தசாநாதனுக்கு வீடு கொடுக்கும் கிரகம், உச்சம், ஆட்சி போன்ற வலிமையான நிலையில் இருக்கும் நிலையில், குறிப்பாக உச்சனின் வீட்டில் அமர்ந்த கிரகம் நல்ல பலன்களை செய்யும் என்பது பாரம்பரிய ஜோதிடத்தில் ஒரு விதி.
என்னுடைய “பாபக் கிரகங்களின் சூட்சும வலுக் கோட்பாட்டு”
அமைப்பின்படி சுபத்துவ, சூட்சும வலு இல்லாத சனி, செவ்வாய் ஆகியவற்றின் உச்ச நிலைகள், அவர்களது வீடுகளில் அமரும் கிரகங்களின் தசையின் போது நன்மை
செய்வதற்கு மட்டுமே என்பதனை
விளக்கி இருக்கிறேன்.
பாபரோ, சுபரோ அல்லது 6, 8, 12 போன்ற துர் ஸ்தானங்களுக்கு அதிபதியோ, ஒரு கிரகம் உச்சமாகி, அந்தக் கிரகத்தின் வீட்டில் இருக்கும் தசை நடப்பில் வரும்போது, தசாநாதன் வலிமை பெற்று நன்மைகளை அதிகம் செய்வார். எப்படிப்பட்ட நன்மைகள் நடக்கும் என்பது தசாநாதன் மற்றும் அந்த வீட்டின் சுபத்துவ, பாபத்துவ அமைப்பையும், அந்தக் கிரகத்தின் காரகத்துவத்தையும், வீட்டின் ஆதிபத்தியத்தையும் பொருத்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலைமலரில் ஒரு முக்கியமான கேள்விக்கு நான் தந்த
பதில், என்னைக் குருவாக ஏற்றுக்
கொண்டிருக்கும் தொலைதூர மாணவர்களுக்கும், என்னைப்
பின்பற்றுபவர்களுக்கும்
குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதாக அறிகிறேன்.
“ஆட்டிசம்” எனப்படும் சராசரி மனிதராக வாழ இயலாத நிலை, ஆனால் மனிதராக ஆயுளுடன் இருப்பது எனும் நோயுள்ள ஒரு குழந்தைக்கு நான் அளித்த பதில்
ஏராளமானோருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூபில் பழனிச்சாமி
சுகுமார் என்பவரும், தனுர் அபி
என்பவரும் தந்துள்ள கமெண்டுகளுக்கு அதிகமான “லைக்”குகள் வந்திருக்கின்றன. அதிலும் தனுர்
என்பவர் ஜோதிடத்தின் மீதான அவநம்பிக்கையைப்
போக்கி, நம்பிக்கையை ஏற்படுத்தியவர் நீங்கள்தான். ஆனாலும் உங்கள் பதில் குழப்பத்தில் ஆழ்த்துகிறது
என்று தொடங்குகிறார்.
மேலும் அவரே, பௌதிகத்தில், கணிதத்தில்
இருப்பது போல நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல இல்லாமல், ஜோதிடத்தில் மட்டும் ஏன் விதிகள்
ஒன்றுக்கொன்று முரணாக இருக்கிறது? தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு கத்த வேண்டும் போல இருக்கிறது அய்யா.... எங்கு, எப்படி, எதன் அடிப்படையில் விதிகளைப்
பயன்படுத்துவது என்று தெரியவில்லை எனப் புலம்பியிருக்கிறார்.
இன்னொருவரான
பழனிச்சாமி சுகுமார், எதைச்
சொல்லிக் கொடுத்தாலும் புரிந்து கொள்ளும் ஞானம் இருந்தால் மட்டுமே புரியும் என்று
அடிக்கடி சொல்வீர்கள். எனக்கு
புரிந்து கொள்ளும் ஞானம் இருக்கிறது. இந்தக்
கேள்விக்கு நீங்கள் பதில் அளித்தே ஆகவேண்டும் என்று உரிமையுடன் கமெண்ட்
செய்திருக்கிறார்.
மாலைமலர் மற்றும் சமூக வலைத்தளங்களில் “ஜோதிடம் எனும் தேவரகசியம்”, “ஜோதிடம் எனும் மகா அற்புதம்” கட்டுரைகளை
எழுத ஆரம்பிக்கும் பொழுதும், யூடியூப்பில் இதுபற்றி வீடியோவாக பேச
ஆரம்பிக்கும் பொழுதும் எத்தனை
பேர் நான் சொல்வதைப் புரிந்து கொள்வீர்கள்
என்ற சந்தேகம் எனக்கு இருந்தது.
