நமது மூல நூல்கள் பாபர்கள் என்று சொல்லும் கேது, சூரியனை இதில் நான் குறிப்பிடவில்லை. ஆயிரக்கணக்கான ஜாதகங்களை ஆராய்ந்த பின், ஜோதிடத்தில் “சுபத்துவம்-சூட்சுமவலு” எனும் கிரகங்களின் மிக நுண்ணிய வலுவைக் கணக்கிட வைக்கும் அளவீடுகளைச் சொல்லும் நான், கேதுவை பாபர் என்று சொல்வதில்லை. உண்மையில் கேது பாபரும் அல்ல. அதேபோல சூரியனும் அரைப் பாபர்தான். முழுமையான பாபக் கிரகம் அல்ல.
இயற்கைப் பாபர் என்று ஒரு கிரகத்தை எதற்காகச் சொல்கிறோம்? அந்தக் கிரகத்தின் காரகத்துவங்கள் (செயல்பாடுகள்) கடுமையானதாக, மனிதனுக்கு துன்பம் விளைவிப்பதாக, கெட்டதாக இருப்பதால்தான்.
உதாரணமாக பாபக் கிரகமான சனி உழைப்பாளிகளை உருவாக்குபவர். வேலைக்காரனுக்கு காரக கிரகம் சனி. சூரியனுக்கு தந்தை, சந்திரனுக்கு தாய், புதனுக்கு மாமன், செவ்வாய்க்கு சகோதரன், குருவுக்கு பிள்ளை, சுக்கிரனுக்கு மனைவி என்பதைப் போல சனிக்கு உயிர்க் காரகத்துவம் அடிமை என்று நமது மூல நூல்கள் அந்தக்கால வழக்கப்படி குறிப்பிடும் வேலைக்காரன்.
ஒருவரது ஜாதகத்தில் சனி பலம் பெற்று அவரது தசை நடைபெறுமானால் அந்த நபர் உடல் உழைப்பை பிரதானமாக கொண்டுள்ள கடினமான தொழில்களில் உடலை வருத்தி சம்பாதிப்பவராக இருப்பார் (மெக்கானிக், மூட்டை தூக்குபவர், கூலித் தொழிலாளிகள், ஆலை உழைப்பாளிகள், கீழ்நிலைப் பணியாளர் போன்றவை). அதாவது யாராவது ஒருவருக்கு அவர் வேலைக்காரனாக இருப்பார்.
அப்படியானால் ஒரு கோடீஸ்வரனுக்கு சனி யோகராக இருந்து சனியின் தசை வருமானால் அவன் உடலை வருத்தும் வேலைகளில் ஈடுபடுவானா..? அல்லது இன்னொருவரிடம் போய் அந்தப் பணக்காரன் வேலைக்காரனாக இருப்பானா?
பாபக் கிரகங்கள் ஜாதகத்தில் வலுப் பெற்ற நிலையில் இருந்தாலே ஒருவன் சுகவாசியாக இருக்க முடியாது. லக்ன யோகராகவே இயற்கைப் பாபர்கள் அமைந்தாலும் அவை முற்றிலும் நேர்வலு பெறக் கூடாது. அதற்குப் பதிலாக அவர்கள் பலவீனமாகி, வேறு வகையில் சுபத்துவ, சூட்சும வலுப்பெற வேண்டும். சனி, செவ்வாய், ராகு ஆகிய பாபர்கள் ஆறு, எட்டு, பனிரெண்டில் மறைவு பெறலாம், நீச்சம் பெறலாம். அதன்பின் சுபத்துவமும் சூட்சும வலுவும் அடைந்தால் ஜாதகர் அதன் மூலம் யோகங்களை அனுபவிப்பார்.
அதேநேரத்தில் இதில் இன்னொரு விளைவாக, அந்த வலுவிழந்த கிரகத்தின் ஆதிபத்தியங்கள் ஜாதகருக்கு குறைவுபடும். அதாவது ஜாதகர் யோகத்தினை அனுபவிக்கும் அதேவேளையில் அந்தக் கிரகம் எந்த ஆதிபத்தியத்திற்கு உரியதோ அந்த ஸ்தானங்கள் மூலமாக ஜாதகருக்கு குறைகள் இருக்கும்.
