Friday, June 7, 2019

ஆயுள் முடியும் காலகட்டம் எது..?D-060


ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி 

கைப்பேசி : 8681 99 8888

ஜோதிடனாக இருப்பதில் உள்ள மிகப் பெரிய தர்மசங்கடங்களில் ஒன்று, ஒருவரின் எதிர்காலம் கடுமையாக உள்ளதை முன்கூட்டியே அறிவது அல்லது அவரது ஆயுள் முடிய இருப்பது முன்னரே தெரிய வருவது என்று சொல்லலாம்.

அதிலும் நம்முடைய நெருங்கிய உறவினருக்கோ அல்லது நமக்கு மிகவும் பிடித்தமான ஒருவருக்கோ மிகக் கெடுதலான ஒரு சம்பவம் நடக்க இருக்கிறது என்பதை நீங்கள் முன்கூட்டியே அறிய நேரும்போது உங்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

அதைவிட மேலாக அந்தச் சம்பவம், எப்படி, எப்போது நடக்கும் என்பதை மேற்கொண்டு கணித்து அறியக் கூட உங்கள் மனம் துணியாது. என் தம்பியின் மரணத்தைப்பற்றி முன்கூட்டியே அறிய நேரும்போது என்னுடைய மன நிலைமையும் இவ்வாறுதான் இருந்தது.

ஒருவிதமான பற்றற்ற, அழுகின்ற மனநிலையில், ஒரு ஜோதிடக் கருத்தாக என் தந்தையிடம் இதை நான் எடுத்துச் சொன்னபோது, அவர் என்னிடம் சொன்ன முதல் வார்த்தை “உன் அம்மாவிடம் இதைப் பற்றிச் சொல்லாதே என்றுதான்.

கடக லக்னத்தில் பிறந்த என்னுடைய தந்தையின் ஜாதகப்படி அவருக்கு புத்திர சோகம் நிகழ இருப்பதையும், எனது ஜாதகப்படி காரஹோ பாவ நாஸ்தி அமைப்பில் மூன்றாமிடத்தில் செவ்வாய் அமர்ந்து அதன் தசை நடந்து கொண்டு இருப்பதையும் எனது தந்தையிடம் விவரித்தேன். கூடுதலாக எனது கடைசித் தம்பியின் ஜாதகத்திலும் அவனது அண்ணனை இழக்கும் அமைப்பு மிகத் தெளிவாகவே இருந்தது.

என் தந்தை எனக்கு ஜோதிடத்தை அறிமுகப்படுத்தியவராக இருந்தாலும் அவர் என் குருநாதர் அல்ல. அவர் எனக்கு ஜோதிடத்தை சொல்லிக் கொடுக்கவில்லை. மிக முக்கியமாக, பழமையான பாரம்பரிய ஜோதிடத்தின் மொத்த வடிவம் அவர். ஜோதிடத்தில் எனக்கும் அவருக்கும் மிகப்பெரிய கருத்து மோதல்கள் உண்டு.

ஜோதிடத்தில் இனிமேல் கண்டுபிடிக்க ஒன்றுமில்லை, அனைத்தையும் நமது  தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் அறிவித்து விட்டே சென்றிருக்கிறார்கள். அவர்கள் சொன்னதை வைத்து பலன் மட்டும் சொன்னால் போதும் என்ற கருத்துடையவர் என் தந்தை. அதிலும் குறிப்பாக அப்போது நான் செதுக்கிச் செதுக்கி முன்னே வந்து, தற்போது சொல்லிக் கொண்டிருக்கும் பாபக் கிரகங்களின் சூட்சும வலு கோட்பாட்டிற்கு முதல் எதிரி அவர்.

செவ்வாய், சனி உச்சமாகக் கூடாது என்றால் ஞானிகள் ஏன் அவர்கள் உச்சம் அடைவதை நல்லதாகச் சொன்னார்கள் என்று அவர் எதிர்வாதம் செய்வார். தன் வாழ்நாளின் இறுதிவரை பலன் சொல்வதற்கு வாக்கியப் பஞ்சாங்கத்தை மட்டுமே பின்பற்றியவர் அவர். திருக்கணிதம் என்றாலே அவர் முகம் சிவந்துவிடும். வாக்கியப்படிதான் அத்தனை பலன்களும் சரியாக வருகிறது என்று சொல்வார்.

