Saturday, April 13, 2024

குருஜியின் வார ராசி பலன்கள் (15.04.2024 –21.04.2024)

 

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மேஷம்:

இன்னும் இரண்டு வாரங்களில் நடக்க இருக்கும் குருப் பெயர்ச்சியின் மூலமாக. இரண்டாம் இடத்திற்கு குரு வருவதால். பொருளாதார மேன்மையினை. மேஷ ராசிக்காரர்கள் அடையப் போகிறீர்கள். இந்த வாரம் உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள். சிலருக்கு ஆலயத் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்கள் மத்தியில் மகிழ்ச்சியான சம்பவங்களும், ஜீவன அமைப்புக்களில் முன்னேற்றமான போக்கும் இருக்கும். மனதிற்கு சந்தோஷமான விஷயங்கள் இந்த வாரம் உண்டு. மேஷத்திற்கு இனி எல்லாம் வெற்றிதான்.

பொருளாதார நிலைமை நல்லபடியாகவே இருக்கும். செலவுகள் அதிகமாகவே உண்டு என்றாலும் பணவரவிற்குப் பஞ்சம் இருக்காது. சிலருக்கு எதிர்ப்புகளையும் எதிரிகளையும் ஜெயிக்கும் நிகழ்ச்சிகள் நடக்கும். உங்களுடைய தடாலடி நடவடிக்கைகளால் உங்களுடைய மனதைப் புரிந்து கொள்ள முடியாமல் எந்தநேரத்தில் என்ன முடிவு எடுப்பீர்கள் என்று நண்பர்களும் குடும்பத்தினரும் குழம்பிப் போவார்கள். வேலை, தொழில்களில் இடையூறுகள் இல்லாமல் சகஜமாகவே செல்லும்.

ரிஷபம்:

ராசிநாதன் சுக்கிரன் உச்சம், யோகாதிபதி சனி ஆட்சி என ரிஷபத்திற்கு யோக வாரம் இது. உங்களைப் பிடிவாதக்காரர் என்று தவறாகப் புரிந்து கொண்டவர்கள் உங்கள் நல்ல மனதைத் தெரிந்து கொண்டு அருகில் வருவார்கள். முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் இருக்கும். பெண்களால் லாபம் கிடைக்கும். அதேநேரம் அவர்களால் செலவும் நிச்சயமாக இருக்கும். சிலருக்கு நீண்ட தூர பிரயாணங்கள் உண்டாகும். காவல்துறை, ராணுவம் போன்றவைகளில் பணிபுரிபவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள்  கிடைக்கும்..

கோர்ட் கேஸ், நிலம் சம்பந்தப்பட்ட வில்லங்கங்களில் சிக்கியவர்களுக்கு வழக்குகள் சாதகமாகத் திரும்பும். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும். மகன், மகள் விஷயங்களில் நல்ல அனுபவங்கள் இருக்கும். குடும்பத்தில் உற்சாகமும், செழிப்பும் இருக்கும். எந்தவித தொல்லைகளோ கஷ்டங்களோ இருக்காது. சுக்கிரனின் வலுவால் இளையவர்களுக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். மனதிற்குள் காதலிக்க ஆரம்பித்து மயக்கத்தில் இருப்பீர்கள். நல்ல எதிர்காலத்திற்கான  ஆரம்ப வாரம் இது.

மிதுனம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் புதன். நீச்சம் மற்றும் ராகுவோடு சேர்ந்து கிரகணம் என்ற நிலையில் இருந்தாலும் கூட, யோகாதிபதி உச்ச சுக்கிரனுடன் இணைந்திருப்பதால் நீச்ச பங்க ராஜ யோக நிலையை பெறுவது மிகவும் சிறப்பு.  உங்களுடைய மனம் தெளிவாக இருக்க கூடிய வாரம் இது.  கடந்த காலங்களில் உங்களுடைய கண்ணுக்கு மறைக்கப்பட்ட சில விஷயங்கள் இப்போது பரம் பொருளின் அருளினால் தெளிவுபடுத்தப்படும். என்ன முடிவு எடுப்பது என்பது போன்ற குழப்பங்களில் இருந்தவர்களுக்கு தீர்வுகள் தேடி வரக் கூடிய நல்ல வாரம் இது.

