கைப்பேசி : 9768 99 8888
இறுதியாக உச்ச நட்சத்திரம் திரு. ரஜினிகாந்த் தனக்கு
முதல்வர் பதவியில் ஆசை இல்லை என்பதை தெளிவாக அறிவித்து விட்டார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 19-20 மே 2017
ஆம் ஆண்டு, தொடர்ந்து இரண்டு தினங்களாக மாலைமலரில் “அடுத்த முதல்வர்
ரஜினியா?” என்ற தலைப்பில் நான் எழுதிய ஒரு ஜோதிடக் கட்டுரை ரஜினியின் ரசிகர்கள் மற்றும் அவரது
நலம் விரும்பிகளால் மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகியது.
இரண்டாவது நாள் முடிவுக் கட்டுரையில், தமிழக முதல்வர்
ஆகும் அமைப்பு ஜாதக ரீதியாக ரஜினிக்கு இல்லை என்பதை, ஏற்கனவே தமிழ்த் திரையுலகில்
இருந்து வந்து தமிழகத்தை ஆண்ட கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய
மூவரின் ஜாதக அமைப்புகளோடு, ரஜினியின் ஜாதகத்தை ஒப்பிட்டு வேத ஜோதிட விதிகளின்படி, ரஜினி அரசியல் உச்ச பதவியை அடைய முடியாது என்பதைச் சுட்டிக் காட்டியிருந்தேன்.
மாலைமலரில் அந்தக் கட்டுரை வெளிவந்த நாள், எங்களின் அனைத்து தொலைபேசிகளையும், எங்களது அலுவலகப் பணியாளர்கள்
எடுக்கவே பயப்படும் அளவிற்கு அவைகள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தன. அத்தனையும் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றியது.
இன்றும் என்னுடைய இணையதளத்தில் மிக ஆர்வமுடன் படிக்கப்படும் அந்தக்
கட்டுரையில், ஜாதகப்படி ஒரு பற்றற்ற துறவியின் மனநிலையைக் கொண்ட ரஜினிக்கு, தமிழக முதல்வர் பதவி மீது ஆசை இல்லை எனவும், தலைமை தாங்க
வைக்கும் அரசக் கிரகமான சூரியனை, இருள் கிரகமான சனி தனது மூன்றாம் பார்வையால் பார்த்த அவரது
ஜாதகப்படி, அவர் தமிழக முதல்வராக ஒருபோதும் ஆக முடியாது என்றும் தமிழக முதல்வராகும் துளியளவு மனநிலை
கூட அவருக்கு கிடையாது எனவும் எழுதியிருந்தேன்.
ஜோதிடன் என்பவன் கடவுளல்ல, ஜோதிடர் சொல்வதெல்லாம் பலிக்க வேண்டுமென்ற
அவசியமில்லை என்று அப்போது
ரஜினியைப் பற்றி நான் எழுதிய கருத்தை மறுத்தவர்கள் ஏராளம்.
உண்மையில் ஜோதிடன் கடவுள் இல்லைதான். ஆனால் ஜோதிடம்
கடவுள் தன்மை வாய்ந்தது. ஜோதிடம்தான் பரம்பொருள்... பரம்பொருள்தான் ஜோதிடம். நம்மையெல்லாம் தோற்றுவித்து, இங்கே ஆட்டுவித்தும்
கொண்டிருக்கின்ற அந்த மகாசக்தி. உன்னை நான் என்ன செய்யப் போகிறேன் என்பதை முன்பே
உன்னிடம் சொல்லி விடுகிறேன், முடிந்தால் அதை நீ கண்டு பிடித்துக் கொள், என்னுடைய
அனுமதியுடன் மாற்ற முடிந்தால் மாற்றமும் செய்து கொள் என்று நம்மிடையே கண்ணாமூச்சி
விளையாட தேர்ந்தெடுத்த ஒரு தளம்தான் ஜோதிடம்.
அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகிறேன், ஆரம்பிக்கப்
போகிறேன் என்று சொல்லிக் கொண்டே இதுவரை ஆரம்பிக்காமல் இருக்கிறார்
ரஜினிகாந்த் என்றும் ரஜினி மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது,
அவரைப் பற்றி நான்
எழுதிய அந்தக் கட்டுரையிலேயே “பொதுவாழ்வும்
அரசியலும் பிரிக்க முடியாத ஒன்று என்ற வகையில், என்றைக்கு ஒருவர்
பொதுவில் கருத்துச் சொல்லி, கவனிக்கப்படும் வகையில் பிரபலமாக இருக்கிறாரோ, அன்றே அவர் மறைமுகமாக வேணும் அரசியலில் இருக்கிறார் என்பதே உண்மை” என்று சொல்லியிருக்கிறேன்.
அதிலும் ரஜினிக்கு அரசியல் கட்சியினைப் போல பலம் வாய்ந்த ஒரு ரசிகர் மன்றமும், ரசிகர்கள் என்ற பெயரில் ஏராளமான தொண்டர்களும்
இருக்கிறார்கள் என்பதால் அவர் பல்லாண்டு காலமாக தமிழ்நாட்டு அரசியலில் இருக்கிறார்
என்பதுதான் சரி.
உண்மையைச் சொல்லப்போனால் அஇஅதிமுக என்ற கட்சி, எம்ஜிஆர்
மன்றம் என்ற எம்ஜிஆரின் ரசிகர் மன்றத்தில் இருந்துதான் பிறந்தது. அதாவது தன்னுடைய ரசிகர் மன்றத்தைத்தான் அப்படியே பெயர்
மாற்றி கட்சியாக்கினார் எம்ஜிஆர்.
இன்றைக்கும் ரஜினிக்கு ரசிகர்கள் என்ற பெயரில் ஒரு மிகப்பெரிய தொண்டர்கள் அடங்கிய ஒரு மன்றமும், அதற்கு மாவட்ட
செயலாளர்கள் உள்ளிட்ட அத்தனை நிர்வாக அமைப்புகளும் இருக்கின்றன.
உண்மையில் ரஜினியின் ரசிகர் மன்றம் என்பது அவருடைய அரசியல் கட்சிதான். அது தற்போதும்
இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. என்ன... முறைப்படி அது ஒரு அரசியல் கட்சியாக
பதிவு செய்யப்படவில்லை, அவ்வளவுதான். ஆனால்
மனதைச் செலுத்தி யோசித்துப் பார்த்தால் ரஜினி மன்றம் என்பது அவரது கட்சிதானே?
ராதா என்கின்ற என் மனைவியின் பெயரை கீதா என்று
மாற்றினால், என் மனைவி எனக்கு
மனைவி இல்லாமல் போய்விடப் போவதில்லை, அல்லது வேறு ஒரு பெண்ணாக அவள் மாறி விடப் போவதில்லை. அவள் அப்படியேதான் இருப்பாள். அதுபோலத்தான் ரஜினி அரசியல்
கட்சி துவங்கும் விவகாரமும்.
என்றைக்கு ரஜினி ரசிகர் மன்றம் ஆரம்பித்தாரோ அன்றே அவர் அரசியல் கட்சியும் துவங்கி விட்டார் என்பதுதான் உண்மை. ரஜினியின் தற்போதைய ரசிகர் மன்றம் உண்மையில் ஒரு
அரசியல் கட்சிதான். அவர் அதை இதுவரை அரசியல் கட்சியாக
சட்ட ரீதியாக பெயர் மாற்றம் செய்யவில்லை அவ்வளவுதான். எனவே ரஜினி
அரசியலில் இல்லை என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம்.
ஆனால், ஜோதிடரீதியாக
மிகப்பெரிய அரசியல் பதவிகளின் மேல் ரஜினிக்கு துளியும் ஆசை இல்லை என்பதே உண்மை. அவர் மிகப்பெரிய
பதவியாக, மிகப் பெரிய பாக்கியமாக நினைப்பது கயிலை நாதனின் திருப்பாதங்களை தரிசிப்பது மற்றும் பற்றிக் கொள்வது மட்டுமே என்பது அவரது ஜாதகம் சொல்லும் உண்மை.
தினசரி கயிலைநாதனை தரிசிக்க வேண்டும், இமயமலை அடிவாரத்திலேயே நீ ஒரு கூடாரத்தை போட்டுக்கொள் என்று ரஜினிக்கு யாராவது உத்தரவிட்டால், மிக ஆனந்தமாக
முழுமனதுடன் அதை உடனே செய்வார் என்பதே நிதர்சனம்.