எத்தனையோ முறை பல ஜாதகங்களில் வாக்கிய, திருக்கணித இரண்டிற்கும் உள்ள தசாபுக்தி வித்தியாசங்களை சுட்டிக்காட்டி, திருக்கணித தசா, புக்தி, அந்தர அமைப்பின்படி அந்தச் சம்பவம் நடந்திருக்கிறது என்பதை நான் அவரிடம் நிரூபித்துக் காட்டினாலும், வாக்கியம்தான் சிறந்தது, என்னை மாற்ற முயற்சிக்காதே என்று சொல்லிவிட்டு நகர்ந்து விடுவார்.

சூரி, புத, சுக்

 

குரு ராகு

ல/

 

சனி 

ஆதித்யகுருஜி 25-3-1965 

11-55 பகல் மதுரை  

 

 

 செவ்

  சந்

கேது   

 

 

ஜோதிடத்தில் இனிமேல் ஆராய்ச்சி செய்யத் தேவையில்லை என்ற கொள்கை உடையவர் அவர். அவரது ஜோதிட வட்டம் மிக எளிமையாக இருந்தது. அவரிடம் வரும் வாடிக்கையாளர்களும் பத்துப் பொருத்தம் திருமணம் எப்போது நடக்கும்?” பையனுக்கு எப்போது நல்ல காலம்? என்ற வகையில்தான் இருந்தனர்.

ஒரு தமிழ்த் திரைப்படத்தில் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் தன் மகனை, ஆடி போய் ஆவணி வந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று ஜோசியர் சொல்லி விட்டார் என்று ஒரு தாய் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வதைப் போன்ற ஒரு சராசரி ஜோதிடராகத்தான் என் தந்தை இருந்தார். இத்தனைக்கும் ஆரம்பகால குமுதம் பத்திரிகையின் முக்கிய சிறுகதை எழுத்தாளர் அவர்.

என் தந்தைக்கு என்னுடைய வித்தியாசமான ஜோதிடக் கருத்துக்களில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், நான் சொல்லும் பலன்களில் மிகுந்த நம்பிக்கை இருந்தது. கண்கட்டி வித்தைபோல, குருட்டாம்போக்கில், எப்படியோ ஒருவகையில் சரியான பலனைச் சொல்லி விடுகிறாய். இது பரம்பொருளின் ஆசிர்வாதம் என்பார்.  

அன்றைய காலகட்டத்தில் ஜோதிடத்தை தொழிலாகக் கொள்ளாமல், தெரிந்தவர்களுக்கும், தேடி வருபவர்களுக்கும், மிக முக்கியமானவர்களுக்கும் ஹாபியாக பலன் சொல்லி வந்த என்னைப் பற்றி, தொழில்முறை ஜோதிடரா என் தந்தையிடம், உங்களைவிட உங்கள் மகன், மிகத் தெளிவாக பலன் சொல்லுகிறார் என்று சிலர் சொல்லும்போது என் தந்தை புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்திருக்கிறார்.

உலகப்புகழ் பெற்ற ஜோதிடனாக வரக்கூடிய அமைப்பு உன் ஜாதகத்தில் இருக்கிறது. ஜோதிடத்தை தொழிலாக வைத்துக்கொள் என்று என் தந்தை பலமுறை என்னை அறிவுறுத்தி இருக்கிறார். தட்சணை வாங்காமல் பலன் சொல்லக் கூடாது என்பது அவருடைய கருத்தாக இருந்தது.

ஆனால் அன்றைய காலகட்ட இளைஞனான நான், ஜோதிடத்தில் பலன் சொல்லி பணம் வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். தட்சணை இன்றி பலன் சொல்லக் கூடாது. அது பாவம் மற்றும் சொல்லும் பலன்  பலிக்கவும் செய்யாது என்று என் தந்தை சொல்லும் போதெல்லாம் வருபவர்களிடம் 50, 100 வாங்கும் பழக்கம் உங்களோடு போகட்டும் என்று சொல்வது என் வழக்கம்.

ஆயினும் ஒருநாள் நீ உலகப் புகழ்பெற்ற ஜோதிடனாக வருவாய் என்று என் தந்தை அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். அவர் இறந்த பத்தாவது நாள், நான் தொழில்முறை ஜோதிடனாகி அலுவலகம் திறந்தேன். இந்த உலகில் இருந்து செய்ய முடியாத ஒன்றை, என் தந்தை இறந்து செய்தார்.