ஒரு குறிப்பிட்ட பலனாக இந்த வாரம் பருவவயது மக்களின் மேல் ஒரு கண் இருக்கட்டும். காதல் போன்ற வயதுக்கேற்ற விஷயங்கள் இப்போது உங்கள் காதுக்கு வரும். வேலை செய்யும் இடங்களில் அனாவசியமாக எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம். 15,16 ஆகிய நாட்களில் பணம் வரும். இணையம், யூ ட்யூப், சமூக ஊடகங்கள் மூலமாக பொருள் சம்பாதிப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல திருப்பு முனைகள் உண்டு. யார் மனதிலும் தோன்றாத சில புதிய ஐடியாக்கள் இப்போது மிதுனத்தினருக்கு தெரிய வரும்.

கடகம்:

கடக ராசி இளைய பருவத்தினர் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உங்களை நினைத்து  குடும்பத்திலும் கலக்கங்கள் இருக்கின்றன. அஷ்டமச்சனியின் தாக்கத்தால் சிலருக்கு மனதில் ஒருவிதமான கலக்க உணர்ச்சியும், தன்னம்பிக்கை இல்லாத நிலைமையும் இருக்கும். அழ வேண்டும் போலவும் இருக்கும். அலுவலகங்களில் எரிச்சலூட்டும் சம்பவங்களையும் சந்திப்பீர்கள். ராசிநாதன் வார ஆரம்பத்தில் ஆட்சி நிலையில் இருப்பதால் எதையும் உங்களால் சமாளிக்க முடியும் அடுத்த வருடத்திலிருந்து நன்றாக இருப்பீர்கள். கஷ்டங்கள் எதுவும் வந்துவிடாத வாரம் இது.  

உங்களில் பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த சிலருக்கு இனம் புரியாத தயக்கங்கள், மனக் கலக்கங்கள் இருக்கும். நண்பர்கள் பங்குதாரர்கள் விஷயத்தில் சில நெருடல்களும், கருத்து வேறுபாடுகளும் வரும். ஒருவர் கோபப்பட்டாலும் மற்றவர் பொறுத்துப் போவதன் மூலமாக பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம் என்பதை மறந்து விடாதீர்கள். பெரிய அளவில் பணம் புழங்கும் இடங்களில் பணிபுரிபவர்கள் பணம் எடுத்து போகும்போது எச்சரிக்கை தேவை. தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை ஒத்தி வைப்பது நல்லது. 

சிம்மம்:

சிம்ம ராசியினருக்கு மிகவும் நல்லவாரம் இது. ராசிநாதன் சூரியன் உச்சத்தில் இருப்பதோடு வாரம் முழுவதும் குருவோடு இணைந்து சுபத்துவமாகவும் இருக்கிறார். ராசிநாதன் குருவோடு இருக்க, ராசியையும் குரு பார்ப்பது மிகவும் நல்ல அதிர்ஷ்டம் தரும் அமைப்பு. பிறந்த ஜாதகத்தில் தசா புக்திகள் வலுவாக நடக்கும் சிம்மத்தினர் இந்தவாரம் இரட்டிப்பு நன்மைகளைப் பெறுவீர்கள். கிரகங்கள் தருகின்ற இந்த அதிர்ஷ்ட நிலைமையைப் பயன்படுத்தி சுறுசுறுப்புடன் செயலாற்றினால் எல்லாம் கைகூடும்.

