Wednesday, July 3, 2019

வக்கிர கிரகங்களுக்கு பார்வை உண்டா?


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

செந்தில்
, 16. வேலம்பாளையம்,

கேள்வி.

வாரம் தவறாமல் மாலைமலர் படித்துவரும் வாசகன் நான். எனது மகன் பி முடித்து விட்டு மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் சாப்ட்வேர் கம்பெனியில் சென்னையில் வேலை பார்க்கிறான். திருமணம் ஆகவில்லை. அவனது ஜாதகத்தில் குரு லக்னத்தில் உச்சம் பெற்று வக்கிர நிலையில் இருக்கிறார். வக்கிர நிலையில் குருவின் பார்வையில் சுபத்தன்மை முழுமையாக இருக்குமா அல்லது குறையுமா அல்லது பார்வையே இருக்காதா? இதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா? இந்த ஜாதகருக்கு எப்போது திருமணம் நடைபெறும்?

பதில்

(கடக லக்னம், கன்னி ராசி, 1ல் குரு, கேது, 3ல் சந், 5ல் சூரி, 6ல் சுக், புத, சனி, 7ல் ராகு, 11-ல் செவ், 11-12-1990 இரவு 9-37 சேலம்)

வக்ரம் எனும் பின்னோக்கிச் செல்லும் நிலை என்பது ஒரு கிரகத்தின் இயல்புக்கு மாறான தோற்றம்தானே தவிர அந்த கிரகம் முழுமையாக தனது இயல்புகளை இழக்கும் நிலை அல்ல. வானில் கிரகங்கள் ஒருபோதும் பின்னோக்கி செல்வதில்லை. பூமி, சூரியனை சுற்றி வரும் பாதையின் இரண்டு முனைகளான, இரண்டு வளைவான பாதைகளில் மட்டுமே இந்த வக்ர தோற்றங்கள் ஏற்படுகின்றன. இதனைத்தான் நாம் சூரியனுக்கு ஐந்தாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடத்திற்கு வரும் குரு, சனி, செவ்வாய் கிரகங்களுக்கு  வக்கிர நிலை ஏற்படுகிறது என்கிறோம்

ஒரு சிலர்  வக்கிரம் அடைந்துள்ள கிரகங்கள் தனது முன் வீட்டுப் பலனைச் செய்யும் என்றும் சொல்கின்றனர். இதுபோன்ற கருத்துக்கள் நம்முடைய மூலநூல்களில் இல்லை. கிரகங்கள் எந்த நிலையில் இருந்தாலும், ராசிச் சக்கரத்தில் எந்த ராசியில் இருக்கிறதோ, அந்த ராசிப்படி, பாவத்தில் எத்தனையாவது வீட்டில் இருக்கிறதோ அந்த வீட்டின் பலனை செய்யும். இதுவே உண்மையான மூல விதி. அதாவது கடகத்தில் ஒன்றாம் வீட்டில் குரு இருந்தாலும், பாவகத்தில் மிதுனத்தில் இருந்தால் குரு தசையில் உச்ச குரு பனிரெண்டாம் வீட்டில் உள்ள பலனைச் செய்வார். லக்னத்தில் உள்ள பலனைத் தர மாட்டார்.

அதேபோல வக்கிர நிலைக்கும் பார்வைக்கும் சம்பந்தம் இல்லை. வக்ர கிரகங்களின் பார்வை ஒருபோதும் குறைவதில்லை. அவைகளின் நல்ல, கெட்ட பார்வை அமைப்புகள் அதேநிலையில் இருந்தே தீரும். இன்னும் சொல்லப்போனால் வக்கிரத்தில் ஒரு கிரகம் உச்ச, நீச நிலைகளுக்கு எதிர்மாறான பலன்களைச் செய்யும் என்று சொல்லப்படுகிறது. அதன்படி உச்சத்தில் வக்கிரமான கிரகம் நீச்ச பலனைத் தரும் என்று சொல்லப்பட்டாலும் அது உச்சமா பிறகுதான் இயல்பை இழக்கிறது என்று பொருள். நேரடியாக அந்த கிரகம் நீசம் ஆகிவிடவில்லை. எனவே வக்கிர நிலையை மிகவும் நுணுக்கமாக புரிந்து கொள்ள வேண்டும்.