உதாரணமாக...,
துலா லக்னத்திற்கு சனி 4, 5 க்குடையவர் என்பதால், சனி ஸ்தான பலம் இழந்து பலவீனமானால், சனியின் நான்காம் வீட்டின் முக்கிய உயிர் மற்றும் ஜடக் காரகத்துவங்களான தாயார், கல்வி, மற்றும் ஐந்தாம் வீட்டின் உயிர்க் காரகத்துவமான குழந்தைகள் விஷயத்தில் ஜாதகருக்கு நன்மைகள் குறையும். குறிப்பாக ஜாதகருக்கு கல்வி இருக்காது. தாயாரால் பயன் இருக்காது. மனித வாழ்க்கையின் மிக முக்கிய பாக்கியமாக ஜோதிடத்தில் சொல்லப்படும் புத்திர பாக்கியம் இருக்காது. அல்லது ஆண் வாரிசு கிடைக்காது.
ஆனால் சனி இங்கே ஸ்தான பலம் எனப்படும் நேர்வலு இழந்தால் சனியின் காரகத்துவங்களான கடன், ஆரோக்கிய குறைவு, உடல் ஊனம், அழுக்கு இடங்களில் இருத்தல், கடுமையான உடல் உழைப்பு, அடிமைத்தனம், இளமையில் முதுமை, கருப்பு போன்றவை ஜாதகரை நெருங்காது.
கீழே உள்ள ஜாதகத்தை பாருங்கள்.
இந்த ஜாதகம் ஒரு பெரும் கோடீஸ்வரருடையது. 31-7-1968 அன்று சென்னையில் பிறந்தவர் இவர். முற்றிலும் எவ்வித செல்வப் பின்னணியும் இல்லாத குடும்பத்தில் பிறந்த இவர் பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காதவர். இளம் வயதிலேயே ராகு தசையில், தந்தையின் தொழிலான சூதாட்டத் தொழிலில் நுழைந்து, குரு தசையில் அதிர்ஷ்ட சூதாட்டத்தின் மூலமாக நூற்றுக்கணக்கான கோடிகள் சம்பாதித்தார்.
ஒருவர் சூதாட்டத் துறையில் பெரும் பணம் சம்பாதிக்க வேண்டும் எனில், அவரது தொழில் ஸ்தானாதிபதி அல்லது யோகக் கிரகம் 12ஆம் இடத்து சம்பந்தம் பெற்றிருக்க வேண்டும் எனும் விதிப்படி, இவரது ஜாதகத்தில் ஜீவனாதிபதியான சந்திரன் வளர்பிறையாய் பனிரெண்டாம் இடத்தில், சூதாட்ட கிரகங்களான ராகு, கேதுக்களுடன் சம்பந்தப்பட்டு, பனிரெண்டாம் அதிபதி புதனுடன் பரிவர்த்தனையும் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரத்தில்
இங்கே ராகுவுடன் சந்திரன் இணைந்திருப்பின், தொழில் ஸ்தானாதிபதி பலவீனமாகி இவர் கோடீஸ்வரராக
இருந்திருக்க வாய்ப்பில்லை. கேது முழுமையான பாபர் அல்ல எனும்
எனது “பாபக் கிரகங்களின் சூட்சும வலு கோட்பாட்டின்படி”
இங்கே ஜீவனாதிபதி சந்திரன் கேதுவுடன் மட்டுமே இணைந்திருக்கிறார். அதனால் இவருக்கு ராகு மற்றும்
குரு தசையில் அதிர்ஷ்ட சூதாட்டத்தில் தொடர்பு ஏற்பட்டு மிகப் பெரும் பணம் சம்பாதிக்க முடிந்தது.
அதேநேரத்தில்
ஜீவனாதிபதி நேரடியாக பலவீனமானால், நடக்கும்
தசை நாதர்களின் பலத்திற்கேற்ப, தசைக்கு ஒரு தொழில் மாறும் எனும் விதிப்படி, குரு தசை வரையில் மட்டுமே இவருக்கு அதிர்ஷ்டத் தொழில் கை கொடுத்தது.
அடுத்த தசையின் நாதனான சனி, திக்பலம்
எனப்படும் சூட்சும வலுப்பெற்று, நேரடியாக
ஸ்தான பலம் இழந்து நீச்சமாகி, திரவக் கிரகமான சந்திரனுடன்
இணைந்து, வர்கோத்தமம் பெற்றுள்ளதால் இவருக்கு சனி தசை ஆரம்பித்ததும் சனியின் நீச்ச காரகத்துவமான மதுபானத்
துறையில் அறிமுகம் ஏற்பட்டு இன்று அத்துறையில்
முதலிடத்தில் இருக்கிறார்.
சூட்சும வலுப்பெற்றுள்ள சனி, குருவின்
பார்வையைப் பெற்று சுபத்துவமும் அடைந்திருக்கிறார். இது மிகவும் முக்கியமான ஒன்று.
