ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 9768 99 8888
மேஷம்:
ராசிநாதன் செவ்வாய் பதினொன்றாம் இடத்தில் வலுவாக இருப்பதால் மேஷத்திற்கு மனக்குழப்பங்கள் தீரும் வாரம் இது. கொரோனா தயவினால் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்த நிலையினை இனிமேல் நன்றாக சமாளிப்பீர்கள். இளைஞர்கள் சிலருக்கு இந்த வாரம் பணியிடங்களில் இருந்து நல்ல தகவல் வரும். இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கும் கிரகநிலைகள் மூலம் மாற்றங்கள் இருக்கும். சிலருக்கு மட்டும் அனைத்திலும் நெருக்கடிகள் இருக்கும். அடுத்தவர் வேலையையும் நீங்களே செய்ய வேண்டியிருக்கும்.
சுதந்திரத்தை இழந்து அனைத்திலும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலைமை இந்த வாரம் முதல் படிப்படியாக மாறும். இனிமேல் தொழில், வேலை இடங்களில் எவ்வித இழப்புகளுக்கும் வாய்ப்பு இல்லை குறிப்பாக வேலையைப் பற்றி பயந்து கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கும், தொழில் முன்பைப் போல நடைபெறுமா என்று என்ற சந்தேகத்தில் இருக்கும் நடுத்தர வயதினருக்கும், மீண்டும் பழையபடியே தொழில் நடக்கும். இனிமேல் எதற்கும் கவலைகளுக்கு இடம் இல்லை.
ரிஷபம்:
ராசிநாதன் சுக்கிரன் ராசியில் ஆட்சி நிலையில் வலுவாக இருப்பதால் எந்த ஒரு நிலையிலும் தொல்லைகள் இப்போது ரிஷப ராசிக்காரர்களுக்கு வருவதற்கு வாய்ப்பில்லை. கடந்த இரண்டு மாதங்களாக கொரோனாவின் தயவினால் ஏற்பட்டிருந்த பொருளாதார நிலைமைகளை இனிமேல் சுலபமாக சமாளிக்க முடியும். நம்பிக்கையை கைவிட வேண்டாம். சிலர் மருத்துவ விஷயங்களுக்கு பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். இரண்டில் ராகு வலுவாக இருப்பதால் விரயங்களும் வீண் செலவுகளும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களால் மறைமுக தொல்லைகள் வரும்.
உலகம் முழுக்க முடங்கிக் கிடக்கும் இன்றைய அமைப்பு இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என்பதால் எதிலும் அவசரப்படாமல் நிதானமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. அதேநேரத்தில் செலவுகள் குறையும். விரையங்கள் இருக்காது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது. உங்களில் பெரும்பாலானவர்களுக்கு வாரம் முழுவதும் குழப்பங்கள் இருக்கும். சிலர் கடினமான வேலைகளுக்கு ஒத்துக் கொள்வீரகள். இளைய பருவத்தினருக்கு வேலை விஷயங்களில் சிக்கல்கள் காத்துக் கொண்டிருக்கும். சிலருக்கு வாகன வம்புகள் உண்டு.
மிதுனம்:
எட்டாம் இடத்தில் குரு, சனி கூடும் நிலைமை இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என்பதால் மிதுன ராசிக்காரர்களுக்கு தயக்கங்கள் தீராத வாரம் இது. ராசியில் இருள் கிரகமான ராகு இருக்கும் நிலை நீடிக்கிறது என்பதால் எதிலும் ஒரு அச்ச உணர்வுடனேயே இருப்பீர்கள். குடும்பத்தில் இருக்கின்ற குழப்பங்கள் வரும் ஜூலை மாதம் முதல் தீர ஆரம்பிக்கும். கடந்த இரண்டு மாதகாலமாக உலகில் ஏற்பட்ட பொருளாதார தாக்கம் உங்களையும் விட்டு வைக்கவில்லை. அடுத்து வருகின்ற அதிசார பெயர்ச்சி மூலம் குரு மீண்டும் ராசியை பார்க்க போவதால் பிரச்சனைகளை சமாளிப்பீர்கள்.