ஆனால் சமீபத்தில், எனது
மிக நீண்ட ஆய்வு அனுபவத்தில் நான் அறிந்த சில விஷயங்களை, உங்களுக்கு சொல்லும் பொழுது அதை
மூன்று மாதத்தில் புரிந்து கொண்டீர்கள் என்று
மகிழ்வுடன் பேசி இருக்கிறேன்.
எனக்குச் சொல்லிக் கொடுக்க எவரும் இல்லாத நிலையில் அல்லது சொல்லிக் கொடுக்கும் ஆசான்களை நான் தேடிப் போகாத நிலையில், நானறிந்த பாரம்பரிய ஜோதிட நுணுக்கங்களை மிக
மகிழ்வுடனே ஜோதிடத்தை விரும்புபவர்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆகவே என்னிடம் உரிமையுடன் கேள்வி கேட்பவர்களை
நான் முழுமனதோடு வரவேற்கவே செய்கிறேன்.
அதேநேரத்தில் எதையும் படிப்படியாகத்தான் உங்களுக்குச்
சொல்லிக் கொடுக்க முடியும். ஒரே ஒரு கட்டுரையிலோ, ஒரு அரைமணி நேர வீடியோவிலோ
அத்தனை விஷயங்களையும் உங்கள் மீது நான் திணித்துவிட
முடியாது. அப்படி ஆர்வ மிகுதியில் அத்தனை விஷயங்களையும்
உங்களது தலையில் நான் திணித்தாலும்
அல்லது ஒரே கட்டுரையில் அனைத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும்
ஜோதிடம் வரவே வராது.
இதை ஏற்கனவே சுருக்கமாக “சாயா கிரகங்களின் சூட்சும நிலைகள்” எனும் கட்டுரைகளில் சொல்லியிருக்கிறேன். 30 ஆண்டு
காலத்திற்கு மேலான எனது அனுபவத்தை, ஒரு
மூன்று நிமிடம் நீங்கள் என்னுடன் தொலைபேசியில்
பேசுவதாலோ அல்லது ஒரு மூன்று பக்கம் நான் எழுதுவதைப் படிப்பதாலோ, நீங்கள் முழுமையாகக் அறிந்து கொள்ள
முடியாது. அவ்வாறு நான்
சொல்லிக் கொடுக்கவும் முடியாது.
ஜோதிடம் என்பது ஒரு ஒருவகையான அனுபவ ஞானம். இங்கே அனைத்திற்கும்
முரண்பட்ட நிலைகள் இருக்கின்றன. இந்த முரண்பட்ட நிலைகளை இணைத்து பலன்களைப்
புரிந்து சொல்வதில்தான் நமது ஞானம் வெளிப்படுகிறது.
இன்றைக்கு நான்
சொல்லித்தரும் ஒரு விஷயம் உங்களுக்குப் புரியாமல் போகலாம். ஆனால் தொடர்ந்து பத்து
வருடம் இதே சிந்தனையிலோ, அல்லது ஜோதிடத்தின் மீதான ஆர்வம் விட்டுப் போகாத நிலையிலோ நீங்கள் இருக்கும்
போது அது ஒரு நாள் உங்களுக்குப் புரிந்தே தீரும்.
எனக்குப் புரிந்திருக்கிறது.
பத்து வருடங்களுக்கு முந்தைய
ஆதித்யன் இல்லை நான். இப்போது பெரிதும் மாறியிருக்கிறேன். பெரும்பாலான கருத்துக்களை
மாற்றிக் கொண்டிருக்கிறேன். இன்னும் பத்து வருடங்கள் கழித்து இதுவும் மாறலாம். “மாறுதல்
ஒன்றே மாறுதல் ஆகாதது” என்பதற்கு ஜோதிடமும் விதிவிலக்கு அல்ல.
இப்போது கடந்த செவ்வாய்க்கிழமை ஆட்டிசம்
குழந்தைக்கு நான் அளித்த பதிலுக்கு வருவோம்.
இந்த ஆட்டிசம் குழந்தைக்கு கும்ப லக்னமாகி, லக்னாதிபதி சனி, சூட்சுமவலு என்று என்னால் சொல்லப்படும் ஏழாமிட திக்பலத்தோடும், வலுப்பெற்ற குருவின் பார்வையோடும் சுபதத்துவமாக
இருக்கும் நிலையில், இந்தக் குழந்தைக்கு ஆட்டிசம் எப்படி வந்தது?