ஆனால் தேர்தலில்
உன்னுடைய கட்சி ஜெயித்து விட்டது. 234 தமிழக சட்டமன்ற தொகுதிகளிலும் உங்களுடைய ஆட்களே
ஜெயித்திருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் நீங்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்க வேண்டும்
என்று சொன்னால், வீட்டுக்குள் இருந்துகொண்டே ஆளில்லை என்று தகவல் அனுப்புவார் ரஜினி.
இரு பகுதிகளாக நான் எழுதிய ரஜினியைப் பற்றிய “கலைஞர், எம்ஜிஆர், ஜெயா அடுத்து ரஜினியா.. ஜோதிடம் சொல்வதென்ன?” என்ற 20-5-2017 மாலைமலர் கட்டுரையில், ரஜினியின்
ஜாதகத்தில் சிம்ம வீடு மட்டும் வலுப்பெற்று இருப்பதால், அவர் ஒரு மறைமுகமான அதிகாரத்துடன் அதாவது
அரசாங்கத்தில் அவர் சொல்லும் எதுவும் நடக்கும் என்கிற தோரணையில் மகனை அரியணையில் அமர்த்தி
பின்னாலிருந்து ஆலோசனைகளைச் சொல்லி நிர்வாகத்தை நடத்தும் ஒரு முதிய அரசனைப் போலத்தான் இருக்க முடியுமே தவிர நேரடி அரசு பதவியில் இருக்க முடியாது என்று
எழுதி இருந்தேன்.
இதைத்தான் நேற்று ரஜினி உறுதிப்படுத்தியிருக்கிறார்.
சரி... பந்தயத்தில் இருந்து ஒரு குதிரை விலகி விட்டது. ஆனால் பந்தயம் அப்படியேதானே இருக்கிறது? போட்டியில் உள்ள மற்ற குதிரைகள் யார் என்று தெரிய வேண்டுமே? அதில் எது ஜெயிக்கும் என்றும்
அறிய வேண்டுமே?
தனது கட்சி ஜெயித்தாலும் இன்னொருவரைத்தான் முதல்வராக்குவேன் என்று ரஜினி தெளிவாகவே சொல்லி விட்டார். தனக்கு
முதல்வர் பதவி மீது ஆசை இல்லை எனவும் இன்னொருவர்தான் முதல்வராக
வேண்டும் என்றும் ஆண்மையுடன் அறிவித்து விட்டார்.
அப்படியானால் ரஜினியின் மனதில் வேறு யாராவது இருக்கிறார்களா அல்லது
முதல்வர் பதவிக்கு இப்போதே அவரால் யாராவது தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்களா? அப்படித்
தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் அவர் கட்சியிலேயே அவருக்கு அருகில் இருக்கிறாரா அல்லது அவர்
இதுவரை அரசியலுக்கே வராத ஒரு புதிய நபரா என்பதெல்லாம் மில்லியன் டாலர் கேள்விகள். ஆயினும் இவற்றுக்கு ஜோதிடத்தில் விடை காண இயலும்.
வரும் மாதங்களில் தமிழகத் தேர்தல் ஜுரம் தகிக்கப் போகும் வேளையில்
தன்னை ஆளப்போகும் அடுத்த முதல்வர் யார் என்பதுதான் இனி தமிழக மக்களின் முக்கிய கேள்வியாக
இருக்கப்போகிறது. இதனை ஜோதிடத்தின் மூலம் விடை காண இயலுமா என்றால் கண்டிப்பாக
முடியும்.
அதே நேரத்தில் இங்கே இணையத்தில் உள்ள தலைவர்களின் ஜாதகங்கள்
எதுவும் நம்பகமானது இல்லை .பெரும்பாலான தலைவர்களின் பிறந்த நேரம் தவறாக
இருக்கும் அல்லது அவரை நெருங்கி உள்ளவர்களுக்கு மட்டுமே அது தெரிந்திருக்கும்.
கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு மாபெரும் ஆளுமைகள் விலகிப் போய், ரஜினியின்
வாக்குப்படியே ஒரு மாபெரும் வெற்றிடம் தமிழகத்தில் இருக்கின்ற
இந்தச் சூழலில், தமிழக முதல்வர் பதவி எனும் அந்த
நாற்காலியைச் சுற்றி
ஓடிக் கொண்டிருக்கும், மியூசிக்கல் சேர் விளையாட்டில் கலைத்துறை சார்பில் ரஜினியை தவிர்த்து தற்போது கமலஹாசன் ஓடிக் கொண்டிருக்கிறார்.
அவரால் தமிழக முதல்வராக முடியுமா என்ற கேள்விக்கு அவரது உண்மையான ஜாதகம் இருந்தால் ஜோதிடரீதியாக உறுதியாக பதில் சொல்ல இயலும். இதற்கு அவரது
பிறந்த நேரம் குறிப்பிடப்பட்ட உண்மையான ஜாதகம் தேவை.
கமலஹாசன் ஜாதகம் என்று கிட்டத்தட்ட ஐந்து ஜாதகங்கள் இணையத்தில் இருக்கின்றன. இந்த ஐந்தின் பிறந்த நேரமும் வெவ்வேறானவை. ஒருமுறை நான்
குறிப்பிட்டது போல 60 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரம்
மாவட்டத்தில், எங்கோ ஒரு மூலையில், ஒரு சிறு நகரத்தில் பிறந்த கமலஹாசனின் சரியான பிறந்த
நேரம் அவருக்கே தெரியுமா என்பது சந்தேகம்தான்.
ஜோதிடத்தில் ஆர்வமுள்ள எவராவது கமலஹாசனின் பிறந்த நேரத்தை ஆதாரத்துடன்
குறிப்பிட்டு எனக்கு அனுப்பினால், நான் அவரது பிறந்த நேரத்தை மறைத்து, அவரது ஜாதகத்தை வெளியிட்டு ஜோதிடரீதியாக அவரால் தமிழக முதல்வராக முடியுமா என்பதை விவரித்துச் சொல்ல
தயாராக இருக்கிறேன்.
அதைப்போலவே தமிழக முதல்வர் பதவி எனும் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள தயாராக
இருக்கும் இன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், பந்தயம் தொடங்க இருக்கும் நேரத்தில் முன்னேறி வரப் போகும் டிடிவி
தினகரன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைய தலைவர் அன்புமணி ராமதாஸ், முதல்வராகும்
அனைத்து தகுதிகளையும் கொண்டு அதிர்ஷ்டம் மட்டுமே இல்லாமலிருக்கும் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் சீமான் ஆகியோரின் பிறந்த விபரங்கள் கிடைத்தால் நல்லது.
பாஜகவின் முன்னணித் தலைவர்களில் முதல்வராகும் வாய்ப்புள்ள இல. கணேசன், பொன். ராதாகிருஷ்ணன், எச். ராஜா, ஆளுநர் மேதகு. தமிழிசை சௌந்தரராஜன், காங்கிரஸ் கட்சியின் சில இளைய தலைவர்கள் ஆகியோரின் உண்மையான பிறந்த நேரம்
அடங்கிய ஜாதகக் குறிப்புகள் கிடைக்குமாயின் தமிழத்தின் அடுத்த முதல்வர் யார்
என்பதை வேத ஜோதிட விதிகள் மூலம் முன்கூட்டியே கணிக்க முடியும்.
இதில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் உண்மையான ஜாதகம்
என்னிடம் இருப்பதால் அவரைப் பற்றி நான் குறிப்பிடவில்லை. திமுகவின் அடுத்த
வாரிசுகளின் உண்மையான ஜாதகமும் என்னிடம் இருக்கிறது.
அடுத்த தமிழக முதல்வர்
யார் என்பதை விரைவில் ஜோதிடரீதியாக மாலைமலரில் பார்க்கலாம்...
அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM
தொடர்பு எண்கள் செல்: +91 9768 99 8888, 8286 99 8888, 9107 99 8888, 8870 99 8888, 8681 99 8888 +91 44 2435 8888, +91 44 4867 8888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற +91 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
Guruji eagerly waiting for your upcoming articles. Kindly explain the DMK Stalin horoscope soon.
ReplyDelete