ஒரு பாபக்கிரகம் சூட்சும வலுவும், சுபத்துவமும் ஒருசேரப் பெறும் நிலையில்
மிகப்பெரும் நன்மைகளைச் செய்யும்.
இங்கே நீச்ச சனிக்கு பார்வை தரும் குரு, வர்க்கோத்தம வலுப்பெற்று, ஆட்சிக்கு நிகரான வலிமை பெற்றிருக்கிறார். அவர் அமர்ந்திருப்பது அவருக்கு மிகவும் பிடித்த அதிநட்பு வீடு. எனவே இங்கே குருவின் திரிகோண ஒன்பதாம் பார்வைக்கு நீச்ச சனியை சுபத்துவப்படுத்தும் வலிமை அதிகம்.
தொழிலைக் குறிக்கும் பத்துக்குடையவன் நேரடியாக பலவீனமாகி, பின்னர் புதனுடன் பரிவர்த்தனை பெற்ற நிலையில் சந்திரன் திரவத்திற்கு அதிபதி என்பதால் சனி தசையில் இந்தக் கோடீஸ்வரருக்கு மதுபான தொழிலின் மேல் ஆர்வம் ஏற்பட்டு அத்தொழிலும் கை கொடுத்து மிகப்பெரிய வெற்றியையும், தன லாபத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
ராகு |
சனி |
|
|
|
31-7-1968 |
சுக், சூரி, செவ்,புத, |
|
|
குரு |
||
|
|
ல/ |
சந், கே |
மிக முக்கிய ஒரு சிறப்பாக இந்த ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் வர்கோத்தம நிலையை அடைந்திருக்கின்றன. அதிலும் அஸ்வினி, மகம், மூலம் ஆகியவற்றின் ஒன்றாம் பாதங்கள் வர்க்கோத்தம நிலையில் மிகவும் சிறப்பானவை. இந்த நட்சத்திர சாரத்தில் இருக்கும் கிரகங்கள் அனைத்து வர்க்க சக்கரங்களிலும் ஒரே இடத்தில் இருக்கும் என்பது அதன் சிறப்பு. ஆகவே அஸ்வினி 1 ஆம் பாதத்தில் பலவீனமான நிலையை அடையும் கிரகம் சூட்சும வலுவாக மிகச்சிறந்த உயர் நிலையை அடையும் என்பது உண்மை.
இங்கு
அஸ்வினி ஒன்றாம் பாதத்தில் அமர்ந்திருக்கும்
சனி நல்ல நிலையிலேயே இருக்கிறார். மேலும் குருவின் பார்வையால் சுபத்துவம், திக்பலத்தால்
சூட்சும வலு ஆகியற்றைப் பெற்று ஜாதகருக்கு மிகப்பெரும் நன்மையை தரும் தகுதி
பெற்றிருக்கிறார். மேலும் சனி இருக்குமிடம் இந்து லக்னமாகவும் அமைகிறது. இந்து
லக்னத்தில் இருக்கும் சுபக் கிரகங்கள் மட்டுமே மேன்மையான நிலையைச் செய்யும்
என்றாலும், சனி ஒரு பாபராக இருப்பினும், சுபத்துவம் அடைந்திருப்பதால் இங்கே அவரும்
ஒரு சுபராகி கோடிகளைக் கொட்டுகிறார்.
ஜோதிடம் சொல்லும் அனைத்து சுப நிலைகளும் ஒரு கிரகத்திற்கு அமையுமாயின், அது
மிகப் பெரும் நன்மைகளை ஜாதகருக்கு செய்யும் என்பதற்கு இந்த ஜாதகமும் ஒரு நல்ல
உதாரணம்.
அடுத்து
சனி, செவ்வாய்,
குரு ஆகிய மூவரும் இங்கே வர்கோத்தம
நிலையை அடைந்திருக்கிறார்கள் இதில் சனியும்,
செவ்வாயும் பாபக்
கிரகங்களுக்கு மட்டுமே உரிய சிறப்பாக
நான் சொல்லும் திக்பலம் எனும் நிலையை பெற்றிருக்கிறார்கள். கூடுதலாக சூரியனும் இங்கே பத்தாமிடத்தில் அமர்ந்து திக்பலம் பெற்றிருக்கிறார். மூன்று கிரகங்கள் திக்பலம் பெறின், சாதாரண குடும்பத்தில் ஒருவன் பிறந்து இருந்தாலும்
அவன் மிகப்பெரிய உயர் நிலையை அடைவான் என்று நமது மூல நூல்கள் சொல்லுகின்றன அதற்கும் இந்த ஜாதகம் ஒரு நல்ல உதாரணம்.
