எம். சீரங்கன், கேசரி மங்கலம்.
கேள்வி.
இருபது ஆண்டாக எல்ஐசி முகவராக பணியாற்றுகிறேன். ஜீவனம் பெரும் கஷ்டமாக இருக்கிறது. வேறு தொழில் செய்வதற்கு பணமோ, உதவியோ செய்வதற்கு யாரும் இல்லை. 25 ஆண்டுகளுக்கு முன் ஒரு ஜோதிடரிடம் ஜாதகத்தை கொடுத்து பலன் கேட்டேன். அவர் என் ஜாதகத்தை கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துவிட்டு, “இது பாவ ஜாதகம் உனக்கு ஒன்றுமே நடக்காது” என்றார். இதற்கு என்ன தீர்வு என்று கேட்டதற்கு “காவிரி ஆற்றில் விழுந்து செத்துப் போய் விடு” என்று கூறி ஜாதகத்தை தூக்கி எறிந்து விட்டார். அதன்பிறகு வேறு எங்கும் ஜாதகம் பார்க்க பயமாக இருந்ததால் அப்படியே விட்டுவிட்டேன்.
அப்பா, அம்மா, அக்கா என்று ஒவ்வொருவராக இறந்து கொஞ்சம் ஆதரவாக இருந்த அக்கா மகனும் தற்போது திடீரென இறந்து விட்டான். மனநலம் பாதிக்கப்பட்ட தம்பியுடன் தனிமரமாக துயரத்துடனும் பெருத்த அவமானத்துடனும் வாழ்கிறேன். எல்லா உறவுகளையும் இழந்து ஏன் இப்படி வாழ வேண்டும் என்று அந்த ஜோதிடர் கூறியது போல காவிரி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் இப்போது தீவிரமாக வந்திருக்கிறது. ஒருமுறை தற்கொலைக்கு முயற்சித்த போது ஏதோ இறை சக்தி தடுப்பதாக உணர்வு ஏற்பட்டு கைவிட்டு விட்டேன்.
ஜோதிடக் கருத்துக்களை யாரும் மறுத்துப் பேச முடியாதபடி நுணுக்கமாகவும் தெளிவாகவும் எழுதுகிறீர்கள். என் ஜாதகத்தையும் பார்த்து விளக்கமாகக் கூறுங்கள். எல்லா சுகத்தையும் இழந்து வாழ வழி தெரியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறேன். கடைசிக் காலத்திலாவது திருமணம் நடைபெறுமா? முகவர் தொழிலில் முன்னேற்றம் கிடைக்குமா? அமாவாசையில் பிறந்த எனக்கு வாழ்க்கை இருட்டாகவே போய்விடுமா? ஜோதிடத்தை முழுமையாக கற்றுக்கொண்டு தொழிலாக செய்ய அமைப்பு இருக்கிறதா அல்லது தற்கொலை செய்து கொண்டு இறந்து விடுவதுதான் நல்லதா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
பதில்.
(கன்னி லக்னம், கன்னிராசி 1ல் சூரி, சந், 2ல் புத, கேது, 3ல் செவ், 7ல் சனி, 8ல் ராகு, 12ல் சுக், குரு 3-10-1967 அதிகாலை 5-30 பவானி)
ஜோதிடம் என்பது ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை ஊட்டி அவனை வாழ வைப்பதற்காக பரம்பொருளால் மனித குலத்திற்கு தெரிவிக்கப்பட்ட ஒரு கலை. ஆனால் இங்கே பல ஜோதிடர்கள் தங்களைத் தாங்களே கடவுள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். நீங்கள் சொல்வது போல ஜாதகத்தை வாங்கிப் பிரித்துப் பார்த்தவுடன் இது ஒரு பீடை ஜாதகம். இதற்கு ஒன்றுமே நடக்காது என்று ஜாதகத்தை தூக்கி அடிக்கும் ஜோதிடர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். உண்மையைச் சொல்லப்போனால் இதுபோன்ற ஜோதிடர்களுக்கு ஜோதிடமே தெரியாது. அதை மறைக்க வெறும் வாய்ச்சவடால் மூலம் ஜோதிடராக காட்டிக் கொள்வார்கள்.
இது போன்றவர்கள்தான் ஜாதகத்தின் ஒரு மூலையில் ரகசிய எழுத்துக்களால் குறிக்கப்பட்டிருக்கும், உடன் பிறந்தவர்கள் எத்தனை பேர்? அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா? அப்பா என்ன செய்கிறார்? அம்மா என்ன செய்கிறார் என்று ஏற்கனவே குறித்து வைத்துள்ளதை, ஏதோ தாங்களே கணித்ததைப் போல பலன் சொல்வார்கள். மாபெரும் விஞ்ஞான கலையான ஜோதிடத்தின் சாபக்கேடு இது.