மிதுனத்தினர் தங்கள் புத்திசாலித்தனத்தை உபயோகப்படுத்த வேண்டிய நேரமிது. எதிலும் ஒரு தயக்கத்துடன் இதுவரை இருந்தவர்கள் இந்தவாரம் முதல் முழுமையான திறனுடன் செயல்பட ஆரம்பிப்பீர்கள். கடந்த சில வாரங்களாக ஏற்பட்டிருந்த பிரச்சினைகளினால் தொழில் பற்றிய தீர்க்கமான உறுதியான முடிவை எடுத்திருப்பீர்கள். அந்த முடிவினை இந்த வாரம் முதல் செயல்படுத்த முடியும். கணவன், மனைவிக்குள் கருத்துப் பிணக்குகள் உண்டு. பெண்களுக்கு தலைவலி தரும் சம்பவங்கள் இருக்கும்
கடகம்:
இதுவரை பிரச்னைகளைக் கண்டு ஒதுங்கிப் போய்க் கொண்டிருந்த நீங்கள் இந்த வாரம் ஏதோ ஒரு விஷயத்தில் அடுத்தவருக்கு உதவி செய்ய நினைத்து வலியப் போய் பிரச்னைகளில் மாட்டுவீர்கள். அவசியத் தேவைகளைத் தவிர வேறு எதற்கும் ரிஸ்க் எடுக்க வேண்டாம். மற்றபடி பிரச்னைகள் இல்லாத வாரம்தான் இது. உங்களில் சிலருக்கு உற்சாகம் தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும். வெகுநாட்களாக தவற விட்ட உறவுகளை இப்போது உணருவீர்கள். சிலர் மறந்து விட்ட தொலைபேசி எண்களை தேடி எடுத்து நட்பு, உறவுகளை புதுப்பித்துக் கொள்வீர்கள்.
சனி குருவுடன் இணைந்து சுபத்துவமாக ஏழில் இருப்பது உங்கள் ராசிக்கு நல்ல அமைப்பு. வீட்டுவேலையில் ஆண்களை ஈடுபடுத்தி பெண்கள் பாராட்டுப் பெறுவீர்கள். சனி ராசியைப் பார்ப்பதால் மனம் குழப்ப நிலையில் இருக்கும். பண வரவு இல்லாத நிலையில் பொருளாதார தடைகளை சமாளிக்க முடியும். உங்களில் பணத்தின் அருமை தெரிய வரும் வாரம் இது. நெருங்கிய உறவுகளால் ஏற்பட்ட கசப்புகள் இப்போது மூத்த உறவினர் ஒருவரால் சரி செய்யப்படும். தயக்கம் விலகும் வாரம் இது.
சிம்மம்:
குடும்ப விஷயத்தில் பொறுமை தேவைப்படும் வாரம் இது. குடும்ப உறுப்பினர்களின் தேவைகளையும், குணங்களையும் இப்போது புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின் விசேஷத் திறமைகள் இப்போது தெரிய வரும். வாழ்க்கைத் துணையால் சந்தோஷமும், உற்சாகமும் இருக்கும். எல்லை மீறும் சில விஷயங்களால் கருத்து வேறுபாடுகளும் வரும். இளைஞர்கள் சிலருக்கு தேவையற்ற விவாதங்களால் சங்கடங்கள் உண்டு. அவசியத் தேவைகளின்றி கடன் கேட்க வேண்டாம். ஏமாற்றங்கள் வரும்.