சிலருக்கு நல்லவேலை பற்றிய தகவல்கள் வந்து சேரும்.  வேலை தேடும் இளைய பருவத்தினருக்கு விருப்பப்பட்ட அமைப்பில் வேலை கிடைக்கும். உங்களைக் குழப்புவதற்கென்றே சிலர் அருகில் இருப்பார்கள். யாருடைய பேச்சையும் கேட்டு செயல்படாமல் என்றுமே நீங்கள் தனித்தன்மையுடையவர்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் சுயமாகவே ஒரு முக்கிய முடிவு எடுப்பீர்கள். சிலருக்கு தந்தையால் மருத்துவச்செலவுகள் இருக்கும். பொதுவில் இது மிகவும் நல்ல வாரமே.

கன்னி:

கன்னி ராசி இளையவர்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய வாரம் இது.  ராசிநாதன் புதன் நீச்ச பங்க அமைப்பில் இருப்பதால் உங்களை நீங்களே கெடுத்துக் கொள்ளும் காரியங்களை உங்களில் சிலர் செய்வீர்கள். மூன்றாவது நபரின் தலையீட்டினாலோ, குடும்பத்தில் உள்ள ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாத நிலையினாலோ வீட்டிலும், வெளியிலும் கருத்து வேறுபாடுகள் வரும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம். சிலர் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். முடிவு எடுப்பதற்கு தயங்குவீர்கள்.

கன்னி ராசி பெரியவர்களுக்கு பிரச்னைகள் எதுவும் இருக்காது. ராசியில் கேது, ஏழில் ராகு இருப்பதால் சிலருக்கு அந்நிய இன மத மொழிக்காரர்களால் பிரச்னைகள் உண்டு. கணவன், மனைவி விட்டுக் கொடுத்து போவது நல்லது. அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள். பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் வங்கியிலிருந்து பணம் எடுத்து வரும்போது எச்சரிக்கை தேவை. எதிலும் வீண் சண்டை வேண்டாம். கோபத்தில் ஏதாவது சொல்லி அது சண்டையாகும் என்பதால் வார்த்தைகளில் கவனமாக இருக்கவும்.

துலாம்:

இந்த வாரம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் உச்சநிலையை அடைந்திருக்கிறார். எதையும் அனுபவிக்க கொடுக்கும் பாக்கியதிபதி புதன் அங்கே நீச்சத்தை அடைந்தாலும் முறையான நீச்சபங்கம் பெற்றிருப்பது யோகம். புதனின் நீச்சபங்க ராஜயோக வலுவால் அறிவுசார்ந்த துறைகளில் இருப்பவர்கள் மற்றும் புத்தியை மூலதனமாக வைத்து தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானங்கள் உண்டு. சிலருக்கு எப்படி வருமானம் வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மறைமுகமான வழிகளில் தனலாபம் இருக்கும்.

புதனின் பலத்தால் லயசனிங் எனப்படும் பணத்திற்காக வேலை முடித்துக் கொடுப்பவர்களுக்கு காரியங்கள் சுலபமாக முடியும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். ஜீவன அமைப்புகள் இலாபத்துடன் நடக்கும். அதிகாரம் செய்யும் பதவியில் இருப்பவர்களுக்கு இது நல்ல வாரம். பங்குதாரர்கள் இடையே கருத்து வேற்றுமைகள் வரும் என்பதால் தொழிலில் அக்கறை காட்டுங்கள். தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை ஒத்தி வைப்பது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே செலவு செய்யலாம்.

விருச்சிகம்:

வாரம் முழுவதும் ராசிநாதன் செவ்வாயும், தனாதிபதி சனியும் இணைந்திருப்பது விருச்சிக ராசிக்கு ஒரு வகையான தனயோகம். முயற்சிகள் பலித்து அதன் மூலமான பண வரவு வரக்கூடிய வாரம் இது. பணம் என்பது வேலை, தொழில், வியாபாரம் மூலம் சம்பாதிக்க கூடியது என்பதால் இதுவரை மேற்கண்ட ஜீவன அமைப்புகளில் நல்லவை நடக்காதவர்கள் சில மாற்றங்களை இப்போது சந்தித்து நன்மைகளை பெறுவீர்கள். உங்களில் சுக்கிர தசை நடப்பவர்களுக்கு அதிக நன்மைகள் இருக்கும். விருச்சிகத்தினர் வெற்றி பெறும் வாரம் இது.  

