Saturday, May 25, 2019

குருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் (27.05.19 முதல் 03.06.19 வரை)

ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி

கைப்பேசி : 8681 99 8888

மேஷம்: 

மேஷ ராசியினருக்கு உழைப்புக்கேற்ற கூலி கிடைக்காத வாரம் இது. உங்களில் சிலர் நாளை சாதிக்கப் போகும் துறையினை இந்த வாரம் தேர்ந்தெடுப்பீர்கள். இன்னும் சிலர் எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான நபர்களை சந்திப்பீர்கள். ராசிநாதன் செவ்வாய் பலவீனமாக இருப்பதால் இந்த வாரம் ரேஸ், லாட்டரி, பங்குச்சந்தை, சூதாட்டம் போன்றவைகள் கை கொடுக்காது. சிறிது லாபம் வருவது போல் ஆசைகாட்டி பிறகு மொத்தமாக இருப்பதையும் இழக்க வைக்கும் என்பதால் மேற்கண்ட இனங்களில் கவனமுடன் இருக்கவும். 

சிலருக்கு அலைச்சல்களும் மந்த நிலையும் ஒருபுறம் இருந்தாலும் இன்னொரு புறம் தொழில் முன்னேற்றமும் வருமானமும் கண்டிப்பாக இருக்கும். நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் குருப்பெயர்ச்சி முதல் உங்களுக்கு ஒரு குறையும் இருக்காது. அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு இது சிக்கல் இல்லாத வாரம்தான். சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், விவசாயிகள் கலைஞர்களுக்கு இது சுமாரான வாரம். பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்வீர்கள். 

ரிஷபம்: 

ரிஷபத்திற்கு இது நல்ல வாரம்தான். அதேநேரம் சளைக்காத உழைப்பாளிகளான உங்களுக்கு நடக்க இருக்கும் அனைத்து நன்மைகளும் கடுமையான முயற்சிக்குப் பிறகுதான் நடக்கும். அதிர்ஷ்டத்தை நம்பாமல் உங்களை மட்டுமே நீங்கள் நம்ப வேண்டிய வாரம் இது. அஷ்டமச் சனியின் தாக்கத்தினால் வேலை, தொழில், வியாபாரம் போன்றவைகளில் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் மன உறுதியுடன் வேலைப் பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். என்னதான் இருந்தாலும் தொழிலில் நிம்மதி கிடைக்கும் வாரம் இது. 

அலுவலகத்தில் கடுமையான எதிர்ப்புகள் மற்றும் போட்டிகள் வந்தாலும் அனைத்தையும் சமாளிப்பீர்கள். கண் திருஷ்டிகள் நீங்கும். சுக்கிரன், கேது சுப வலிமையுடன் இருப்பதால் ஆன்மிகம், மருத்துவம், மெடிக்கல்ஷாப், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள். வெளிநாடு சம்பந்தப்பட்ட ஏற்றுமதி இறக்குமதி, அவுட்சோர்சிங் போன்ற தொழில்கள் நடத்துபவர்களுக்கும், பணி புரிபவர்களுக்கும் தடைகள் விலகும். வெளிநாடு விஷயங்கள் கை கொடுக்கும். 

மிதுனம்: 

ராசிநாதன் புதன் வார ஆரம்பத்தில் குருவின் பார்வையிலும், பிறகு தனது சொந்த வீட்டிலும் அமர்வதால் மிதுனத்திற்கு நன்மை தரும் வாரம் இது. சிலருக்கு எதிர்பாராத தொகை அல்லது சொத்து விவகாரங்கள் சாதகமாக அமையும். தொந்தரவு கொடுத்து கொண்டிருக்கும் பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகள் விலகும். ராசிநாதன் வலுவால் உங்களைப் பிடிக்காதவர்களின் கை வலுவிழக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகள் ஒன்றும் செய்யாது. எதிர்ப்புகளைக் கண்டு நீங்கள் தயங்கிக் கொண்டிருந்த நிலை மாறி எதிரிகள் உங்களைப் பார்த்து ஒளிகின்ற நிலை ஏற்படும். 

ராசிநாதன் புதன் நட்புவலுவில் இருப்பதோடு, யோகாதிபதி சுக்கிரனும் நல்ல நிலையில் இருப்பதால் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. கணவன் மனைவி உறவு சீராகும். மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு கவலை நீங்கும். சிலருக்கு புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும். உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்களை தவிருங்கள். 