பருவ வயது குழந்தைகள் விஷயத்தில் சண்டைகள் வரலாம். தலைமுறை இடைவெளி என்பதை இப்போது உணருவீர்கள். உங்களின் குழந்தைகளை நீங்களே வேறு கோணத்தில் பார்க்கும் வாரம் இது. வேலை, தொழில் விஷயங்கள் கவலை அளிக்கும். உங்களில் சிலருக்கு இருக்கும் வேலையில் மாற்றங்கள் வரும் வாரம் இது. 17-ம்தேதி காலை 7.14 முதல் 19-ம்தேதி இரவு 7.53 மணி வரை சந்திராஷ்டம நாட்கள். சிலருக்கு வெளிமாநிலம் வெளிநாடு விஷயத்தில் நல்ல தகவல் உண்டு
கன்னி:
ராசிநாதன் புதன் வலிமை குறைந்த நிலையில் இருப்பதால் இந்த மாதம் முழுவதும் கன்னி ராசியினருக்கு இப்போது இருக்கும் முடக்க நிலை நீடிக்கும். இளைஞர்கள் சிலருக்கு தொழில் இடங்களில் பிரச்னைகள் வரும். சிலருக்கு அவமானங்கள் உண்டு. ஆயினும் பெரிய அளவில் சோதனைகள் இருக்காது. சில நிலைகளில் தப்பித்து விடுவீர்கள். அதற்காக ரிஸ்க் எடுக்க வேண்டாம். பன்னாட்டு கம்பனிகளில் வேலை செய்வோருக்கு மாற்ற நிலைகள் இருக்கும் என்பதால் கவனமுடன் இருக்க வேண்டிய வாரம் இது.
ராசிநாதன் பலவீன நிலையில் இருப்பதால் எதிலும் ஒரு தடுமாற்றம் இருக்கும். கைப் பொருளின் மேல் கவனம் இருக்கட்டும். பொருட்கள் தொலைந்து போவதற்கோ, திருட்டு நடப்பதற்கோ, விரயம் ஆவதற்கோ வாய்ப்பு இருக்கிறது. செல்போனை மறதியாக எங்காவது விட்டுவிட்டு தேடிக்கொண்டிருப்பீர்கள். ஜூன் மாதத்திற்குப் பிறகு தொழில், வியாபாரத்தில் தேக்க நிலைகள் மாறும் என்பதால் அதுவரை பொறுமையுடன் இருக்க வேண்டியது வரும். 19-ம்தேதி இரவு 7.53 முதல் 22-ம்தேதி காலை 7.37 வரை சந்திராஷ்டம நாட்கள்.
துலாம்:
வாரம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன் எட்டில் மறைந்த நிலையில் இருப்பதாலும், சனியின் பார்வை ராசியில் விழுவதாலும் எதிலும் ஒரு தயக்க நிலையில் இருப்பீர்கள். காரணமின்றி கோபமும் எரிச்சலும் வரும். எல்லோரையும் சந்தேகப்படும் சூழ்நிலை வரலாம். பிடிவாதமான போக்கை கடைப்பிடிப்பீர்கள். உங்களில் பெரும்பாலோனோருக்கு வருமானம் இல்லாத நிலையில் செலவுகளும், விரயங்களும் ஏற்படும். எதிலும் கவனமாக இருங்கள். துலாம் ராசியினரின் பொறுமையைச் சோதிக்கும் வாரம் இது.
நிதானம் தேவைப்படும் வாரம் இது. இன்னும் சில வாரங்களுக்கு உங்கள் ராசிக்கு ஆகாத கிரகமான குரு, சனியுடன் கூடுகிறார். இந்த கிரகநிலையால் எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் கோபத்திற்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற தெய்வ வாக்கை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். காய்கறி மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள், மருத்துவம் சம்பந்தபட்டவர்களுக்கு நல்ல தகவல் உண்டு. 22-ம்தேதி காலை 7.37 முதல் 24-ம்தேதி மாலை 5.34 மணிவரை சந்திராஷ்டம நாட்கள்.
