ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி
கைப்பேசி : 8681 99 8888
மேஷம்
ஐந்திற்குடைய சூரியன் பனிரெண்டில் மறைவதால் பிள்ளைகள் விஷயத்தில் மேஷத்தினருக்கு செலவுகள் இருக்கும் வாரம் இது. பிள்ளைகளின் கல்விச் செலவுக்கு இந்த வாரத்திலிருந்தே பட்ஜெட் போட வேண்டி இருக்கும். பெண்களுக்கு அலுவலகத்தில் நல்ல பலன்கள் இருக்கும். வியாபாரிகளுக்கு இது சாதகமான காலம். புதிய முதலீடுகளைச் செய்யலாம். தொழிலை விரிவாக்கம் செய்து புதிய கிளைகள் அமைக்கலாம். உங்களை எதிர்த்து வந்தவர்களும் மனம் மாறி உங்களை ஆதரிக்கும் வாரம் இது.
பாக்கிய ஸ்தானத்தில் அதிசார நிலையில் குரு அமர்ந்து வலுவாக இருப்பதால் வேலை, தொழில் நன்றாக இருக்கும். சிலருக்கு கேட்கும் இடங்களில் உதவிகள் கிடைக்கும். சுக்கிர பலத்தால் பெண்கள் உதவுவார்கள். அவர்களால் நன்மைகள் உண்டு. நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் இந்த வாரம் உங்கள் மனம் போல் நடக்கும். மாணவர்கள், கலைஞர்கள், அரசு, தனியார்துறை ஊழியர்கள், தொழிலதிபர்கள், மக்கள் பிரதிநிதிகள் போன்ற அனைத்து தரப்பினருக்கும் மிக சிறப்பான வாரம்.
ரிஷபம்
குரு,சனி,கேது மூவரும் எட்டில் கூடுவது ரிஷபத்திற்கு சாதகமான நிலை அல்ல. வீடு வாங்குவது, தொழிலை விரிவுபடுத்துவது போன்றவைகளில் நன்கு யோசித்து செயல்படுங்கள். தற்போது வீடு கட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு இடையில் தடைப்பட்டு வீட்டை முடிக்கும் அமைப்பு இருப்பதால் நல்ல காண்ட்ராக்டரிடம் பொறுப்பை ஒப்படையுங்கள். இதுவரை வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு இப்போது சாதகமான நிலை வரும். சொந்தத்தொழில் செய்பவர்கள் தங்களுடைய தொழில் விரிவாக்கத்தினை சற்றுக் கவனமுடன் செயல்படுத்துவது நல்லது.
உங்களில் சிலருக்கு உடன் இருப்பவர்களிடம் வாக்குவாதங்களும், கருத்து வேறுபாடுகளும், கசப்பான அனுபவப் பரிமாறல்களும் இருக்கும் என்பதால் எல்லா விஷயத்திலும் பொறுமையுடனும், நிதானத்துடனும் இருக்க வேண்டிய வாரம் இது. நெருங்கியவர்களே எதிராகத் திரும்ப வாய்ப்பு இருப்பதால் அனைத்திலும் கவனமாக இருங்கள். ஒரு சிறப்பு பலனாக ராகு இரண்டில் குரு பார்வையில் வலுவாக இருப்பதால் சிலருக்கு அரபுநாடுகளில் வேலை, தொழில் போன்ற தொடர்புகள் ஏற்படும். இஸ்லாமிய நண்பர்கள் உதவுவார்கள்.
மிதுனம்
ஏழாமிடத்தில் இணைந்திருக்கும் சனி, கேது, குரு மூவரும் ராசியைப் பார்ப்பதால் குடும்பத்தில் குழப்பம் வரும் வாரம் இது. கணவன்-மனைவிக்குள் ஏதாவது ஒரு விஷயத்தில் சந்தேக விதையை ஏழாமிட சனி விதைப்பார் என்பதால் நிதானம் அவசியம். எனக்கு தெரியாமல் அக்கா, தங்கைகளுக்கு செய்கிறாரோ என்ற சந்தேகம் மனைவிக்கும், எனக்கு தெரியாமல் தன் குடும்பத்திற்கு செய்கிறாளோ என்று கணவருக்கும் நினைக்கத் தோன்றும் வேலைகளை சனி செய்வார் என்பதால் எதிலும் வெளிப்படையாக இருப்பது நல்லது.
உங்களில் சிலர் எதிலும் ஒரு தடங்கலை உணருவீர்கள். எரிச்சல் தரும் வாரம் இது. எந்த ஒரு விஷயமும் நீண்ட முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும். கடின உழைப்பும் விடாமுயற்சியும் தேவைப்படும். அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு இரண்டுமுறை யோசித்து செயல்படுவது நல்லது. தந்தைவழி உறவினர்களிடம் இருந்து உதவிகள் இருக்கும். அரசு, தனியார்துறை ஊழியர்கள் நன்மைகளை பெறுவார்கள். விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள், மாணவர்கள் போன்றவருக்கு வார பிற்பகுதியில் அனைத்து நல்ல பலன்களும் நடக்கும்.
