Monday, September 28, 2020

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (28-09-2020 முதல் 04-10-2020 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : +91 8286 99 8888

மேஷம்:

ராசிநாதன் செவ்வாய் குருவின் வீட்டில் குருவிற்கு கேந்திரத்தில் உள்ளதால் இது மேஷ ராசிக்காரர்களின் மனம் போல் அனைத்தும் நடக்கும் வாரமாக இருக்கும். முடிக்க முடியாமல் இருந்த விஷயங்களை வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள். சிலருக்கு எதிர்கால முன்னேற்றங்களுக்கான ஆரம்பங்களும், அறிமுகங்களும் இருக்கும். நட்புக்கிரகங்கள் யோக அமைப்பில் இருப்பதால் சாதகமான வாரம் இது. கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். தொழில்ரீதியான பயணங்கள் இருக்கும்.

சுக்கிரன் நன்மை தரும் அமைப்பில் இருப்பதால் நன்கு சம்பாதித்து உங்களை கிண்டல் செய்தவர்களை வாயடைக்கச் செய்வீர்கள். ஆறுக்குடைய புதன்  ராசியைப் பார்ப்பதால் உங்கள் செயல்களில் பதற்றம் இருக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனமாக  இருக்க வேண்டும். சில நேரங்களில் சுற்றி உள்ளவர்களும் உங்களை அதிகமாக வெறுப்பேற்றுவார்கள். ஒரு குறிப்பிட்ட பலனாக முதல் திருமணம் தோல்வியில் முடிந்தவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லமுறையில் அமைவதற்கான ஆரம்பங்கள் இப்போது இருக்கும். 

ரிஷபம்:

வர இருக்கும் குருப்பெயர்ச்சியால் ரிஷப ராசிக்கு அனைத்திலும் மாற்றங்களும், ஏற்றங்களும் இருக்கும். முப்பது வயதுகளில் இருக்கும் இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் எதையும் சாதிப்பீர்கள். பெண்களுக்கு மிகவும் நன்மை தரும் வாரம் இது. எதிர்காலத்தில் நீங்கள் வளமான வாழ்க்கை வாழக்கூடிய அமைப்புக்கு அஸ்திவாரம் இப்போது அமையும். புதிய அறிமுகங்கள் உண்டு. அதனால் நன்மைகளும் இருக்கும். மிக முக்கிய பலனாக இந்த வாரம் குருட்டு அதிர்ஷ்டத்தின் மூலம் ஒரு நல்லது நடக்கும்.

குரு எட்டில் அமர்ந்து, நான்கில் உள்ள சுக்கிரனைப் பார்ப்பதால் இனிமேல் வராது என்று கைவிட்ட ஒரு தொகையோ அல்லது இனி நடக்காது என்று மறந்து  விட்ட ஒரு விஷயமோ இந்தவாரம் சாதகமாக நடந்து, கிடைத்து உங்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கும். தொழில் அமைப்புகளில் மந்தநிலை நீங்கி அதிகமுயற்சி இன்றியே லாபங்களும், நன்மைகளும் நடக்கும். வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு கடன் பெற்று வீடு வாங்க எல்லா அமைப்புகளும் கூடி வந்து விட்டது.

மிதுனம்:

ராசிநாதன் புதன் சுப வலுப் பெறுவதாலும், சூரியன் குரு, செவ்வாய் ராசிக்கு கேந்திரங்களில்  இருப்பதாலும் மிதுனத்திற்கு நல்லவைகள் நடக்கும் வாரம் இது. நடுத்தர வயதினர் பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். அவர்களின் கல்வியில் முன்னேற்றங்கள் இருக்கும். திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு நல்லவை கூடி வரும். இளம் பருவத்தினர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணைவரை தேர்ந்தெடுக்கக் கூடிய சம்பவங்கள் ஏற்படும். சிலருக்கு தொழில்மாற்றம், ஊர்மாற்றம், வீடுமாற்றம் போன்ற அமைப்புகள் ஏற்படும்.

தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு துறைரீதியான நெருக்கடிகள் இருக்கும். சிலருக்கு தந்தைவழி உறவினர்களால் லாபம் கிடைக்கும். அப்பாவின் ஆசிர்வாதத்தால் நன்மைகளை பெறுவீர்கள். சொத்தில் வில்லங்கம் இருந்தவர்களுக்கு இந்த வாரம் தீர்வு கிடைக்கும். வழக்குகள் சாதமாக திரும்பும். சிலருக்கு பெண்களால் பிரச்சினைகள் இருக்கும். வீட்டுக்கனவு நனவாகும். சிலருக்கு வெளிமாநிலம் அல்லது வெளிதேச பிரயாணம் இருக்கும். சிலர் பொருளாதார பின்னடைவுகளை சந்திப்பீர்கள். அண்ணன்கள் உதவுவார்கள்.

கடகம்:

ஜீவனாதிபதி செவ்வாய் பாக்கியத்தில் சுப வலுப்பெறுவதால் கடக ராசிக்காரர்களுக்கு தடைகள் விலகும் வாரம் இது. குறிப்பிட்ட பலனாக பணிபுரியும் இடங்களில் உங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பார்கள். எதிரிகள் கை ஓங்கும். ஆயினும் எல்லாம் பரம்பொருளின் கருணையால் நன்மையாகவே முடியும். பணவரவு சுமாராகத்தான் இருக்கும். செலவுகளை யோசித்து கலக்கம் அடைவீர்கள். செலவிற்கு ஈடான வருமானம் அடுத்த வாரம் முதல் வரத் துவங்கும் என்பதால் இந்த மனக்கலக்கம் தற்காலிகமானதுதான். கவலை வேண்டாம்.

மேலதிகாரிகளால் சங்கடங்கள் உண்டு. அதிகாரி சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. வியாபாரிகளுக்கு போட்டிகள் இருக்கும். வியாபாரம் குறையும் என்றாலும் லாபம் குறையாது. வருமானத்தை விட அதிக செலவு இருக்கும். எதிலும் சிக்கனமாக இருங்கள். அனைத்திலும் பெரியவர்களின் ஆலோசனை கேட்பது நல்லது. 1,2,3,7 ஆகிய நாட்களில் பணம் வரும். 28-ம்தேதி காலை 9.41 முதல் 30-ம் தேதி இரவு 8.36 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கொண்ட தினங்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்:

ஜீவனாதிபதி சுக்கிரன் குரு பார்வையுடன் இருக்கும் நல்ல வாரம் இது.  சிம்மத்தினர் இப்போது  அனைத்திலும் நல்ல முன்னேற்றம் வரக் காண்பீர்கள். உங்களில் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. குறிப்பாக பாக்கியாதிபதி செவ்வாய் குருவின் வீட்டில் இருப்பதால் தொழில் நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு மேன்மைகள் இருக்கும். யோகக் கிரகங்கள் வலுப்பெற்று இருப்பதால் சிம்ம ராசிக்காரர்கள் உற்சாகமாக இருப்பீர்கள். நண்பர்கள் உதவி கிடைக்கும்.

தாயார் வழியில் நன்மைகளும், அம்மாவின் ஆசிர்வாதங்களும் கிடைக்கும். சிலருக்கு தாய்வழி சீதனம் போன்று ஏதேனும் சொத்துக்கள் கிடைக்கும்.  சிலர்  புதிய வாகனம் வாங்குவீர்கள். தந்தைவழி உறவினர்களால் சங்கடங்கள் உண்டு 5,6,7 ஆகிய நாட்களில் பணம் வரும். 30-ம் தேதி இரவு 8.36 மணி முதல் 3-ம் தேதி காலை 8-50 வரை சந்திராஷ்டமம் என்பதால் ஞாயிறு, திங்கள் புதிய முயற்சிகள் எதையும் ஆரம்பிக்க வேண்டாம். இந்த தினங்களில் அறிமுகமாகும் ஒருவரின் மூலம் பின் நாட்களில் சிக்கல்கள் வரும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.  