விருச்சிகம்:
சட்டியில் இருந்து தப்பி அடுப்பில் விழுந்த கதை இப்போது விருச்சிகத்திற்கு இருக்கும் என்பதால் எரிச்சல் தரும் வாரம் இது. இளைஞர்கள் எதிலும் அலட்சியமாக இருக்க வேண்டாம். அனைத்து விஷயங்களிலும் கண்டிப்பும் கவனமாகவும் இருக்க வேண்டும். குறிப்பாக வேலை, தொழில் விஷயத்தில் கவனம் வைக்கவும். ஜூன் இறுதி வரை இந்த நிலைமைதான். அதன்பிறகு அனைத்து நிலைகளும் மாறும் என்பதால் பொறுமை தேவை. பெரிய அளவில் தொழில் செய்பவர்களுக்கு எதிர்காலம் பற்றிய கவலைகள் இருக்கும்
செய்யும் வேலை அளவிற்கு பண வரவு இருக்காது. கடன் வாங்கியாவது சமாளிப்பீர்கள். ஆணுக்குப் பெண்ணையும் பெண்ணுக்கு ஆணையும் அடையாளம் காட்டும் கால கட்டம் இது. உங்களில் சிலர் காதலிப்பீர்கள். சிலர் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இப்போது வாட்ஸ்அப்பில் சந்திப்பீர்கள். முகநூலில் சிலருக்கு இனிமையான அனுபவங்கள் இருக்கும். மனைவியின் மகத்துவம் தெரியும் வாரம் இது. சிலருக்கு வாழ்க்கைத் துணையால் நன்மைகளும் ஆறுதலும் இருக்கும். நம்பிக்கை வரும் வாரம் இது.
தனுசு:
தனுசு ராசிக்கு குறிப்பிட்ட ஒரு பலனாக ஐம்பது வயது தாண்டியவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஒரு முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். எதையும் நிதானமாக சிந்திப்பது நல்லது. குறுக்குவழி வேண்டாம். எதிலும் அவசரப்பட வேண்டாம். சிக்கல்கள் எதிலாவது சனியுடன் சேர்ந்த ராசிநாதன் குரு மாட்டி வைப்பார். எனவே எதிலும் அலட்சியம் வேண்டாம். அனைத்து விஷயங்களும் இழுத்துக் கொண்டே போய் ஜூன் மாத இறுதியில்தான் நன்றாக முடியும். பொறுமை தேவைப்படும் வாரம் இது.
பருவ வயது குழந்தைகளின் மேல் ஒரு கண் வைத்திருங்கள். அவர்களால் சில சங்கடங்கள் உண்டு. உறவுகள் மற்றும் நட்புகளைப் பற்றி புரிய வரும் வாரம் இது. வெகுநாட்களாக கிடைக்காத சில அனுபவங்கள் இந்த வாரம் உங்களுக்கு உண்டு. உங்களில் சிலர் பிறரிடம் உதவியை எதிர்பார்ப்பீர்கள். யாரிடமும் வீண் வாக்குவாதங்களைச் செய்யாதீர்கள். அவசியமின்றி நண்பர்களுடன் பேசுவதை இந்த வாரம் கண்டிப்பாக தவிர்க்கவும். சிலருக்கு அரசுத்துறைகளால் தொல்லைகள் உண்டு.
மகரம்:
ராசியில் உள்ள குரு, சனி சேர்க்கையால் இதுவரை கிடைக்காத சில அனுபவங்களை இப்போது பெறுவீர்கள். வாழ்க்கையைப் புரிய வைக்கும் வாரம் இது. உங்களில் இளைஞர்கள் மிகுந்த அவஸ்தையில் இருப்பீர்கள். வேலை என்றால் என்ன என்று கற்றுக் கொடுக்கும் வாரம் இது. சிலருக்கு கருத்து வேற்றுமையால் நட்புகள் விலகும். நெருங்கியவர்களால் பிரச்சனை வருவது தாங்க முடியாத கொடுமையாக இருக்கும். பொறுமை தேவைப்படும் வாரம் இது. ஜூன் இறுதி வரை நிலைமை இப்படித்தான்.