கடகம்
சனி, கேது ஆறாமிடத்தில் இணைந்திருப்பது தொழிலுக்கும், வேலைக்கும் நல்ல அமைப்பு என்பதால் இந்த வாரம் உங்களின் வியாபாரம் மேம்பட்ட நிலையில் இருக்கும். அலுவலகங்களில் வேலை செய்பவர்களுக்கு பிரச்னைகள் எதுவும் இல்லாமலும், பொருளாதார நன்மைகளும் இருக்கும். இதுவரை வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு நல்லவேலை கிடைக்கும். இருக்கும் வேலையில் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டிருப்பவர்கள் அனைத்தும் ஓய்ந்து நிம்மதி கிடைக்கப் பெறுவீர்கள்.
செலவுகள் குறையும். விரையங்கள் இருக்காது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கும் குடும்பத் தலைவியாக இருக்கும் பெண்களுக்கும் இந்த வாரம் நன்மைகள் நடைபெறும். வயதானவர்கள் காசி, கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். 1-ம் தேதி காலை 8.21 முதல் 3-ம் தேதி இரவு 8.48 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் இந்த நாட்களில் எந்த ஒரு ஆரம்பங்களையும் செய்ய வேண்டாம். புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தி கொள்வது போன்ற விஷயங்களை இந்த நாட்களில் தள்ளி வைக்கவும்.
சிம்மம்
ராசிநாதன் சூரியன் எட்டில் இருப்பதால் இந்த வாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு பொருளாதார விஷயத்தில் சுணக்கங்களும், இடையூறுகளும் இருக்கும். இதோ வந்து விட்டது, அதோ முடிந்து விட்டது என்று எதிர்பார்க்கும் விஷயங்கள் இழுத்துக் கொண்டு போய் உங்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கும். வியாபாரம் குறையும் என்றாலும் லாபம் இருக்கும் என்பதால் குறை சொல்ல எதுவும் இல்லை. வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. சொந்தத் தொழில் செய்பவர்கள் உடன் இருப்பவர்களை நம்ப வேண்டாம்.
இளைஞர்களுக்கு எதிர்பாலினர் மீது ஈர்ப்பு ஏற்படும் கால கட்டம் நடைபெறுகிறது. சிலர் காதலிப்பீர்கள். சிலர் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இப்போது சந்திப்பீர்கள். சிலருக்கு பெண்களால் இனிமையான அனுபவங்கள் இருக்கும். 3-ம் தேதி இரவு 8.48 முதல் 6-ம் தேதி காலை 7.22 வரை சந்திராஷ்டம தினம் என்பதால் புதிய முயற்சிகள் எதையும் இந்த நாட்களில் செய்ய வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாது அலைபாய்ந்து கொண்டிருக்கும் என்பதால் இந்த நாட்களில் யாருடனும் வாக்கு வாதம் செய்யாதீர்கள்.
கன்னி
ராசிநாதன் புதன் வாரம் முழுவதும் ஆறாம் வீட்டில் இருப்பதால் கன்னியினருக்கு இந்த வாரம் நண்பர்களுடன் முட்டல்களும் மோதல்களும் இருக்கும். நெருங்கிய நண்பர்கள் புரிந்து கொள்ளாமல் உங்களைப் பற்றி குறை சொல்வதோடு, உங்களை மனக் கஷ்டத்திற்கும் ஆளாக்குவார்கள். செலவுகள் இருக்கும் என்றாலும் செலவு செய்வதற்கு ஏற்ற பணவரவும் உண்டு. சகோதர விஷயத்தில் நன்மைகளும், சுப நிகழ்ச்சிகள் இருக்கும். இளைய பருவத்தினருக்கு அவர்கள் படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்கும். சிலருக்கு தூரப்பயணம் உண்டு.
நான்கில் சனி, குரு, கேது இணைந்திருப்பதால் தாயார் விஷயத்தில் மன வருத்தங்கள் இருக்கும். சுக ஸ்தானத்தில் சனி இருப்பதால் சிறு காய்ச்சல் என்றாலும் மருத்துவரைப் பார்ப்பது நல்லது. வயதானவர்கள் தங்கள் உடல் நலத்தில் மிகுந்த அக்கறை வைக்க வேண்டும். 6-ம் தேதி காலை 7.22 முதல் 8-ம் தேதி மதியம் 3.54 வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் முக்கிய முடிவுகள் எதையும் இந்த நாட்களில் எடுக்க வேண்டாம். மனம் ஒரு நிலையில் இல்லாமல் சற்று எரிச்சலான ஒரு நிலையில் இருப்பீர்கள்.
துலாம்
ராசிநாதன் சுக்கிரன் நல்ல நிலையில் இருப்பதால் தடைகளை மீறி நீங்கள் வெற்றி பெறும் வாரம் இது. இன்னும் சில வாரங்களுக்கு இந்த நல்ல அமைப்பு நீடிக்கும். சனி, குரு, கேது மூன்றில் இருப்பதால் இளைய சகோதரத்திற்கு நன்மை தரும் விஷயங்களும், இழுபட்டுக் கொண்டிருந்த சகோதரியின் திருமண விஷயம் உறுதியாவதும் இந்த வாரம் உண்டு. கணவன், மனைவி வேறு வேறு இடங்களில் பணி புரிந்தவர்களுக்கு ஒரேஇடத்தில் மாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும். கருத்து வேற்றுமையால் பிரிந்திருந்தவர்களுக்கும் இது பொருந்தும்.
சொந்தத் தொழில் செய்பவர்கள் மிகுந்த நல்ல மாற்றங்களை உணர்வார்கள். தொழில் சீர்படும். லாபம் தரும். வரும் லாபத்தை சேமிக்க முடியும். கலைஞர்கள், விவசாயிகளுக்கு இது நல்லவாரம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகளும் பணவரவுகளும் இருக்கும். மனைவி வழியில் லாபங்களும் அனுசரணையான போக்குகளும் இருக்கும். குறிப்பாக வேலைக்கு செல்லும் மனைவியால் தேவைகள் நிறைவேறுதல் இருக்கும். துலாம் ராசிக்கு அனைத்தும் சீராகச் செல்லும் வாரம் இது.
விருச்சிகம்
விருச்சிகத்தினர் கோபக்காரராக இருந்தாலும் நடுநிலை தவறாதவர்களாகவும், நீதிமான்களாகவும் இருப்பீர்கள். யார் தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டீகள். முக்கியமாக விலை போக மாட்டீர்கள். உண்மையான அன்புக்கும் நட்புக்கும் மதிப்பு கொடுப்பீர்கள். பணம் வேண்டுமா புகழ் வேண்டுமா எனக் கேட்டால் புகழைத் தேர்ந்தெடுக்கக் கூடியவர்கள் நீங்கள். நீங்கள் அனைவரும் இனிமேல் நன்றாக இருக்கப் போகிறீர்கள். விருச்சிகத்திற்கு கிரக நிலைகள் சாதகமாக மாறத் துவங்கி விட்டது.
இதுவரை எதிலும் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது முன்னேற்றம் வருவதை காண்பீர்கள். அலுவலகங்களில் எதிர்ப்புகளையும், பின்னடைவுகளையும் மட்டுமே பார்த்தவர்கள் அனைத்தும் மாறி சாதகமான சூழல் அமைவதைப் பார்க்க முடியும். அன்னிய மத, இன, மொழி நண்பர்களால் உதவிகள் இருக்கும். பேச்சின் மூலம் வாழ்க்கை நடத்தும் விருச்சிகத்தினர் நன்மைகளை அடையப் போகிறீர்கள். ஆசிரியர் பணி, பேச்சாளர்கள், மார்க்கெட்டிங் துறையினர், கவுன்சிலிங் செய்பவர்கள் போன்றவர்களுக்கு நல்ல வாரம் இது.
தனுசு
தனுசுவினர் செல்போனை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டிய வாரம் இது. எதிலும் ஒரு தடுமாற்றமும், கவனக்குறைவும் உங்களிடம் இருக்கும். எதிலும் அலட்சியமாக இருப்பது நல்லதல்ல. விவசாயிகளுக்கும், சிறுதொழில் புரிபவருக்கும் சுமாரான பலன்கள் நடக்கும். சம்பளம் தவிர்த்த ‘இதர’ வருமானங்கள் வரும் துறைகளில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படும். அவர்களுடைய ஒத்துழைப்பு கிடைப்பது கடினம்.
இளைஞர்களுக்கு தொழில் விஷயத்தில் மனக்கஷ்டங்களும், விரயங்களும் இந்த வாரம் இருக்கும். வேலைமாற்றங்கள், கவனக்குறைவு, மனத் தடுமாற்றம், விரக்தி, எதிலும் விட்டேத்தியான மனப்பான்மை போன்றவைகள் உண்டு. ஐம்பது வயது தாண்டியவர்களுக்கு நல்ல பலன்கள் மட்டுமே நடக்கும். சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்ய வேண்டியிருக்கும். குறிப்பாக இளைய சகோதரத்தால் செலவு உண்டு. என்னதான் அவர்களுக்கு செய்தாலும் அண்ணன் ஒன்றுமே செய்யவில்லை என்று கூறுவதையும் கேட்க வேண்டியிருக்கும்.