கடக லக்னத்தில் பிறந்த என் தந்தையின் ஜாதகத்தின்படி அவருக்கு புத்திர சோகம் நிகழ இருப்பதையும், எனது ஜாதகத்தின்படியும், கடைசித்தம்பியின் ஜாதகத்தின் படியும் சகோதர விரயம் நடக்கும் என்றும் நான் சொன்ன கருத்தை மறுத்து ஆவேசமாக என்னை என் தந்தை திட்டினார்.

ஆனால் இதற்கு என்ன பரிகாரம் என்று யோசிக்க ஆரம்பித்தார். சம்பந்தப்பட்ட என் தம்பியை அழைத்துக்கொண்டு நாங்கள் இருவரும் ஸ்ரீகாளகஸ்தி செல்ல வேண்டும் என்று முடிவானது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக காளகஸ்தி வருவதற்கு முதலில் ஒத்துக் கொண்ட என் தம்பி, புறப்படும் சமயத்தில் மறுத்துவிட்டார்.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்திற்கும் மேலாக, நானும் என் தந்தையும் எத்தனையோ கெஞ்சியும் இன்றைக்கு முடியாது, இன்னொரு நாள் செல்லலாம் என்று என் தம்பி உறுதியாக இருந்தார். கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து பெட்டியுடன் கிளம்பிய பிறகு, போகாமல் இருக்கக் கூடாது என்ற நிலையில் நான் மட்டும் ஸ்ரீகாளஹஸ்தி சென்று என் அய்யன் காளத்திநாதனை தரிசித்து திரும்பினேன். ஆயினும் காளத்தியப்பன் மனம் இரங்கவில்லை.

இது நடந்த சில வாரங்களில், எனது செவ்வாய் தசை, கேது புக்தியில் நவம்பர் 2, 2005 அன்று இரவு ரயில் விபத்தில் எனது இரண்டாவது தம்பி மரணமடைந்தார்.

 

 

சூரி, புத,சனி

 சுக்,செவ்

ல/

 

தம்பி ஜாதகம்

2-6-1972 அதிகாலை 1-00   மதுரை   

கே

சந், ராகு

 

குரு

 

 

 

 

என் தம்பியின் மரணத்தன்று என் தந்தை என்னை நோக்கி அடப்பாவி.. உன்னுடைய கருநாக்கு பலித்து விட்டதே என்று குமுறி அழுதபோதுதான் என் தாய்க்கும், மற்ற சகோதரர்களுக்கும், நாங்கள் இதைப்பற்றி முன்கூட்டியே விவாதித்திருந்தது தெரிய வந்தது.

எங்கள் குடும்பத்தின் இன்னொரு தொழில்முறை ஜோதிடரா எனது ஒன்று விட்ட சித்தப்பாவும் எனது தம்பியின் மரணத்தில், என்னிடம் கருத்து வேற்றுமை கொண்டிருந்தார். ஆயினும் அன்றைய காலகட்டத்தில் செவ்வாய் தசை ஆரம்பித்ததும், எனக்கு நடந்த சம்பவங்களின்படியும், அஷ்டமச்சனி எனக்கு கொடுத்துக் கொண்டிருந்த துன்பங்களின்படியும், இறந்துபோன தம்பியின் ஜாதகத்தின்படியும் சகோதர வியம் எனப்படும் காரஹோ பாவ நாஸ்தி செவ்வாய் தசையில் எனக்கு நடக்கும் என்பதில் நான் உறுதியாக ருந்தேன். அது எந்த புக்தியில் நடக்கும் என்பதைத்தான் கணிக்க விருப்பமில்லாமல் இருந்தேன்.

தம்பியின் மரணம் மூலம் நான், என் குடும்பத்தில் கெடுபலனைச் சொல்லக் கூடிய ஜோதிடர் என்ற கெட்டபெயரையும் சம்பாதித்திருந்தேன். உண்மையைச் சொல்லப் போனால் அன்றைய காலகட்டங்களில் ஆரம்பகால ஜோதிடர்களைப் போல ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன் அதில் நடக்க இருக்கும் கெடுபலனை சொல்வதிலேயே நான் ஆர்வமாக இருந்தேன். அந்த ஜாதகத்தின் கெட்டவைகள்தான் என் கண்ணுக்கு முதலில் தெரியும்.

படிப்படியாக பக்குவமடைந்த பின்பே, கெட்டவைகளைக் கூட நல்ல வார்த்தைகளில் சொல்லும் ஜோதிடனாக, இன்றைக்கு இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் பாசிட்டிவ் குருஜி என்று கிண்டல் செய்யப்படும் அளவிற்கு நல்லவைகளை முதன்மைப்படுத்தி, தீயவைகளை நாசுக்காகச் சொல்லும் ஜோதிடனாக  மாறியிருக்கிறேன்.