விருச்சிக ராசிக்கு பூர்வ புண்ணிய பலத்தினால் அதிர்ஷ்டம் கை கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடப்பதோடு குடும்பத்திலும் சந்தோஷமான நிகழ்வுகள் இருக்கும். உங்களின் மனோதைரியம் அதிகமாக இருக்கும். எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும். உங்களில் சிலர் வேலையில் சாதனை செய்து நல்லபெயர் எடுப்பீர்கள். நிலுவையில் இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக் கசப்புகள் விலகும்.

தனுசு:

வாரத்தின் ஆரம்பமே சந்திராஷ்டமமாக அமைவதால் உங்களில் சிலர் எதிலும் குழப்பமாக இருப்பீர்கள். மீதி நாட்கள் தனுசு ராசிக்காரர்களுக்கு தொல்லைகள் கொடுக்காத வாரம் இது. குறிப்பாக வியாழன், வெள்ளிக் கிழமைகளில் நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் நிறைவேறும். இந்த நாட்களில் பெண்களினால் நன்மை உண்டு. 15 -ந்தேதி இரவு 8.39 மணி முதல் 18 -ந்தேதி காலை 7.56 மணிவரை சந்திராஷ்டமம் என்பதால், நீண்டதூர பிரயாணங்கள், புதிதாக தொழில் ஆரம்பித்தல், முக்கிய முடிவுகள் எடுத்தல் போன்றவைகளை செய்ய வேண்டாம்.

உங்களில் சிலருக்கு அதிகாரப் பணியும் வி.ஐ.பி.க்கள் அறிமுகமும் இந்த வாரம் உண்டு. வேலை, வியாபாரம் சொந்த தொழில் வலுவாக இருப்பதால் அதைப்பற்றி கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. பணவரவு இருக்கும். கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும். மகான்களின் தரிசனம் கிடைக்கும்.  வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இது சிறந்த வாரம். பெண்கள் மூலமான செலவுகள் இருக்கும். சமீபத்தில் திருமணமானவர்கள் மனைவிக்கு அவர் ஆசைப்பட்டுக் கேட்கும் ஒரு பொருளை வாங்கித் தருவீர்கள்.

மகரம்:

ராஜ யோகாதிபதி, சுக்கிரன் ஏறத்தாழ பத்து மாதங்களுக்கு ஒருமுறை அடையும் உச்ச வலிமையை அடைந்திருப்பதால் மகர ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் செயல்படும் வாரம் இது. இன்னும் சில வாரங்களுக்கு சுக்கிரனின் உச்ச நிலை நீடிக்கும் என்பதால் தயங்கி கொண்டிருந்த அனைத்தையும் சந்தித்து நீங்கள் வெற்றி பெறும் வாரம் இது. மூன்றாம் இடத்தில் புதன் நீச்சம் அடைந்தாலும் அவர் பங்கத்தைப் பெற்று இருப்பதும் மகரத்திற்கு சிறப்பான அமைப்பு. இன்னும் சில வாரங்களுக்கு நீங்கள் எதையும் துணிந்து செய்யலாம்.

ஏழரைச்சனி முழுவதுமாக முடியப் போவதால் இனிமேல் தொட்டது துலங்கும். எதிலும் லாபம் வரும். இளைய பருவத்தினருக்கு நினைப்பது நடக்கும் உங்களின் வயதிற்கே உரிய உல்லாச அனுபவங்களை இப்போது பெறுவீர்கள். ஒரு சிலருக்கு தோழிகளால் இனிமையான அனுபவங்கள் இருக்கும். 18 -ந்தேதி காலை 7.56 மணி முதல் 20 -ந்தேதி இரவு 8.51 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் உங்கள் மனம் ஒரு நிலையில் இருக்காது. எனவே முக்கியமான முடிவுகள் எதையும்  செய்ய வேண்டாம்.