இந்த வாரம் பிள்ளைகள் விஷயத்தில் உங்களின் பலவீனங்கள் தெரிய வரும். சிலருக்கு மனைவியின் அருமை புரியும். உங்களின் தொந்தரவு தராத தன்மையால் மட்டுமே மனைவியால் மதிக்கப்படுவீர்கள். அக்கம் பக்க வீட்டாருடன் வீண் அரட்டை வேண்டாம். கொரோனா வைரஸ் பீதியை விட உறவினர்களிடம் இருந்து தப்பிப்பது கடினமாக இருக்கும். தொழில் வியாபாரம் பற்றிய கவலைகள் இருக்கும். ஆயினும் எதையும் சமாளிப்பீர்கள். மகரத்தின் வேதனைகள் விலக ஆரம்பிக்கும் வாரம் இது.
கும்பம்:
கும்பத்திற்கு இந்தவாரம் வருமானம் இல்லாமல் நிறைய செலவுகளும் விரயங்களும் இருக்கும். வயதானவர்களை வீட்டில் வைத்திருப்பவர்கள் அவர்களது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு இது நல்ல வாரம். இதுவரை உங்களை, உங்களின் திறமைகளைப் புரிந்து கொள்ளாத வாழ்க்கைத் துணைவர் இனிமேல் புரிந்து கொள்ள ஆரம்பிப்பார். கும்பத்தினர் வெகு காலத்திற்குப் பின்னர் தொழில் அமைப்பில் நிம்மதி காணும் வாரம் இது. எதிர்காலம் பற்றிய ஒரு தெளிவு இப்போது வரும்.
உங்களின் பொறுமையை அடுத்தவர்களுக்கு காட்டும் வாரம் இது. சூரியன் நான்கில் இருப்பது சாதகமற்ற நிலை என்று தோன்றினாலும் அவர் சுக்கிரனுடன் இருப்பதால் கெடுதல்கள் எதுவும் வராது. அதேநேரம் உங்களில் சிலர் வீட்டிலும் இருக்க முடியாமல், வெளியிலும் போக முடியாமல் அவஸ்தைப்படுவீர்கள். அடிக்கடி எரிச்சல் படுவீர்கள். ஜூன் இறுதி வரை இந்த வருமானம் இல்லாத நிலை நீடிக்கும். பணம் என்பது கண்ணில் படாத வாரம் இது.
மீனம்:
அடுத்த வாரம் முதல் நடக்க இருக்கும் கிரகப் பெயர்ச்சிகளால் இனிமேல் மீனத்திற்கு நன்மைகள் நடக்கும். ராசிநாதன் குரு சனியுடன் இணைந்து நீச்ச பங்கமாக இருப்பதால் அடுத்து வரப்போகும் வாரங்கள் பெரிய கவலைகளைத் தராது. சுக்கிரனின் ஆட்சி நிலையால் சிலருக்கு விரயங்கள் இருக்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் ஒரு தடங்கலை உணருவீர்கள். எரிச்சல் தரும் வாரம் இது. மனம் விட்டு எவரிடமும் பேச வேண்டாம். முதுகில் குத்தும் சில செயல்களால் நிம்மதியைத் தொலைப்பீர்கள்.
உங்களில் சிலருக்கு நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து கசப்பான நிகழ்வுகள் இருக்கும். ஜூன் மாத இறுதி வரை இந்த நிலை நீடிக்கும். வேலை மாற்றங்ககளை எதிர்பார்த்தவர்களுக்கு இழுத்தடிக்கும். உங்களில் சிலருக்கு பிடிக்காத வேலை மாற்றம் இருக்கும். சிலருக்கு சொல்ல முடியாத மன அழுத்தம் உண்டு. வீட்டிலும் வெளிப்படையாக பேச முடியாத நிலையில் இருப்பீர்கள். என்ன இருந்தாலும் எல்லா சிக்கல்களையும் மீனத்தினர் பொறுமையை கையாள்வதன் மூலம் சமாளிப்பீர்கள்.
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
No comments :
Post a Comment