்பு தலைகீழாக அதாவது ராகுவிற்கு நான்கில் செவ்வாயும் பத்தில் சனியும் இருந்தால் இருவரும் ஒரு சேர கேதுவைப் பார்ப்பார்கள். அப்போது நான் மேற்சொன்ன பலன்கள் கேதுதசை சனிபுக்தி அல்லது சனிதசை கேது புக்தி மற்றும் கேதுதசை செவ்வாய் புக்தி அல்லது செவ்வாய் தசை கேது புக்திகளில் நடக்கும்.

பொதுவான இன்னொரு கருத்தையும் சொல்லி விடுகிறேன்...

சந்திரனின் ஏறுகணு ராகு, இறங்குகணு கேது என்பதால் அதாவது சந்திரனின் சுற்றுப்பாதையில் ஏறுபாதை ராகு, இறங்குபாதை கேது என்பதால் ராசிச் சக்கரத்தின் முதல் ஆறு ராசிகளான மேஷம் முதல் கன்னி வரையில் ராகு இருந்தால் நல்ல பலன்களையும் அடுத்த ஆறு ராசிகளான துலாம் முதல் மீனம் வரை கேது இருந்தால் நல்ல பலன்களையும் செய்வார்கள்.

அடுத்த இதழில் சந்திப்போம் ......

[ஜனவரி 2012 இதழில் வெளிவந்தது.]



4 comments :