லக்னாதிபதி சுபத்துவ, சூட்சுமவலுவோடு
இருக்கும் நிலையில் இந்தக் குழந்தை
நன்றாகத்தானே இருக்கவேண்டும்? அதற்கு
மாறாக இந்தக் குழந்தையின்
நிலைக்கு வேறுவிதமான பதிலைத்
தருகிறீர்களே? ஜோதிட
விதிகளை இஷ்டம் போல வளைத்து கொள்கிறீர்களே
என்று இருவரும் கேட்டிருக்கிறார்கள்.
அதோடு மிக முக்கியமாக எந்த விதிகளை எங்கே பொருத்துகிறீர்கள் என்பதும் புரியவில்லை. இரண்டு வயதில் இந்தக் குழந்தையின்
தாய் இறந்ததற்கு, நான்காம்
பாவகத்தை செவ்வாய், சனி இருவரும் இணைந்து பார்த்ததை குறிப்பிடும் நீங்கள், அதே நான்காம் பாவகத்தை அதன் அதிபதியான இயற்கைச் சுபர் சுக்கிரன் பார்க்கிறார் என்பதை ஏன் எடுத்துக்
கொள்ளவில்லை என்பதும் இவர்களின் ஒரு முக்கிய கேள்வி.
இன்னொரு கேள்விக்கு, ராசிக்கு எட்டில் சனி,
லக்னத்திற்கு எட்டில் செவ்வாய் என்று பதில் கொடுத்திருக்கிறீர்கள். அதே செவ்வாய்
உங்களுடைய சுபத்துவ, சூட்சும
வலு அமைப்பின்படி, பௌர்ணமி
சந்திரனுடன் இணைந்து சுக்கிரனின் பார்வையில்
இருக்கிறார். சுபத்துவ, சூட்சும வலு அமைப்புகளை பார்க்கும் பொழுது மறைவு
ஸ்தானங்களை கணக்கிட வேண்டாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
ஆனால் இங்கே பவுர்ணமிச் சந்திரனின் இணைவோடு சுக்கிரனின் பார்வையில் இருக்கின்ற செவ்வாயை 8-ல்
மறைகிறார் என்று குறிப்பிடுகிறீர்கள்.
இது முரண்பாடாக இருக்கிறதே என்றும் அவர்கள் கமெண்டில் சொல்லியிருக்கிறார்கள். இவை இரண்டும் நான் விளக்கம் சொல்லியே ஆக வேண்டிய மிக முக்கியமான கேள்விகள்.
ஒரு கிரகத்தின் காரகத்துவங்களில் சுப காரகத்துவம், அசுப
காரகத்துவம் என்ற பிரிவுகளும், ஒரு வீட்டின் ஆதிபத்திய விஷயத்தில் நல்லவை,
கெட்டவை என்பதும் இருக்கின்றன.
ஜோதிடத்தில் மிகப் பெரிய குழப்பமே, ஒரு கிரகம் நன்மையைச் செய்யுமா,
கெடுதலைச் செய்யுமா? அது எந்த நிலையில் இருக்கிறது என்பதை கணிப்பதில் தான் இருக்கிறது.
பரம்பொருளின் கருணையினால்
ஜோதிடத்தில் ஓரளவிற்கு அனுபவத்தோடும்,
ஏராளமான ஜாதகங்களை பார்க்கும் நிலையிலும்
நான் இருக்கும் காரணத்தினால் சுபத்துவம், சூட்சுமவலு நிலைகளை ஓரளவுக்கு உணர்ந்து அதை
உங்களுக்கு விளக்கியும்
வருகிறேன்.
அவ்வப்போது எனது கட்டுரைகளில் ஜடக் காரகத்துவம், உயிர்க்
காரகத்துவம் என்ற இரண்டு வார்த்தைகளைப்
பயன்படுத்துவதை நீங்கள் கவனித்திருக்கலாம். மேம்போக்கான நிலையிலிருந்து முன்னேறி ஆழமான ஜோதிடத்திற்குள் ஒருவர் வரும் போது இதுபோன்ற சுபத்துவம், சூட்சுமவலு, ஜட, உயிர்க் காரகத்துவங்கள் போன்ற
பிரிவுகளுக்குள் சென்று உண்மையான பலனை அறிய
முடியும்.
தற்போது சுபத்துவ, சூட்சும வலு அமைப்பின்படி கிரக நிலைகளை அறிந்து
பலன் எவ்வாறு சொல்வது என்பதை மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும் நான், அடுத்து
ஆதிபத்திய விஷயங்களையும் எழுதுகிறேன் என்று ஒரு வீடியோவில் பேசினேன். அதாவது கிரகங்களின் நல்ல, கெட்ட நிலைகளை மட்டுமே தற்போது பேசிக்
கொண்டிருக்கிறேன்.