வக்கிர நிலையை அநேகம் பேர் புரிந்து கொள்ளத் தடுமாறுவதால்தான், நான் இப்போது உச்சத்தில் வக்ரம் பெறும் கிரகம் நீச் நிலையை அடைந்திருக்கிறது என்று எழுதுவதில்லை. ஒரு கிரகம் நேரடியாக நீச்சனாகி பலம் இழப்பதற்கும், உச்சமாகி பின் வக்கிரம் அடைவதற்கும் ஏராளமான வேறுபாடுகள் இருக்கின்றன. எந்த ஒரு நிலையிலும் அந்தக் கிரகத்தின் முதல் அமைப்பைத்தான் கவனிக்க வேண்டும். அதன்படி கடகத்தில் குரு உச்சமாக இருக்கிறார் என்றால், அவர் உச்சமாகத்தான் இருக்கிறார். அதன் பிறகு வக்கிரம் என்றால் அவர் அந்த உச்சத்தில், தான் தரும் பலனை இயல்புக்கு மாறாக மாற்றித் தரும் நிலையில் இருக்கிறார் என்பதாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதாவது குருவின் உச்ச பலன் இங்கே முழுமையாக கிடைக்காது. அதற்காக அவர் மகரத்தில் நீச்சம் பெற்று இருக்கின்ற ஒரு பாபத்துவ நிலையை அடைய மாட்டார். நீச்ச பலனை அவர் கண்டிப்பாக ங்கே செய்ய மாட்டார். எனவே கடகத்தில் உச்சம் பெற்ற பெற்ற குருவின் பார்வைக்கு நிச்சயமாக பார்வை பலன் இருந்துதான் தீரும். அதேபோல மகன் ஜாதகத்தில் குரு, கேதுவுடன் சேர்ந்து கேளயோக அமைப்பில் இருக்கிறார். குருவும், கேதுவும் சேருவது சிறந்த அமைப்பு.

குரு எத்தகைய ஒரு வலிமை இழந்த நிலையில் இருந்தாலும், கேது அவருடன் சேரும் போது வலுப் பெறுவார். மற்ற கிரகங்கள் கேதுவுடன் சேருவதை யோகமாகச் சொல்லாத நிலையில் குருவும், கேதுவும் மட்டும் சேர்வது கோடீஸ்வர யோகம் எனும் கேள யோகமாக சொல்லப்படுவதன் அர்த்தத்தை நாம் நிச்சயமாக கவனிக்க வேண்டும். கேதுவுடன் சேர்ந்திருக்கும் குரு எந்த நிலையிலும் நற்பலன்களைத் தருவதை நான் ஏராளமான ஜாதகங்களில் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதுவும் கேதுவுடன் மிக நெருக்கமாக இருக்கும் நிலையில் குரு, மிகச் சிறந்த நல்ல பலன்களைத் தருவார். அது குருவிற்கு ஆட்சி, உச்சம், நட்பு நிலை வீடுகளாக இருந்தால் பலன்கள் அதிகமாக இருக்கும்.

வக்ர நிலை என்பது பெரும்பாலான ஜோதிடர்கள் பயப்படுவது போல ஒரு மோசமான நிலை அல்ல. அதே நேரத்தில் பகை வீட்டில், பாபத்துவ நிலையில் இருக்கும் கிரகங்கள் வக்ரம் பெறும்போது மோசமான பலன்களை தருகின்றன. வக்கிரம் பெற்ற கிரகங்கள் சுபத்துவ, சூட்சுமவலுவோடு இருக்கும் பொழுது ஒரு போதும் கெடுதல்களைச் செய்யாது. அதேபோல வக்கிர நிலையில் பார்வை பலனிலும் வித்தியாசம் இருக்காது. பாபத்துவம்  பெற்ற கிரகத்தின் பார்வை கெடுதல்களைச் செய்யும். சுபத்துவம், சூட்சும வலுப் பெற்ற கிரகத்தின் பார்வை வக்கிரம் அடைந்து இருந்தாலும் நன்மைகளையே தரும்.

இங்கே மகன் விஷயத்தில் குருவும், கேதுவும் சேர்ந்திருப்பது யோகமான நிலை என்பதால் குருவிற்கு சுபத்தன்மை மட்டுமே இருக்கிறது. மகனின் ஜாதகப்படி தற்போது நடைபெறும் குரு தசையில், ராசிநாதனான புதனின் புக்தியில், புதன் சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் இருப்பதால், அடுத்த வருடம் ஆகஸ்டு மாதத்திற்கு பிறகு திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியத்திற்கு பிறகு மகன் வேலையில் உயர்நிலையை அடைவார். வாழ்த்துக்கள்.


(02.07.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.


1 comment :

  1. வக்கிரம் பெற்ற உச்ச குரு கேதுவுடன் இணைந்து உச்ச சுக்கிரனை பார்த்தால் என்ன பலன் ?

    ReplyDelete