ஒரு உண்மையான ஜோதிடன் ஜாதகருக்கு தவறான பலன்கள் நடக்கப் போவதாகவே இருந்தாலும், அதை பயமுறுத்தும் விதத்தில் சொல்லாமல், தகுந்த வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பக்குவமாகவே பலன் கூறுவான். “இன்னும் இரண்டு வருடம் வரை இப்படி நாசமாகத்தான் இருப்பாய் என்பதற்கும், இன்னும் இரண்டு வருடம் கழித்து நீ நன்றாக இருப்பாய் என்பதற்கும் அர்த்தம் ஒன்றுதான். ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதத்தில் பலன் சொல்பவனே உண்மை ஜோதிடன். ஜோதிடத்தின் நோக்கமும் அதுதான்.
உங்களுக்கு கன்னி லக்னமாகி, லக்னாதிபதி புதனுக்கு சுபத் தொடர்புகளே கிடைக்காமல், ராகு-கேதுக்களுடன் இணைந்து பாபத்துவமாகி, ராகுவின் சாரத்திலும் அமர்ந்து, லக்னத்தில் அமாவாசை சந்திரன் அமர்ந்து, சனியும் லக்னத்தைப் பார்த்து லக்னமும் லக்னாதிபதியும் ஒளியிழந்த ஜாதகம். அடிக்கடி நான் குறிப்பிடும் மிக நெருக்கமான குரு சுக்கிரன் சேர்க்கையும் ஜாதகத்தில் இருக்கிறது. பிறந்ததிலிருந்து இதுவரை நடைபெற்ற தசாபுக்திகளும் நிறைவாக இல்லை.
லக்னமும் லக்னாதிபதியும் வலுவிழந்தால் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு தேவையானது சரியான பருவத்தில் கிடைக்காது. அதேபோல ஒரு ஜாதகத்தில் அவயோக கிரகங்கள் தொழிலை அமைத்துக் கொடுக்குமாயின் வாழவும் விடாமல், சாகவும் விடாமல் ஏதோ சாப்பாட்டிற்கு வழிவகுத்து இதையும் விட்டுவிட்டால் சாப்பாடும் கிடைக்காதோ என்ற எண்ணத்திலேயே வைத்திருக்கும்.
இன்சூரன்ஸ், மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் ஒருவர் இருப்பதற்கு காரணமான விருச்சிகம் வலுப்பெற்று, அதன் அதிபதி செவ்வாய் அங்கேயே பாபத்துவமாக இருப்பதால் எல்ஐசி முகவராகி, முன்னேற்றமுமின்றி கஷ்டப்படுகிறீர்கள். அஷ்டமாதிபதி செவ்வாயின் புக்தி முடிந்து விட்டதாலும், இன்னும் இரண்டு வருடங்களில் ஐந்துக்குடைய சனி தசை ஆரம்பிக்க இருப்பதாலும், தற்போதைய குரு தசை, ராகு புக்தியிலிருந்து வாழ்க்கையில் நல்ல மாற்றம் உண்டாகும்.
ஐம்பத்தி மூன்று வயதிற்கு பிறகு ஆரம்பிக்கும் சனி தசை முதல் வாழ்க்கையில் நன்றாக இருக்கும் ஜாதகம் உங்களுடையது. சனி தசை முதல் தனிமையில் இருக்கும் நிலை உண்டாகாது. அடுத்த வருடம் ஏப்ரலுக்கு பிறகு வாழ்க்கைத்துணை அமையும். இரண்டில் புதன், கேது அமர்ந்து பத்தாமிடம் புதனின் வீடாவதால், சனிதசை முதல் ஜோதிடத்தை தொழிலாக வைத்துக் கொள்ள முடியும். நீங்களாவது மக்களை பயமுறுத்தாமல் பலன் சொல்லும் ஜோதிடராக இருங்கள். புதனை வலுப்படுத்தும் முறையான பரிகாரங்களை செய்து கொள்ளுங்கள். 2020ஆம் ஆண்டு முதல் வாழ்க்கை படிப்படியாக சீரடைந்து ஒரு பிடிப்பும் கிடைத்து நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.
சொ. கதிர்வேல், நாமக்கல்.
கேள்வி.
கடந்த 20 ஆண்டுகளாக வாடகை வீட்டிலேயே வசித்து வருகிறோம். வீடு வாங்க முயற்சித்தாலும் அல்லது வீடு கட்ட முயற்சித்தாலும் தடைகள் ஏற்படுகின்றன. ஐந்து வருடங்களுக்கு முன்பு மனைவி பெயரில் சொந்த நிலம் குடியிருப்பு இல்லாத காட்டில் வாங்கினோம். அதிலும் வீடு கட்ட முடியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு எனது பெயரில் வீடு வாங்கச் சென்று, வீட்டிற்கு பதிலாக நிலத்தை வாங்கும் நிலை ஏற்பட்டு விட்டது. எப்போது நாங்கள் சொந்த வீடு கட்டுவோம்?
பதில்.