கீழே என் தம்பியின் ஜாதகத்தைக் கொடுத்திருக்கிறேன். அவருக்கு கும்ப லக்னமாகி, லக்னாதிபதி சனி, தனக்கு மிகவும் ஆகாத எதிரியான சூரியனுடன் மிக நெருக்கமாக இணைந்து அஸ்தமனமாக இருக்கிறார். சூரியனும் சனியும் இரண்டு டிகிரிக்குள் இணைந்துள்ள நிலையில், நவாம்சத்திலும் இருவரும் இணைந்து சனி பாபத்துவமாக இருக்கிறார்.

இங்கே சனி லக்னாதிபதி மற்றும் ஆயுள்காரகன் என்ற நிலையிலும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. எட்டாம் அதிபதியான புதனும், சூரியனுடன் 2 டிகிரிக்குள்ளும், சனியுடன் கிட்டத்தட்ட ஒரே பாகை, கலையில் இணைந்து பாபத்துவம்  அடைந்திருக்கிறார். ஆயுள் ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும், லக்னத்திற்கும், லக்னாதிபதிக்கும் எவ்விதமான சுப சம்பந்தமுமில்லை.

எட்டாம் வீட்டோனும், ஆயுள்காரகனும், லக்னாதிபதியும் வலுவிழந்த நிலையில், மாரகாதிபதி தசையில், பாதகாதிபதி புக்தியில் எனது தம்பியின் மரணம் நிகழ்ந்தது.

அதிலும் முக்கியமாக, இரு ஆதிபத்தியத்திற்குடைய கிரகம் எந்த வீட்டோடு சம்பந்தப்பட்டிருக்கிறதோ, அந்த வீட்டின் பலனை முதலில் செய்யும் என்பது  விதி. எனது தம்பியின் ஜாதகத்தில் 2-11க்கு அதிபதியான குரு, பதினொன்றாம் வீட்டில் அமர்ந்து 1997-ல் தசை நடத்த ஆரம்பித்து, முதல் எட்டு வருடங்கள் தனது லாபாதிபதி எனும் பதினொன்றாம் இடத்தின் பலனைச் செய்து, சரியாக எட்டு வருடம் கழித்து 2005-ல் தனது மாரகாதிபத்திய இரண்டாம் வீட்டின் பலனைத் தர ஆரம்பித்த சில மாதங்களில், பாதகாதிபதியின் புக்தியில், சுக்கிர ஹோரையில் என் தம்பி மரணம் அடைந்தார்.

எனது தம்பியின் மரணத்தன்று தீபாவளி நாள். அன்றைக்கு தசாநாதனான குரு, கோட்சாரத்தில், துலாம் ராசியில் அமாவாசை சந்திரன் மற்றும் நீச்ச சூரியனோடு அஸ்தமன நிலையில் இருந்தார். தசாநாதன் கோட்சாரத்தில் பாபத்துவம்  பெறும்போது அவரது பாப ஆதிபத்தியத்தின் கெடுபலன்கள் தரப்படும் என்பதும் ஒரு விதிதான்.

அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம். 

அலுவலக நேரம்: 10:00 AM - 6:00 PM 

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

1 comment :

  1. ஐயா, அருமையான பதிவு.
    1. ஒரு லக்னத்துக்கு சுக்கிரன் சுபராக இருக்கும் நிலையில், அவரின் எதிரியான சந்திரன் / சூரியன் ( லக்ன அவயோகர், ஆனால் இயர்கை சுபர் ) கூட இருக்கும் போது பலன் எப்படி இருக்கும்?
    2. இதே நிலையில் சுக்கிரன் combust ஆகி இருந்தால் என்ன பலன்? சில கிரந்தங்கள் சுக்கிரன் புதன் ஆகியவை களுக்கு Combustion இல்லை என்று சொல்கின்றன என்று தாங்களே கூறியிருக்கிறீர்கள்.
    3. லக்னாதிபதி சனியும் 5க்கு அதிபதி CombUst சுக்கிரனும் பரிவர்தனை ஒருவரை இயர்க்கைக்கு மாறான காமம் வர தூண்டுமா?
    தாங்களின் அடுத்த கட்டுரைகளில் இதற்கெல்லாம் விடை கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

    ReplyDelete