மகரம்
“மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி” என்பதைப் போல இந்த வாரம் உங்களில் சிலர் தொழிலிலும், வீட்டிலும் ஏதேனும் ஒரு விஷயத்தின் நடுவில் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்படுவீர்கள். குறிப்பாக சிலர் வீட்டில் மனைவி, அம்மாவிற்கு நடுவிலும், அலுவலகத்தில் முதலாளிக்கும் மேனேஜருக்கும் நடுவிலும் மாட்டிக் கொண்டு தலையைப் பிய்த்துக் கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் குறையும் என்றாலும் லாபம் அதிகம் இருக்கும் என்பதால் குறை சொல்ல எதுவும் இல்லை.
ரியல் எஸ்டேட் மற்றும் வீடு கட்டித் தரும் புரமோட்டர்கள் போன்றவர்களுக்கு தொழிலில் நல்ல மாற்றங்கள் இருக்கும். நிறைய செலவுகளும் விரயங்களும் இருப்பதை கிரகங்கள் காட்டுகின்றன. வருமானத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள். வயதான தந்தையைக் கொண்டவர்கள் அவரது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு இது நல்ல வாரம். உங்களை புரிந்து கொள்ளாத வாழ்க்கைத் துணைவர் இனிமேல் புரிந்து கொள்ள ஆரம்பிப்பார்.
கும்பம்
ராசியில் இரண்டு சுபகிரகம் இருப்பதும், அவர்கள் இருவரும் யோகாதிபதியாக இருப்பதுமான நல்ல வாரம் இது. இந்த நிலையினால் நல்ல தனலாபத்தையும், மேன்மையான பாக்யங்களையும் கும்பத்தினர் பெறுவீர்கள். சிலர் நீண்ட காலமாக முடியாமல் இருக்கும் விஷயங்களை முடித்துக் காட்டுவீர்கள். அதிர்ஷ்டம் கை கொடுக்கும் வாரம் இது. இளைஞர்களுக்கு இதுவரை நடந்து வந்த எதிர்மறையான பலன்கள் நீங்கி நல்ல பலன்கள் நடக்கும். சிலருக்கு நல்ல வாகனம் அமையும். சிலர் சொந்தமாக பிளாட் வாங்கவோ வீடு கட்டவோ ஆரம்பிப்பீர்கள்.
ஊடகத் துறையினர், கலைஞர்களுக்கு இது நல்லவாரம். அரசு வேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் போன்ற பதவிகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும். ஏற்கனவே தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் சந்தேகங்களும் தேவையற்ற பயங்களும் விலகும் வெளிநாட்டு விசா எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம் அமையும்..
மீனம்
ஆறுக்குடைய சூரியன் ராசியில் இருப்பதால் மீன ராசிக்காரர்களுக்கு பண விஷயங்களில் திருப்தியற்ற நிலைகளும், சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு கொடுத்த கடன் திரும்பி வராமல் நெருக்கடியான சூழல்களும் இருக்கும். உடல்நல விஷயத்தில் கவனமாக இருங்கள். சிறு சிறு உடல் கோளாறுகள் வரலாம். சிலருக்கு வாரம் முழுக்க அலைச்சல்களும் எதிர்பார்த்தது நடக்காமல் போகும் வாய்ப்பும் இருக்கிறது. சிலருக்கு கடன் விஷயத்தில் சங்கடங்கள் வரும். மனம் சற்றுக் குழப்பமாக இருக்கும் வாரம் இது.
சிலருக்கு ஆன்மீக ஈடுபாடு அதிகமாக இருக்கும். புனிதத் தலங்களுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் நன்மை பெறுவார்கள். அரசு, தனியார்துறை ஊழியருக்கு மாறுதல்கள் இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் வரும் வருமானம் விரயமாகும். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் அதிகாரம் செய்யும் அமைப்பில் இருப்பவர்கள் எதிலும் ரகசியம் காப்பது நல்லது. மீடியாத்துறையினருக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். பெண்கள் உதவுவார்கள். அவர்களால் நன்மைகள் உண்டு.
தொடர்பு எண்கள். செல்.8681 99 8888, 8870 99 8888, 8428 99 8888, 7092 77 8888, 8754 008888, 044-24358888, 044-48678888.
Ashwin date :17.09.2000 time:10.40am
ReplyDeleteMY SON NAME ASHWIN DATE :17.09.2000 TIME :10.40AM PLACE:RAJAPALAYAM JATHAGAM NEETCHAPANGA RAJA YOGAM OLATHA AYYA
Delete