கடகம்: 

கடக ராசிக்காரர்களுக்கு தற்போது ஐந்தில் குரு, ஆறில் சனி, கேது, பனிரெண்டில் ராகு என சாதகமான கிரக நிலைகள் இருப்பதால் இது நல்ல வாரம்தான். வார ஆரம்ப நாள் மட்டும் சந்திராஷ்டமம் என்பதால் முதல் நாள் மட்டும் எதைப் பற்றியாவது சற்றுக் குழப்பங்கள் இருக்கும். ராசிக்கு ஒன்பது, பதினொன்றாமிடங்களை குரு பார்ப்பதால் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்கின்ற மனோதைரியமும், சந்தர்ப்பங்களும் இந்த வாரம் உங்களுக்கு கிடைக்கும். கடகம் சாதிக்கும் வாரம் இது. 

ராசிநாதன் சந்திரனின் நண்பரான செவ்வாய் ராகுவுடன் இணைந்திருப்பதால் வீண் செலவுகள் இருக்காது. குறிப்பிட்ட சிலருக்கு அலுவலகப் பணியாக நீண்ட தூர பிரயாணங்கள் இப்போது உண்டு. பிடிக்காதவர்களிடம் இருந்து பணம் வரும் வாரம் இது. பணம் கொடுத்ததன் காரணமாக சண்டைக்கு உள்ளாகி எதிரியாகி விட்டவர்களிடமிருந்து கொடுத்த பணம் இப்போது திரும்ப வரும். குடும்பப் பிரச்னைகளும் தீர்வுக்கு வரும். நிலம் சம்பந்தமான வழக்குகள். போலீஸ் விவகாரங்கள் கிரிமினல் வழக்குகள் உள்ளவர்களுக்கு சாதகமான திருப்பங்கள் இருக்கும். 

சிம்மம்: 

ராசிநாதன் சூரியன் சுபவலுப் பெறுவதால் சந்திராஷ்டம நாட்களைத் தவிர்த்து, இந்த வாரம் சிம்மத்திற்கு அனைத்து விதமான நன்மைகளையும் தரும். இதுவரை ஆரோக்கியம் இல்லாமல் இருந்தவர்கள் உடல்நலம் கிடைக்கப் பெறுவீர்கள். கடன் தொல்லைகளால் தலையை பிய்த்துக் கொண்டிருந்த கடக ராசிக்காரர்களுக்கு கடனை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தெரிய ஆரம்பிக்கும். சிலருக்கு கடன்கள் அடைபடும். சிலருக்கு நல்ல பெயரை தரக்கூடிய சம்பவங்களும் நடக்கும். சோதனைகள் எதுவும் இருக்காது. சிம்மம் இந்த வாரம் சாதிக்கும். 

ஒன்பதில் சுக்கிரன் இருப்பதால் தனலாபங்களும், பொருளாதார மேன்மைகளும் கிடைக்கும். பணம் கிடைத்தாலும் குருவின் பார்வை பனிரெண்டாமிடத்திற்கு இருப்பதால் வீண் விரயங்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. யோசித்து செலவு செய்யுங்கள். 4,8,10 ஆகிய நாட்களில் பணம் வரும். 28-ம்தேதி மதியம் 12.19 மணி முதல் 30-ம் தேதி இரவு 11.03 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் தூரப் பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. புதிய முயற்சிகள் ஆரம்பங்கள் எதையும் மேற்கொள்ள வேண்டாம். 

கன்னி: 

கன்னி ராசிக்கு இது கெடுதல்கள் இல்லாத வாரம்தான். வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. அதேநேரத்தில் இன்னும் சில வாரங்களுக்கு ராசிநாதன் புதன், பாபர்களான செவ்வாய், சனி, ராகு தொடர்பை பத்தாமிடத்தில் பெறுவதால் புதிதாக தொழில் ஆரம்பிப்பது மற்றும் தொழில் விரிவாக்கத்தினை கவனமுடன் செயல்படுத்துவது நல்லது. வேலை செய்யும் இடங்களில் கூடுதல் கவனம் தேவை. புதன் ஆட்சி வலுவாக இருப்பதால் கெடுபலன் ஏதும் இல்லை. பெரிய பிரச்னைகளும் வந்து விடாது. புதன் பாபத்துவம் அடைவதால் மனக்குழப்பங்கள் வரும். 

கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். இளைய பருவத்தினருக்கு திருமணம் நடக்கும். பண விவகாரங்களில் கவனம் தேவை. பெரிய அளவு பணப் பரிமாற்றங்களில் யாரையும் நம்ப வேண்டாம். 6,8,10 ஆகிய நாட்களில் பணம் வரும். 30ம் தேதி இரவு 11.03 மணி முதல் 2-ம் தேதி காலை 6.44 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த தினங்களில் நீண்ட தூர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. மேலும் புதிய முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். 