மேலும் இந்த ஜாதகத்தில் துலா லக்ன பாபியான
குரு ஆறாமிடத்திற்கு உரியவராகி, அதற்கு ஆறான பதினோராமிடத்தில் அமர்ந்து சுபரானார்.
துலாம் லக்னத்திற்கு வேறு எந்த இடத்தில் குரு அமர்ந்தாலும் சுபராக மாட்டார்.
எந்த ஒரு லக்னத்திற்கும் லக்ன பாபிகள் உபஜெய ஸ்தானமான 3,6,10,11 ல் நட்பு நிலை பெற்று அமருவதே நல்லது. கேந்திர, கோணங்களில் அமரக் கூடாது. அதன்படியே பார்த்தாலும் துலாம் லக்னத்திற்கு பாபியான குரு, 3, 6 ல் ஆட்சி, 10 ல் உச்சம் பெற்று வலுவாவது நல்லதல்ல.
சாதாரண நிலையில் இருந்த இவரை குரு தசை மகா கோடீஸ்வரனாக்கியது. சனி தசையோ உச்சத்தில் கொண்டு போய் வைத்து விட்டது. துலாம் லக்னமாகவே இருந்தாலும் ராஜயோகாதிபதியான இயற்கைப் பாபி சனி நேர்வலுவடைந்தால் அவரது தீய காரகத்துவங்கள்தான் நடக்கும். ஜாதகர் சாதாரண வாழ்க்கைதான் வாழ்வார். சனி நேர்வலு இழந்தால்தான் அந்த ஜாதகர் சுகவாசியாக இருப்பார். சனியின் கூலிவேலை, கடுமையான உடல் உழைப்பு தற்குறித்தனம், மந்தம், சோம்பல் போன்ற காரகத்துவங்கள் ஜாதகரை அணுகாது.
ஆனால் யோகாதிபதி பலவீனமானால் ஒருவன் எப்படி கோடீசுவரனாக ஆக முடியும்? ஆகக் கூடாது.
அதற்கு பதிலாகவே சனி திக்பலம் பெறுகிறார். குருவின் பார்வை பெறுகிறார். வர்க்கோத்தமும் அடைகிறார். (துலாத்திற்கு குரு பாபியேதான். அவர் பதினோராமிடத்தை தவிர்த்து வேறு எங்கிருந்து பார்த்தாலும் கெடுதல்தான். இந்த ஜாதகத்தில் பதினோராமிடத்தில் அவர் சுபராகி வர்க்கோத்தமம் பெற்று வலுவானார்.)
சரி ...
இயற்கை பாபக் கிரகங்கள் பலவீனமானால் வேறு என்ன செய்யும்?
சனி கெட்டதால் அது இந்த ஜாதகரின் 4, 5 ஆம் பாவகங்களையும், சனி அமர்ந்த 7 ஆம் பாவகத்தையும் பாதிக்கும். ஜாதகர் யோகசாலியாக இருப்பார். ஆனால் 4, 5, 7 ம் பாவகங்களின் மூலமாக அவர் வேதனைகளை அனுபவிப்பார்.
துலாம் லக்னத்திற்கு, லக்னத்தில் சனி உச்சம் பெற்ற அனேக ஜாதகங்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் உயரம் குறைந்தவர்களாக, பிடிவாதக்காரர்களாக, ஆலைகளில் உழைப்பாளிகளாக, அல்லது கையில் ஸ்பானரை பிடித்து வேலை செய்யும் மெக்கானிக்குகளாக, தன்னைச் சுற்றி உள்ள உலகத்தாரோடு ஒத்துப் போகாமல் வீண் சண்டையிடும் சாதாரணமானவர்களாகவே உள்ளனர். உச்ச சனி தசையில் அவர்கள் சாதாரண அடிமை வாழ்வே வாழ்கின்றனர்.
இயற்கைப் பாபிகள் லக்னாதிபதியாகவே வந்தாலும் உச்சம், ஆட்சி போன்று நேர்வலுப் பெறுவது நல்லதல்ல. மறைவிடங்களில் வலுப் பெறுவது நல்லது. நேரிடையாக வலுப்பெற்றால் ஜாதகர் கொடூரமானவராக இருப்பார். அது வெளியில் தெரியும்படி நடந்து கொள்வார்.
எந்த ஒரு யோக ஜாதகத்திலும் இயற்கைப் பாபக் கிரகங்கள் கண்டிப்பாக பலவீனம் அடைந்தே பலம் பெற்றிருக்கும். அல்லது பலம் அடைந்திருந்தாலும், வேறுவகையில் பலவீனமாயிருக்கும்.
No comments :
Post a Comment