ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8286 99 8888
ஜோதிடம் என்பது பலவிதமான அமைப்புகளை, நிலைகளை கலந்து பார்த்து பலன்களை கணிக்க வேண்டிய ஒரு கலை. இதில் ஒரு அமைப்பு இன்னொன்றுக்கு இணையானதாகவோ அல்லது ஒன்றை இன்னொன்று தவிர்க்க முடியாததாகவோ இருக்கும்.
வேத ஜோதிடத்தில் ஒரு ஜாதகத்தில் லக்னமும், லக்னாதிபதியும் தலையாயது என்று நமக்கு உணர்த்தப்படுகிறது.
ஒரு மனிதன் இயங்குவதற்கு முழு உடலும் தேவைதான் என்றாலும் இந்த முழு உடலையும் இயக்கக்கூடிய மூளை எனப்படுவது அவனது தலையில் அமைந்திருக்கிறது. தலை இல்லாவிடில் அவன் உயிருள்ளவனாக இருக்க மாட்டான். கையோ, காலோ அல்லது வேறு வித அவயங்களும் இல்லாத நிலையில் ஒருவன் உயிர் வாழ முடியும் என்றாலும் அனைத்தையும் இயக்கும் மூளை இல்லாவிடில் அவனால் இயங்க முடியாது.
அதைப்போலவே ஜாதகத்தில் 12 வீடுகள் சொல்லப்பட்டாலும், அந்த 12 பாவகங்களையும் மூளையாக இருந்து இயக்குபவர் லக்னாதிபதி எனும் கிரகம்தான். இந்த லக்னாதிபதி கிரகமே ஒரு மனிதனின் எண்ணத்தையும், செயல்திறனையும், அவனது நல்லது, கெட்டதுகளையும் எடுத்துக் காட்டுகிறது.
லக்னாதிபதி கிரகம் சுபத்துவமாக அமைந்து, ஒருவேளை அவர் பாப கிரகமாக இருந்தால் கூடுதலாக சூட்சும வலுவோடு இருக்கும் நிலையில், அவரது நண்பர்கள் என்று சொல்லப்படக்கூடிய ஐந்து, ஒன்பதுக்குடையவர்கள் எனும் மற்ற இரண்டு கிரகங்களும் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருக்கும் பொழுது அதனை யோக ஜாதகம் என்கிறோம்.
லக்னாதிபதி பாபத்துவமாகவும் அல்லது வேறு வகைகளில் பலவீனமாக இருக்கும் நிலையில் அந்த மனிதரால் முழுமையாக இயங்க முடியாமல் போகிறது. கூடுதலாக சொல்லப்போனால் அவரால் அதிர்ஷ்டத்துடன் வாழ முடியாமல், சராசரிக்கும் கீழான மனிதனாக, பிறரால் ஆட்டுவிக்கப்படும் மனிதராக இருந்து தன் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்.
அதே நேரத்தில் ஜாதகத்தின் முதல் வீடாகிய லக்னமும், அதன் தலைவனாகிய லக்னாதிபதியும் சுபத்துவம் அல்லது சூட்சுமவலு போன்ற தன்மைகளோடு அமையும் பட்சத்தில், அந்த மனிதர் பிறரை இயக்குபவராகவும், அதிர்ஷ்டக்காரராகவும், உழைப்பை விட அதிர்ஷ்டத்தால் நல்ல சந்தர்ப்பங்களை அடைந்து, சொகுசாக வாழ்ந்து மறைபவராகவும் இருக்கிறார்.
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதிக்கு இணையாகச் சொல்லக்கூடிய இன்னொரு கிரகம் தசாநாதன் ஆகும்.
லக்னமும், லக்னாதிபதியும் ஜாதகர் எத்தகைய நிலையில் இருப்பார், ஒரு விஷயத்தை எப்படி எதிர் கொள்வார், அவரது எண்ணங்கள் என்ன, அவர் எதற்காக இங்கே வந்திருக்கிறார் என்பதை குறிப்பிட்டாலும், அவரது வாழ்வில் நடக்கும் அத்தனை சம்பவங்களையும், அவரது ஏற்ற இறக்கங்களையும் தசாநாதன் எனப்படும் 4 அல்லது 5 கிரகங்களே அவ்வப்போது தீர்மானிக்கின்றன.