வீடுகளின் ஆதிபத்திய அமைப்பிற்கு
அதாவது பாவக சுபத்துவ நிலைக்கு இதுவரை
நான் வரவில்லை.
காரகத்துவங்களுக்கு இணையாக ஆதிபத்தியங்களும் வலிமையானவை. ஒரு கிரகத்தைப் போலவே ஒரு வீடு எத்தகைய பலனை தரும்
என்பதனையும், அதாவது
ஒரு கிரகம் எவ்வாறு இருக்கிறது, அது எந்த
வீட்டில் இருக்கிறது, கிரகத்தின்
காரகத்துவம் என்ன, வீட்டின்
ஆதிபத்தியம் என்ன, இவை
இரண்டின் சுப காரகத்துவம், சுப
ஆதிபத்தியம் அல்லது பாப
ஆதிபத்தியம்,
காரகத்துவம் ஆகியவற்றை உணரும் போதுதான் ஒருவர்
முழுமையான பலனைக் கணிக்க முடியும்
ஒவ்வொரு கிரகத்திற்கும், வீட்டிற்கும் ஏராளமான தனிப்பட்ட விஷயங்கள் ஜோதிடத்தில் உள்ளன. இதில் ஒரு
கிரகம் எதை, எப்போது செய்யும் என்று புரிந்து கொள்ள கடினமான
விஷயங்களில், ஒரு
கிரகத்தின் உயிர் காரகத்துவம் மற்றும் ஜடக் காரகத்துவம்
ஆகியவை உண்டு.
ஒரு கிரகத்தின் உயிர்க் காரகத்துவம் என்று எடுத்துக் கொள்வதாக
இருந்தால், சூரியனுக்கு தந்தை, சந்திரனுக்கு தாய்,
செவ்வாய்க்கு சகோதரன், புதனுக்கு தாய்மாமன், குருவிற்கு புத்திரம், சுக்கிரனுக்கு வாழ்க்கைத் துணை, சனிக்கு வேலைக்காரன் என்று அமையும்.
12 ராசி வீடுகளின் உயிர்க்
காரகத்துவத்தை எடுத்துக் கொண்டால்
முதலாம் வீடு உங்களையும் அதாவது ஜாதகரையும்,
மூன்றாம் வீடு இளைய சகோதரனையும், நான்காம் வீடு
தாயாரையும், ஐந்து உங்கள் குழந்தையையும், ஆறு தாய்மாமன் மற்றும் எதிரியையும், ஏழு வாழ்க்கைத்துணை மற்றும் நண்பனையும், ஒன்பது
தகப்பனையும், 11
மூத்த சகோதரன், மற்றும் இன்னொரு மனைவியையும்
குறிக்கிறது.
ஜோதிடத்தில் உள்ள மிக உயர் நிலை விதிகளில் ஒன்று, ஒரு கிரகம் தான் இருக்கும் இருப்பைப் பொருத்து, தனது தசையில் உயிர்க் காரகத்துவத்தைக் கொடுத்தோ அல்லது கெடுத்தோ, நல்ல, கெட்ட பலனைச் செய்யும் என்பது. இந்த விதி
மிகவும் குழப்பமானதும், அதிக நுணுக்கமானதும் கூட.
அதாவது குரு, குழந்தையைக்
கொடுக்கும் கிரகம் என்பதால்,
ஒருவருக்கு மிக நல்ல நிலையில் குரு இருந்தாலும், அவரது தசை வரும் போது
குருவின் உயிர்க் காரகத்துவமான குழந்தையைக் கொடுத்த பிறகுதான் நன்மைகளைச்
செய்வார். குழந்தை பிறக்கும் வரை குரு தர வேண்டிய பணம் எனப்படும் தனம் கிடைக்காது
என்பது விதி.
இதுபோன்ற சில
நிலைகளில் குருதசை அவருக்கு பலனளிக்காமல் போகும். குருவின் உயிர் காரகத்துவம் குழந்தை என்பதால் மிக நல்ல
நிலையில் குரு இருந்தாலும் குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியாத பால பருவத்தில் குருவின்
தசை வந்தாலோ அல்லது கிழப் பருவத்தில் வந்தாலோ அதனுடைய
முழுமையான நல்ல அல்லது கெட்ட பலன்களை செய்வதில்லை.
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
ஆழ்ந்த விளக்கம். குருவே சரணம்.
ReplyDelete