துலாம்: 

ராசிநாதன் சுக்கிரன் ராசியைப் பார்க்கும் நிலையில், யோகக் கிரகங்களும் வலுவாக இருப்பதால் துலாம் ராசிக்கு இது யோக வாரமே குறிப்பாக ராசிநாதன் சுக்கிரன் ஏழாம் வீட்டில் இருப்பதால் குடும்ப, சொந்த விஷயங்களில் போட்டிகளும், பொறாமைகளும் விலகி நீங்கள் சாதிக்கும் வாரமாக இது இருக்கும். குறிப்பாக முதல் திருமண வாழ்க்கை முறிந்து இரண்டாம் திருமணத்திலாவது நிம்மதி இருக்குமா என்று பயந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது திருமண அமைப்பு உண்டாகும். இரண்டாவது வாழ்க்கை நன்றாகவும் நிம்மதியாகவும் இருக்கும். துலாம் சாதிக்கும் வாரம் இது. 

ராசிநாதன் சுக்கிரன் ஏழில், பாக்கியாதிபதி புதன் ஆட்சி என்ற அமைப்பால் குழப்பமான சில விஷயங்களில் நெருங்கிய நண்பர்கள் துணையுடன் உறுதியான முடிவுகளை எடுப்பீர்கள். சிலருக்கு நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் முடிவுக்கு வரும். 7,8,9 ஆகிய நாட்களில் பணம் வரும். 2-ம்தேதி காலை 6.44 மணி முதல் 4-ம்தேதி காலை 11.39 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் மேற்கண்ட தினங்களில் எவரிடமும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். புதிய முயற்சிகள் ஆரம்பங்கள் செய்வதையும் தள்ளி வைக்க வேண்டும். 

விருச்சிகம்: 

விருச்சிக ராசிக்காரர்களின் பிரச்சினைகள் குறைந்து வரும் நிலையில், கேட்டை நட்சத்திரக்காரர்கள் மட்டும் குழப்ப நிலைகளில் இருந்து வருகிறீர்கள். சில அனுஷத்தினருக்கும் பிரச்சினைகள் தீருவது போன்ற தோற்றம் இருந்தாலும் முழுவதுமாக எந்த நல்லவைகளும் நடக்கவில்லை. இது போன்ற நிலைகள் இனி விலக ஆரம்பிக்கும் என்பதால் இது உங்களுக்கு நல்ல வாரம் தான். ராசிநாதன் செவ்வாய் ராகு, சனி தொடர்பில் எட்டாமிடத்தில் பாபத்துவமாக இருப்பதால் எதிலும் அவசரப்படாதீர்கள். நிதானம் தேவைப்படும் வாரம் இது. 

கேட்டை நட்சத்திரத்திற்கு கெடுதல் தீரும் வாரம் இது. பொதுவில் இது நன்மைகள் மட்டுமே நடக்கும் வாரம்தான். எட்டாமிடம் ராசிநாதனின் தொடர்பைப் பெறுவதால் சிலருக்கு வெளிநாட்டுத் தொடர்புகள் ஏற்படும். பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருப்பவர்கள் குழந்தைகளின் மேல் கவனம் செலுத்துங்கள். அவர்களின் கவனம் படிப்பிலிருந்து விலகி வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏதாவது வம்புகளில் சிக்கி மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது. 

தனுசு: 

கடந்த இரண்டு வருடங்களாக சனியின் ஆதிக்கத்தினால் எந்த நல்லவைகளும் நடக்காமல் தனுசு ராசி இளைஞர்கள் முடங்கிப் போயிருக்கிறீர்கள். இளைய பருவத்தினருக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் சங்கடங்களைத் தரும் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவை அனைத்தும் இன்னும் சில வாரங்களில் படிப்படியாக நீங்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும், நடுத்தர வயதினருக்கும் கெடுபலன்கள் எதுவும் இருக்காது. பூராடம் போராடும் வாரம் இது. 

தனுசுவினர் அகலக்கால் வைக்காமல் இருக்க வேண்டிய வாரம் இது. இளைஞர்கள் வேலை விஷயத்தில் உஷாராக இருங்கள்.. இருக்கும் வேலையில் இருந்து மாறுவதற்கு முன் ஆயிரம் தடவை யோசிக்க வேண்டும். முன்யோசனை இன்றி எதுவும் செய்தால், அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகி விடும் என்பதால் நிதானமாக இருக்க வேண்டிய வாரம் இது. வாரத்தின் நடுப்பகுதியில் சந்திரன் வலுவாக இருப்பதால் நன்மைகளும் உண்டு. ஏழரைச் சனியின் பாதிப்பில் இருக்கும் உங்களுக்கு ஆறுதலான வாரம் இது. 