கும்பம்:

வார இறுதியில் சந்திரன் எட்டில் அமைவதால் வாரத்தின் சில நாட்கள் மட்டும் கும்பத்தினர் தட்டுத் தடுமாறுவீர்கள். எதிலும் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக பெண்கள் விஷயத்தில் கோபமூட்டும் விஷயங்கள் நடக்கும் என்பதால் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டிய வாரம் இது. இன்னும் எத்தனை காலத்திற்குதான் சங்கடமான நிலைகளையும், சோதனைகளையும் சந்தித்துக் கொண்டே இருப்பது என்று தன்னம்பிக்கை இழந்திருந்த உங்களில் சிலர் துயரங்களில் இருந்து மீண்டு வருவீர்கள். பொதுவாக நல்ல வாரம் இது.

கும்பத்தினர் நிதானமானவர்களாக இருந்தாலும் கூட எதிலும் உறுதித் தன்மை கொண்டவர்கள் என்பதை இந்த வாரம் நிரூபிப்பீர்கள். கஷ்டங்கள் இருந்தாலும் கலங்க மாட்டீர்கள். உங்களின் தன்னம்பிக்கை அதிகமாகும் வாரம் இது. எதிர்பாராத உதவி உங்களில் சிலருக்கு கிடைக்கும். கடவுள் இருக்கிறார் என்பது தெரிய வரும்.  20 -ந்தேதி இரவு 8.51 மணி முதல் 23 -ந்தேதி காலை 9.18 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் உங்கள் மனம் ஒரு நிலையில் இருக்காது. எனவே முக்கியமான முடிவுகள் எதையும்  செய்ய வேண்டாம்.

மீனம்:

ராசிநாதன் குரு பணத்தை தரக்கூடிய இரண்டாம் வீட்டில் உச்ச சூரியனோடு வலிமையாக இருப்பது இந்த வாரம் மீன ராசிக்காரர்களுக்கு வேலை, தொழில் நிலைகளில் நல்லவைகளை செய்யக்கூடிய அமைப்பு. இதுவரை பதவி உயர்வு கிடைக்காதவர்களுக்கு அதற்கான அனுமதிகளும் ஏற்பாடுகளும் இருக்கும். அலுவலகத்தில் சந்தோஷமான சூழ்நிலை உண்டு. சிலருக்கு வேலை நிரந்தரமாகும். ஆறாம் அதிபதி சுபத்துவம் அடைவதால் வளர்ச்சிக்கான சுப கடன்கள் கிடைக்கும் வாரம் இது. மீன ராசிக்கு பணம் வரும் நிகழ்வுகளும் இந்த வாரம் நடக்கும்..

யோக கிரகங்கள் நான்கும் நல்ல நிலையில் இருப்பதால் சந்தோஷத்தில் வைக்கும் வாரம் இது. உங்களில் சிலர் வீட்டிலோ, அலுவலங்களிலோ நல்லபெயர் எடுப்பீர்கள். இன்னும் சிலர் செயற்கரிய செயல் அல்லது சாதனைகளை செய்வீர்கள். மீனத்தை அடுத்தவர்கள் மெச்சும் வாரம் இது. சந்திரனும் யோகநிலையில் இருப்பதால் தொட்டது துலங்கும். எடுத்த காரியம் வெற்றி பெறும். நீண்டகாலமாக நீங்கள் நினைத்திருந்த விஷயங்களை நிறைவேற்றிக் கொள்ள இது தகுந்த நேரம். இனிமேல் உங்களுக்கு கஷ்டங்கள் எதுவும் இல்லை.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசி பலன்களை வாட்ஸ் அப்பில் பெற குருஜியின் whatsapp சேனல் அஸ்ட்ரோ குருஜியை கீழ்காணும் லிங்கில் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்...

https://whatsapp.com/channel/0029Va5e3OR0rGiLgmkhJ537

No comments :

Post a Comment