லக்னாதிபதிக்கும் தசாநாதனுக்கும் உள்ள முதன்மையான வித்தியாசம் என்னவெனில், லக்னாதிபதி என்பவர் ஒருவர் பிறந்ததிலிருந்து இறக்கும் வரையில் அவருடனேயே இருக்கின்ற, அவரைப் பிரதிபலிக்கின்ற ஒரு மூலக் கிரகம். தசாநாதன் என்பவர் சில குறிப்பிட்ட வருடங்கள் மட்டும் ஜாதகரை ஆளுமை செய்துவிட்டு, அதற்கு முன்போ, பின்போ அவர் வாழ்க்கையில் இல்லாமல் போய் விடக் கூடியவர்.
உதாரணமாக உங்களுக்கு கும்ப லக்னமாகி, லக்னாதிபதி சனி எனும் நிலையில், அந்த சனிக்கிரகம் உங்கள் ஜாதகத்தில் சுப, பாபத்துவமாக மற்றும் சூட்சுமவலுவோடு இருக்கும் அமைப்பில் சனியின் நிலைக்கேற்ப நீங்கள் வாழ்நாள் முழுக்க சனியைப் பிரதிபலிப்பவராக இருப்பீர்கள்.
கும்ப லக்னத்தின் நாயகனாகிய சனி நேரிடையாக, பாபத்துவமாகி, குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், தனித்த புதன் ஆகியோரின் தொடர்பை பெறாமல், லக்னத்தோடு வலுவாக தொடர்பு கொள்ளும் நிலையில் நீங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்திலும் நிதானமானவராக, வேகமாக முடிவெடுக்க இயலாதவராக, அனைத்திலும் குழப்பமாக, எதிர்மறை எண்ணங்கள் கொண்டவராக, பிறரைச் சார்ந்து இருப்பவராக, உள்ளுக்குள் தாழ்வு மனப்பான்மை கொண்டவராக, எதிலும் சலிப்பு மனம் கொண்டவராக இருப்பீர்கள். இது சனியின் சுபத்துவ, சூட்சும வலு நிலைகளுக்கேற்ப கூடுதல் குறைவாக இருக்கும்.
அதாவது கும்ப லக்னத்தில் பிறந்த நீங்கள் வாழ்நாள் முழுக்க சனியை பிரதிபலிப்பவராக இருப்பீர்கள். சனியின் குணங்கள் உங்களிடம் முழுமையாக அப்படியே இருக்கும்.
அதே நேரத்தில் உங்கள் வாழ்க்கையில் 4 அல்லது 5 க்கு மேற்பட்ட கிரகங்கள் தசாநாதனாக வருவார்கள். தசா நாதர்கள் எனப்படும் கிரகங்களே உங்களுடைய வாழ்க்கையின் ஏற்ற, இறக்கங்களை தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள். உங்கள் வாழ்வில் நடக்கும் நல்ல, கெட்ட சம்பவங்கள் தசா நடத்தும் கிரகங்களால் கொடுக்கப்படுகின்றன.
லக்னாதிபதிக்கு இணையான ஒரு கிரகமாக, ஒரு நிலையில் அவரைவிட மேம்பட்டவராக, லக்னாதிபதியையே இயக்குபவராக, கட்டுப்படுத்துபவராக தசை நடத்தும் போது மட்டும் ஒரு சூப்பர் பவராக தசாநாதன் இருப்பார்.
ஒரு நிலையில் லக்னாதிபதியோடு சேர்த்து மற்ற எட்டு கிரகங்களும் தசாநாதனின் ஆதிக்கத்தில் இருப்பார்கள். ஒரு தசையில் லக்னாதிபதி கூட தசாநாதனுக்கு உட்பட்டவராகத்தான் இருப்பார். தசையின் நாதனை மீறி லக்னாதிபதியாக இருந்தாலும் உங்களுக்கு எதுவும் கொடுத்து விட முடியாது.