கன்னி:

வாரத்தின் இரண்டு நாட்கள் சந்திராஷ்டம நாட்களாக இருப்பதால் எதிலும் விட்டேத்தியான மனப்பான்மையுடனும், சோம்பல், விரக்தியுடனும் இருப்பீர்கள். கன்னி  சுறுசுறுப்பை வளர்த்து கொள்ள வேண்டிய வாரம் இது. எதிலும் முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள், இதைச் செய்யலாமா? அதைச் செய்யலாமா? என்று நீங்கள் அலைபாயும் வாரம் இது. இன்னும் சில வாரங்களில் சனியுடன் குரு இணையப் போவதால் உங்களுக்கு உதவி செய்ய மறுத்தவர்கள் இனி தேடி வந்து உதவி செய்வார்கள். கன்னிக்கு விடிவுகாலம் பிறந்து விட்டது.

ராசிநாதன் புதன் சுக்கிரன் வீட்டில் நட்பு நிலை பெற்று சோதனைகளை சமாளிக்கும் ஆற்றலை கொடுப்பதால் கன்னி ராசிக்காரர்கள் இனிமேல் எதற்கும் கலங்கத் தேவையில்லை. சோதனைகள் நடந்து கொண்டிருக்கும் சிலருக்கும் நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை அடையாளம் காட்டத்தான் அது நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். 1,2,3, ஆகிய நாட்களில் பணம் வரும். 3-ம் தேதி காலை 8.50 முதல் 5-ம் தேதி இரவு  9.41 வரை சந்திராஷ்டமம் என்பதால் மேற்கண்ட நாட்களில் முக்கியமான முடிவு  எடுக்காமல் இருப்பது நல்லது.

துலாம்:

ராசிநாதன் சுக்கிரன் குருபார்வை பெறுவதால் துலாமுக்கு நன்மைகள் நடக்கும் வாரம் இது. சுக்கிரனின் சுபவலுவால் உற்சாகமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருப்பீர்கள். முகத்தில் இருக்கும் சந்தோஷம் வெளிப்படையாக தெரியும்படி நடந்து கொள்வீர்கள். வீட்டிலும், வெளியிலும் நல்ல பெயர் கிடைக்கும். வார நடுவில் வளர்பிறைச் சந்திரனின் பார்வையும் சுக்கிரனுக்கு கிடைப்பதால் சகோதர,  சகோதரிகளுக்கு ஏதேனும் நல்லவைகளைச் செய்து கொடுப்பீர்கள். மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும்.

ராசிக்கு சனி பார்வை இருப்பதால் செய்வது தவறாகவே இருந்தாலும் ஒத்துக் கொள்ள மாட்டீர்கள். ராசிநாதன் யோகநிலை பெற்றிருப்பதால் கெடுதல்கள் சொல்வதற்கு எதுவும் இல்லை. பத்தாமிடம் வலுப் பெற்று இருப்பதால் சிலருக்கு பதவி கிடைக்கும். சிலருக்கு பெண்கள் மூலமான லாபங்கள் உண்டு. சொந்தத் தொழில் வைத்திருப்பவர்களுக்கு நன்மையான வாரம். மாணவர்கள் படிப்பை தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கு மிகவும் நல்ல பலன்கள் உண்டு.

விருச்சிகம்:

உங்களில் அதிகாரம் செய்யக்கூடிய பதவியில் இருக்கும் விருச்சிகத்தினருக்கு இந்த வாரம் இரண்டுங்கெட்டான் நிலை இருக்கும். சிலர் இரண்டு அதிகார மையத்துடன் போராடுவீர்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் சிலர் உங்களை விட்டு விலகுவார்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு எதிர்கால வாழ்க்கைக்கான திருப்புமுனை சம்பவங்கள் நடக்கும். சிலர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பீர்கள். இளைய பருவத்தினருக்கு இண்டர்வியூ கடிதங்கள் வரும். ஆனால் வேலைதான் இழுத்தடிக்கும்.