(மேஷ லக்னம், கும்பராசி, 4ல் ராகு, 10ல் சனி, கேது, புத, 11ல் சூரி, சந், சுக், செவ், குரு, 5-3-1962, காலை 10 மணி, நாமக்கல்)
ஒரு மனிதன் சொந்த வீட்டில் இருப்பதையோ, வீடு கட்டுவது அல்லது வாங்குவதையோ ஜாதகத்தில் நான்காம் பாவகமும் அதன் அதிபதியும், வீட்டிற்கு காரக கிரகமான சுக்கிரனும் குறிக்கின்றன. இந்த மூன்றும் ஒருவருக்கு சுபத்துவமாக அமையும் நிலையில் பிறப்பிலிருந்தே அவர் நல்ல வசதியான வீட்டில் வாழ்வார் அல்லது சரியான பருவத்தில் நல்ல வீட்டில் இருப்பார். நான்காம் வீடும் அதன் அதிபதியும், சுக்கிரனும் வலுவிழந்த ஜாதகத்தை கொண்டவர்களுக்கு சொந்த வீடு என்பது கனவாகவே இருக்கும் அல்லது தாமதமாக வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் அமையும்.
உங்கள் ஜாதகப்படி மேஷ லக்னமாகி, நான்காம் வீட்டில் ராகு அமர்ந்து, பாபரான புதனும் சனியும் அந்த வீட்டைப் பார்க்கிறார்கள். நான்காம் அதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு எட்டில் மறைந்து, அமாவாசைக்கு மிக அருகில் முழுமையான பாபராக இருக்கிறார். ராசிக்கு நான்காம் அதிபதியான சுக்கிரன் சூரியனுடன் இணைந்து அஸ்தங்கமாகி, செவ்வாயுடன் இணைந்து பாபத்துவம் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் உங்களுக்கு சொந்த வீடு அமைப்பு சரியான பருவத்தில் கிடைக்காது. அதே நேரத்தில் அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்கு பிறகு, புதன் தசையில் சுக்கிர புத்தி ஆரம்பிக்க இருப்பதால் அடுத்த வருடம் தீபாவளிக்குப் பிறகு வீடு கட்ட ஆரம்பித்து சித்திரை மாதம் முடிக்க முடியும். 2021 ஆம் வருடம் சொந்த வீட்டில் இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.
அசோக், புதுப்பாக்கம்.
கேள்வி.
குருஜி அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம். நீங்கள் கூறிய குருவை வலுப்படுத்தும் பரிகாரங்களுக்கு பிறகு கடந்த ஆண்டு எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. எனக்கு அண்ணன், அக்கா, தம்பி, தங்கை என யாரும் கிடையாது. பள்ளிப்பருவத்தில் பலமுறை தனிமையை உணர்ந்திருக்கிறேன். இன்றும் கூட சகோதரத் துணை யாருமில்லை என்று மனதில் வருத்தம் உண்டு. திருமணமாகி நீண்ட நாட்களுக்கு பிறகு நீங்கள் சொன்ன குருவின் பரிகாரத்தால் மகள் பிறந்திருக்கிறாள். எங்கள் காலத்திற்குப் பிறகு மகளுக்கு ரத்த சம்பந்த உறவு வேண்டும் என்று நானும் மனைவியும் நினைக்கிறோம். எங்களுக்கு இன்னொரு குழந்தைக்கு வாய்ப்பு உள்ளதா? மீண்டும் குருவை வலுப்படுத்தும் பரிகாரங்கள் செய்தால் பலன் இருக்குமா? எனில் எந்த ஆண்டு செய்யலாம்? தயைகூர்ந்து என்னை மகனாக நினைத்து மீண்டும் பதில் கொடுங்கள்.
பதில்.
(கணவன் 31-5-1986 மாலை 6-30 சென்னை, மனைவி 1-6-1988 இரவு 8-14 சென்னை)
உங்கள் இருவரின் ஜாதகப்படியும் 2021 ஆம் ஆண்டு பிற்பகுதியில் இன்னும் ஒரு ஆண் குழந்தை உண்டு. அடுத்தவருடம் அதே பரிகாரங்களை மீண்டும் செய்யலாம். கை மேல் பலன் கிடைக்கும். வாழ்த்துக்கள்.
(09.04.2019 அன்று மாலைமலரில் வெளிவந்தது)
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
குருஜி அவர்களின் கட்டுரை மற்றும் ராசிபலன்களை whatsapp ல் பெற 8428 99 8888 என்ற எண்ணிற்கு தகவல் தரவும்.
MY SON NAME:ASHWIN DATE:17.09.2000 TIME:10.40AM PLACE :RAJAPALAYAM (TAMILNADU) FUTURE APPATI ULLTHU PLEASE AYYA
ReplyDeleteMaganuku virchiga lagnam, mesha rasi, aswini natchathiram.
DeleteGuruji ayyavin "Pabagraha sootchuma valu" theory padi lagnathipathi sevvai digbalam petru lagnathai parkirar. Lagnathai ainthu kudaya guruvum parkirar. Lagnam lagnathipathi
valutha yoga jathagam.
Maganin 21 Vayathil irunthu Rasi padium, lagna padium surya chandra sevvai ena yoga dasaigal varuvathal ethirkalam nandraga irukum kavalai vendam. Jathagathil 9 Grahangalum yoga natchathira sarathil irupathu ithanai uruthi seigirathu.
Mesha rasiku astama sani mudinthu vittathal ini oru kuraiyum illai.