மகரம்: 

குடும்பத்தில் மூன்றாவது மனிதரால் குழப்பங்கள் உருவாகி கணவன்-மனைவி கருத்து வேறுபாடு, அண்ணன்-தம்பி சண்டை போன்றவைகள் ஏற்பட்டிருந்த மகரத்தினர் சங்கடங்களை மறந்து ஒன்று கூடுவீர்கள். சிலருக்கு நண்பர்களால் ஆதாயமும், பங்குதாரர்களின் மூலம் இணக்கமான நிகழ்வுகளும் உண்டு. கெடுதல்கள் இல்லாத நிம்மதிகளைத் தருகின்ற வாரம் இது. சுய தொழிலர்களுக்கு நல்ல ஆர்டர்கள் கிடைக்கும். சிலருக்கு வெளிமாநில, வெளிநாட்டு பயணங்கள் உண்டு. அதனால் இலாபங்கள் இருக்கும். 

கணினி மென்பொருள், கணக்கு, ஆடிட்டிங், புத்தகம், பிரிண்டிங், எழுத்து மற்றும் பத்திரிகைத்துறையினர் வளம் பெறுவீர்கள்.. உடல்நலமில்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கப் பெறுவீர்கள். கடன்தொல்லைகள் எல்லை மீறாது. கடன்களை அடைக்க வழி பிறக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். தொழில் அமைப்புகளில் லாபம் வரும். சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை போக முடியும். 

கும்பம்: 

கும்ப நாதன் சனி குருவின் வீட்டில் வலுவாக இருக்கும் நல்ல வாரம் இது. இதுவரை சரியான வேலை, தொழில் அமைப்புகள் கிடைக்காமல் நிரந்தர வருமானம் இல்லாத கும்பத்தினருக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய அமைப்புகள் இப்போது உருவாகும். சிலருக்கு இதுவரை நடக்காத விஷயங்கள் நல்லபடியாக ஆரம்பித்து மனம் போல முடியும் வாரமாகவும் இது இருக்கும். வீண் செலவு செய்வதை தவிருங்கள். சிக்கனமாக இருப்பது நல்லது. கும்பத்திற்கு இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள மாற்றத்திற்கான முன்னோட்ட வாரம் இது. 

செவ்வாய் ஐந்தில் ராகுவுடன் இணைவதால் சிகப்பு நிறம் சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், ரியல் எஸ்டேட்காரர்கள், மணல், ஜல்லி, வியாபாரிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் வருமானம் இருக்கும். அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கலைஞர்கள் மாற்றங்களை உணரப்பெறுவீர்கள். 

மீனம்: 

வார ஆரம்பத்தில் ராசிநாதன் குரு ராசியைப் பார்ப்பது யோக அமைப்பு என்பதால் மீன ராசிக்கு இந்த வாரத்தில் குறைகள் எதுவும் இருக்காது. சனி, கேது இனைவால் உங்களில் சிலருக்கு அதிகமான ஆன்மிக நாட்டமும், ஞானிகள் தரிசனமும் கிடைக்கும். இதுவரை செய்து கொண்டிருந்த வீண் செலவுகள் நிற்கும். ஏதாவது ஒரு வகையில் சிறுதொகையாவது சேமிக்க முடியும். வெளிநாட்டு விஷயங்கள் நல்லபடியாக கை கொடுக்கும். வெளிநாட்டு வேலைக்கு காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது விசா கிடைக்கும். 

தொழில் அமைப்புகளில் நல்ல விதமான பலன்கள் நடக்கும். இதுவரை சிறு தொகையை கூட புரட்ட முடியாமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு பணப் பற்றாக்குறை நீங்கி லாபங்கள் வருகின்ற வாரம் இது. சந்திரன் வலுவடைவதால் இந்த வாரம் பொருளாதார சிக்கல்கள் இல்லாமல் இருப்பீர்கள். சிலருக்கு வேலை செய்யும் இடங்களில் நற்பெயர் எடுக்க கூடிய அமைப்புகள் உண்டு. ராசிக்கு குருபார்வை இருப்பதால் எந்த சூழ்நிலையையும் உங்களால் சமாளிக்க முடியும். இறுதியில் சாதித்துக் காட்டுவீர்கள்.

(27.05.2019 அன்று மாலைமலரில் வெளி வருகிறது)

தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.

குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.

No comments :

Post a Comment