முப்பது வயதுக்குட்பட்டவர்களுக்கு தொழில் விஷயத்தில் நல்ல தகவல்கள் உண்டு. தன்னுடைய திறமையை முதலீடாக வைத்து சம்பாதிப்பவர்களுக்கு இந்த வாரம் நல்ல பணவரவு இருக்கும். விவகாரத்து ஆனவர்களுக்கு இந்தவாரம் இரண்டாவது வாழ்க்கையின் தொடக்கத்திற்கான சம்பவங்கள் இருக்கும். வெளிநாடு செல்ல விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல தகவல்கள் வரும்.  தாயார்வழி செலவுகள் உண்டு. சிலருக்கு வாகன மாற்றம் இருக்கும். முப்பது வயதிற்குட்பட்டவர்கள் நீண்ட பிரயாணம் செல்வீர்கள்.

தனுசு:

யோகாதிபதி சூரியன் வலுவுடன் பத்தாமிடத்தில் இருப்பதும், அவரை நான்கில் உள்ள செவ்வாய் பார்ப்பதும் யோகஅமைப்புகள் என்பதால் இது தனுசு ராசிக்கு கெடுதல்கள் எதுவும் நடக்காத வாரம். செவ்வாய் வலுவான நிலையில் இருப்பதால் எதிர்ப்புகளை சமாளித்து வெற்றியாக்குவீர்கள். ஐந்தாமிடம் வலுப்பெறுவதால் நீண்ட நாட்களாக முடியாமல் இழுத்துக் கொண்டிருந்த விஷயத்தை  முடித்துக் காட்டி லாபம் பெறுவீர்கள். ஆறில் சுபத்துவம் அடைந்துள்ள ராகுவால் சிலருக்கு வேற்றுமொழி கற்றுக்கொள்ளும் வாய்ப்பு உண்டு.

இரண்டில் உள்ள சனி சுபத்துவம் அடையப் போவதால் இப்போது எதிர்காலத்திற்கான நல்ல மாற்றங்கள் நடைபெறும். முப்பது வயதுகளில் இருப்பவர்கள் வேலை, தொழில் விஷயங்களில் சில முக்கியமான மாற்றங்களை சந்திப்பீர்கள். சாப்ட்வேர், கணக்கு, ஊடகம், கலைத்துறை சம்மந்தப்பட்டவருக்கு இனிமேல் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். அலுவலகங்களில் சகஜ நிலை திரும்பும். அனைவராலும் இனி விரும்பப் படுவீர்கள். பேசாதவர்கள் இனி தேடி வந்து பேசுவார்கள். யோக வாழ்க்கையில் நுழையப் போகிறீர்கள்.

மகரம்:

தர்ம, கர்மாதிபதிகள் சுக்கிரனும், புதனும் நல்ல அமைப்பில் இருப்பதால் சோதனைகள் வந்தாலும் அதை உங்களுடைய சாதுர்யமான பேச்சாலும், அடுத்தவரை நோகடிக்காத பண்பாலும் விரட்டி விடுவீர்கள் என்பதால் மகரத்திற்கு இது நல்ல வாரம்தான். விரையாதிபதி குரு சுப வலுப் பெறுவதால் வீண் செலவுகள் தற்போது இருக்கும். ஒரு குறிப்பிட்ட பலனாக ஏழரைச்சனி நடப்பதால் எவரையும் நம்பி ஜாமீன் போடுவதோ, யாருக்கும் வாக்கு கொடுப்பதோ கூடாது. போட்டி பந்தயங்கள், லாட்டரி சீட்டு, ரேஸ் போன்றவை கை கொடுக்காது.