தசாநாதன் என்பவனே சம்பவங்களை தரும் கிரகம். அவர் நல்ல சம்பவங்களைத் தருகிறாரா அல்லது கெட்டவைகளைத் தருகிறாரா என்பது அவருடைய சுபத்துவ, பாபத்துவ, சூட்சும வலு அமைப்புகளை பொருத்தது.
தசா நாதன் தரும் நல்ல, கெட்ட அமைப்புகளை அனுபவிக்கக்கூடிய அல்லது தாங்கக்கூடிய அதாவது தசை நடத்தும் கிரகம் தரும் சந்தோஷங்களை, சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க கூடிய அமைப்பில் லக்னாதிபதி இருந்தால் கூடுதலான சந்தோஷமும், தசாநாதன் தரும் கடுமையான துன்பங்களை தாங்கக்கூடிய அமைப்பில் இருந்தால் குறைவான துன்ப நிலையையும் ஜாதகர் அடைகிறார்.
லக்னாதிபதி வலிமையாக இருந்தால் ஜாதகர் அனைத்தையும் தாங்கக் கூடிய பலம் பொருந்தியவர். ஆனால் அவருக்கு கிடைக்கும் நன்மை, தீமைகள் தசா நாதர்களைப் பொருத்தது. வாழ்வில் நடக்கும் அனைத்தும் லக்னாதிபதியை பொருத்தும், தசாநாதனின் வலுவைப் பொருத்துமே அமைகின்றன.
தசாநாதன் எவ்வாறு பலன் தருகிறார்?
நட்சத்திர சாரம் என்பது மிக முக்கியமாக வேத ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. வேத ஜோதிடத்தின் மிகப்பெரிய கட்டமைப்பே இந்த இடத்தில் இருந்துதான் துவங்குகிறது.
தசா, புக்தி நாதர்கள் அமர்ந்திருக்கும் நட்சத்திரங்களில் அடிப்படையில்தான் ஒருவரின் வாழ்க்கைச் சம்பவங்கள் அமைகின்றன. அதேநேரத்தில் சாரம் தரும் நட்சத்திரங்களின் அடிப்படையில் மட்டுமே ஒரு தசையில் பலன்கள் நடந்து விடுவது இல்லை.
ஒரு தசையிலோ அல்லது புக்தியிலோ என்ன நடக்கும் என்பதைக் கணிக்க முக்கியமான ஒன்று மட்டுமே தசை, புக்தி நாதர்கள் அமர்ந்திருக்கும் நட்சத்திரத்தைக் குறிக்கும் சாரா பலம் என்பது. நட்சத்திர சார அமைப்பு மட்டுமே அனைத்தையும் தீர்மானிப்பதில்லை.
”ஒரு தசாநாதன், தான் அமர்ந்திருக்கும் நட்சத்திர அதிபதி கிரகத்தின் ஆதிபத்திய வீடுகள் எவையோ, அந்த வீடுகளின் பலனை, தனக்கு சாரம் தந்த கிரகம் எந்த வீட்டில் அமர்ந்திருக்கிறதோ அந்த வீடு வழியாக தருவார்” என்பது வேத ஜோதிடத்தின் மிக முக்கியமான தசை பற்றிய விதி. இந்த முக்கிய விதியே ஒரு மனிதனின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. இதன்படியே சம்பவங்கள் நடக்கின்றன.
அதேநேரத்தில் மேலே சொன்ன இந்த விதிப்படி மட்டுமே அனைத்தும் நடந்து விடுவதில்லை
தசாநாதன் யாருடைய வீட்டில் அமர்ந்து இருக்கிறாரோ, யாருடைய பார்வை, இணைவுகளை பெற்றிருக்கிறாரோ, சம்பந்தப்பட்ட தசை நாதனின் காரகத்துவங்கள், ஆதிபத்தியங்கள் எவையோ, இவையெல்லாம் கலந்த நிலையில்தான் ஒரு தசையின் பலன்கள் அமையும்.
இப்போது நான் சொன்னவைகள் அனைத்தும் பாரம்பரிய ஜோதிடத்தில் மிக முக்கிய விதிகள். அடுத்து நான் சொல்லப் போவது சுபத்துவ, சூட்சுமவலு தத்துவத்தின்படி சில முக்கிய நிலைகள்.
பாரம்பரிய ஜோதிட அமைப்பில் தசாநாதன் நல்ல நட்சத்திர சாரத்தில் இருந்தால் நற்பலன்கள் நடக்கும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. குறிப்பாக தசாநாதன் 5, 9 அதிபதிகளின் சேர்க்கை பெற்று, கேந்திர கோணங்களில் இருந்தால் மிகவும் நன்மை தரும் என்று ஒரே நிலையில் வலியுறுத்தி சொல்லப்படுகிறது. ஆயினும் நடைமுறையில் பலன் வேறாக இருக்கிறது.
உதாரணமாக இதே கும்ப லக்னத்தைச் சேர்ந்த ஜாதகருக்கு சுக்கிர தசை என்பது மிகவும் யோகத்தை கொடுக்ககூடிய ஒரு அமைப்பாக இருக்கும். சுக்கிரன் ஸ்தான பலம் என்று சொல்லப்படக்கூடிய உச்சம், ஆட்சி, வர்க்கோத்தமம், நட்பு நிலைகளை அடைந்திருக்கும் போது மற்றும் கும்பத்தின் இன்னொரு யோகரான புதனின் நட்சத்திரத்தில் அல்லது லக்னாதிபதியான சனியின் நட்சத்திரத்தில் அமர்ந்து இருக்கும் பட்சத்தில் கூடுதலான நற்பலனை ஜாதகர் சுக்கிர தசையில் அடைய வேண்டும்.
மாறாக சுக்கிரதசை அவருக்கு நன்மையற்ற நிலையை தந்து கொண்டிருக்கிறது என்றால் அங்கே சுக்கிரன் பாபத்துவமாக இருக்கிறார் என்று பொருள்.
சுக்கிரன் என்னதான் ஸ்தான பலத்தோடு, ஆட்சி, உச்ச நிலையோடு, சனி புதன் ஆகியோரின் யோக சார நிலையில் அமர்ந்து தசை நடத்தினாலும், அமாவாசைக்கு அருகில் இருக்கின்ற இந்த லக்னத்தின் ஆறாம் அதிபதியான, எதையும் கெடுக்கக் கூடிய சந்திரனின் அருகாமையிலோ, ராகு போன்ற இருள் கிரகங்களின் தொடர்பு கொண்டோ இருக்கும் நிலையில் நல்ல சாரம் வாங்கியிருந்தாலும் சுக்கிரதசை அவருக்கு கெடுபலன்களை மட்டுமே செய்யும். இந்த இடத்தில் பாரம்பரிய ஜோதிடத்தின் அத்தனை விதிகளும் செயலற்றுப் போய்விடும்.
நான் சொல்லுகின்ற சுபத்துவ, பாபத்துவ, சூட்சுமவலு கோட்பாடு மட்டுமே இங்கே நிச்சயமாக முன் நிற்கும். ஏராளமான ஜாதகங்களை ஆராய்ந்த பிறகே இதை நான் உறுதியாகச் சொல்லுகிறேன்.
உண்மையில் பலனை துல்லியமாக அறிய துணை நிற்பவை சுபத்துவ, பாபத்துவ, சூட்சுமவலு தன்மைகள்தான். எத்தகைய ஒரு நிலையிலும் பாரம்பரிய ஜோதிடம் சொல்லும் அத்தனை விதிகளும் முழுமையாக இருக்கும் நிலையிலும், அங்கே பாபத்துவம் உள்ளே நுழைந்து விட்டால் அந்த கிரகம் எந்த நிலையிலும் பலன் தராது. கெடுபலன்களை மட்டுமே தரும்.
அதாவது அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் மற்றும் காரகத்துவங்கள் கெட்டவைகளை மட்டுமே தருவதற்கு உரியதாகி விடும். அந்த தசை நல்ல பலன்களை உறுதியாக தராது.
அடுத்த வெள்ளி பார்ப்போம்.
மாலைமலரில் 02.10.2020 இன்று வெளிவந்தது .
No comments :
Post a Comment