ஐந்தாமிடத்தோடு  தொடர்பு கொண்டுள்ள  ராகுவால் சிலருக்கு சூதாட்டம், பங்குச் சந்தை, லாட்டரி போன்றவைகளில் திடீர் ஆர்வம் வரும். அதனால் நஷ்டங்கள் இருக்கும் என்பதால் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தற்போது ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபட வேண்டாம். பணத்தையும் முதலீடு செய்ய வேண்டாம். பணம் கொடுத்தால் வேலை வாங்கித் தருகிறேன், ஒரு ரூபாய் போட்டால் பத்து ரூபாய் எடுத்து விடலாம் போன்ற மோசடிப் பேர்வழிகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள். உங்களுக்கு ஒருவர் உதவி செய்ய நினைத்தாலும் அவர் சிக்கலுக்கு உள்ளாகும் காலம் இது.

கும்பம்:

எட்டில் சூரியன் அமர்வதால் இந்த வாரம் நண்பர்கள் விஷயத்தில் கும்பத்திற்கு சாதகமற்ற பலன்கள் நடக்கும். வார ஆரம்பத்தில் சந்திரன் நல்ல நிலையில் இருப்பதால் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். தாயார் விஷயத்தில் நன்மைகள் உண்டு. ஆறுக்குடையவன் வலுப்பெறுவதால் பிடிக்காத ஒருவரிடம் சந்தர்ப்பவசத்தால் பேசியாக வேண்டி இருக்கும். எதிர்ப்புகள் வலுப்பெறும் என்பதால் கவனம் தேவை. நிதானம் தேவைப்படும் வாரம் இது.

உங்களின் பிடிவாத குணம் அதிகரிக்கும். எதிலும் அனுசரித்து விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உயர்கல்வி கற்க விரும்பும் சிலருக்கு அதற்கான ஆரம்பங்கள் இருக்கும். ஏதேனும் ஒரு நல்ல காரியத்துக்கு கடன் வாங்க வேண்டியிருக்கும். மூத்த அண்ணன், அக்காக்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். உங்களில் அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன்கள் நடக்கும். உங்களில் எல்லாத் துறையினருக்கும் நிதானமான பலன்கள் நடக்கும் காலம் இது, எந்தக் காரியமும் அதிக முயற்சி செய்தால்தான் வெற்றி பெறும்.

மீனம்:

லாபத்தில் சனி ஆட்சி பெற்றிருக்கும் நல்ல வாரம் இது. நீங்கள் ஆசைப்பட்டது எல்லாம் கிடைக்கப் போகிறது. இளையவர்களுக்கு வயதுக்கேற்ற ஜாலியான விஷயங்கள் நடக்கும். உற்சாகமாக இருப்பீர்கள். மீனத்தினரின் சொர்க்க வாரம் இது. இதுவரை சொந்தவீடு அமையாதவர்கள் இப்போது செய்யும் முயற்சிகள் பலன் அளிக்கும். குழந்தைகள் வழியில் செலவு உண்டு. கல்லூரி, பள்ளி செல்லும் பிள்ளைகளை வைத்திருப்பவர்களுக்கு தேவையற்ற விரயங்கள் இருக்கும். அரசு, தனியார் துறையினர் வளம் பெறுவார்கள். பெண்களால் சுகம் உண்டு.

நீண்டநாட்கள் சந்திக்காமல் இருந்த நண்பரையோ, உறவினரையோ சந்திப்பீர்கள்.  சிலருக்கு வடமாநில அல்லது வெளிநாட்டுப் பயணம் உண்டு.  தெய்வ தரிசனம் கிடைக்கும். வெகு நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்த வட மாநில புனிதயாத்திரை போகமுடியும். ஞானிகள் அருள்புரியும் ஜீவ சமாதிகளுக்கு சென்று அவர்களின் ஆசி பெறுவீர்கள். யோகாதிபதியான செவ்வாயும் வலுவாக இருப்பதால் எவ்வித கெடுபலன்களும் வருவதற்கு வாய்ப்பில்லை. சூரியன் ஏழாமிடத்தில் இருப்பதால் சகோதரர்களால் செலவுகள் வரும்.

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற  +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment